No icon

புகழ்பெற்ற இறையியலாளர் மறைவு

ஆல்பர்ட் நோலன்

தென் ஆப்பிரிக்க கத்தோலிக்கத் திரு அவையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவரும் புகழ்பெற்ற இறையியலாளரும் டோமினிக்கன் சபையின் அருள்பணியாளருமான ஆல்பர்ட் நோலன் அக்டோபர் 17 ஆம் தேதி மறைந்தார்.

தென் ஆப்பிரிக்காவில் பிறப்பு

1934 ஆம் ஆண்டு கேப்டவுனில் உள்ள அயர்லாந்தைப் பூர்வீகமாகக் கொண்ட நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த டென்னிஸ் நோலன், பள்ளிப் படிப்பிற்கு பிறகு வங்கி ஒன்றில் கிளர்க்காக வேலைக்குச் சேர்ந்து, தன் அழைத்தலை உணர்ந்து 1954 ஆம் ஆண்டு டோமினிக்கன் சபையில் சேர்ந்தார். ஆல்பர்ட் என்ற பெயரைத் தேர்ந்து கொண்டார்.

இறையியல் பேராசிரியராக, மாணவர்களின் ஆன்ம ஆலோசகராக

உரோமையில் உள்ள புனித தாமஸ் அக்வினாஸ் பல்கலையில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். இவரது ஆய்வை நூலாக வெளியிடுவது என்பது பண விரயம் என்று கருதியதால் இவருக்கு நிறைவு பட்டம் கொடுக்கப்படவில்லை. அதன்பிறகு தென் ஆப்பிரிக்கா திரும்பி, தாம் பயின்ற டோமினிக்கன் குருத்துவக் கல்லூரியிலேயே இறையியல் பேராசிரியராகப் பணியாற்றினார். ஸ்டெல்லன்போஷ் பல்கலைக்கழகத்தில் கத்தோலிக்க மாணவர்களுக்கு ஆன்ம ஆலோசகராகவும் பணியாற்றினார்.

இனவெறிக்கு எதிராக விடுதலை இறையியல்

1970 களில் இளம் மாணவர் கத்தோலிக்க இயக்கம் - இளம் தொழிலாளர் இயக்கம் ஆகியவற்றிற்கும் ஆலோசகராகவும் பணியாற்றினார். சிறந்த மறையுரையாளராக புகழ்பெற்று விளங்கினார்; தேசிய வானொலியில் அருளுரைகள் வழங்கி மக்களின் மனம் கவர்ந்தார். 1973 ஆம் ஆண்டில் தேசிய கத்தோலிக்க மாணவர்கள் கூட்டமைப்பின் தேசிய ஆலோசகராக நியமிக்கப்பட்டு தொண்டாற்றினார். கறுப்பின விடுதலைக்கான எழுச்சி தோன்றிய அக்காலக்கட்டத்தில், சிறுபான்மையினராக இருந்த கறுப்பின மாணவர்களை அரவணைத்து வெள்ளையின மாணவர்கள் இனவெறியை கைவிடுவதற்கான நெறிப்படுத்துதலை வழங்கி நல்லிணக்கம் நிறைந்த சூழலை ஏற்படுத்தினார்.

இயேசுவின் மானுடத்தை விளக்கும் நூல்

1970 களின் மத்தியில், புகழ்பெற்ற விடுதலை இறையியலாளரான குஸ்தாவோ குட்டியரசை சந்தித்த பிறகு, அத்தூண்டுதலினால், தேசிய மாணவர்கள் கூட்டமைப்பின் இரண்டு தேசிய மாநாடுகளில் வரலாற்று இயேசுவை முன்னிலைப்படுத்தி இறையியல் உரைகள் வழங்கினார். இதன் நீட்சிதான் 1976 இல் வெளியான உலகப் புகழ்பெற்ற நூலான Jesus Before Christianity (தமிழில் அருள்பணி. பால் லியோன் அவர்கள் ‘யார் இந்த இயேசு?’ என்ற பெயரில் தழுவலாக்கம் செய்துள்ளார்). அமெரிக்க மற்றும் இங்கிலாந்து இறையியல் பதிப்பகங்கள் இந்நூலை கடந்த நூறு ஆண்டுகளில் மிக அதிகமாக விற்பனையான இறையியல் நூலாக மக்களிடம் கொண்டுபோய் சேர்த்தன. ஆங்கிலோ-ஜெர்மன் கிறிஸ்தியல் மற்றும் விடுதலை இறையியல் கலந்து, இயேசுவின் மானுடத்தை மட்டுமே முக்கியத்துவப்படுத்தி, நாசரேத்தூர் இயேசுவை ஒரு செயல்பாட்டாளராக முன்னிலைப்படுத்தியது இந்நூல். பல்வேறு கத்தோலிக்க - கத்தோலிக்கரல்லாத இறையியல் கல்லூரிகளில் இந்நூல் பாட நூலாகவும் மாறியது.

விடுதலை இறையியலுக்கான வித்து

1980களில் அருள்பணி. ஆல்பர்ட் நோலன் தென் ஆப்பிரிக்க டோமினிக்கன் சபையின் மாநிலத் தலைவரானார். ஜோகன்னஸ்பர்க்கில் நடைமுறை இறையியலுக்கான கல்வி நிறுவனத்தை ஏற்படுத்தி, இனவெறிக்கு எதிரான கிறித்தவ ஒருங்கிணைப்பை இருநிற அருள்பணியாளர்கள் பேராசிரியர்கள் மற்றும் இறையியலாளரிடையே ஏற்படுத்தினார். நல்லதொரு அரசியல் சூழல் மீண்டும் ஏற்பட, நாடு கடத்தப்பட்ட ஆப்ரிக்க தேசிய காங்கிரஸ் தலைவர்கள் மீண்டும் வர, இவரது கல்வி நிலையம் கறுப்பின விடுதலைக்கான இறையியல் குரலை வலிமையாக எழுப்பி சமூகப் புரட்சிக்கு வழிவகுத்தது.

1983 ஆம் ஆண்டு டோமினிக்கன் சபையின் அகில உலக அளவிலான மாஸ்டர் ஜெனரல் பொறுப்பிற்கு இவர் தேர்ந்தெடுக்கப்பட்டபோதும், தனது பணி தென் ஆப்ரிக்காவிற்குத் தேவை என்று மறுத்துவிட்டார்.

கறுப்பின விடுதலையில் களம் கண்டவர்

தென் ஆப்ரிக்காவின் கறுப்பின விடுதலைக்காக, அகிம்சை முறையில் தொண்டாற்றுவதற்கான வழிகாட்டி ஆவணமான 1985 கெய்ரொஸ் ஆவணத்தை உருவாக்குவதில், தொகுப்பதில் முழுமூச்சுடன் ஈடுபட்டார். புரட்சியாளராக, கொள்கைகளில் முரண்பட்டவராக இருந்தாலும் கத்தோலிக்க ஆயர் பேரவை, தென் ஆப்ரிக்கா நீதி மற்றும் அமைதி பணிக்குழுவின் ஆலோசகராக இவரை நியமித்தது. இவரும் கம்யூனிச நாடுகளில் திரு அவையின் நிலைப்பாட்டை அறிக்கையாக தாக்கல் செய்தார்.

அரசின் நெருக்கடியும் தலைமறைவு வாழ்க்கையும்

தென் ஆப்ரிக்காவின் நெருக்கடி காலக்கட்டமான 1985 முதல் பிப்ரவரி 1990 களில் மிகுந்த நெருக்கடிக்குள்ளானார். கெய்ரோஸ் ஆவண உருவாக்கத்தில் இவரது பங்களிப்பிற்காக காவல்துறை இவரைத் தேடியது. தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தார். இக்காலக் கட்டத்தில் 1988 ஆம் ஆண்டு God in South Africa என்ற தென் ஆப்பிரிக்க காங்கிரசுக்கு ஆதரவான இரண்டாவது நூலை எழுதி வெளியிட்டார். தென் ஆப்பிரிக்கா ஜனநாயகத்தில் அடியெடுத்து வைத்தபோது, மகிழ்ந்த இவர், 1994 தேர்தலின் போது, ஊழல் மற்றும் கடிவாளமற்ற முதலாளித்துவத்தின் பிடியில் மீண்டும் தளர்வுறும் என்பதை முன்கூட்டியே கணித்தார்.

புரட்சி எழுத்தாளராக, இறையியலாளராக 

மூன்றுமுறை டோமினிக்கன் சபையின் மாநிலத் தலைவராக இருந்த போதும் தம் பேச்சு மற்றும் எழுத்துப் பணியைத் தொடர்ந்தார். 2006 ஆம் ஆண்டு Jesus Today: A Spirituality of Radical Freedom  என்ற நூலையும் 2006 ஆம் ஆண்டு Hope in an Age of Despair: And Other Talks and Writings என்ற நூலையும் வெளியிட்டார்.

டொரண்டோ பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது. 2003 ஆம் ஆண்டு மனித உரிமைகளுக்கான இவரது பங்களிப்பைப் பாராட்டி தென் ஆப்ரிக்க அதிபர் தாபோ மெபேக்கி ஆர்டர் ஆஃப் லூத்துளி என்ற விருதை வழங்கி கௌரவப்படுத்தினார். 2008 ஆம் ஆண்டு டோமினிக்கன் சபையின் அகில உலகத் தலைவர் கார்லோஸ் அஸ்பிரோஸ் சபையின் இறையியல் அறிஞராக அங்கீகரித்து கௌரவித்தார்.

இயல்பாக எளிமையான மனிதரான இறையியலாளர் ஆல்பர்ட் நோலன் கேப் டவுன் பல்கலைக் கழகம் உட்பட பல்வேறு பல்கலைக் கழகங்கள் வழங்கிய பேராசிரியர் பதவிகளை மறுத்தார். கடைசிவரை ஓர் எளிய தாழ்ச்சி நிறைந்த டோமினிக்கனாகவே வாழ்ந்தார்

.

எழுத்து அஞ்சலி

கம்யூனிச சித்தாந்தங்களில் வேரூன்றியவராக எளிய வாழ்க்கையே வாழ்ந்தார். இறையாட்சிக்கான விழுமியங்களை தன் எழுத்துக்கள் வழியாகவே விதைத்தார்.

‘இயேசுவின் அரசியல்’ என்பது குறித்து என்  இறையியல் ஆய்வு நூலுக்கு இறையியலாளர் ஆல்பர்ட் நோலனின் நூல்களே மிகப்பெரிய உந்துதல்.

எழுத்தாளன் தன் எழுத்துக்களால் புரட்சிக்கும் விடுதலைக்கும் பங்களிக்க முடியும் என்பதை நிரூபித்தவர் இறையியலாளர் ஆல்பர்ட் நோலன்!

‘நம் வாழ்வு’ வார இதழ் அவருக்கு இவ்வெழுத்துகள் வழியாக எழுத்து அஞ்சலி செலுத்துகிறது.

Comment