No icon

வஞ்சகமும், பொய்மையும் வீழட்டும்!

மோடி பிரதமராகப் பதவியேற்கும் நாட்டில் நான் வாழமாட்டேன். அவர் மக்களை அச்சத்தில் வாழ வைப்பார். மக்களை எப்போதும் அச்சத்தில் வாழ வைக்கும் ஒருவர் முன் மக்கள் பணிந்தே வாழ வேண்டியது வரும். தன் சக மக்களை கோழைகளாகவே வாழச் செய்வார். நம் நாட்டிற்கு வேண்டுவது என்ன? அச்சம் தவிர்த்த குடிமக்களும், அடிமைத் தனத்தை மறுக்கும் தலைமைத்துவமுமே. 2002-ஆம் ஆண்டு குஜராத்தில் நடத்தப்பட்ட படுகொலையின் கொடூரம் இன்று வரை மோடியின் மனசாட்சியை அழுத்தவே இல்லை. மானுடத்திற்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இக்கொலைகள் மோடியின் ஆன்மாவைக் காயப்படுத்தவே இல்லை. இம்மாதிரியானதொரு மனிதர் இந்தியாவின் பிரதமராக வேண்டுமா?”

- யூ.ஆர். அனந்தமூர்த்தி,

தி இந்து’, செப்டம்பர் 20, 2013

கர்நாடகத்தின் புகழ்பெற்ற இலக்கியக் கர்த்தாவான அனந்த மூர்த்தி, 2014-ஆம் ஆண்டு நடை பெற்ற பொதுத்தேர்தலில் மோடி வெற்றி பெற்று இந்தியப் பிரதமராவார் என்று கட்டியம் கூறப்பட்டு வந்த நிலையில், மாபெரும் கலைஞனாக இருந்தும், குடிமகன் என்ற நிலையில் அச்சம் தெரிவித்த அனந்தமூர்த்தி, அவர் அஞ்சியவாறே மோடியின் ஆட்சிப் பெருமையைக் காணாமலேயே மறைந்து போன பெருமைக்குரியவர். 2013-ஆம் ஆண்டு அனந்த மூர்த்தி தெரிவித்த அதே அச்ச உணர்வு, மோடியின் பத்தாண்டு ஆட்சிக்குப் பிறகு இன்று மீண்டும் குடிமக்களிடம் எழுந்துள்ளது.

அரசப் பயங்கரவாதத்திற்கு எதிராக, கார்ப்பரேட்டுகளின் கொள்ளை நடவடிக்கைக்கு எதிராக நாளும் குரல் கொடுத்து வரும் அருந்ததிராய் அவர்கள் உதிர்த்த உண்மை நிலை இது: “மோடி பிரதமராகலாமா? என்ற கேள்வி கொஞ்சமும் பொருத்தமற்றது. ஏற்கெனவே அச்சோகம் (Tragedy) நிகழ்ந்துவிட்டது. மீண்டும் இவர் பிரதமராகப் பதவியேற்றுதான் மற்றோர் அபாயத்தை எதிர்கொள்ள வேண்டிய அவசியமில்லை!”

இந்தியா விடுதலை பெற்று ஆண்டுகள் எழுபதுகளைக் கடந்துவிட்ட நிலையில், பெற்ற சுதந்திரம் பேணிக்காக்கப் பெறவில்லை என்ற ஆதங்கம்  குடிமக்களிடம் இருந்தது; அறிவுசீவிகளிடம் இருந்தது. சுதந்திரம் பேண முன்னெடுத்த முயற்சிகள் தோற்றுப்போன போதெல்லாம் எழுந்த முரண்களை முறையாகச் சந்திக்கத் தவறிய தருணங்களும் உண்டு. சொற்ப அளவிலான முறைகள் தகர்க்கப்பட்ட நிலையிலும், எழுபதுகளில் இந்திய இளையோர்களிடையே எழுந்த ஆயுதம் தாங்கிய போராட்டங்களின் போதும், அமைப்பு ரீதியான மாற்றமே வேண்டும் என்ற முழக்கம் எழுப்பப்பட்டு வந்த நிலையிலும் கூட எழாத ஓர் அச்சம் இன்று ஏற்பட்டு வருவது கண்கூடு.

புரட்சிகர இயக்கங்கள், தொடர்ந்து போராடி வந்த சனநாயக அமைப்புகள் மூலமாக எழாத பேராபத்து இன்றுஇந்தியாஎன்ற அடையாளத்துக்கு ஏற்பட்டுள்ளது. கட்டியமைக்கப்பட்ட இந்திய நாட்டிற்கு, அதன் அடையாளத்திற்கென்று உருவாக்கப்பட்ட தத்துவத்திற்கு இன்று எழுந்துள்ள சவால் மிகப் பெரியது. ‘குடிமக்களாகிய நாம்என்ற முழக்கத்தின் மூலம் அறிவிக்கப்பட்ட இந்திய அடையாளங்களாம் சனநாயகம், சமத்துவம், சமயச்சார்பின்மை, இறையாண்மை எனும் அடிப்படை விழுமியங்கள் கடந்த 75 ஆண்டுகளாகக் கேள்விக்குட்படாத நிலை இன்று இல்லை; சனநாயகத்தை மறுத்தோர் இல்லை. சமத்துவக் கோட்பாட்டை மேம்படுத்த விரும்பியோர் உண்டு. சமயச் சார்பின்மையை ஒழிக்க எவரும் எண்ணவில்லைஅடிப்படைக் கோட்பாடுகளில் சீர்த்திருத்தம் வேண்டி போராடிய காலமிருந்தது; போராடிய சிலரும் இருந்தனர்; இயக்கங்களும் இருந்தன. இவையெல்லாம் அரசின் அடக்குமுறைகளைச் சந்தித்தன. புதுப் புது வகையான கொடிய சட்டங்களின் மூலம் சிறையில் வாழ்ந்த போதும், என்றும் எங்கும் இந்திய அரசமைப்பின் அடிப்படை விழுமியங்களைத் திரும்பப் பெறுமளவிற்கு எவரும் கோரவில்லை. குடியரசைத் தாங்கும் அடிப்படை விழுமியங்களை ஏற்றனர்.

சனநாயக நாட்டின் அரசமைப்புச் சட்டம் இது வரை பலமுறை திருத்தங்களுக்கு உள்ளானது. திருத்தங்கள் சட்டங்களாகியுள்ளன. ஆனாலும், இந்நடைமுறை தாராளமய சனநாயக முறையில் நல்லிணக்கம் இருந்தது. நல்லுறவும் இருந்தது. ஆனால், இன்று நடப்பது என்ன?

சனநாயகக் குடியரசின்மீது நம்பிக்கையற்ற ஒரு கூட்டம் 1925-ஆம் ஆண்டிலிருந்து தொடர் போராட்டத்தை நிகழ்த்தி வருகிறது. இந்திய அரசமைப்புச் சட்டத்தின்மீது இக்கூட்டம் விமர்சனம் வைத்திருந்தால், அதனைச் சனநாயக உரிமையெனக் கருதலாம். இந்திய சனநாயகக் காப்பரணான அரசமைப்புச் சட்டம் பேசும் சமத்துவம் மற்றும் நீதி அந்நியக் கோட்பாடாயிற்று. பண்டைய  சமூகத்தின் பலசமயங்களை உடைய நாட்டில் உருவாக்கப்பட்ட சமயச் சார்பின்மை, ‘போலி சமயச்சார்பு’ (pseudo secularism) என்று கேலி செய்யப்பட்டது. அரசமைப்புச் சட்டம் பேசிய அடிப்படை உரிமைகள் கேள்விக்குறிகளாக்கப்பட்டன. இந்தியச் சட்டம் கண்ட மத உரிமைகள், ‘மதமாற்றுஉரிமைகளாகத் திரிக்கப்பட்டு, கட்டாய மதமாற்றுத் தடைசட்டங்கள் உருவாகின. கருத்துரிமை பாசிச அரசின் பொருந்தாக் கொள்கையானது. சமய, சமூக அடிப்படையிலான பாகுபாடு என்னும் வன்முறை, இந்திய அளவில் ஏற்றுக்கொள்ளும் வன்முறை ஆனது. இறுதியில் குடிமக்களின் குடியுரிமைகூட, மத அடிப்படையில் உருவாகும் வகையில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டது. இந்தியாவின் பன்மை என்னும் அழகு அசிங்கப்படும் வகையில் பொது சிவில் சட்டம் நியாயப்படுத்தப்பட்டு நடைமுறைக்கு வருகிறது.

உருவாகும் இரண்டாம் குடியரசு (Second Republic)

குடியரசின் அனைத்து இலக்கணங்களும் சிதைக்கப்பட்டு, கொஞ்சம் கூட தயக்கமின்றி புதிய குடியரசிற்கான விதிகளை இன்றைய அரசு வகுத்ததில் வெற்றி கண்டுள்ளது.

பன்மைச் சமூகங்களின் சம பங்கேற்பை உத்தரவாதப்படுத்துவது சனநாயகப் பண்புகளில் முதன்மையானது; அது சனநாயகத்தைத் தெரிவு செய்யும் உரிமையை உத்தரவாதப்படுத்தும்.

மேற்கண்ட பண்புகள் இன்று படும்பாடு என்ன?

அமைப்பு ரீதியாக உருவாக்கப்பட்ட கோட்பாடுகள், காலத்தின் தேவைக்கேற்ப மாற்றப்படுமானால், அம்மாற்றம் குறைந்த அளவு மக்களால் ஏற்றுக்கொள்ளப்படும் நியாயம் பெறுமானால், கண்டிப்பாக அதை ஏற்றுக்கொள்வோம். பாசிச வழியில் கட்டமைக்கப்பட்ட பெரும்பான்மைவாத வழியில் அமைக்கப்பட்டு நடைபெறும் அரசு சனநாயகத்தின் எந்த நடைமுறைக்கும் ஒவ்வாதது.

பெரும்பான்மைவாதம் சாதி, இன, மொழி, சமய வழியில் ஒரு பொய்யான பெரும்பான்மையைக் கட்டமைப்பது; இந்தியாவில் அண்மை அரசு கட்டமைத்திருக்கும் மதவழிப் பெரும்பான்மை வாதம் பாசிச வடிவிலானது; பெரும்பான்மை மக்கள் திரளின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட இவ்வன்முறை வடிவு சிறுபான்மையினரை ஒதுக்குவது, ஒடுக்குவது, ஓரங்கட்டுவது!

எப்போது மத வழியாக ஒரு பெரும்பான்மை கட்டமைக்கப்படுகிறதோ அப்போது அவ்வரசின் சனநாயகப் பண்பு கேலிக்குள்ளாகிறது. மதரீதியான ஆட்சி மதவாத ஆட்சியாக, மத அடிப்படைவாத ஆட்சியாக மாறுகிறது. மத அடிப்படைவாத அரசு அறிவியலுக்குப் புறம்பானது; மாற்றத்தை எதிர்ப்பது எதேச்சதிகாரமானது; அடித்தட்டு மக்களின் இருப்பை  மறுப்பது. மதவழி தேசியம் பேசும் மத அடிப்படையிலான அரசு வருவதற்கான சின்னஞ் சிறு அடையாளங்கள் தென்பட்ட சூழலில்... இன்று எல்லாமே வெளிப்படையாக நடக்கின்றன. இன்றைய அரசியல் நடவடிக்கைகள் வெறுப்பு அரசியலை நியாயப்படுத்திவிட்டது. சிறுபான்மையினர் ஒழிப்பு உரத்தக் குரலில் கேட்கிறது. இந்து மதப் பெரும்பான்மையின் அடிப்படையில் பெரும்பான்மைவாதம் ஆட்சிக் கட்டிலேறுமானால் சிறுபான்மையினரின் இருப்பு இனி என்னவாகும்?

இந்தியத் தலைவர்கள் உருவாக்கிய சமயச் சார்பின்மை இவர்கள் கையில் சிக்கிச் சின்னாபின்னமாவதைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ‘காஷ்மீர் பைல்ஸ்என்ற திரைப்படமும், ‘கேரளா ஸ்டோரிஎன்ற திரைப்படமும் சொல்லும் செய்திகள் என்ன? இந்தியக் குடிமக்களில் ஒருவராகிய இஸ்லாமியரை எவ்வளவு கீழ்த்தரமாகச் சித்தரிக்க முடியுமோ, அவ்வளவு தூரம் அசிங்கப்படுத்துகின்றன இப்படங்கள். இஸ்லாமியர்களை வன்முறையாளர்களாக, பாலுணர்வு வேட்கை மிக்கவர்களாக, கட்டாய வன்புணர்வு செய்பவர்களாக, மதமாற்றிகளாகச் சித்தரித்துத் திரைக்குக் கொணர்ந்த போதும், வெகுசன மக்களிடம் திட்டமிட்டு அவமானப்படுத்திய போதும், இன்னும் இந்த நாடு மௌனம் காத்து வருவதன் மர்மம் என்ன? குறிவைத்துச் சுடும் இந்துத்துவக் கூட்டத்தை இன்னும் எத்தனை காலம் சகித்துக்கொள்ளப் போகிறோம்?

குடிமக்களுள் ஒரு பகுதியினராம் இஸ்லாமியரின் அடிப்படை அடையாளத்தை அவமதித்ததோடு, சனநாயக அரசின் நீதித்துறையின் துணையோடு அவர்களின் வழிபாட்டுத் தளத்தைக் களவாடியதோடு நில்லாமல், அதே நிலத்தில் மாபெரும் கோவில் ஒன்றை உருவாக்கி, உருவாக்கிய கோவிலுக்குச் சமயச் சார்பற்றக் குடியரசின்  பிரதமரே பிரதம பூசாரியாக நின்று, மதச்சார்பின்மையை அவமதித்த செயலுக்கு இந்தியா எப்படிப் பரிகாரம் காணப் போகிறது? கண்ணீர் விட்டு வளர்த்தக் குடியரசின் அனைத்துத் தாத்பரியங்களும் அழிந்து போகும் வகையில், குடிமக்கள் அனைவரையும் கட்டாயச் சாட்சிகளாக்கிய இந்நிகழ்ச்சிக்கு இந்தியா எங்கு, எப்படிப் பரிகாரம் காணும்?

வெறும் 13% உள்ள இஸ்லாமியரை அரசியல் ரீதியாக நசுக்கிச் செயலிழக்கச் செய்த இக்கேவல நிகழ்வுக்குச் செவிகொடுக்காத எதிர்க்கட்சிகளை, குறிப்பாக காங்கிரஸ் கட்சியை இராமருக்கு எதிராகக் காட்டி, தேர்தல் பிரச்சாரம் செய்யும் பிரதமர் எவ்வளவு கீழ்த்தரமானவர்! வஞ்சகமும், சூழ்ச்சியும் நிறைந்த இவர் தமிழ்நாட்டின் தேர்தல் மேடைகள்தோறும், ‘இந்தியாகூட்டணியை இந்துக்களுக்கு எதிரானது என்றும், சனாதன விரோதிகள் என்றும் தூற்றி வருவதன் உண்மை நோக்கம் என்ன? சமூகத்தில் மிக இழிவாகக் கருதப்படும் ஒருவர் கூட இந்த இழிவான செயலினைச் செய்ய மாட்டாரே!

பாரதப் பண்பாடு பற்றி வாய் கிழியப் பேசும் பாரத புத்திரர்கள் நாம், இச்செயலுக்கு என்ன பதில் தரப் போகிறோம்? தமிழ்நாட்டின் தென் கோடியாம் குமரி முனையில் பாரதிய ஜனதாவுக்கு வாக்கு கேட்கும் ஒரு மூத்த தலைவர், ‘குமரி மண்ணிலி ருந்து கிறிஸ்தவர்களைத் துரத்தாமல் ஓயப்போவதில்லைஎன்று சூளுரைக்கிறார். ஏற்கெனவே நாடு முழுவதும் கிறிஸ்தவர்களைத் துரத்தும் பணி துவங்கிய நிலையில், அது குமரியிலும் தொடருமாம்! என்ன கேவலம்!

இவற்றிற்கெல்லாம் உச்சமாக, தேர்தல் பத்திரம் மூலம் அம்பலப்பட்டுப் போன மோடி இந்நிகழ்வைப் பற்றிக் கருத்து எதுவும் சொல்லாமல் மௌனியாய் இருக்கிறார். இவர் மௌனத்தை யார் கலைப்பது? வஞ்சகமும், பொறாமையும் வாழ்வாகக் கொண்ட இவரே மீண்டும் பாரதப் பிரதமராக வேண்டுமாம்! இவரே மீண்டும் நமக்கு வேண்டுமாம்! நல்ல வேடிக்கை!

இந்தியாவைக் காக்க வேண்டுவோர், இந்தியாவின் பன்முகப் பண்பைக் காக்க விழைவோர் பாரதிய ஜனதாவின் சூழ்ச்சியைப் புரிந்து கொள்வர். இன்று நடக்கவிருக்கும் சித்தாந்தப் போரில் நாம் எங்கு நிற்கிறோம்? இறுதியாக, சங்கப் பரிவாரங்களின் அனைத்துக் கொள்கைகளும் மாந்தரின் உரிமைக்கு எதிராகவே என்பதைப் புரிந்துகொள்வோம். மக்களுக்குப் புரிய வைப்போம்.

Comment