No icon

கனவு கலைகிறது!

2024 மக்களவைத் தேர்தலில் பா.ச.க. மூன்றாவது முறையாக ஆட்சியைப்  பிடிக்கும், 400 சீட்டுகளை வெல்லும் என்று இத்தேர்தலுக்கான  கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. ஆனால், இது ஆளும் கட்சிக்கு ஆதரவாகத்  திட்டமிடப்பட்டுள்ள புனைக்கதை. இவை கருத்துக் கணிப்புகள்  அல்ல; கருத்துத் திணிப்புகள்! அரசுக்கு ஆதரவாக அனைத்து ஊடகங்களும், ஒருசேரச் செயல்படுவதன்  வெளிப்பாடு.  ஆனால், கள நிலவரம் பா.ச.க.வைக் கவலையில் தள்ளுகிறது. மத்திய உளவுத்துறை பா.ச.க. கட்சி 240 தொகுதிகளைத் தாண்டாது என அறிக்கை அளித்துள்ளது என்று தெரிய வருகிறது.

‘காங்கிரஸ் இல்லாத இந்தியா’ என்று கர்நாடகா தேர்தலில் பா.ச.க. பரப்புரை செய்தது. ஆனால், தேர்தல் முடிவில் பா.ச.க. இல்லாத தென்னிந்தியா என்றானது. தென்னிந்தியாவில் பா.ச.க. 25 முதல் 30 இடங்களை வெல்வதே கடினம் என்பதே கள நிலவரம். வட இந்தியாவில் மேற்கு வங்காளம், பஞ்சாப் போன்ற மாநிலங்களில் பா.ச.க. மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்படும் என்பதே உண்மை நிலை. மகாராஷ்டிராவில் 40ரூ பா.ச.க. என்கிறது கருத்துத் திணிப்புகள். கடந்த மாதங்களில் நடந்த ஐந்து மாநிலத் தேர்தல்களில் பா.ச.க-வுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் 2 முதல் 4 சதவிகித வாக்குகளே வெற்றி, தோல்வியை நிர்ணயித்தன.

இராஜஸ்தான், சட்டிஸ்கர், மத்தியப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்கும், பா.ச.க.வுக்கும் வாக்கு சதவிகித வித்தியாசம், ஒன்று முதல் இரண்டு சதவிகிதம் வரையே உள்ளது. மாநிலக் கட்சிகளைப் பொறுத்தவரை திரிணாமூல், சமாஜ்வாடி, இராஷ்ட்ரிய ஜனதா தளம், தி.மு.க. போன்றவை தலா இருபது சீட்டுகளைப் பெறும் என்பதே உறுதியாகும் முன் முடிவுகள். பொதுவுடமைக் கட்சிகள், ஆம் ஆத்மி, சிவசேனா, ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா போன்ற கட்சிகள் குறைந்தது தலா  பத்து இடங்களைப் பெறும் என்பது உறுதியான நம்பிக்கை. ஆகமொத்தம் காங்கிரஸ் இல்லாத பா.ச.க.வின் எதிர்க்கட்சிகள் பெறும் இடங்கள் 120. காங்கிரஸ் குறைந்தபட்சம் 100 இடங்களை வெல்லும். ஆகமொத்தம் பா.ச.க. இல்லாத எதிர்க்கட்சிகள், தேர்தலுக்கு முன் உறுதியாக வெற்றிபெறும் தொகுதிகளின் எண்ணிக்கை 220. இந்தக்  கணக்கீட்டில் யூனியன் பிரதேசங்களையும், வடகிழக்கு மாநிலங்களையும் சேர்த்தால், குறைந்தது பத்து தொகுதிகள். ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகள் தேர்தலில் பா.ச.க.வுடன் 50 தொகுதிகளில் மட்டுமே வலுவாகப் போராட வேண்டும் என்பதே எதார்த்தம்.

‘பா.ச.க. ஒன்றும் வெல்ல முடியாத கட்சி அல்ல’ என்ற உண்மையை எதிர்க்கட்சிகள் உணர்ந்துள்ளன. பிரதம அமைச்சர் குறித்த மாயபிம்பம், 2024 மக்களவைத் தேர்தலில் வெளுத்துவிடும் என்பதும்  உண்மை.

மக்களின் நிலை பா.ச.க. ஆட்சியை எதிர்த்துத் தெருவில் இறங்கிப் போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டது. வட மாநிலங்களில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வேண்டாம் என்ற போராட்டங்கள் ஆளும் அரசின் அனைத்து ஆதரவு ஊடகங்களாலும் மறைக்கபட்டன.

விவசாயிகளின் புதுதில்லியை நோக்கிய  போராட்டம் 2024 மக்களவைத் தேர்தல் வெற்றி-தோல்வியைத் தீர்மானிக்கும்  முக்கியக் காரணி. சிறுபான்மை மக்களுக்கு எதிரான குடியுரிமைத் தடைச் சட்டம், பொது சிவில் சட்டம், சிறுபான்மையோரின் மத வழிபாட்டுத் தலங்கள் தாக்கப்படுவது போன்ற தொடர் தாக்குதல்கள் வாக்குப் பதிவில் பா.ச.க.வின் எதிர்நிலையைப் பிரதிபலிக்கும். மணிப்பூரில் தொடரும் கலவரங்களை அடக்க முடியாத மத்திய மற்றும் மாநில மணிப்பூர் பா.ச.க.வின் ஆட்சி அதிகாரம் வாக்காளர்களைப்  பெருங்கோபத்திற்குத் தள்ளியிருக்கிறது.

இவற்றையெல்லாம் மறைத்து விட்டு பா.ச.க. தனது பத்தாண்டு காலச் சாதனைகளாக இராமர் கோவிலைப் பறைசாற்றுகிறார்கள். பா.ச.க. அடுத்த முறை வெற்றி பெற்றால் கிருஷ்ணருக்கும்  பெரிய கோவில் என்கிறார்கள். மக்களின் வாழ்வுரிமைகளை மறுத்து விட்டு, மதவாத அரசியலை மட்டும் பா.ச.க. முன்வைக்கிறது என்பதே கவலை தரும் நாட்டு நடப்பு.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின்  ஊதியம் பெறாத நாற்பதாயிரம் தன்னார்வத் தொண்டர்களும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் 30 துணை அமைப்புகளும் மதவெறியை வாக்காக மாற்றும் பணியைச் செவ்வனே செய்கின்றன. உத்திரப்பிரதேசம், குஜராத் போன்ற மாநிலங்களில் வாக்காளர் பட்டியலின் ஒரு பக்கத்திற்கு ஒருவர் என்று துடிப்புடன் பணியாற்றுவதாகத் தகவல்.

மறுபுறம் மாநிலக் கட்சிகளை மடக்க திரை மறைவு அரசியலும் உண்டு. பீகாரின் நிதிஷ்குமார் மாறியது போல, ஒரிசாவின் நவீன் பட்நாயக் அவர்களுக்கு வலை வீசுகிறது. தென்னிந்தியாவில், தமிழ்நாட்டில் எடப்பாடியோடும், கர்நாடகாவில் குமாரசாமியோடும், தெலுங்கானாவில் சந்திரசேகராவோடும், ஆந்திராவில் ஜெகன் மற்றும் சந்திரபாபு போன்றவர்களோடும் பா.ச.க. தொடர்ந்து பேசி வருகிறது. பா.ச.க. 400 சீட்டுகளை அள்ளும்  என்றால், இந்தக் கட்சிகளோடு பா.ச.க. கொஞ்சுவது, கெஞ்சுவது நாம் கூறிய வித்தியாசமான 50 தொகுதிகளின் வெற்றியைத் தட்டிப் பறிக்க வேண்டும்; அதற்கு எதையாவது செய்ய வேண்டும்  என்ற பதவி வெறியைத் தவிர எதுவுமில்லை. பா.ச.க.வின் அடிப்படை அறமற்ற செயல், வாக்குகளுக்காக எதையும் செய்யும் என்பதே கடந்த கால வரலாறு. தேச பக்தி என்ற  பெயரில் மக்களைப்  பீதியில் ஆழ்த்த  ஆளும் தரப்பு தேர்தல் காலத்தில் எதையும் செய்யும் என்பதே நடுநிலையாளர்களின் கவலை.

‘இந்தியா’ கூட்டணி அரசியல் பேரங்களை விட, மக்களைச்  சந்திப்பது, மக்கள் நலனுக்காகப் பாடுபடுவது என மக்கள் பாதையில் தேர்தல் களத்தை முன்னெடுக்கிறது. கர்நாடகத் தேர்தலுக்கு முன், இராகுலின் பாத யாத்திரை எவ்வாறு கர்நாடகா பா.ச.க.வை வீட்டிற்கு அனுப்பியதோ, அதே நிலை வட மாநிலங்களில் ஏற்படலாம் என்கிறார்கள். பீகாரில் இராகுல், தேஜஸ்வியாதவோடு நடத்திய பாதயாத்திரை, தேர்தல் களத்தில் கவனம் பெற்றிருக்கிறது. உத்திரப் பிரதேச இராகுலின் பாத யாத்திரையில் கலந்துகொள்ள அகிலேஷ் யாதவுக்குக் காங்கிரஸ் தலைவர் கார்கே கடிதம் எழுதியுள்ளார். இந்த இளம் தலைவர்கள் தேர்தல் களத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். இது தவிர,  இந்திய மக்கள் ஒவ்வொருவரும் விலைவாசி உயர்வு, வேலை வாய்ப்புப் பறிப்பு, தனி மனித உரிமை பறிப்பு என ஒவ்வொரு தனி மனிதனாகவும்   பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களின் பெருங்கோபம் வாக்காக மாறப்போவது  காலத்தின் கட்டாயம். ஆகவே,  ஆளும் ஒன்றிய அரசு வீட்டிற்கு அனுப்பப்படும்.

விழித்துக் கொள்வார்கள் வாக்காளர்கள்!

Comment