No icon

பொதுக்காலம் 18 -ஆம் ஞாயிறு (04-08-2024)

விடுதலைப் பயணம் 16:2-4.12-15; எபேசியர் 4:17.20-24; யோவான் 6:24-35

திருப்பலி முன்னுரை

தெய்வீக உணவைப் பெற்றுத் தரும் தெய்வீக விருந்துக்கு அன்போடு அனைவரையும் வரவேற்கின்றோம். ‘குருத்துவம் என்பது இயேசுவின் இதயத்தின் அன்பைப் போன்றது. குருவைப் பார்க்கும்போது இயேசுவைப் பார்ப்பதற்குச் சமம்என்கிறார் புனித ஜான் மரிய வியான்னி. இன்று குருக்களின் பாதுகாவலர் புனித ஜான் மரிய வியான்னியின் திருவிழாவைக் கொண்டாடுகின்றோம். குரு என்பவர் வழிபாட்டின் தலைவர் மட்டும் அல்லர்; வாழ்வின் தலைவர். வாழ்வை எவ்வாறு வாழ வேண்டுமென்று நமக்கு வழிகாட்டும் தலைவர். அவர் இயேசுவின் மீட்புத் திட்டத்தின் பங்கேற்பாளர். ஆயனாக இருந்து, மக்களைப் பாவத்திலிருந்து மீட்டு, உண்மையான வழியில், இறைவனின் வழியில் வழிநடத்தும் நல்லதொரு வழிகாட்டி. தன்னை மறுத்து, தன் வழியாக இறைவனை மக்களுக்கு வெளிக்காட்டுவது குருவின் தன்னலமற்ற பணி. “பாலைநிலத்தில் உங்களுக்கு உணவளித்தது மோசே அல்ல; என் தந்தையேஎன்கிறார் இயேசு. அதுபோல, இறைவனின் திட்டத்தை நிறைவேற்றும் பணியாளர்கள் அவர்கள். “கிறிஸ்துவை யாரும் காண முடியாது; ஆனால், ஒவ்வொருவரும் குருவைப் பார்க்கிறார்கள்; அவர் மூலமாக அவர்கள் இறைவனைக் காண விரும்புகிறார்கள்; இறைவனுடைய மகத்துவம் மகத்தானது; குருக்களின் கம்பீரமும், கண்ணியமும் அளப்பரியதுஎன்கிறார் திருத்தந்தை இரண்டாம் யோவான். குருத்துவத்தின் மகத்துவம் உணர்ந்து, குருக்களின் பணி சிறக்கத் தேவையான அருளையும், ஆற்றலையும், வல்லமையையும் இறைவன் குருக்களுக்குத் தரவேண்டுமென்று நாம் அனைவரும் இணைந்து செபிப்போம், இறையாசீர் பெறுவோம்.

முதல் வாசக முன்னுரை

இஸ்ரயேல் மக்கள் பசியால் மாண்டு போக, அந்தப் பாலைநிலத்திற்கு அழைத்து வந்ததாக மோசேவுக்கும், ஆரோனுக்கும் எதிராகக் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், கடவுளுக்கு எதிராக முறுமுறுக்கின்றார்கள். முறுமுறுத்தல் என்பது கடவுளை வசைபாடுகின்ற எதிர்மறையான, நம்பிக்கையின்மையின் அடையாளம். கடவுளுக்கு எதிரான முறுமுறுத்தலை, நம்பிக்கைக்கு எதிரான திட்டமாகவும், தண்டிக்கப்பட வேண்டிய துரோகமாகவும் விடுதலைப் பயண ஆசிரியர் பதிவு செய்கின்றார். அதனைக் கவனமுடன் கேட்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

இரண்டாம் வாசகம் கிறிஸ்தவப் புதுவாழ்வைப் பற்றிப் பேசுகின்றது. புனித பவுல் பழைய வாழ்க்கை முறையை மாற்றச் சொல்கிறார். இந்தப் பழைய வாழ்க்கை முறை என்பது கிறிஸ்தவர்களாக மாறுவதற்கு முன் வாழ்ந்த கிரேக்க-உரோமைய வாழ்க்கை முறையைக் குறித்துக் காட்டுகின்றது. மக்களின் மனப்பாங்கு புதுப்பிக்கப்பட வேண்டும். கடவுளது சாயலாகப் படைக்கப்பட்ட புதிய மனிதருக்குரிய இயல்பு. அவ்வியல்பு உண்மையான நீதியில் வெளிப்படுகிறது. நாமும் இறைவன் விரும்பும் புதுவாழ்வை வாழ வேண்டும் என்ற உணர்வோடு வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டு

1. வழிகாட்டும் வல்லமையான இறைவா! திரு அவையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவிகள் ஆகியோரை நிறைவான ஆசிரால் நிரப்பியருளும். மக்களை ஆன்மிகத்திலும், முழுமையான வளர்ச்சியிலும் வழிநடத்தத் தேவையான அருளைத் தர இறைவா, உம்மை மன்றாடுகிறோம்.

2. ‘நீதியை நிலைநாட்டும் வேட்கை கொண்டோர் பேறுபெற்றோர்; ஏனெனில், அவர்கள் நிறைவு பெறுவர்என்று கூறிய இறைவா! அநீதி நிறைந்த உலகில் உண்மையையும், நீதியையும் அழியாமல் காக்கும் நபர்களுக்காக மன்றாடுகிறோம். நீதியைக் காக்கப் போராடும் மக்களுக்குத் தேவையான வல்லமையையும், ஆற்றலையும் தர வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

3. அழியாத உணவை அளித்த அன்பு ஆண்டவரே! மக்கள் பசியால் இறக்கக்கூடாது என்று உழைக்கும் மக்களுக்காக மன்றாடுகிறோம். தங்களிடம் இருப்பவற்றை இல்லாதவர்களுக்குப் பகிர்ந்தளிக்கும் மக்களுக்கு, நிலையான அழியாத மகிழ்ச்சியை அவர்களுக்குத் தந்து அருள்புரிய இறைவா, உம்மை மன்றாடுகிறோம்.

4. எங்களுக்காக இரத்தம் சிந்திய உன்னதமான இறைவா! நோயாளிகளுக்கும், விபத்தில் சிக்கிய நபர்களுக்கும், தேவையில் இருப்பவர்களுக்கும் தங்களின் இரத்தத்தைக் கொடையாகக் கொடுக்கும் நபர்களுக்காக மன்றாடுகிறோம். அவர்களின் தன்னலமற்ற மனப்பான்மையைப் போல பலரும் முன்வந்து குருதிக் கொடை தர இறைவா, உம்மை மன்றாடுகிறோம்.

Comment