புனித மரிய தொமேனிக்கோ மாந்தோவானி
- Author Sr. மேரி ஆனந்த் DM --
- Tuesday, 19 Jul, 2022
நேற்றும், இன்றும், என்றுமே மாறாத இறைவனின் அன்பினால் உருமாற்றம் அடைந்தவர். இறைமக்கள் அனைவரும் இறையன்பிலும், பிறரன்பிலும் வளர வழிகாட்டியவர். புனிதமும், தியாகமும், நம்பிக்கையும் மிகுந்த சமூக ஆர்வலர். நற்செயல்கள் வழியாக இறையன்பின் நறுமணம் வீசி, இறைவனை மகிமைப்படுத்தியவர். ஏழைகள், எளியோருக்கு உதவுவதில் சிறந்தவர். பெருமையும், புகழும் விரும்பாதவர். கீழ்ப்படிதல், ஏழ்மை, புனிதம் ஆகியவற்றை தனதாக்கியவர். இறைவனை அளவில்லாமல் அன்பு செய்தவர். அயலானை நேசித்து, உடனிருந்து அன்பு செய்தவர். ஏழை எளியவர்களைத் தேடிச் சென்று உதவியவரே புனித மரிய தொமேனிக்கோ மாந்தோவானி.
மரிய தொமேனிக்கோ 1862 ஆம் ஆண்டு, இத்தாலியின் கார்தா ஏரிக்கரையில் அமைந்துள்ள காஸ்தெலெத்தோவில் பிறந்தார். திரு. ஜியோவானி மாந்தோவானி, திருமதி. ப்ருடென்சா ஜாம்பெரினி ஆகியோருக்கு பிறந்த நான்கு குழந்தைகளில் மூத்தவர். குடும்பத்தின் வறுமையின் காரணமாக தொடக்கக் கல்வி மட்டுமே தனது சொந்த ஊரில் பயின்றார். தனது பெற்றோரிடமிருந்து கிறிஸ்தவ வாழ்வுக்குரிய நற்பண்புகளையும், தூய வாழ்வுக்கான வழிகளையும் கற்றுக்கொண்டார். கல்வி அறிவிலும், இறையருளிலும் வளர்ந்து, எல்லாரிடமும் அன்பராக, நண்பராகப் பழகினார்.
1877 ஆம் ஆண்டு, இளமைப்பருவத்தில் திரு அவையின் வளர்ச்சி பணிகள் செய்ய ஆர்வம் காட்டினார். அருள்தந்தை கியூசெப் நாஷிம்பேனி என்பவரின் வழிகாட்டுதல் பெற்று, இறைவனுக்கு தன்னை அர்ப்பணிக்க திருவுளம் கொண்டார். நோயாளிகளைச் சந்தித்து, அவர்களுக்காக இறைவேண்டல் செய்து, ஆறுதல் கூறினார். இறைவார்த்தையை வாசித்து, தூய பாதையில் பயணித்து மறைக்கல்வி கற்பித்தார். 1886 ஆம் ஆண்டு, கற்பு, கீழ்ப்படிதல், ஏழ்மை வழியாக இறைவனுக்கு தன்னை அர்ப்பணித்தார். ஒழுங்கு முறைகளைப் பின்பற்றுவதில் எப்போதும் உண்மையுள்ளவராக இருந்தார். கடின உழைப்பு, செப வாழ்வு, நற்செய்தியின் மதிப்பீடுகளான அன்பு, நீதி, இரக்கம் இவற்றை பிரதிபலித்தார்.
மரிய தொமேனிக்கோ இரண்டு வகையான செயல்கள்மீது அதிக ஆர்வம் கொண்டிருந்தார். ஒன்று: இறைவன் மீது அபரிவிதமான அன்பு செலுத்துவதில் கவனம் செலுத்தினார். தன்னைப் போல அயலானை அன்பு செய்தார். இரண்டாவது: எப்போதும் ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்பதில் கருத்துடன் செயல்பட்டார். தனது 30 ஆம் வயதில், நான்கு சகோதரிகளை தன்னுடன் சேர்த்து அருளாளர் ஜூசப்பே நாஷிம்பேனி அவர்களோடு இணைந்து, திருக்குடும்ப சிறிய அருள்சகோதரிகள் சபையை ஆரம்பித்து, வழிநடத்தினார். திரு அவையில் வலுவான இறைச்சமூகம் கட்டியெழுப்ப அயராது உழைத்தார். கருணை செயல்கள் செய்வதில் சிறந்து விளங்கினார்.
மரிய தொமேனிக்கோ அன்னை மரியாவிடம் மிகுந்த பக்தியும், பற்றும் கொண்டிருந்தார். தன்னை அன்னை மரியாவின் மாசற்ற இதயத்திற்கு அர்ப்பணித்தார். அவர் வாழ்ந்த பகுதியிலுள்ள மக்கள் அன்னை மரியாவை அன்பு செய்ய, சகவாசிகளுக்கு வழிகாட்டுதல் நல்கினார். இளம் துறவிகளுக்கு தாயன்புடன் பயிற்சி அளித்ததால், அனைவரும் அவரை அம்மா என்று அழைத்தனர். கருணை உள்ளம் கொண்டிருந்த மரிய தொமேனிக்கோ ஏழைகள், நோயாளிகள், முதியோர்கள், கைவிடப்பட்டோர்கள் ஆகிய அனைவரையும் தேடிச் சென்று உதவினார். அன்னை மரியாவின் துணையுடன் நற்செயல்கள், நன்மைகள் செய்து ஏழைமக்களின் வாழ்வில் இறையொளியும், இறையானந்தமும், இறையமைதியும் நிலவ அயராது உழைத்தார்.
அன்றாட வாழ்வில் துன்பங்களுக்கும், ஏளனங்களுக்கும், இகழ்ச்சிக்கும் உட்பட்டபோது, உண்மையானவை எவையோ, கண்ணியமானவை எவையோ, விரும்பத்தக்கவை எவையோ, பாராட்டுதற்குரியவை எவையோ, நற்பண்புடையவை எவையோ, போற்றுதற்குரியவை எவையோ அவற்றையே செய்து இறைவனின் அருள் பெற்று 1934 ஆம் ஆண்டு, பிப்ரவரி திங்கள் 2 ஆம் நாள் இறைபதம் சேர்ந்தார். 2003 ஆம் ஆண்டு திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால் அருளாளராக அறிவித்தார். 2022 ஆம் ஆண்டு மே திங்கள் 15 ஆம் நாள் திருத்தந்தை பிரான்சிஸ் புனிதர் நிலைக்கு உயர்த்தினார்.
Comment