No icon

வாழ்வு வளம் பெற –28

பார்த்துப் பழகு! பழகிப் பார்!

1942-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் காந்தியின் தலைமையில்வெள்ளையனே வெளியேறுஎன்ற இயக்கத்தைத் தொடங்கியது காங்கிரஸ் கட்சி. மும்பையில் ஒரு மாபெரும் பொதுக் கூட்டத் தில் பேசிய காந்திஜிடூ ஆர் டை’ (‘செய் அல்லது செத்து மடி’) என்ற முழக்கத்தை முன் வைத்தார். மறுநாள் காலை ஆங்கிலேய அரசு அவரைக் கைது செய்தது. அடுத்த நாள் நடந்த கூட்டத்தில் கணவருக்குப் பதிலாக மகாத்மாவின் மனைவி கஸ்தூரிபா பேச முற்பட்டபோது அவரையும் கைது செய்தனர்.

இருவரையும் இரயிலில் பூனே நகருக்குக் கொண்டு வந்து ஆகாகான் அரண்மனையில் சிறை வைத்தார்கள். இந்த முறை ஒரே இடத்தில் சிறை வைத்ததன் மூலம் கணவருக்கு அருகிருந்து பார்த்துக்கொள்ள முடிகிறதே என்ற மகிழ்ச்சி கஸ்தூரிபாவுக்கு. ஆனால், சில மாதங்களில் கஸ்தூரிபாவின் உடல் நலம் பாதிக்கப்பட்டது. சிறு வயதிலிருந்தே அவரைச் சிரமப்படுத்தியப்ரான்கைட்டிஸ்எனும் சுவாச நோய் நிமோனியா காய்ச்சலால் இன்னும் மோசமாகி, இதயநோய் வந்து இருமுறை மாரடைப்பு ஏற்பட்டது. ஆங்கிலேய அரசு காலம் தாழ்த்தி, தாமதமாகச் சிகிச்சையை அனுமதித்தாலும் அவரின் உடல்நலம் தேறவில்லை.

1944-ஆம் ஆண்டு பிப்ரவரி 22-ஆம் நாள் மாலை 7.30 அளவில் தனக்கான நேரம் வந்துவிட்டதை உணர்ந்த கஸ்தூரிபா தன் கணவரின் அறைக்கு எடுத்துச் செல்லப்பட அனுமதி கேட்டார். கணவரைப் பார்த்ததும் அவர் மடியில் தலைசாய்த்துப் படுத்து சில நிமிடங்களில் உயிர் துறந்தார்.

மறுநாள் அந்த வளாகத்தின் ஒரு மூலையில் அவருடைய உடல் எரியூட்டப்பட, கொளுந்துவிட்டெரிந்த நெருப்பைக் கண்ணீர் வடித்தபடியே பார்த்துக் கொண்டிருந்த காந்தி, “அவள் என்னைவிட உயர்ந்தவளாகவே இருந்தாள். அவள் இல்லையென்றால் நான் பாதாளத்தில் விழுந்திருப்பேன்என்றார்.

வெற்றி பெறும் திருமணங்களுக்குக் காந்தி-கஸ்தூரிபாவின் திருமண வாழ்வு எவ்வளவு நல்ல உதாரணம்!

விலகு விலகுஎன்ற கட்டுரையில், சில குணங்களையும் செயல்களையும் பார்த்ததும்இந்த ஆள் ஆபத்தானவர்என்பதை உணர்ந்து, உடனே விலகுவதே உத்தமம் என்று நான் கூறியிருந்ததைப் படித்த ஒரு சகோதரி, “இது மிகவும் பயனுள்ளதுதான். இதேபோல எந்தக் குணங்களை, செயல்களைப் பார்த்து இவர் எனக்கேற்ற நல்லவர்தான் என்பதை இளையோர் புரிந்து கொள்ள முடியும் என்பது பற்றியும் எழுதுங்களேன்என்று கேட்டார்.

ஆணோ, பெண்ணோ வாழ்நாள் முழுவதும் உடனிருந்து, எல்லாவற்றையும் பகிர்ந்துகொள்ளும் வாழ்க்கைத் துணையாய் இருக்க ஒருவர் உகந்தவரா? இல்லையா? என்பதைப் புரிந்து கொள்ளவிடாமல் தடுக்கும் தடைகள் என்ன?

இளையோருக்குப் பெரும் தடையாக இருப்பது வெறுமனே உடல் சார்ந்த அல்லது தோற்றம் சார்ந்த கவர்ச்சி. ஆங்கிலத்தில் இதைஇன்ஃபாச்சுவேஷன்என்கின்றனர். ஒருவரைக் கூர்ந்துநோக்கி, அவர் பேச்சையும் செயலையும் கவனமாய்ப் பார்த்து, உண்மையில் இந்த நபர் எப்படிப்பட்டவர் என்பதைப் புரிந்து கொள்ளவிடாமல் இந்தக் கவர்ச்சிக் காய்ச்சல் தடுத்து விடுகிறது.

இந்தக் கவர்ச்சி விரைவில் மறைந்து விடுகிற ஒன்றுதான். ஆனால், இதன் பாதிப்பால் எளிதாகப் பார்க்க முடியாத அந்த முதல் சில நாள்களில்இவர்தான் என்னவர்அல்லதுஇவரைத்தான் மணந்துகொள்வேன்என்று முடிவெடுத்து விடுவோர் பெரும் ஏமாற்றங்களை விரைவில் அறுவடை செய்கிறார்கள். குளத்தின் நீரில் மயங்கி, அதன் ஆழம் தெரியாமல் காலை விட்டு மூழ்கிப் போவோர் இவர்கள்தாம்.

சில இளையோர் தோற்றத்தில் மயங்காவிட்டாலும், ஒருவரின் செல்வச் செழிப்பு, பணம், நகை, வசதிகளில் மயங்கி விடுகின்றனர்.

நான் நினைக்கும் இந்த ஆண் அல்லது இந்தப் பெண் என் பிள்ளைக்கு ஏற்ற நல்ல வாழ்க்கைத் துணையாக அமைவாரா என்று பெற்றோர், பெரியோரை நிதானமாய் யோசிக்கவிடாமல் தடுக்கும் தடைகள் பல. ‘முன்பே நான் வாக்குக் கொடுத்துவிட்டேன். என் வாக்குறுதியை நானே மீற முடியாதுஎன்ற போலி கௌரவம் இவற்றில் ஒன்று. எதிர்காலம் பற்றி ஏதும் தெரியாமல், தன் மகனின், மகளின் மனம் பற்றி எதுவும் அறியாமல், அவர்களின் வாழ்வைச் சார்ந்த ஒரு பெரும் முடிவைத் தாங்களே எடுக்கும் பெற்றோர் யாருக்கு ஒப்பானவர்கள் தெரியுமா?

பழைய ஏற்பாட்டில் நீதித்தலைவர்கள் நூலில் வரும் இப்தா என்ன வாக்குறுதி தருகிறான்? ‘போரில் வெற்றி கிடைத்தால் நாடு திரும்பும்போது யார் முதலில் என் கண்ணில் படுகிறார்களோ அவரை எரித்துப் பலியிடுவேன்என்று கடவுளிடம் வாக்களிக்கிறான். தந்தை பெற்ற வெற்றியைக் கேட்டு பெருமகிழ்வோடு அவனை வரவேற்க வருபவள் அவனின் ஒரே மகள் (நீத 11:30-12:40). அவளின் அகால முடிவுக்குக் காரணம் அவளது தந்தையின் முட்டாள்தனமான வாக்குறுதிதானே?

சில பெற்றோர், பெரியோரின் பார்வையை மறைப்பது சாதி, மதம், மொழி சார்ந்த வெறி. எந்த வெறியாக இருந்தாலும் தெளிவாய்ப் பார்க்கவிடாமல், சரியாய்ச் சிந்திக்க முடியாமல் அது தடுத்து விடுகிறது. வெறியினால் வழிநடத்தப்படும் பெற்றோர் தங்கள் மகள் அல்லது மகனின் எதிர்காலத்தை மட்டுமல்ல, தங்களின் எதிர்காலத்தையும் தாங்களே சிதைத்துக் கெடுத்து விடுகின்றனர்.

இவற்றின் பாதிப்பு ஏதும் இல்லாத இளையோர் வாழ்க்கைத் துணையாய் இருக்க ஒருவர் ஏற்றவரா என்று புரிந்துகொள்ள அவரோடு பழகுவதற்குச் சிறிது காலம் வேண்டும். பழகும் அந்த நாள்களில் அவர்கள் கவனமாய்ப் பார்க்க வேண்டியது என்ன?

வாழ்க்கைக்கு மிக முக்கியமானவை, ஒருபோதும் கைவிடக் கூடாதவை என்று நாம் நினைக்கும் சில விழுமியங்கள் உள்ளன அல்லவா? அவை நான் பழகும் இந்த நபருக்கும் முக்கியமானவையா என்று பார்க்க வேண்டும். இரக்கம், மனிதநேயம், சமத்துவம், நீதி, நேர்மை போன்றவை அவருக்கும் முக்கியமான விழுமியங்களா? இல்லையா? என்று கண்டுபிடிக்க வேண்டும்.

இது எனக்கு முக்கியம் இல்லைஎன்று யாரும் வெளிப்படையாகச் சொல்லப் போவதில்லை. எனவே, செயல்களில், நடவடிக்கைகளில் இவை வெளிப்படுகிறதா? என்று கவனமாய்ப் பார்க்க வேண்டும். எடுத்துக்காட்டாக, முன்பு சொன்னதைப் பின்பு சொல்லவில்லை என்று மறுப்பவருக்கு - உங்களிடம் ஒன்றைச் சொல்லிவிட்டு, மற்றொருவரிடம் முற்றிலும் மாறுபட்ட ஒன்றைச் சொல்பவருக்கு - தன் தவறுகளை ஒப்புக்கொள்ளப் பிடிவாதமாய் மறுப்பவருக்கு - நேர்மை ஒரு விழுமியமே அல்ல என்று புரிந்துகொள்வது அவசியம்.

தங்களின் உடல்நலம், மனநலம், பொருளாதார நலத்திற்குப் பொறுப்பேற்றுக்கொள்ளும் நபரா என்றும் பார்க்க வேண்டும். மது அருந்திக் கொண்டே, புகை பிடித்துக் கொண்டே, கடனுக்கு மேல் கடன் வாங்கிக் கொண்டே, சிறிய காரியத்திற்கும் கத்திக் கூப்பாடு போட்டு ஊரைக் கூட்டிக் கொண்டே இருப்பவருக்கு என்ன இல்லை? தன் நலத்திற்குத் தான் பொறுப்பேற்றுக் கொள்ளும் மனவலிமை இல்லை. அவரோடு வாழ்வது எப்படி?

மனத்தில் உள்ளதை மனம் திறந்து பேசுபவரா? அல்லது மறைப்பவரா? நீங்கள் சொல்வதைக் கவனமாய்க் காது கொடுத்துக் கேட்பவரா? அல்லது கவனிக்காமல் வேறெதையோ நினைத்துக் கொண்டிருப்பவரா? நீங்கள் சொன்ன கருத்திற்காக உங்களை இகழ்பவரா? ஏளனம் செய்பவரா? என்றும் கவனமாய்ப் பார்க்க வேண்டும்.

நீங்கள் பழகும் நபர் உங்களை மதிப்பவரா? என்று கவனமாய்ப் பார்த்துத் தெளிய வேண்டும். இது முக்கியமான உரைகல். உங்களை மதிப்பவர் என்றால் உங்கள் உடலை, உணர்வுகளை, விழுமியங்களை மதிப்பவராக இருக்க வேண்டும். உங்களுக்கு மட்டுமே உரிய உங்கள் அந்தரங்கத்தின் எல்லைகளை மதிப்பவராக அவர் இருக்க வேண்டும்.

அந்தரங்கம் என்பது உங்கள் உடலும், உங்களைச் சுற்றியுள்ள இரண்டடி தூரமும் மட்டுமல்ல; உங்கள் தொலைபேசி அழைப்புகள், உங்களுக்கு வரும் கடிதங்கள், மின்னஞ்சல்கள், உங்களின் நாள் குறிப்பேடு, சில நிகழ்வுகள் அல்லது நபர்களின் நினைவாக நீங்கள் பல காலம் போற்றிப் பாதுகாக்கும் பொருள்கள் இவை யாவும் உங்கள் அந்தரங்கத்திற்கு உரியவை. ‘என்ன பெரிய அந்தரங்கம்? அதான் கல்யாணம் பண்ணிக்கப் போறோம்ல. அப்புறம் என்ன எனக்குத் தெரியக் கூடாத இரகசியம்?’ என்றெல்லாம் பேசி, நீங்கள் அமைத்துள்ள வேலிகளை அடித்துத் தகர்த்து, அந்தரங்கத்திற்குள் உங்கள் அனுமதியின்றி நுழைய முயல்பவரா? என்று பார்ப்பது முக்கியம்.

உடல் நலக்குறைவு, வீட்டில் ஒரு பிரச்சினை, எதிர்பாராத தோல்வி என்று எதிர்மறையான ஒன்று உங்களுக்கு நிகழும்போது, அவர் உண்மையான அக்கறையோடு உடன் இருக்கிறாரா? உதவி செய்கிறாரா? இல்லை, சாக்குப்போக்குகள் சொல்லி ஒளிகிறாரா? என்று பார்ப்பதும் அவசியம்.

எதிர்பாராமல் ஏதோ ஒன்று நிகழ்ந்து அல்லது உங்களுக்குள் ஏதோ ஒரு கருத்து வேறுபாடு அல்லது வாக்குவாதம் ஏற்பட்டு அவருக்கு வரும் கோபத்தை அவர் எப்படிக் கையாள்கிறார் எனப் பார்க்க வேண்டும். கோபம், ஏமாற்றம், கவலை, சோகம் போன்ற உணர்வுகளை அவர் எப்படிச் சமாளிக்கிறார் என்று கவனிக்க வேண்டும். நமது உணர்வுகளையும், பிறரின் உணர்வுகளையும் சரிவரக் கையாள உதவும்இமோஷனல் இன்ட்டெலி ஜென்ஸ்’ (Emotional Intelligence) எனப்படும் உணர்வறிவுத் திறன் அவரிடம் நிறைய உள்ளதா? குறைவாய் உள்ளதா? என்பதை இது காட்டிவிடும். குறைவான உணர்வறிவுத் திறன் உள்ள ஒருவரை மணந்து கொண்டால் ஒவ்வொரு நாளும் சண்டை, சச்சரவுகளை எதிர்பார்க்கலாம்.

நகைச்சுவை உணர்வு நிறைவாய் இருந்து, எளிதில் சிரித்து, உங்களைச் சிரிக்க வைக்கும் நபர் என்றால், உங்கள் சுமைகள் குறைந்து, உங்கள் வாழ்க்கை சுவையானதாய் அமையும் வாய்ப்பு அதிகம். பல்லாண்டு காலம் உங்களோடு வாழப் போகிறவர்தானே வாழ்க்கைத் துணை? அவரோடு இருப்பது இனிதான, இயல்பான, சுகமான ஒன்றாய் உள்ளதா? அல்லது மன அழுத்தத்தை உருவாக்குகிறதா? என்றும் கவனிக்க வேண்டும்.

முக்கியமான ஒன்றை நாம் புரிந்துகொள்ள வேண்டும். எவ்வளவுதான் கவனமாகப் பார்த்துக் கணிக்க முயன்றாலும், அனைத்தையும் அறிந்துகொள்ள இயலாத அற்ப மனிதர்கள் நாம் என்பதால், தொடர்ந்த இறைவேண்டல் அவசியம். ‘ஆபத்தானவர் என்றால் விரைவில் நான் அதனைக் கண்டுணரச் செய்து, விலகித் தப்பிக்க வழி செய்!’ அல்லதுஎனக்கு மகிழ்ச்சியான மண வாழ்வைத் தரக் கூடியவர் என்றால், அவரை நான் இழந்து விடாதிருக்கத் துணை செய்!’ என்று நம் தந்தையும் தாயுமான இறைவனிடம் தொடர்ந்து கேட்க வேண்டும்.

உலகச் சாதனைகளைப் பட்டியலிடும்கின்னஸ் புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ்’ (Guinness Book of World Records) என்றொரு வெளியீடு உள்ளது. அதன்படி, மிக நீண்ட காலமாக இல்லற வாழ்வில் இணைந்து, மகிழ்ந்து சாதனை படைத்தவர்கள் ஹெர்பர்ட் ஃபிஷர், ஸெல்மைரா ஃபிஷர் என்ற இணையர்கள்தான். 2011-இல் ஹெர்பர்ட் இறக்கும் முன்பு இந்த இணையர்கள் சேர்ந்திருந்தது 86 ஆண்டுகள்!

திருமண வாழ்வில் உங்களைப் போல வெற்றி பெற என்ன வேண்டும்?’ என்று கேட்டபோது அவர்கள் சொன்னார்கள்:

ஒருவரை ஒருவர் மதியுங்கள். துணையாய் இருங்கள். ஒளிவு மறைவின்றி மனந்திறந்து பேசுங்கள். பிரமாணிக்கமாய், நேர்மையாய் இருங்கள். உங்கள் முழு இதயத்தோடு ஒருவர் மற்றவரை அன்பு செய்யுங்கள்!”

(உங்கள் கருத்துகளை +91 9445006852 என்ற எண்ணிற்கு வாட்சாப் மூலம் எழுத்து வடிவிலோ அல்லது வாய்ஸ் மெசெஜ் வடிவிலோ அனுப்புங்கள்.)

Comment