No icon

ஞாயிறு – 04.06.2023

மூவொரு கடவுள் பெருவிழா விப 34:4-6, 8-9, 2கொரி13:11-13, யோவா 3:16-18

திருப்பலி முன்னுரை

இன்று நாம் மூவொரு கடவுளின் பெருவிழாவை கொண்டாடி மகிழ்கின்றோம். கடவுள் ஒருவரே. அவர் தந்தை, மகன், தூயஆவியார் என மூன்று ஆட்களாய் மீட்புத் திட்டத்தில் செயல்பட்டு வருகிறார். தந்தை கடவுள் படைக்கும் பணியையும், மகனாகிய கிறிஸ்து, மீட்டு பாதுகாக்கும் பணியையும், துணையாளராம் தூயஆவியார் புனிதப்படுத்தும் பணியையும் செய்கின்றனர். இவ்வாறு, ஒரே கடவுள், மூன்று ஆட்களாகப் பிரிந்து, மீட்புத் திட்டத்திலே மூன்று தனித்தனி வேலைகளை செய்கிறபோது, அவரை எப்படி ஒரே கடவுள் என்றழைக்க முடியும் என்ற சந்தேகம் நமக்குள் தோன்றலாம். மூன்று ஆட்களும் தனித்தனி பணிகளை செய்தாலும், இப்பணியிலே மூவரும் ஒரே இறைவல்லமை, ஒரே இறைவிருப்பம், ஒரே இறைசாராம்சம், ஒரே இயல்பு உடையவர்களாக இருப்பதால், மூவொரு கடவுள் என்றழைக்கப்படுகிறார். இதைத்தான் நம் ஆண்டவர் இயேசுவின் திருமுழுக்கிலும் காண்கின்றோம். இறைமகன் திருமுழுக்கு பெற, தூயஆவியார் அவர் மீது இறங்கி வர, தந்தைக் கடவுள் தன் மகனை வாழ்த்தி, அவருக்குச் செவிசாய்க்குமாறு கூறுகிறார். இவ்வாறு, மீட்புத் திட்டத்தில் மூவரும் எவ்வித வேறுபாடுமின்றி ஒரே இறைவல்லமையோடு, ஒரே இறை விருப்பத்தோடு, இணைந்து செயல்பட்டதாலே நாம் ஒரேகடவுள் என்றழைக்கிறோம். தந்தை கடவுள் நம் மீது கொண்ட அன்பினால் தன் ஒரே பேறான மகனை உலகிற்கு அனுப்பினார். இறைமகன் இயேசு தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றிய பிறகு, தூயஆவியாரை துணையாளராக உலகிற்கு அனுப்புகிறார். தூய ஆவியார் இறைவனையும், மக்களையும் இணைக்கும் பாலமாக செயல்படுகிறார். மூவொரு இறைவனின் பெருவிழாவை கொண்டாடும் இந்நாளில், நாமும் கிறிஸ்தவர்கள் என்ற ஒன்றித்த மனநிலையோடு இறைபணி செய்திட இத்திருப்பலியில் பக்தியோடு மன்றாடுவோம்.

முதல் வாசக முன்னுரை

ஆண்டவரே நாங்கள் வணங்கா கழுத்துடைய மக்களாக இருக்கிறோம். எனவே, எங்கள் கொடுமைகளையும், பாவங்களையும் மன்னித்து, எம்மை உமது சொத்தாக மாற்றிக்கொள்ளும் என்று சீனாய் மலையில் மோசே இறைவனிடம் பேசுவதை இம்முதல் வாசகத்தில் கேட்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

அன்பார்ந்தவர்களே! மன ஒற்றுமையோடு இருங்கள், அமைதியோடு வாழுங்கள். அப்போது ஆண்டவர் இயேசுவின் அருளும், தூயஆவியாரின் நட்புறவும் நம்மோடு என்றும் இருக்கும் என்றுரைக்கும் இவ்விரண்டாம் வாசகத்தைக் கேட்போம்.

மன்றாட்டுகள்

1. எங்களை பாதுகாப்பவரே! உமது படைத்தல் பணி, உமது திருமகனின் மீட்டு காத்தல் பணி, தூயஆவியாரின் புனிதப்படுத்தும் பணியின் நலன்களை உமது திருஅவையின் திருப்பணியாளர்கள் அனைவருக்கும் பெற்றுத் தந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. எம்மோடு நடப்பவரே! நீர்  வார்த்தையால்  படைத்து, உருவாக்கிய இந்த உலகை காப்பதற்காக நியமிக்கப்பட்ட உமது மக்களினங்கள், அனைத்து உயிர்களையும் மதித்து, காத்து, நல்வழி நடத்திடவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. எம்மை சுமப்பவரே! நாம் ஒன்றாயிருப்பதுபோல், அவர்களும் ஒன்றாய் இருப்பார்களாக என்று மொழிந்த உம் திருமகனின் வார்த்தைகளுக்கேற்ப எங்கள் பங்கில், குடும்பங்களில் நாங்கள் ஒற்றுமையாய் வாழ்ந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. எம்மோடு இருப்பவரே! ஒரே கடவுளான நீர் மூன்று ஆட்களாய் இருக்கிறீர் என்பதை உணர்ந்த நாங்கள் எங்கள் துன்ப வேளைகளில் பல கடவுள்களை உருவாக்காமல், உண்மை கடவுளான உம்மை மட்டுமே பற்றிக் கொண்டு வாழ்ந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. எம்மை ஆள்பவரே! உமது சாயலில் உருவாக்கப்பட்டிருக்கும் நாங்கள், ஆடை-அலங்காரம் என்று, தகுதி பார்த்து பழகாமல், அடுத்தவரிலும் உம்மை கண்டு, அனைவரும் சமம் என்ற மனநிலையோடு பழகிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

Comment