No icon

மதவாதம்:

பா.ச.க.வின் கடைசி ஆயுதம்!

தேர்தல் திருவிழா தொடர்கிறது. மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களுக்கு 2024 ஏப்ரல் 19-ஆம் நாள் முதல் கட்டத் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. இம்முதல் கட்டத் தேர்தலின் வெளிப்பாடு பா...வை உலுக்கி உள்ளது. ‘400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம்என்ற முழக்கம் இப்போது கரைந்து போனது.

தமிழ்நாட்டில் வாக்காளர் அடையாள அட்டைப் பிரச்சினையைப் பா... கிளப்புவது தோல்வி உறுதி என்பதை வெளிக்காட்டுகிறது. தென்னிந்தியாவில் பா...விற்கு வெற்றி வாய்ப்பில்லை மற்றும் வட இந்தியாவிலும் பா...விற்கு வெற்றி வாய்ப்புக் குறைகிறது என்று பத்திரிகையாளர்கள் கூறுகின்றனர்.

இராமர் கோவில்’, ‘இந்துத்துவாபோன்ற மதவாத பிரச்சாரத்தை மக்கள் ஏற்கவில்லை. மாறாக, வேலைவாய்ப்பு, விலைவாசி போன்றவைகளை மக்கள் முன்னிலைப் படுத்துகின்றனர்.

காங்கிரஸ் கட்சி கடந்த மக்களவைத் தேர்தலில் முற்றிலுமாகத் தோல்வியுற்ற மாநிலங்களில், சில தொகுதிகளில் வெற்றி பெற இப்போது வாய்ப்புள்ளது. ‘இந்தியாகூட்டணிக் கட்சிகளின் பலம் கூடுகிறது. பா...விற்குப் பின்னடைவு உண்டாகிறது. ஆகவே, பா... கடந்த மக்களவைத் தேர்தலில் வென்ற 303 தொகுதிகளில், 100 தொகுதிகள் குறைவதற்கு வாய்ப்புள்ளது. ஆகவே பா... 200 தொகுதிகளுக்குத் தள்ளப்படும் என்று பத்திரிகையாளர் கணக்கெடுப்பின் வெளிப்பாடாக உள்ளது. இதனால் முதல் கட்டத் தேர்தலில் அமைதியாகப் பிரச்சாரம் செய்த பிரதமர் மோடி ஆவேசமாக, மதவாதத்தை இரண்டாவது கட்டத் தேர்தலின் போது கையிலெடுத்துள்ளார். காங்கிரஸ் இந்துகள் உரிமைகளையும், சொத்துகளையும் பிரித்து, இஸ்லாமியருக்கு அளித்துவிடும் என்று அச்சுறுத்தி இந்து ஓட்டு வங்கியைத் திரட்டப் பார்க்கிறார். இது தோல்வியின் வெளிப்பாடு என்று எதிர்க்கட்சியினர் கூறுகின்றனர்.

இராஜஸ்தான் மாநிலம், பன்ஸ்வாராவில் நடந்த பா...வின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், இஸ்லாமியருக்கு எதிரான மதவெறுப்புப் பிரச்சாரத்தைப் பிரதமர் மோடி செய்துள்ளார்.

அந்தக் கூட்டத்தில், ‘காங்கிரஸ் ஆட்சியிலிருந்த போது பிரதமர் மன்மோகன் சிங் 2006-இல்நாட்டின் செல்வத்தில் முஸ்லிம்களுக்குத்தான் முதல் உரிமை உண்டுஎன்று கூறியதாகப் பொய்யான குற்றச்சாட்டைக் கூறி மதவாதத்தைக் கையிலெடுத்துள்ளார் பிரதமர். ‘தேசத்தின் செல்வத்தை ஊடுருவல்காரர்களுக்கும், அதிகக் குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்என்பதுதான் அவர் வெளிப்படையாகக் கூறியது.

நீங்கள் கஷ்டப்பட்டுச் சம்பாதித்தப் பணத்தை ஊடுருவல்காரர்களுக்குத் தரப்போகிறீர்களா? ‘பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அதைப் பங்கிட்டுக் கொடுப்போம்என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறதுஎன்றெல்லாம் அள்ளி விட்டுள்ளார் பிரதமர். இவர் சொல்வதுபோல் கணக்கிட்டு யாருக்குக் கொடுப்பார்கள்? ‘தேசத்தின் செல்வத்தில் முஸ்லிம்களுக்கு முதல் உரிமை உண்டுஎன்று மன்மோகன் சிங் தலைமையிலான அரசு கூறியதாகச் சொன்னாரே அந்த மக்களுக்கு! மேலும், ‘சகோதர, சகோதரிகளே, இந்த நகர்ப் புற நக்சல் சிந்தனை, என்னுடைய தாய்மார்கள், சகோதரிகளின் தாலியைக் கூட விட்டு வைக்காதுஎன்று அவர் பேசியிருப்பவை நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கின்றன.

காங்கிரசின் தேர்தல் அறிக்கையில் அப்படியான எந்தச் செய்தியும் இடம்பெறாத நிலையில், பிரதமரின் பேச்சு காங்கிரஸ் தலைவர்களையும், தொண்டர்களையும், தேசப்பற்றாளர்களையும் கொதிப்படையச் செய்திருக்கிறது. “இந்திய வரலாற்றில் பிரதமர் பதவியின் கண்ணியத்தை மோடியைப் போல எந்தப் பிரதமரும் தரம் தாழ்த்தவில்லை. காங்கிரசின் வாக்குறுதிகளில் இந்து-முஸ்லிம் என்ற வார்த்தைகளே இல்லை. பிரச்சாரத்தில் வெறுப்பைப் பரப்பிக் கொண்டிருக்கிறார் மோடிஎன்று தெளிவாக அறிவிக்கிறார் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே.

9 டிசம்பர், 2006-இல் புதுடெல்லியில் நடந்த தேசிய மேம்பாட்டுச் சபைக் கூட்டத்தில் பேசிய மன்மோகன் சிங், “பட்டியல் இனத்தவர், பழங்குடி மக்கள், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், குறிப்பாக முஸ்லிம் சிறுபான்மையினர் ஆகியோருக்கு ஏற்றத்தாழ்வுகள் இல்லாமல் நாட்டின் அனைத்துப் பலன்களும் சென்றடைய வேண்டும்; இவர்கள் நாட்டின் நலன்களைப் பெறுவதில் முன்னுரிமை பெறவேண்டும்என்றுதான் பேசியிருக்கிறார் மன்மோகன் சிங். அந்தப் பேச்சிலிருந்து பழங்குடி மக்கள், பிற்படுத்தப்பட்டோர் ஆகியோரைக் கவனமாகத் தவிர்த்து விட்டு, ஒரு பகுதியை மட்டும் எடுத்துக்கொண்டு, அதைத் திரித்துக் கூறி பொய்யைப் பரப்பிக் கொண்டிருக்கிறார் மோடி. நாட்டின் உயர் பதவியிலிருக்கும் ஒருவர், தகவல்களைத் திரித்துக் கூறும் குற்றச்சாட்டுகள், மதவாதத்தின் மிக மோசமான வெளிப்பாடு ஆகும் என்கிறார்கள் நடுநிலையாளர்கள்.

மதம் சார்ந்த அரசியலை அமைப்பது ஆர்.எஸ். எஸ். அமைப்பின் நூறு வருட கனவு. அந்தக் கனவை உண்மையாக்க உழைத்துக் கொண்டிருக்கிறார் பிரதமர் மோடி. 2014 - மக்களவைத் தேர்தலில்குடும்ப அரசியல் மற்றும் ஊழல் நடக்கிறதுஎன்று கூறி பா... வாக்கு சேகரித்தது. 2019 - மக்களவைத் தேர்தலில்புல்வாமா தாக்குதல், தேசப் பாதுகாப்பு....’ எனப் பேசி வாக்கு கேட்டார்கள். இந்தத் தேர்தலிலோ பெரிதாகச் சொல்வதற்கு ஒன்றுமில்லை. அதனால் அவர்களின் உண்மையான முகம் வெளியே வந்துவிட்டது. எனவே, ‘சிறுபான்மை மக்களால் பெரும்பான்மை மக்களுக்குப் பாதுகாப்பு இல்லைஎன்று சொல்லி, இந்துகளின் ஓட்டு வங்கியைப் பெற முயற்சிக்கிறார்கள்.

வேலைவாய்ப்பின்மை, பணவீக்கம், விலைவாசி உயர்வு எனப் பல பிரச்சினைகள் வரிசை கட்டி நிற்பதால், பத்தாண்டு கால ஆட்சியின் சாதனைகள் என்று எதையும் கூறி வாக்குக் கேட்க முடியாத நிலையில் இருக்கிறது பா... அதனால்தான் வழக்கம்போல தங்களது கடைசி ஆயுதமான மத அரசியலைக் கையிலெடுத்திருக்கிறார்கள்.

பிரதமர் மோடி பேசிய வெறுப்பு வார்த்தைகள், தமிழ்நாட்டில் தேர்தல் நடக்கும்போது வெளிப்பட்டிருந்தால், அவை பா...வுக்குப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும். அதனால்தான் தமிழ்நாட்டில் தேர்தல் முடிந்த பிறகு இஸ்லாமிய வெறுப்பைக் கையிலெடுத்து இந்துகளின் வாக்கை வட இந்தியாவில் ஒருங்கிணைக்கப் பார்க்கிறார்கள்.

இந்தியத் தேர்தல் ஆணையம் சுயாட்சி கொண்ட அமைப்பு என்று நாம் நம்பியிருந்தோம். ஆனால், அதை நிரூபிக்கத் தவறி உள்ளது. தற்போதுள்ள தேர்தல் ஆணையத்தின் உருவாக்கமே கேள்விக்கு உட்படுத்தப்படுகிறது. தேர்தல் ஆணையரைத் தேர்ந்தெடுக்கும் சட்டத்தை மாற்றி பா... அரசு, தேர்தல் ஆணையரைத் தேர்ந்தெடுக்கும் குழுவில் இருந்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியை நீக்கிவிட்டு பிரதமர், மத்திய அமைச்சர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் கொண்ட மூவர் கமிட்டியை அமைத்தது. தற்போதைய தலைமைத் தேர்தல் கமிஷனர் திரு. இராஜிவ் குமாரை அவசரமாக மத்திய அரசு தேர்ந்தெடுத்தது. இந்தியாவெங்கும் பேசுபொருளாக உள்ள பிரதமரின் இஸ்லாமியருக்கு எதிரான வெறுப்பு பேச்சை எதிர்த்து 17,000-க்கும் மேற்பட்ட மனுக்கள் தேர்தல் கமிஷ னுக்கு அனுப்பப்பட்ட பின்னும், விசாரணைக் கடிதம் பிரதமருக்கு அனுப்புவதற்குப் பதில், பா... தலைவருக்கு அனுப்பியுள்ளது தேர்தல் கமிஷன். ‘தேர்தல் ஆணையத்தின் நாணயம் கேள்விக்கு உட்படுத்தப் படுகிறதுஎன்று அரசியல் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

மதவாதம் அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. சமயச் சுதந்திரம் (பிரிவு 25-28) அனைத்துக் குடி மக்களுக்கும் அடிப்படை ஜீவாதார உரிமைகளாக அரசமைப்பு அறிவிக்கிறது. சிறுபான்மையினர் உரிமைகள் அடிப்படை ஜீவாதார உரிமைகளாகப் பிரிவு 29,30-இல் அளிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமி யச் சிறுபான்மையினருக்கு எதிராகப் பேசப்படும் வெறுப்புப் பேச்சு மதவாதத்தை உள்ளடக்கியது; சனநாயகத்திற்கு எதிரானது. இதுவரை இல்லாத அளவில் பா... மதவாதத்தைத் தேர்தல் ஆயுதமாகப் பயன்படுத்துகிறது.

ஆர்.எஸ்.எஸ்.சின் நூற்றாண்டு விழா 2025-இல் கொண்டாடப்பட இருப்பதால், இந்து இராஷ்டிரம் வேகமெடுக்கிறது. ஆகவே, தேர்தலுக்கு அப்பால் சனநாயகத்தைக் காக்க வேண்டிய கடமை ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்டு. அரசியலில் காங்கிரஸ், எதிர்க்கட்சிகள் இல்லாத பாரதம் மற்றும் சமூகத்தில் இஸ்லாமியரும், கிறிஸ்தவரும் இல்லாத சமூகத்தைக் கட்டியெழுப்ப ஆர்.எஸ்.எஸ். துடிக்கிறது. அதன் அரசியல் அங்கமான பா... அதனைச் செயல்படுத்த முனைகிறது.

எனவே, அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படையான சனநாயகம், சமத்துவம், சமயச் சார்பற்றத் தன்மை காக்கப்பட அனைவரும் இணைந்து நாட்டைக் காப்போம்.

Comment