No icon

உமது ஆட்சி வருக

ஒரு மாதிரி வழிகாட்டி

மையப்பொருள் : உமது ஆட்சி வருக

தொடக்க வேண்டல்

பெரும் இறையாட்சியின் நாயகனாக இயேசு கிறிஸ்துவை எமக்குக் கொடையாகக் கொடுத்த விண்ணகத் தந்தையே, உம்மைப் போற்றிப் புகழ்ந்து, உமக்கு நன்றி கூறுகின்றோம். தந்தை தந்த ஆட்சியைத் தரணியெங்கும் பரவச் செய்ய தன்னையே எமக்குத் தானமாகத் தந்த இயேசுவே, உம்மைப் போற்றிப் புகழ்ந்து நன்றி கூறுகின்றோம். தந்தைக்கும், மகனுக்கும் இடைநிலையாளராக நின்று எம்மை நாள்தோறும் இறையாட்சிப் பாதையில் வழி நடத்தும் தூய ஆவியாரே, உம்மைப் போற்றிப் புகழ்ந்து உமக்கு நன்றி கூறுகின்றோம். இன்று உமது கனிவான அழைத்தலால் ஒன்றுகூடி வந்திருக்கும் (அன்பிய பெயர்) என்ற பெயரில் இயங்கும் எமது அன்பியத்தின் செயல்பாடுகளுக்கு, உமது பேராசிகளைப் பொழிந்தருளும். இக்கூட்டத்தில் நாங்கள் எங்கள் மீட்பர் இயேசு கற்றுக்கொடுத்த இறைவேண்டலின் மையக்கருத்தாகிய “உமது ஆட்சி வருக” என்ற பொருளில் எங்களது அன்பியச் செயல்பாடுகளை அமைப்பதற்கும் கலந்துரையாடல் வழியாக கருத்துகளைப் பெறவும் அவற்றை நடைமுறைக்குக் கொண்டுவரும் யுக்திகளையும், சக்திகளையும், ஆராயவும் இருக்கிறோம். எமக்கு நீர் வழங்கியிருக்கும் இப்பொன்னான வாய்ப்பினை நாங்கள் பயன்படுத்தி, எமது அன்பியத்தை பயனுள்ள வகையில் வழிநடத்த உமது அருளைத் தாரும். ஆமென்! நற்செய்தி வாசகம் : லூக் 11:1-4

சிந்தனை:

 இயேசு கற்பித்த இறைவேண்டல் சமயம் சாராதது. அனைத்துச் சமயத்தினரும் வேண்டலாம்.

 ஏழு உள்பிரிவுகளைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள இந்த இறைவேண்டலில் முதலில் உள்ள 3 பகுதிகளும் இறைமாட்சிக்கும் அவரது ஆட்சிக்கும் உரியன. அடுத்து வரும் 4 பகுதிகளும் இறையாட்சி உண்மையிலேயே நடைமுறைப்படுத்தப்படும் இடங்களில் காணக்கிடப்பவை.

 நான் ஒரு நாளைக்கு எத்தனை தடவை இந்த இறைவேண்டலை மன்றாடுகிறேன். சிறப்பாக 5 ஆவது பகுதியான பிறரை மன்னிப்பது குறித்து அழுத்தமாகச் சிந்திக்கிறேனா?

 இந்த மன்றாட்டு உணர்த்தும் முக்கியக்கருத்துகள் 1. இறைவனது நீங்கா உடனிருப்பு. 2. மன்னிப்புப் பெற/வழங்க அழைப்பு. 3. தீமை சோதனைகளில் பாதுகாப்பு (பொதுவாக இறையாட்சி)

 திருப்பலியில் இடம்பெறும் சிறப்பானதோர் இறைவேண்டல் இதுவே.

 அன்பியங்கள் அனைத்தும் இறையாட்சியின் வெளிப்பாடுகளே.

 ‘இறைவன் நம்முடன் இருக்கிறார்’ என்பதை உணர்ந்தாலே அனைத்து நலன்களும் பெறும் விதத்திலும், தீமைகளை அகற்றும் அணுகுமுறையிலும் நமது வாழ்வு அமையும்.

 அன்பியத்தின் உறவு வாழ்வை உயர்த்த ஒவ்வொரு உறுப்பினரும் தனியாக10 தடவைகளுக்கு மேல் இம்மன்றாட்டை ஒவ்வொருநாளும் பொருள் உணர்ந்து சொல்லலாமே...

 ஏதோ ஒரு விதத்தில் உங்கள் ஆட்சி உங்கள் வீட்டில், நிறுவனங்களில் இருக்கலாம். அது குறைச்சொல்லுக்கு உள்ளாகாதவாறு இருக்கட்டும்

நற்செய்தி பகிர்வுக்கு உதவியாக ஒரு நிகழ்வு

அது ஒரு நற்செய்திப் பணியாளர்களுக்கான மாநாடு. அதன் சிறப்புப் பரப்புரையாளர் தங்கத் தமிழ் ராசா. அவர் எப்பொழுதும் தனது உரையின் தொடக்கத்தில் இறையாட்சி வருக! என்று மூன்று தடவை முழங்குவது வழக்கம். அதன்படியே அன்றும் முழங்கினார். தொடர்ந்து தமது உரையைத் தொடங்க இருந்தார். அந்த மண்டபப் பணியாளர் ஆசானுபாகு மீசையுடன் பட்டு வேட்டி, குர்தாவுடன் வந்து, பரப்புரையாளரிடமிருந்த கை மைக்கைப் பறித்து, ஒங்களுக்கெல்லாம் புத்தியில்லையா, ஐயா எவ்வளவு பெரியவர்? அவர் என்ன இங்கு இல்லாதவரையா கூப்பிடுகிறார்? அதுவும் மூன்று தடவை கூப்பிட்டுவிட்டார். அந்த இறையாட்சி என்பவர் உடனே மேடைக்கு வந்து அய்யா சொல்றதைக்கேளுங்க என்றார் சற்று கோபமாக. பாருங்கள்! இறையாட்சி என்பது, ஓர் ஆளின் பெயராகப் புரிந்துகொள்ளப்படுகிறது. ஆம். அவர் சொன்னதிலும் ஒரு நியாயம் இருக்கிறது. இறையாட்சி எங்கு குடிகொண்டுள்ளதோ, இறையாட்சியின்படி யார் வாழ நினைக்கிறார்களோ எந்த ஊரில், எந்த தெருவில், எந்த நகரில் இறையாட்சியின் செயல்பாடுகள் நிறைந்துள்ளனவே அதுவும் இறையாட்சிதான்.

நம்பிக்கையாளர்களின் மன்றாட்டு களுக்கான கருத்துகள்

1. திரு அவை, நாடு, சமூகம், இல்லம், நிறுவனம், அமைப்பு ஆகியவற்றில் தலைமைப் பொறுப்பு வகிப்பவர்கள் இறையாட்சியின் குணங்களை மனத்திற்கொண்டு வாழும் படியாக...

2. அன்பியம், பங்கு, மறைவட்டம், மறைமாவட்டம் ஆகிய அனைத்துப் பணிகளிலும் வாழ்பவர்கள் மன்னிப்பை வழங்கவும், கேட்கவும் தயாராக இருக்கும்படியாக...

3. உலகில் எப்பகுதியிலும் உணவுப் பஞ்சம் இல்லாதவாறு தன்னிறைவு பெறவும், உணவுப் பிச்சையெடுப்போர் இல்லாத நிலை ஏற்படவும்...

4. நமது அன்பிய உறுப்பினர்களின் குடும்பங்களில் தீமை, சோதனை ஆகியவை தலையெடுக்காதவாறு தடுக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டுமென...

பரிந்துரைக்கப்படும் செயல்திட்டங்கள்

1. அன்பிய உறுப்பினர்கள் திருவழிபாட்டில் சிறப்பாகப் பங்கேற்க சிறப்பு பாடல் பயிற்சியில் கலந்து கொள்ள - அதற்காக ஏற்பாடு செய்ய.

2. நம் அன்பியத்தின் சார்பில் ‘உமது ஆட்சி வருக’ என்னும் மையப் பொருளில் ஒரு நற்செய்திக் கூட்டம் நடத்த வேண்டும்.

நிறைவு வேண்டல்:

அன்பின் அரசு நாளும் அமைய அழைப்பு விடுக்கும் விண்ணகத் தந்தையே! இன்றைய எமது அன்பியக் கூட்டத்தில் எல்லாரும் ஈடுபாட்டோடு பங்கேற்கும் அளவுக்கு நிகழ்ச்சிகளை அமைத்துத்தந்தீர். எனவே, உமக்கு நன்றி கூறுகின்றோம். இதில் பங்கேற்ற நாங்கள் இறையாட்சியை அன்றாட வாழ்க்கையில் நடைமுறைப்படுத்த அருள் தாரும். ஆமென்

(அன்பியப் பாடல்)

Comment