
பொதுக்காலம் நான்காம் ஞாயிறு (28-01-2024)
இ.ச 18:15-20; 1கொரி 7:32-35; மாற்கு 1:21-28
திருப்பலி முன்னுரை
இன்று நாம் பொதுக்காலத்தின் நான்காவது ஞாயிறு திருவழிபாட்டைச் சிறப்பிக்கின்றோம். இன்றைய நற்செய்தியில் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அதிகாரமிக்கப் போதனையைக் கண்டு, அங்கு சூழ்ந்திருந்த மக்கள் அனைவரும் ஆச்சரியத்தில் மூழ்கிப் போகிறார்கள். ஏன் இந்த மக்கள் ஆண்டவரின் போதனையைக் கண்டு ஆச்சரியத்தில் மூழ்கிப் போக வேண்டும்? ஏனென்றால், ஆண்டவர் இயேசுவுக்கு முன்பாக வந்த நீதித்தலைவர்கள் மற்றும் இறைவாக்கினர்கள், ஓர் அற்புதத்தைச் செய்ய வேண்டும் என்றாலோ அல்லது ஒரு செய்தியை மக்களுக்கு அறிவிக்க வேண்டும் என்றாலோ கடவுளின் பெயரைச் சொல்லி அதைச் செய்ய வேண்டும். ஆனால், ஆண்டவர் இயேசு அப்படிச் செய்யாமல் நேரடியாகவே தீய ஆவிகளிடம், ‘நான் உனக்குக் கட்டளையிடுகிறேன்’ என்று கூறுகிறார். நோயுற்றோரிடம், ‘நம்புகிறாயா? நலம் பெறு’ என்று கூறுகிறார். நற்செய்தியை அனைவருக்கும் அறிவிக்கிறார். இதனாலே மக்கள் ஆண்டவர் இயேசுவின் போதனையைக் கண்டு மலைத்துப் போனார்கள். ஆண்டவரின் போதனையை, வார்த்தையை அன்றாடம் கேட்கும் நாம், அவ்வார்த்தையின்படி வாழ்ந்து, பிறருக்கு அதை வாழ்வால் அறிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறோம் என்பதை உணர்ந்தவர்களாய் இத்திருப்பலியில் பக்தியோடு பங்கெடுப்போம்.
முதல் வாசக முன்னுரை
இறைவாக்கினர்கள் ஆண்டவரின் பெயரால் பேசுகிறபோது, ஆண்டவர் கட்டளையிட்டவற்றை மட்டுமே பேச வேண்டும். இல்லையேல் இறைவாக்கினர்கள் சாவார்கள் என்றுரைக்கும் இம்முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.
இரண்டாம் வாசக முன்னுரை
நாம் ஒவ்வொருவரும் முழு மனதோடு ஆண்டவர் மீது பற்று கொண்டவர்களாய் வாழ வேண்டும். எனவே, ஆண்டவருக்குரியவற்றில் நாட்டம் கொள்வோம் என்றுரைக்கும் இவ்விரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.
மன்றாட்டுகள்
● எங்கள் அன்புத் தந்தையே! உமது திரு அவையை வழி நடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் மற்றும் பொதுநிலையினர் அனைவரும் உமது விருப்பத்தைப் புரிந்து கொண்டு, அதற்கேற்றவாறு பணிபுரிந்திட வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகிறோம்.
● எம் பரம்பொருளே! நாட்டை ஆளும் தலைவர்கள், உமது இறைவாக்கினர்களைப் போல நீர் விரும்பிக் கட்டளையிடும் செயல்களை மட்டுமே செய்பவர்களாக மாறிட வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகிறோம்.
● எங்கள் வானகத் தந்தையே! குருத்துவம், துறவறம், இல்லறம் என அவரவருக்கேற்ப நாங்கள் கொண்டிருக்கும் நிலைகளில் முழு மனத்தோடு உமக்குப் பணியாற்றக்கூடிய மக்களாக நாங்கள் வாழ்ந்திட வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகிறோம்.
● எம்மைக் காப்பவரே! எங்களையும், எம் நாட்டையும் பாதுகாக்க கடுங்குளிரிலும், வெயிலிலும் தங்களை வருத்திக் கொண்டிருக்கும் எம் நாட்டுப் பாதுகாப்புப் படைவீரர்களை உமது திருக்கரத்தால் ஆசீர்வதித்து வழிநடத்த வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகிறோம்.
Comment