No icon

பாஸ்கா காலம் 4-ஆம் ஞாயிறு (21-04-2024)

(நல்லாயன் மற்றும் இறையழைத்தல் ஞாயிறு) திப 4:8-12; 1யோவா 3:1-2; யோவா 10:11-18

திருப்பலி முன்னுரை

இன்று நாம் பாஸ்கா காலத்தின் நான்காம் ஞாயிறு திருவழிபாட்டைச் சிறப்பிக்கின்றோம். இந்த ஞாயிறுநல்லாயன் ஞாயிறுஎன்றும், ‘இறை அழைத்தல் ஞாயிறுஎன்றும் அழைக்கப்படுகிறது. நம் ஆண்டவர் இயேசுவைப்போல, திரு அவையை வழி நடத்த நல்ல ஆயர்கள் உருவாக உழைக்கவும், செபிக்கவும் இன்று நாம் அழைக்கப்படுகிறோம். ஒரு நல்ல ஆயருக்குச் சிறந்த எடுத்துக்காட்டு நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவே. மந்தையை நன்கு அறிந்த, ஆடுகளுக்காக உயிரைக் கொடுக்கிற, ஆடுகளை முன்னின்று வழிநடத்துகிற ஒரு நல்ல ஆயராக நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து திகழ்ந்தார். தொலைந்து போன ஓர் ஆட்டையும் விட்டுவிடாமல் தேடிச் செல்ல வேண்டும் என்பதை தம் வாழ்வால் போதித்தவர் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து. இன்று இத்தகைய பண்புகளைக் கொண்ட திரு அவைத் தலைவர்கள் உருவாகிடச் செபிக்க வேண்டியது நம் தலையாயக் கடமை. ‘நமது ஞான மேய்ப்பர்களுக்கு நம்மாலான உதவிகளைச் செய்வதுஎன்னும் திரு அவைக் கட்டளையை மனத்தில் நிறுத்தியவர்களாய் இறைப் பணியாற்றும் ஆயர்கள், குருக்கள் மற்றும் இரு பால் துறவிகளுக்காகவும், இறையழைத்தல் பெருகிடவும் இந்தத் திருப்பலியில் பக்தியோடு மன்றாடுவோம்.

முதல் வாசக முன்னுரை

கட்டுகிறவர்களால் இகழ்ந்து தள்ளப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட கல்லான ஆண்டவர் இயேசு வழியாகவே இவ்வுலகிற்கு மீட்பு வந்தது. அவரே அனைத்திற்கும் மூலைக்கல்லாக உள்ளார் என்றுரைக்கும் இம்முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

நாம் அனைவரும் கடவுளின் பிள்ளைகளாக இருக்கிறோம். நம் கடவுள் நம் ஒவ்வொருவரையும் அன்பு செய்கிறார். அவரது பிள்ளைகளான நாம் அவரைப் போல மாறுவோம் என்றுரைக்கும் இவ்விரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டுகள்

எங்கள் அன்புத் தந்தையே! உம் திரு அவையை வழி நடத்தும் உமது திருப்பணியாளர்கள், தாங்கள் சந்திக்கும் வேதனைகள், அவமானங்கள்   மத்தியிலும் உமது மந்தைகளை மகிழ்வோடு வழிநடத்த வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகிறோம்.

இரக்கமுள்ள தந்தையே! உலக நாடுகளின் தலைவர்கள், உம் திருமகன் இயேசு கிறிஸ்து கொண்டு வந்த அன்பை தங்கள் மக்களின்மீது பொழிந்து, உம்மைப்போல அன்பின் உலகை அமைத்திட வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகிறோம்.

வாழ்வை வழங்குபவரே! எங்கள் பங்குத் தந்தை வழியாகவும், பெரியவர்கள் வழியாகவும் நீர் எங்களுக்கு அளிக்கும் அறிவுரைகளுக்கு நாங்கள் கவனமுடன் செவிமடுத்து, உமக்கு உகந்த மக்களாக வாழ வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகிறோம்.

எங்கள் பரம்பொருளே! இறையழைத்தல் ஞாயிறைச் சிறப்பிக்கும் இந்நாளில் எம் பங்கில் உள்ள இளையோர்கள், உம் திருமகனைப் போல தாங்கள் செல்லும் இடமெல்லாம் உமது அன்பின் நற்செய்தியை அறிவிப்பவர்களாய் மாறிட  வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகிறோம்.

Comment