No icon

புதிய புனிதர் 4 – வரலாறு

புனித மரிய ரிவியெர்

இறைமக்கள் இறையன்பிலும், நம்பிக்கையிலும் வளர வழிகாட்டியவர். புனிதமும், தியாகமும், சேவையும் தனதாக்கி அன்பின் நறுமணம் வீசியவர். தைரியத்துடன் நற்பண்புகள் வழி இறைவனை மாட்சிப்படுத்தியவர். பெருமையும் புகழும் விரும்பாமல் தூயவராக வாழ்ந்தவர். நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அன்புடன் பணிவிடை செய்தவர். எப்பொழுதும் நற்கருணை ஆண்டவரின் பிரசன்னம் உணர்ந்தவர். இறைபணி செய்யும் ஆற்றல் நற்கருணையிலிருந்து பெற்றவர். துன்புறும் ஏழைமக்கள் மத்தியில், கனிவின் கரமாக கடந்து சென்றவர். பதவியில் பணிவும், உயர்வில் தாழ்ச்சியும், துன்பத்தில் துணிவும், கோபத்தில் பொறுமையுடனும் செயல்பட்டவர். செல்வாக்குப் பெற்றிருந்தும் எளிமையாக வாழ்ந்த இறை நம்பிக்கையாளரே புனித மரிய ரிவியெர்.

மரிய ரிவியெர் பிரான்ஸ் நாட்டில் 1768 ஆம் ஆண்டு, டிசம்பர் 19 ஆம் நாள் ஜூன் ரிவியெர் என்பவரின் நான்கு குழந்தைகளில் மூன்றாவது குழந்தையாகப் பிறந்தார். கிறிஸ்து பிறப்பு திருநாள் தினம் அன்று திருமுழுக்குப் பெற்றார். 1770 ஆம் ஆண்டு, ஒரு விபத்துக்குள்ளாகி இடுப்பு, கணுக்கால் உடைந்து நடக்க முடியாமல் துன்புற்றார். தாய், மரிய ரிவியெரை தினமும் ஆலயம் அழைத்து சென்று திருப்பலியில் பங்கேற்று மகள் உடல்நலம் பெற அன்னை மரியாவின் திருச்சொரூபம் முன் இறைவேண்டல் செய்வது வழக்கம். 1774 ஆம் ஆண்டு, ஊன்றுகோலின் உதவியுடன் ஓரளவு நடந்தார். நாட்கள் செல்லச் செல்ல முழுமையாக குணமடைந்து, எவ்வித உதவியின்றி நடந்தார். குழந்தைப்பருவம் முதல் பாட்டியின் அரவணைப்பிலும், தூயவராகவும், நம்பிக்கை மிகுந்தவராகவும், தைரியசாலியாகவும், சகோதரப்பாசத்திலும் வளர்ந்தார்.

மரிய ரிவியெர் இறைவனுக்கு தனது வாழ்வை அர்ப்பணித்தார். 1785 ஆம் ஆண்டு, பிராடெல்லஸில் உள்ள சிஸ்டர்ஸ் ஆஃப் நோட்டர் டாம் என்ற துறவு சபையில் சேர விண்ணப்பித்தபோது, அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இறை சிந்தனைக்கும், சொல்லுக்கும், செயலுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வாழ்ந்தார். 1786 ஆம் ஆண்டு, தனது சொந்த ஊரில் ஒரு பள்ளிக்கூடம் நிறுவி, குழந்தைகளுக்கு கல்வி கற்பிப்பதில் கவனம் செலுத்தினார். 1789 ஆம் ஆண்டு, பிரெஞ்சு புரட்சி ஆரம்பமானது. பிரெஞ்சு புரட்சியின்போது, திரு அவையின் அதிகாரம் பெருமளவு குறைந்து, அரசின் அதிகாரம் வலுப்பெற்றபோது இயேசுவின்மீது மிகுந்த நம்பிக்கைகொண்டார். நற்கருணையை வாழ்வின் ஆற்றலாகவும், வல்லமையாகவும், புகலிடமாகவும் மாற்றிட ஆவல் கொண்டார்.

பிரெஞ்சு புரட்சிக் காலத்தில் திருப்பலி நடத்த குருக்களின் பற்றாக்குறை ஏற்பட்டபோது, செப வழிபாடு நடத்தினார். இறைமக்களுக்கு இறைவார்த்தையும், திரு அவையின் மறையுண்மைகளையும் எடுத்துரைத்தார். புனித பிரான்சிஸ் சேவியர், புனித பிரான்சிஸ் ரெஜிஸ் ஆகியோர்மீது பக்திகொண்டு, அவர்களின் துணை வேண்டினார். 1794 ஆம் ஆண்டு, அவரால் நடத்தப்பட்ட கல்வி நிறுவனத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தபோது, துய்ட்ஸ் என்ற நகருக்கு குடிபெயர்ந்தார். அங்கு அருள்தந்தை லூய்கி என்பவரின் உதவியுடன் இறைபணியை மீண்டும் தொடர்ந்தார். இறை திருவுளம் கண்டறிந்து, தன்னுடன் 4 பெண்களை இணைத்து 1796 ஆம் ஆண்டு, மற்றுமொரு துறவு சபையை நிறுவினார். துறவு சபைக்கென்று விதிமுறைகள் உருவாக்கி முறையாக பின்பற்றினார்.

பிரெஞ்சு புரட்சிக் காலத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள், குழந்தைகள், நோயாளிகள், ஆதரவற்றோர், ஊனமுற்றோர் ஆகியோருக்கு உதவினார். குழந்தைகளுக்கும், இளைஞர்களுக்கும் கல்வி கற்பிப்பதில் தனிக்கவனம் செலுத்தினார். புரட்சிக்காலத் துன்புறுத்தலை பொருட்படுத்தாமல் விடாமுயற்சியோடும், துணிவுடனும் மக்களின் நலனுக்காக உழைத்தார். வீடுகளில் மகிழ்ச்சியின்றி சோர்வுடன் வாழ்ந்தவர்களைச் சந்தித்து, இறையன்பும், இரக்கமும், தைரியமும் பகிர்ந்தார். நற்கருணை ஆண்டவரை ஆன்ம உணவாக உட்கொண்டு, இறைஞானமும், அறிவாற்றலும் பெற்று, இதயத்தில் இறைவனுக்கு இடமளித்து, கிறிஸ்துவின் போதனைகளைக் கற்பித்தார்.

1814 ஆம் ஆண்டு, கைவிடப்பட்டோருக்கு மறுவாழ்வு மையம் நிறுவினார். ஏழைகளுக்கு உதவிகள் செய்து அவர்களின் நல்வாழ்வுக்கு உழைத்தார். எதிர்பாராமல் நோயினால் பாதிக்கப்பட்டார். இடைவிடாமல் இறை பிரசன்னத்திலும், இறை அன்பிலும், பிறரன்பிலும், அமைதியிலும் வாழ்ந்து 1838 ஆம் ஆண்டு, பிப்ரவரி திங்கள் 3 ஆம் நாள் இறந்தார். 1853 ஆம் ஆண்டு, திருத்தந்தை ஒன்பதாம் பத்திநாதர் இறைஊழியராக அறிவித்தார். 1982 ஆம் ஆண்டு, திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால் அருளாளராக அறிவித்தார். 2022 ஆம் ஆண்டு மே திங்கள் 15 ஆம் நாள், திருத்தந்தை பிரான்சிஸ் புனிதர் நிலைக்கு உயர்த்தினார்.

Comment