No icon

பாத்திமாவில் தொடங்கியுள்ள உலகளாவிய அமைப்பு

ஆகஸ்ட் 1-6, 2023 இல் லிஸ்பனில் உலக இளையோர் நாள்

அடுத்த ஆண்டில் போர்த்துக்கல் நாட்டு லிஸ்பனில் நடைபெறவிருக்கும் உலக இளையோர் நாள் அமைப்பாளர்கள், உறவுப் பாலங்களைக் கட்டுமாறு, பொதுநிலையினர், குடும்பம் மற்றும் வாழ்வு திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் கெவின் பேரல் அவர்கள் அழைப்புவிடுத்துள்ளார்.

2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒன்று முதல் ஆறு வரை, லிஸ்பனில் நடைபெறவிருக்கும் உலக இளையோர் நாளைமுன்னிட்டு, அக்டோபர் 17 ஆம் தேதி, திங்களன்று பாத்திமாவில் தொடங்கியுள்ள உலகளாவிய அமைப்பாளர் கூட்டம், போர்த்துக்கல் நாடு மற்றும், லிஸ்பன் நகரின் கலாச்சாரத்தையும் தனித்துவத்தையும் தெளிவுபடுத்தும் நோக்கத்தில் நடத்தப்பட்டு வருகிறது. இக்கூட்டத்தில் கலந்துகொள்ளும் ஆயர் பேரவைகள், இளையோர் பணிக்குழுக்கள், இயக்கங்கள், துறவு சபைகள் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கு உரையாற்றிய கர்தினால் கெவின் பேரல் அவர்கள், இக்கூட்டத்தின் நோக்கத்தை முதலில் தெளிவுபடுத்தியுள்ளார்.

சிறப்புக் கூட்டம்

இக்கூட்டத்தின் சிறப்பியல்பை எடுத்துரைத்த கர்தினால் கெவின் பேரல் அவர்கள், 2019 ஆம் ஆண்டு சனவரியில் பானமா நாட்டில் நடைபெற்ற உலக இளையோர் நாளுக்குப்பின்னர், இளையோருக்கு மறைப்பணியாற்றும் பிரதிநிதிகள் முதல்முறையாக நேரிடையாகச் சந்திக்கின்றனர் என்று கூறியுள்ளார்.

நேருக்கு நேர் இடம்பெறும் இச்சந்திப்பு, நாடுகள் மற்றும் கலாச்சாரங்களுக்கு இடையே பாலங்களைக் கட்டியெழுப்புவதன் அடையாளமாக உள்ளது என்றும், திருஅவை, ஒரே உலகளாவியத் திருஅவையாகப் பயணம் மேற்கொண்டுவருவதன் முக்கியத்துவத்தைக் குறித்துக் காட்டுகிறது என்றும் கர்தினால் கெவின் பேரல் கூறியுள்ளார்.

கிறிஸ்து அரசர் பெருவிழாவன்று மறைமாவட்ட அளவில் நடைபெறும் இளையோர் நாள் உட்பட, உலக இளையோர் நாள் தயாரிப்புக்களில் இளையோரே முக்கிய செயல்பாட்டாளர்களாக இருக்கவேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வலியுறுத்தி வருவதையும் கர்தினால் குறிப்பிட்டுள்ளார்.

இளையோர் மாற்றத்தைக் கொணரும் முக்கிய கதாநாயகர்கள் எனவும், பாத்திமா நகரில் நடைபெறும் இக்கூட்டத்தில் இளையோர் எடுக்கும் தீர்மானங்களை செயல்படுத்தவேண்டியது அனைவரின் கடமை எனவும் கூறியுள்ள கர்தினால் கெவின் பேரல் அவர்கள், இந்த அமைப்பாளர்கள் தூய ஆவியாருக்குத் திறந்தமனதுள்ளவர்களாய் இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

Comment