No icon

அன்பியக் கூட்டம் - 133

மையப்பொருள்: மேலான பெயர்
பாடல்:        இயேசு என்னும் நாமம் பேசுகின்றபோது என்னுள்ளம் மகிழ்வு கொண்டது
தொடக்க வேண்டல்: ’இருக்கிறவராய் இருக்கும்’ வானகத் தந்தையே உம்மைப்போன்றுகின்றோம். எப்பெயருக்கும் மேலானபெயரை ஏற்றுள்ள இறைமகன் இயேசுவே உம்மைப் போற்றுகின்றோம். உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியாரே உம்மைப் போற்று கின்றோம். இன்று எங்கள் ............................... அன்பியம் ’மேலான பெயர்’ என்ற பொருளில் உமது வார்த்தையின் ஒளியில் எங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டு, சிறந்த செயல்திட்டங்களையும் மேற்கொள்ள இருக்கிறது. எங்களுக்கு உமது மேலான கொடைகளை  ஈந்து, நாங்கள் யாவரும் மிகச்சிறந்த ஈடுபாட்டுடன் இதில் பங்குபெறவும் பேசப்படும் கருத்துகளில் தெளிவும் அவற்றை வெளிப்படுத்துவதில் துணிவும் தந்து வழி நடத்தவும் வேண்டுகின்றோம். மிக முக்கியமாக பிறர் பெயரைக் கெடுக்கும் விதத்தில் எங்கள் செயல்கள் அமையாமல், தீமை செய்வோர் பெயரைத் தூக்கிப் பிடிக்காமலும் எங்களைக் காத்தருளும், எங்கள் ஆண்டவர் கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம் - ஆமென்.
இறைவார்த்தை: பிலிப்பியர் 2:6-11
(இறைவார்த்தைப் பகிர்தலுக்கு உதவியாக ஒரு நிகழ்வு)
மங்கன் என்று அழைக்கப்படும் துணி வியாபாரி ஒருவர் இருந்தார். அவர் சில வேட்டி, புடவை, சட்டை, தாவணி, சுடிதார் போன்றவற்றை மூட்டையாகக் கட்டி தலையில் சுமந்துகொண்டு தெருக்களுக்குப்போய் அவற்றை விற்பனை செய்வார். வாங்குவோர் தாங்கள் வாங்கவிரும்பும் உருப்படியின் விலையைக் கேட்டால், "தேவ சித்தத்தால் நூல் கிரயம் இவ்வளவு, தேவ சித்தத்தில் செய்கூலி இவ்வளவு, தேவ சித்தத்தால் நீங்கள் இவ்வளவு கொடுத்தால் போதும் என்பார். அந்த விலை நியாயமாகப்பட்டதால் பலர் அவரிடம் துணிகளை வாங்கினர். இதனால் பொறாமை அடைந்த
துணி வியாபாரிகள் சிலர் சேர்ந்து உள்ளூர் வழக்கு மன்றத்தில் வழக்கு ஒன்றை அவர்மேல் போட்டு, அவர் எங்களது துணிகளைத் திருடிக் கொண்டுவந்து குறைந்த விலைக்கு விற்கிறார் என்று குற்றம் சாட்டினர். வழக்கு விசாரணைக்கு வந்தது. நீதிபதி விசாரித்தபோது "தேவசித்தத்தால் எனது அடக்கவிலை இது. தேவ சித்தத்தால் நான் இன்ன விலைக்கு விற்கிறேன். தேவ
சித்தத்தால் உங்கள் முன் விசாரணைக்கு நிறுத்தப் பட்டிருக்கிறேன்" என்றார். அந்த வியாபாரிமீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால் நீதிபதி "தேவ சித்தத்தால் உங்களை இந்த நீதிமன்றம் விடுதலை செய்கிறது" என்றார். அதன்பின் அந்த வியாபாரியின் பெயர் மங்கன் என்பது மறைந்து தேவசித்தமே மேலான பெயராகப் பரவிவிட்டது.
சிந்தனை:
        பெயர்கள்தான் பொருளையோ, இடத்தையோ,
தனி மனிதரையோ குழுவையோ அடையாளப்படுத்து கின்றன.
        சிலுவையில் வைக்கப்பட்டுள்ள ஐசூசுஐ என்ற எழுத்துக்கள் அடங்கிய பலகை ’இயேசு நசரேன் யூதர்களின் அரசன்’ என்பதை வெளிப்படுத்தி இயேசுவை எல்லாருக்கும் அறிமுகப்படுத்தியது.
        பெரும்பாலான பெயர்கள் காரணப்பெயர்களாகவே அமைகின்றன. (எ-டு) ’அடியக்காமங்கலம்’ (திருவாரூர்
- நாகை சாலையில் உள்ள ஊர்)
        நல்ல பேரை வாங்கவேண்டும் என்பது பிள்ளை களுக்கான அழைப்பு மட்டுமல்ல அனைவருமான அழைப்புமாகும்.
        பெயரை நிலைநிறுத்துவது செயல்களே, நற்செயல் களாயின் சிறப்பும் தீச்செயல்களாயின் இழிவும் தொடரும்.
        ஊருவிட்டு ஊருவந்து ’பேருகெட்டு’ போகா தீங்க என்பது புலம் பெயர்பவருக்கு மட்டுமல்ல ஒரே இடத்தில் இருப்போருக்கும் பொருந்தும்.
        ஒருவர் செய்த நன்மையை மறைத்து அவர்மீது பொய்-தீமையை இட்டுக்கட்டி அவர் பெயரைக் கெடுப்பவர் அவரைக் கொலை செய்தவற்குச் சமம்
        ’பேர் சொல்ல பிள்ளை’ என்பார்கள். பிள்ளைகள் மட்டுமல்ல செயல்களும் பெயரைச் சொல்லுகின்றன.
        கடவுளுக்கு நிகராக இருக்கும் தான் மனிதராகி சிலுவைச் சாவை ஏற்றது இயேசுவின் தாழ்ச்சியால் பெற்ற உயர்ச்சியைக் குறிக்கும்.
        பெயர் புகழப்படவேண்டும் என்பதற்காக எதையும் செய்யாதே! பெயர் விண்ணகத்தில் எழுதப்பட உழை.
நம்பிக்கையாளருக்கான மன்றாட்டுகள்:
1.        திருமறைப் பணியாளர்களின் பெயர்கள் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டுமென்று.
2.    அரசுப் பணியாளர்கள் தம் பெயர் கொடாத வண்ணம் காத்துக்கொள்ள.
3.    பிறர் பெயரைக் கெடுக்கும் நோக்குடன் முன்னெடுக்கும் செயல்பாடுகள் தோல்வியுற வேண்டுமென்று.
4.    பெயர் புகழ்பெறும் நோக்கத்துடன் மட்டும் (வெளிச்சம் போட்டு) செய்யும் செயல்பாடுகள் தவறு என்பதை உணர.
திருப்பாடல்: 115:1, 11-16
பரிந்துரைக்கப்படும் செயல்திட்டங்கள்
1.    ’பேரு விளங்க’ என்னும் தலைப்பில் கட்டுரைப் போட்டி நடத்தி மதிப்பிடுதல்
2.    அப்பகுதிப் பணியாளர் (ஊ.ம.தலைவர், வார்டு உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர் நவஉ...) ஒருவரை
அணுகி அப்பகுதியில் நூலகம் அமைக்கக்கோரி நடைமுறைப்படுத்துதல்.
நிறைவு வேண்டல்:
தாழ்ச்சி கொண்டோரை மாட்சிப்படுத்தும் இறைவா, மேலான பெயரைப் பெறவும் அதைத் தக்கவைத்துக்
கொள்ளவும் தேவையான சிந்தனைகளை இன்றைய அன்பியக் கூட்டத்தின் வழியாகப் பெற்றுக் கொண்ட நாங்கள் எங்களது பெயர் இழிவுக்கு உட்படாத வகையில் சிறந்த செயல்பாட்டாளர்களாக விளங்க வேண்டுமென்று, எங்கள் ஆண்டவர் கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம் - ஆமென்.

Comment