No icon

திருவருகைக் காலம் மூன்றாம் ஞாயிறு (17-12-2023)

எசா 61:1-2,10-11; 1தெச 5:16-24; யோவா 1:6-8,19-28

திருப்பலி முன்னுரை

இன்று நாம் திருவருகைக் காலத்தின் மூன்றாம் ஞாயிறு திருவழிபாட்டைச் சிறப்பிக்கின்றோம். இஸ்ரயேல் மக்கள் ஆண்டவரின் விருப்பத்திற்கு எதிராக நடந்து, பாவம் செய்தபோதெல்லாம் அந்நிய நாட்டு மன்னர்களின் அடிமைகளானார்கள். ஆண்டவரும் தமது சார்பாக இறைவாக்கினர்களை அனுப்பி தம் மக்களை மீட்டு வந்தார். அதுவரை துன்பத்தில், அடக்குமுறையில் வாழ்ந்து வந்த மக்கள் தங்களை மீட்க ஒருவர் வருகிறார் என்பதை அறிந்தவுடன் பெருமகிழ்ச்சி கொண்டார்கள். இப்போது அதே மக்கள் உரோமைப் பேரரசின் கீழ் அடிமைகளாக இருக்கிறார்கள். ‘இந்த உரோமைப் பேரரசின் அடக்கு முறையில் இருந்து நம்மை விடுவிக்க வாக்களிக்கப்பட்ட மெசியா எப்போது வருவார்?’ என்ற ஏக்கத்தோடு காத்திருக்கும் நேரத்தில், ஆண்டவர் இயேசு வரப் போகிறார் என்ற மாபெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை திருமுழுக்கு யோவான் அறிவிக்கிறார். இந்த மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியைத் தருவதற்கு முன்பாகத் திருமுழுக்கு யோவான், தான் மெசியா அல்ல என்று கூறி ஆண்டவரின் முன்பாகத் தன்னைத் தாழ்த்திக்கொள்கிறார். அந்தத் தாழ்ச்சி திருமுழுக்கு யோவானை உயர்த்தியது. கடவுளின் முன்பாக நம்மைத் தாழ்த்திக் கொள்கிறபோது அவரது வருகை நமக்கு மகிழ்வைத் தரும் என்பதை உணர்ந்தவர்களாய் இந்த ஞாயிறு கடன் திருப்பலியில் பக்தியோடு பங்கெடுப்போம்.

முதல் வாசக முன்னுரை

ஆண்டவரின் ஆவியினால் அருள்பொழிவு செய்யப்படுவோர், ஒடுக்கப்பட்டோருக்கு, உள்ளம் உடைந்தோருக்கு, சிறைப்பட்டோருக்கு ஆண்டவரின் வார்த்தை மூலம் விடுதலை அளிக்க வேண்டுமென்று கூறும் இம்முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். எவர் ஒருவர் தீமைகளை விட்டு விலகி நல்லதை மட்டுமே பற்றிக்கொள்கிறாரோ, அவர் மட்டுமே மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்று கூறும் இவ்விரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டுகள்

தூய ஆவியைப் பொழிபவரே! உமது திரு அவையை வழிநடத்தும் உமது திருப்பணியாளர்கள், தங்கள் அருள்பொழிவில் பெற்றுக் கொண்ட  தூய ஆவியைக் கொண்டு உமது திரு அவையை மகிழ்ச்சியுள்ள ஒரு குடும்பமாக மாற்றிட வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகிறோம்.

வாழ்வளிக்கும் வள்ளலே! உமது திருமகனின் முதல் வருகையில் உலகமே மகிழ்ந்தது போல, தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் தலைவர்களின் ஆட்சியினால் நாட்டு மக்கள் மகிழ்வும், வளமும் பெற்றிட வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடு கிறோம்.

கனிவுள்ள தந்தையே!  பங்கு எனும் இச்சிறிய திரு அவை குடும்பத்தில் எங்கள் பங்குத் தந்தையோடு இணைந்து, அவர் எடுக்கும் முயற்சிகளுக்கெல்லாம் தோள் கொடுத்து, நாங்கள் மகிழ்ந்து வாழ்ந்திட வேண்டுமென்று இறைவா, உம்மை  மன்றாடுகிறோம்.

ஆறுதலின் ஆண்டவரே!  உடல், உள்ள நோயினால், வறுமையினால் அனுதினமும் துன்பத் துயரங்களைச் சந்தித்துக் கொண்டிருக்கும் உம் அடியாருக்கு, மகிழும் தருணத்தை உமது திருமகன் வருகையினால் நீர் தந்திட வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகிறோம்.

Comment