No icon

குகைக் கிளிகள்

உனக்குப் பாலைவனத்து அந்தோணியாரைத் தெரியுமா?” என்றார் ஃபாதர் ஸ்லூஸ். நான்யாராய் இருக்கும்?’ என்று யோசித்தேன். துபாயா, பெஹரினா, சார்ஜாவா எந்தப் பாலைவனத்தின் அந்தோணியை இவர் கேட்கிறார்? அப்போது அவருக்குக் கிட்டத்தட்ட எண்பது இருக்கும். சிவப்புப் புள்ளிகள் நிரம்பிய அவரது வெள்ளைத்தோல் மெழுகு பூசியதைப்போல மினுக்கத்துடன் இருக்கும். இங்கிருந்த கடைசி வெள்ளைக்காரச் சாமியார்களில் ஒருவர்.

தெரியலியே சாமி!’ என்றேன்.

கி.பி. மூன்றாவது நூற்றாண்டு. கி.பி. 250-ன்னு எடுத்துக்கலாம். அப்போ சில கத்தோலிக்கக் குருக்கள் எகிப்திய பாலைவனத்துல தனியாகவும், குழுவாகவும் இருந்தாங்க. அவங்கள்ல முக்கியமானவர் பாலைவனத்து அந்தோணியார்.”

அவர் சொல்வது புனித வனத்து அந்தோணியாரைப் பற்றி என்பது, எனக்கு அப்பதான் புரிந்தது.

பாலைவனத்து அந்தோணியார் பத்தி எங்க ஊர்ல ஒரு கத சொல்வாங்க. கேக்குறியா?” என்றார். நான் தரையில் அமர்ந்துகொண்டேன்.

சொல்லுங்க ஃபாதர்.”

அவர் இருந்த இடத்திலிருந்து அசைவே இல்லாமல், திறந்திருந்த சன்னல் வழியே வெளியே பார்த்துக் கொண்டு கதையைச் சொல்ல ஆரம்பித்தார்.

வனத்து அந்தோணியார் முதல் முதல்ல பாலைவனத்துக்குப் போனப்ப, அங்க ஒரு குகைக்குள்ள தங்கினார். அந்தக் குகைக்குள்ள இருந்து அவர் நற்செய்தியப் படிக்கவும், பிரதி எடுக்கவும் ஆரம்பிச்சார். தனியா இருக்கிறதால அவர் நற்செய்திய சத்தமா வாசிப்பார். அப்ப அவர் குரல் குகையில பட்டு எதிரொலிக்கும்போது, அவர் கூட யாரோ இருக்கிறது போலவே இருக்கும்.”

நல்ல ஐடியாஎன்று நான் நினைத்துக் கொண்டேன்.

சில மாசங்களுக்கப்புறம் அவர் நற்செய்தி வாசிக்கும்போது, உண்மையிலேயே வேறொரு குரல் குகைக்குள்ளிருந்து வந்தது. அந்தோணியாருக்கு ஆச்சரியமா இருந்துச்சு. முதல்ல அந்தக் குரல் இவர் சொல்லுறதத் திரும்பச் சொல்லுச்சு. அதாவது, ‘விதைப்பவர் ஒருவர் விதைக்கச் சென்றார்என்று இவர் சொன்னால், அதுவும்விதைப்பவர் ஒருவர் விதைக்கச் சென்றார்என்று சொல்லும். ஆனால், நாள்கள் செல்லச் செல்ல அவர்விதைப்பவர் ஒருவர்என்று சொன்னால், அதுவிதைக்கச் சென்றார்என்று சொல்லும்.”

பேய்ப் பிசாசா இருக்குமோ?’ என்று நான் பயந்தேன்.

அவரால் இதை நம்ப முடியவில்லை. ஒரு விளக்கை ஏற்றிக்கொண்டு உள்ளே சென்று பார்த்தார். அங்கே ஒரு கிளிப்பிள்ளை இருந்தது.”

அட கிளிப்பிள்ளை! டுவிஸ்ட்டு டுவிஸ்ட்டு’  என்று மகிழ்ந்தேன்.

அந்தக் கிளிப்பிள்ளை வழிதவறி அந்தக் குகைக்குள்ள மாட்டி, அங்கேயே இருந்துச்சாம். மெல்ல மெல்ல அந்தக் கிளிப்பிள்ளை முழு நற்செய்தியையும் வனத்து அந்தோணியார்கிட்ட இருந்து படிச்சிடுச்சு. ஒரு வருடத்துக்குப் பின்னால அந்தோணியார் திரும்பி மடத்துக்குப் போயிட்டார். அந்தக் கிளியும் இன்னொரு குகைல இருந்த தன்னோட கூட்டத்தோட போய் சேர்ந்துச்சு

அந்தக் கிளி அங்க இருந்த எல்லாக் கிளிகளுக்கும் நற்செய்தியச் சொல்லிக் கொடுத்தது. எல்லாக் கிளிகளும் ஆர்வத்தோடு கற்றுக்கொண்டன. அந்த மூத்த கிளியை விட ராகமெல்லாம் போட்டுச் சில கிளிகள் பாடுமாம்! சில கிளிகள் எல்லாரையும் விட வேகமா ஒப்புவிக்கும்! சில கிளிகள் கடைசியிலிருந்து திரும்பச் சொல்லும். இப்படி நற்செய்திய ஓதி ஓதி அந்தக் குகையே எதிரொலிச்சுக்கிட்டே இருக்குமாம். அப்பக்கமாப் போன விலங்குகளெல்லாம் அந்தச் சத்தத்த ஒரு மாதிரி பாப்பாங்களாம்.”

இருக்காதா பின்ன?’ என்று என் மனதில் தோன்றியது.

ஆண்டுகள் செல்லச் செல்ல அவங்களுக்குள்ள சில பிரச்சினைகள் வந்தன. இளைய கிளிகள் எல்லாம் தப்புத் தப்பா வசனத்த சொல்லுறாங்கன்னு மூத்தக் கிளிகள் சொல்ல ஆரம்பித்தன. ‘நாங்க சொல்றதுதான் சரின்னு ரெண்டு குழுவும் சண்டை போட்டன. அப்புறம் ரெண்டு குழுவும் பிரிஞ்சு போனது. அப்புறம் பாட்டாப் பாடுற குழு ஒண்ணு, பாடுறதுதான் நல்லதுன்னு சொல்லிப் பிரிஞ்சு போனது. சில கிளிகள் ஒரு சில வரிகள்தான் முக்கியம்னு பிரிஞ்சு போயிடுச்சுங்க. அப்புறம் வேகமாகச் சொல்லுற கிளிகள் பிரிஞ்சு போயிடுச்சுங்க. பிறகு இன்னும் வேகமாக, புரியாத மொழியில சொல்லுற கிளிகளும் தனியாப் போயிடுச்சுங்க.

சில ஆண்டுகள் கழித்து வயதான வனத்து அந்தோணியார் அந்தப் பக்கம் திரும்பி வரும்போது அங்க பல கிளிக் கூட்டங்கள் பல்வேறு விதமா நற்செய்தி அறிவிச்சதக் கண்டார். அவர்தான் தனக்கு நற்செய்தி அறிவிச்சவர்னு மூத்த கிளி சொல்ல, எல்லாக் கிளிகளும் அவருக்கு முன்னால கூடி தங்களுடைய வாதங்களை முன்வைத்தன. ஒவ்வொரு குழுவும் மற்றக் குழுக்களைத் தாக்கிப் பேசின. ஒவ்வொன்னும் தான் சொல்வதுதான் சரி என்றது.

அந்தோணியார் தலையைப் பிடித்துக்கொண்டு தரையில் அமர்ந்துவிட்டார். பின்னர் அவர் சொன்னார்: ‘மூத்த கிளியே, பல வசனங்களைத் தப்பு தப்பாச் சொல்லிக்கிட்டுருக்குது. பல வார்த்தைகள மாத்திடுச்சு. பல பகுதிகளை விட்டிடுச்சு. அதையும் மாத்தி நீங்க எல்லாம் மேலும் மேலும் நற்செய்திய வேற ஏதோ ஒண்ணா ஆக்கிட்டீங்களே!’ என்றார்.

கிளிகள் எல்லாம் கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தன. பின்னர் எல்லாம் ஒரே குரலாகச் சேர்ந்து, ‘நாங்க சொல்லுறதுதான் சரி. நீர் சொல்றது தப்புன்னு புனித அந்தோணியாரைத் தாக்க வந்துச்சுங்க. நான் சொல்லித் தந்த நற்செய்திய நானே தப்பா சொல்றேன்னு சொல்லுதுங்களே இந்தக் கிளிகள்னு வருத்தப்பட்டு மடத்துக்குத் திரும்பி வந்துட்டாராம் வனத்து அந்தோணியார்.

இன்றைக்கும் எகிப்து பாலைவனத்துல யாரும் போக முடியாத அந்தக் குகைகளுக்குள்ள இருக்கிற கிளிகளோட சத்தம் எதிரொலிச்சுக்கிட்டே இருக் குதுஎன்று கதைய முடிச்சார் ஃபாதர் ஸ்லூஸ்.

இந்தக் கதை யாரைப் பற்றியதாக இருக்கும்? அதை ஏன் அவர் எனக்குச் சொன்னார்? என்று யோசித்து யோசித்து இன்றுவரை எனக்கு விடை கிடைக்கவில்லை. ஒருவேளை இது என்னைப் பற்றியதாகவும், நம்மைப் பற்றியதாகவும், பிறரைப் பற்றியதாகவும் இருக்கலாம். வேறு எப்படி இருக்க முடியும்?

Comment