No icon

இயேசுவின் இறுதி 7 வாக்கியங்கள்

வாழ்வளிக்கும் வார்த்தைகளை இந்நாள்வரை வழங்கி வாழும் இறைமகன் இயேசு, சிலுவையில் தொங்கி உரைத்த இறுதித் திருமொழிகள் ஏழும், மனிதராய் அவர் போதித்த மீட்புத்திட்ட மறையுண்மைகளுக்கு நிறைவேற்றமாயும், முன்னடையாளம் தருவதாயும் இருந்தன என்பதைத் தியான ஒளியில் மிளிர்விக்கும் ஒரு சிறு செபமே இது. செபத்தின் வழியாய் இயேசுவிடம் கெஞ்சிக் கேட்கும் ஒரே ஒரு மன்றாட்டு-பேரின்ப வாழ்வு. தனிமையில், தூய ஆவியானவரின் அருள்துணையோடு செபிப்பவர் பெறுகின்ற கல்வாரி அனுபவப் பாடங்களைத் தன் வாழ்வில் புகுத்தி வாழ்வாக்கிடத் தேவைப்படும் அருளையும், பலத்தையும் வழங்கும் அருள் வாய்க்காலாய் இந்தச் செபம் இருக்கும்.

முதல் வாக்கியம்

மூன்று ஆணிகளுள் மூன்று மணி நேரமாய் சிலுவைதனில் தொங்கி, உயிரைத் துளித்துளியாய் விட்டுக் கொண்டிருக்கும் இயேசுவே! வாழ்க்கையின் இறுதி நேரம் நெருங்கி வருகையிலே, கொடியோர் கூடி நகைத்துச் சிரிக்கையிலே, பரமனே! உன்னையே பகைத்தோரை, அடித்தோரை, சிலுவையில் அறைந்தோரை, அத்தனைக்கும் காரணராம் ஆளுநரை, ஆலயக் குருவை, யூதப் பெரியோரை, படைவீரர்களை மனக்கண் முன் கொண்டு வந்து நிறுத்தி, நிதானித்து, சிந்தித்து, குறைபட்ட மனிதனென்று அவர்கள் கொடுத்த சிலுவையை, ஆணிகளை, முள்முடியை, கசையடிகளை, பழிப்புரைகளை, தெய்வ நிந்தனைகளை முழு மனத்துடன் ஏற்று, இப்பாவங்களை அவர்கள் மேல் சுமத்தாதிருக்க, உம்  திருப்பாடுகளால் நிந்தனை செய்து தந்தையிடம் மன்னிப்புக் கேட்டீர். “தந்தையே! இவர்களை மன்னியும். ஏனெனில், தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரிய வில்லை”  (லூக் 23:34) என்றீர்.

இரண்டாவது வாக்கியம்

உம் திரு உடைகளைப் படைவீரர் தங்களுக்குள் பகிர்வதைப் பார்த்தீர். தொட்டோர்க்கெல்லாம் நலமருளும் அருள் வாய்க்காலாம் உமதருள் அங்கி யாருக்கென்றறிய சீட்டுப் போடுவதையும் பார்த்தீர். கோபுர முகட்டில் உம்மைச் சோதித்துப் பின்வாங்கிய அலகை, தற்போது பின்வாங்காமல், தருணம் நோக்கிக் காத்திருந்து, வானகத் தந்தையால் கைவிடப்பட்ட இந்த நேரத்திலே, மீட்க வந்த உமது அன்பு மக்களையே தூண்டிவிட்டு உம்மைப் பழித்துரைக்கவும், ‘பிறரைக் காப்பாற்றியவனே, உன்னையே நீ இப்போது காப்பாற்று. இறை மகனாய் நீ இருந்தால் சிலுவையினின்று இறங்கி வா! நம்புவோம்என்று இடித்துரைக்கவும் செய்து, சோதிக்கும் அலகையை நான் எப்போதும் வென்றிட வேண்டும் என உணரச் செய்துள்ளீர். அவ்வாறே, எவ்வகை சோதனைக்கும் நான் ஒருபோதும் இடம்கொடாதிருக்க, இடைவிடாது செபியுங்கள் என்று மொழிந்தீரே! அவமானத்தின் அகோரப் பிடியில் துடிதுடிக்கும் வேளையிலும் செபித்தீர். கைவிட்ட தந்தையிடம் முறையிட்டீர்.   என் இறைவா! என் இறைவா! ஏன் என்னைக் கை நெகிழ்ந்தீர்....” என்றே அழுதீர்.

மூன்றாவது வாக்கியம்

நடுவர் நடுவில், நல்லோர் வலப்புறம், தீயோர் இடப்புறம் நடுத்தீர்வைக் காட்சியன்றோ, கல்வாரியில் யாம் காண்பது. உலகில் உம்மை அறிந்தும் ஏற்காதோர், தன் கதி உணராதோர், இவர்களின் உருவாம் தீய கள்வன், இடப்புறச் சிலுவையில் தொங்கி, உம்மைப் பழித்துரைத்தான். நீர் கடவுள் இல்லை என்றான். வலப்புறக் கள்வனோ, தான் பாவி என்று ஏற்று, திருந்தி வாழும் நல்லோர் சார்பில் சிலுவையில் தொங்கி, தீய கள்வனைத் திருத்துவதையும், நடுவராகிய நீர் இறையாட்சி உரிமை பெற்று வரும் நாளில், பாவியாகியத் தன்னை நினைவு கூரும்படி உம்மிடம் கெஞ்சுவதையும் கேட்டு மனது உருகினீர்.

மனம் மாறி வரும் பாவியை அரவணைத்து ஏற்கும் வானகத் தந்தையின் ஒரே நேசத் திருமகன் இயேசுவே! சிலுவையிலே உயிர் துறக்கும் வேளையிலும் கண்டெடுத்ததோர் ஆட்டினால், வானகமே மகிழ்வதைக் காட்ட, சிலுவையிலே, மரிக்கும் தருணத்திலே, திருந்திய கள்வனுக்கு நிபந்தனை ஏதும் விதிக்காமல்இன்றே, நீ என்னோடு வான் வீட்டில் இருப்பாய்என்று அவனுக்கு ஆசீர் அளித்தீர். மனம் மாறி வரும் பாவிகளுக்கு மன்னிப்பும், பேரின்ப வாழ்வும் உண்டு. இந்த நம்பிக்கைக்குச் சிலுவையிலே புதுப்பிறப்பளித்தீர். கள்வனாய் அறையப்பட்டான். நல்லவனாய் உயிர் நீத்தான். வான் வீட்டில் உம்மோடு வாழும் வாய்ப்புப் பெற்றான். இன்னதென்று அறியாமல், இறைத் திருவுளம் தெரியாமல், உம்மைச் சிலுவையில் அறைந்த படை வீரர்களும், சிலுவைக் காட்சியைத் தியானிக்கும் நாங்களும் உணரும் விதத்தில், இறையருளால் வருகின்ற மனமாற்றமதைத் தடுத்திட எவராலும், எவ்வகை சக்தியாலும் இயலாது, என்ற உண்மையை வெளிப்படுத்தினீர்.

 நான்காவது வாக்கியம்

பெற்றோருக்குச் செய்கடனெல்லாம் நேர்த்திக் கடனாய் ஆயிற்றுஎன்று பெற்றோரை வீதியிலே தள்ளுகின்ற பரம்பரையை எதிர்த்தவரே! பெற்றோர் காப்பைக் கட்டளையாகத் தந்தவரே, இறைமகனே! சிலுவைக் காட்சியும், சீமோன் வாக்கும் வியாகுல வாளாய் இதயத்துள் பாய, எழுச்சியை, மாட்சியைச் சிலுவை வழியில் எதிர்பார்த்திருக்கும் வியாகுல அன்னை.

எழுச்சி அருளும் இறைமகன் நீரென, உம்மைப் பின்தொடர்ந்து பணிவிடை புரிந்தோர் வீழ்த்தப்பட்ட உம்மைக் கண்டு கண்ணீர் வடிப்பதைக் காணும் அன்னை. பாடுகள் படுத்தும் பாதகர் பாரில் பார்ப்பார் வீழ்ச்சி; பாரார் மீட்சி; அழிவுறும் படையினர் அறியாச் செயலது அளிக்கும்  வேதனை தாங்கிடும் அன்னை.

பிறப்பிலும், இறப்பிலும் நிறைவேறி வருகின்ற இறைவாக்கனைத்தையும் நம்பிய அன்னை இத்திருப்பாடுகள் இறைவாக்கொளியில் எதிர்பார்த்திருந்த நம்பிக்கை அன்னை.

உணவாய், உயிராய் சிலுவையில் தொங்கி உரைக்கும் சொற்களின் தெய்வீகத்தன்மை உணர்ந்து, உள்ளத்தில் பதித்து உம்மைப் பார்த்துத் தவிக்கும் பாசத்தின் அன்னை. பாடுகள் படும் உம் இதயத்தின் இதயமாய் இணைந்தது அன்னையின் இதயம். எனவே, தலைமுறைக்கெல்லாம் தாயாய் வாழ்ந்து தரணியை மீட்கத் திருவுளம் கொண்டீர்

உம் தூய உறைவிடம் தேடிய யோவான் உம் சொல் கேட்டார்; வந்தார், பார்த்தார், கல்வாரிக் குன்றில் கழுமரச் சிலுவையில் தலை சாய்த்திருக்கும் பலியுணவாக. உம் தூய நெஞ்சத்தின் மீதினில் சாய்ந்து கலங்கிய இதயத்தின் ஒலியினைக் கேட்ட அன்புச் சீடரின் அருகில் அன்னை, அன்புச் சீடரை அன்னைக்குக் காட்டினீர்.

அம்மா!.. இதோ உம் மகன்! யோவானே இதோ உன் தாய்!” என்றீர். அந்நேரமே அச்சீடர் மறுப்பேதுமின்றி உம் அன்னையைத் தம் அன்னையாய் ஏற்றார், ஆதரித்தார்.

பெற்ற தாயை விட்டுப் பிரியும் முன் பெற்றவருக்குத் தேறுதலும், ஆறுதலும் அளித்த அருள் பெரும் குருவே, கன்னியின் மகனே! பெற்றோரைக் காப்பதில் முன்மாதிரி அருளிய இறைமகனே! சீடருள் சீடராய், சிதறிய சீடரைத் தேடிச் சேர்த்து, தாழ்ச்சியின் சிகரமாய், திரு அவைத் தாயாய், திருமறையின் வளர்ப்புப் பணியிலே ஈடுபட்டு என்றும் எம் அன்னையாய் இன்றும் எம்மோடு வாழச் செய்துள்ளீர்.

(தொடர்ச்சி அடுத்த இதழில்... )

Comment