No icon

19-11-2023 இதழ் தொடர்ச்சி

‘கடவுளைத் துதியுங்கள்’ (laudate deum) உள்ளடக்கமும், அறைகூவலும்...

பிரிவு 3: ‘சர்வதேச அரசியலின் பலவீனம்’ (எண்கள் 34-43)

அனைவரும் உடன்பிறந்தோர்திருமடலில் கூறப்பட்ட உலகளாவிய அரசியலின் பலவீனங்கள் குறித்த பல்வேறு கருத்துகளை மீண்டும் இப்பகுதி விளக்குகிறது. பன்முகத்தன்மை சந்திக்கும் நெருக்கடியையும், பொதுவெளிச் சமூகத்தின் சக்திகளை உள்ளடக்கிய கண்ணோட்டத்தில் மறுபரிசீலனைக்குரியவைப் பற்றியும் பேசுகிறது. உலக மயமாக்கலால் ஏற்பட்டிருக்கும் கலாச்சாரப் பரிமாற்றங்கள், மிகுதியான பரஸ்பர அறிவு மற்றும் மக்களின் ஒருங்கிணைப்புச் செயல்முறைகளை ஆதரிக்கிறது. இத்தகு பன்முகத்தன்மை கீழிருந்து, அதாவது மக்களிடமிருந்து தூண்டப்படுகிறது. வெறுமனே அதிகார உயர் அடுக்குகளால் தீர்மானிக்கப்படுவதில்லை. பல்வேறு நாடுகளைச் சார்ந்த இயற்கை ஆர்வலர்கள் ஒருவருக்கொருவர் கைகோர்த்து ஆதரிப்பதால், உலகெங்கிலும் இருந்து எழும் கோரிக்கைகள், அதிகார மையங்களுக்கு அழுத்தம் கொடுக்கக்கூடும். அதிகரித்து வரும் பருவநிலை நெருக்கடியால் இது நடக்கும் என்கிறார் திருத்தந்தை. இக்காரணத்திற்காக, ‘தேசிய, மாநில மற்றும் நகராட்சி அரசியல் அதிகாரத்தைக் குடிமக்கள் கட்டுப்படுத்தாவிட்டால், சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் சேதத்தைக் கட்டுப்படுத்த முடியாதுஎன்று நான் மீண்டும் வலியுறுத்துகிறேன் (எண் 38) என்கிறார்.

பின்நவீனத்துவக் கலாச்சாரம் மிகவும் பாதிக்கப்படக்கூடிய மற்றும் அதிகாரமற்றவர்களிடம் ஒரு புதிய உணர்திறனை உருவாக்கியுள்ளது. இது குறித்து ஏற்கெனவேஅனைவரும் உடன்பிறந்தோர்திருமடல் விவரித்துள்ள, மனித முதன்மை மற்றும் எந்தவொரு சூழலையும் தாண்டி, மனித மாண்பைப் பாதுகாப்பதோடு சம்பந்தப்பட்டது. மனிதகுலத்தின் உண்மையான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான பன்முகத்தன்மையை ஊக்குவிப்பதற்கான மற்றொரு வழி இதுவே (எண் 39). இங்ஙனம், ‘உலகளாவிய கோளத்தின் ஜனநாயக மயமாக்கல்தேவை வலியுறுத்தப்பட்டுள்ளது இப்பகுதியில்.

பிரிவு 4: ‘பருவநிலை மாநாடுகள் - முன்னேற்றம் மற்றும் தோல்விகள்’ (எண்கள் 44-52)

1992-ஆம் ஆண்டுரியோமாநாட்டிலிருந்து தொடங்கி, பருவநிலை மாற்றம் குறித்த மாநாடுகளால் சர்வதேச சமூகம் அடைந்த முன்னேற்றத்தைக் கண்டறிகிறது இப்பகுதி. சில பேச்சுவார்த்தைகள் தோல்வியுற்றன. உக்ரைனில் போர் மற்றும் அதன் விளைவாக ஏற்பட்ட எரிசக்தி நெருக்கடி உள்ளிட்ட சமீபத்திய ஆண்டுகளில் ஏற்பட்ட சிரமங்கள் மற்றும் தடைகள் நினைவுகூரப்பட்டுள்ளன. எதுவாயினும், சிறிதளவேனும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஓர் உதாரணம், கால நிலை மாற்றத்தின் விளைவுகளால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு இழப்பீடு வழங்குவதற்கான உரிமையை அங்கீகரித்தல். அதாவது, வளர்ந்த நாடுகளின் ஆதிக்கப் பயன்பாட்டால் இயற்கையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால் பாதிக்கப்படும் ஏழை நாடுகளுக்கான இழப்பீடு வழங்கல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பிரிவு 5: துபாய் COP28 -லிருந்து நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள்? (எண்கள் 53-60)

வருங்காலம் குறித்து கவனம் செலுத்தப்பட்ட பகுதி இது. பாரசீக வளைகுடாவின் ஒரு நாடான துபாய் புதைபடிவ எரிபொருள்களின் சிறந்த ஏற்றுமதியாளராக அறியப்படுகிறது. இருப்பினும், இது புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களில் குறிப்பிடத்தக்க முதலீடுகளைச் செய்துள்ளது. எரிவாயு மற்றும் எண்ணெய் நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியை மேலும் அதிகரிக்கும் நோக்கத்துடன் அங்கு புதிய திட்டங்களைத் திட்டமிட்டுள்ளன. இத்தருணத்தில்இங்கு நம்பிக்கைகொள்ள எதுவும் இல்லை என்று சொல்வது, தற்கொலைக்குச் சமம்’. ஏனெனில், இந்நிலைப்பாடு அனைத்து மனிதகுலத்தையும், குறிப்பாக ஏழைகளைக் காலநிலை மாற்றத்தின் மோசமான தாக்கங்களுக்கு ஆளாக்குவதைக் குறிக்கும் (எண் 53). எதார்த்தத்தை மறைக்காமல், அதேவேளையில் அரசுகள் மேற்கொள்ளவிருக்கும் நடவடிக்கையின் மீது நம்பிக்கை வைத்துள்ளார் திருத்தந்தை. இருளிலும் ஒரு வெளிச்சத்தை எதிர்நோக்குவதை இங்கு உணர முடிகிறது.

COP28வரலாற்றுச் சிறப்புமிக்கதாக மாறுவதை உறுதி செய்வதில் உண்மையான ஆர்வம் இருந்தால், அது மனிதர்களாகிய நம் மாண்பை உயர்த்தும். அப்படியெனில், இம்மாநாட்டிலிருந்துதிறமையானவை, கட்டாயமானவை மற்றும் உடனடியாகக் கண்காணிக்கப்படுபவை’ (எண் 59) ஆகிய மூன்று பண்புகளை உள்ளடக்கிய ஆற்றல் மாற்ற பிணைப்பு வடிவங்களை மட்டுமே நாம் எதிர்பார்க்க முடியும் என்கிற நம்பிக்கையை உலக நாடுகளுக்கு விதையாகத் தூவுகிறார் திருத்தந்தை. இதுவரை அது நடைபெறவில்லை. திருத்தந்தையின் இத்தகைய செயல்முறை அர்ப்பணிப்பு மட்டுமேசர்வதேச அரசியலின் நம்பகத்தன்மையை மீட்டெடுக்க முடியும்.’ இதன் மூலம் சர்வதேச அரசியலின் புதுப்பித்தல் எழலாம். இந்த உறுதியான செயல்முறையால் மட்டுமே கார்பன்-டை-ஆக்சைடு அளவைக் கணிசமாகக் குறைக்கவும், காலப்போக்கில் இயற்கைக்கு எதிரான இன்னும் பெரிய தீமைகளைத் தடுக்கவும் முடியும்.

பிரிவு 6: ஆன்மிக உந்துதல்கள் (எண்கள் 61-73)

நம் கிறிஸ்தவ மத அனுபவத்தில் இன்றைய பிரச்சினைகளுக்கான தீர்வினைத் தேடுவதற்கான அழைப்பையும், ஏனைய மத நம்பிக்கையாளர்களும் இதே அழைப்பைத் தங்களது மத நம்பிக்கையிலிருந்து பெற்றுக்கொள்ளவும் அழைப்பு விடுக்கிறது இப்பகுதி. திருத்தூது ஊக்கவுரையின் இறுதியில், ‘கடவுளைத் துதியுங்கள்என்பது இந்தக் கடிதத்தின் பெயர். ஏனென்றால், கடவுளை மாற்றுவதாகக் கூறும் ஒரு மனிதன் தனக்கு மிக மோசமான ஆபத்தாக மாறுகிறான்...” என்று நிறைவு செய்கிறார் திருத்தந்தை.

சுருங்கக்கூறின் இம்மடல்,

கடவுளின் படைப்பு மற்றும் அவரது பிரத்தியேக உடைமை என உலகைப் பற்றிய விவிலியப் புரிதல் நினைவுகூரப்படுகிறது; உலகில் தந்தையால் விதைக்கப்பட்ட அழகை எவ்வாறு புரிந்துகொள்வது என்பதை அறிந்த இயேசுவின் அணுகுமுறை மற்றும் பொருள் உலகத்தை உள்ளடக்கிய அவரது உயிர்த்தெழுதலின் மகிமை விளக்கப்பட்டுள்ளது.

மற்ற உயிரினங்களுடன் நம்மை ஒன்றிக்க வைக்கும் நம்பிக்கை மற்றும் சுற்றியுள்ள எதார்த்தங்களிலிருந்து நம்மைத் தனிமைப்படுத்தும் தொழில்நுட்ப முன்மாதிரிகள், இவைகளுக்கிடையிலான எதிர்ப்பு முன்னிலைப்படுத்தப் பட்டுள்ளன.

எனவே, நமக்குத் தரப்படும் அழைப்பு என்பது, உலகை ஒருதொடர்பு மண்டலமாக’ (contact zone) மீண்டும் கண்டுபிடிப்பதாகும். இது கிறிஸ்தவ மானுடவியலுக்கு வெகு தொலைவில் உள்ள சிந்தனை வடிவங்களையும் அதாவது, மனிதர்களுக்கும், பிற உயிரினங்களுக்கும் இடையிலான தன்மைகளைக் கவனத்தில் கொண்டு சாட்சியமளிக்கிறது. ‘மனிதனின் தனித்துவமான மற்றும் மைய மதிப்பு’ (எண் 67) என்கிற யூத-கிறிஸ்தவப் பாரம்பரிய நிலைப்பாடு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இன்றுமனித வாழ்க்கை புரிந்துகொள்ள முடியாதது, பிற உயிரினங்கள் இல்லாமல் வாழ முடியாதது மற்றும் யாரும் தனியாக மீட்கப்படுவதில்லைஎன்கிற விழிப்புணர்வின் அடிப்படையில் அமைந்துள்ளமானுட மைய வாதத்தின்வடிவத்தில் விளக்கப்பட வேண்டும் என்ற அங்கீகாரத்திற்கு வழிவகுக்கிறது. இந்த உறவுப் பார்வைஒரு தன்னாட்சி, சர்வ வல்லமை மற்றும் வரம்பற்ற மனிதனின் யோசனைக்குமுற்றுப்புள்ளி வைக்கிறது (எண் 68).

நமது மனிதத்தைமிகவும் தாழ்மையான மற்றும் வளமான வழியில்புரிந்து கொள்ள அனுமதிக்கிறது.

Comment