No icon

டிசம்பர் 6 அம்பேத்கர் இறந்த தினம்

அம்பேத்கரின் தலைமைத்துவம்

தலைமைத்துவமா? அது என்ன?

மனிதராகப் பிறந்த ஒவ்வொருவரும் தலைவராக வாழ அழைக்கப்படுகிறார்கள். முதலில் தனக்குத் தானே தலைவராகத் திகழ்வதுடன், தன்னைச் சார்ந்தவர்களையும் வழிநடத்திச் செல்வது அவசியமாகின்றது. அம்பேத்கரின் தலைமைத்துவம் இந்தியாவுக்கு மட்டுமல்ல, அகில உலகில் வாழும் மனிதர்கள் எல்லாருக்கும் அவர் தலைமைத்துவம் அறைகூவல் விடுக்கின்றது.

உலகின் 20 நாடுகளில் அம்பேத்கர் சிலை வைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் அமெரிக்காவில் 19 அடி உயரமுள்ள சிலை மிகச் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது என்பது இவ்வுண்மைக்குச் சான்றாகும். தலைமைத்துவம் என்பது தன்னையும், பிறரையும் வழிநடத்திச் செல்ல ஒரு தலைவனின் இலக்கும் (VISION), அதை அடைந்திட அவர் தேர்ந்தெடுக்கும் வாழ்க்கை முறைகளும் (WAY OF LIFE OR MISSION) ஆகும்.

அம்பேத்கரைப் பொறுத்தமட்டில் தலைமைத்துவம் என்பது பதவியில் இருப்பதனால் ஒருவர் தலைவராகத் திகழ்வதில்லை; மாறாக, அவர் பாதிக்கப்பட்டச் சமுதாயத்திற்குத் தான் செய்திடும் அர்ப்பணமுள்ள பணியினாலும், தனித்துவத்துடன் கூடிய பங்களிப்பாலும் முடிசூடா மன்னராகத் திகழும் தலைமைத்துவமாகும்.  

அம்பேத்கரின் இலக்கு

அம்பேத்கரின் இலக்கு சுதந்திரம் (LIBERTY), சமத்துவம் (EQUALIITY), சகோதரத்துவம் (FERTANITY) ஆகும். சுதந்திரம் என்பது ஒரு மனிதன் தன்னையும், பிறரையும் வாழ வைக்கும் செயல்களை எவ்விதத் தடையும் இன்றி செய்திடும் உரிமையைச் சுட்டிக்காட்டுகிறது. சமத்துவம் என்பது மனிதப் படைப்பில் எவ்வித ஏற்றத்தாழ்வுகளும் இல்லாது, சமத்துவ உறவுடன் வாழ்ந்திடும் சமூக அமைப்பாகும். சகோதரத்துவம் என்பது பாதிக்கப்பட்ட மனிதர் மேல் சக மனிதன் கொண்டுள்ள அர்ப்பணமுள்ள செயல்பாடுகளைக் கொண்ட சமூகத்தைக் குறிக்கிறது. மொத்தத்தில், ஒரு சமூகத்தில் மனிதராகப் பிறந்த அனைவரும்  மாண்புடைய மனிதர்களாகத் திகழ்ந்து, மகிழ்ச்சியான சமத்துவச் சமுதாயம் படைப்பதே அவரது இலக்கு ஆகும். அவரது வாழ்க்கை முறையினை அவரதுகற்பி, போராடு, ஒன்றுசேர்என்ற கொள்கை வாக்கியம் எடுத்துரைக்கிறது.  

அறிவுசீர் தலைமைத்துவம்                                   

கற்பிஎன்று சொல்லும்போது, நாம் நன்றாகக் கற்க வேண்டும். இரண்டாவதாக, கல்வி மறுக்கப்பட்ட மக்களுக்கு உழைத்திட வேண்டும். அம்பேத்கரைப் பொறுத்தமட்டில் நன்கு படித்து, பட்டங்கள் பெற்று, ‘தான் உண்டு, தன் குடும்பம் உண்டுஎன்ற குறுகிய வட்டத்தில் வாழ்ந்து, எவ்வித சமுதாய அக்கறையும் இன்றி இருப்போரைமூளைப் பெருத்தவர்என்பார். அவர் பெற்றக் கல்வியால் எவ்விதப் பயனும் இல்லை என்பார்உண்மையான அறிவுஜீவி, தான் பெற்ற அறிவை, தான் மட்டும் அனுபவிக்க எண்ணாது, இச்சமுதாயம் சீரடையத் தன்னை அர்ப்பணிக்கும் உயர்ந்தோர் ஆவார். ஆக, தான் கற்றக் கல்வியால் இச்சமுதாயத்தில் மாண்புடைய மனிதர்களாக வாழ்ந்திட தன்னையே அர்ப்பணிக்கும் தலைமைத்துவம் ஆகும்

உணர்வுமிகுத் தலைமைத்துவம்                                 

போராடுஎன்பது அவரின் தலைமைத்துவத்தின் இரண்டாவது பரிமாணத்தைக் குறிக்கிறது. உணர்வுகளுக்கும், உணர்ச்சிகளுக்கும் வேறுபாடுகள் உள்ளன. உணர்வுமிகு என்கையில், அறிவை அடிப்படையாகக் கொண்டு, நமது ஆக்கப்பூர்வமான செயல்திட்டங்கள் நிறைந்தது. பாதிக்கப்பட்டோரின் அவமானத்திலும், துன்பத்திலும் உடனிருந்து, அவர்களின் மாண்பிற்காய்ப் போராடுவதில் உள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்குச் சலுகைகளை நாய்களுக்குப் போடும் எண்ணமும், அதை விரும்பி ஏற்கும் மனப்போக்கும் தன்மானத்திற்கு எதிரானது என்பார். ‘சிறுத்தைகளையா கோயில்களில் பலியிடுகின்றனர்? ஆடுகளைத்தானே! எனவே, சிறுத்தைகளாகக் கிளர்ந்து எழவேண்டும்என்பார். சாய்கின்ற பக்கம் சாய்ந்திடும் செம்மறி ஆடுகளைப் போல், மானங்கெட்டு வாழ்வதை விட, தன்மானத்திற்காய் ஒரு நிமிடம் போராடி அமரர் ஆவதே மேல் என்பார்.

ஆன்மிகவழித் தலைமைத்துவம்

ஒன்றுபடுஎன்ற மூன்றாவது பரிமாணம் ஆன்மிகத் தலைமைத்துவத்தைச் சுட்டிக்காட்டுகிறது. தலித் மக்கள் சமூகத்திலிருந்து துண்டிக்கப்பட்டு, பற்பல பிரிவுகளாக இருப்பதைக் கண்டார். சமூகத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் குரல் கொடுக்க அவர்களை ஒன்றிணைக்க மிகவும் பாடுபட்டார். மற்ற சாதியினர் ஒன்றுதிரள்வது அநீதி நிறைந்த சாதியத்தை வலுப்படுத்தவே! அது சமூகப் பாவம்! ஆனால், தலித் மக்கள் சாதியத்தை ஒழித்து, மனித மாண்பிற்காய்ப் போராடுவது தெய்வீகமாகும். ஆன்மிகம் என்பது மதம் போதிக்கும் அனைத்துக் கருத்துகளையும் குருட்டுத்தனமாக ஏற்றுக்கொள்வதில் அல்ல; இது தொடர் தேடலாக அமைய வேண்டும் என்பார்

நான் பிறப்பால் இந்துவாக இருந்தாலும், ஓர் இந்துவாக இறக்கப் போவதில்லைஎன்று கூறி, புத்த மதமே தன்னையும், தன் மக்களையும் சரியான ஆன்மிகப் பாதைக்கு இட்டுச் செல்லும் என்று உணர்ந்து, போதிசத்துவர் ஆனார்.

ஒரு நல்ல தலைமைத்துவம் அறிவு, உணர்வு, ஆன்மிகம் ஆகிய மனித வாழ்வின் முப்பரிமாணங்களில் சிறந்து விளங்குவதாகும். அதுவே மனித முழுமையும், தெய்வீகமும் ஆகும்.

Comment