No icon

கந்தமாலின் 35 நபர்கள் புனிதர் பட்டத்தை நோக்கி...

வத்திக்கானின் புனிதர் நிலைக்கு உயர்த்துவதற்கான காரணங்களைக் கண்டறியும் பேராயமானது, இந்தியாவின் கந்தமால் கலவரத்தில் இறந்து போன 35 கிறிஸ்தவர்களுக்குப் புனிதர் பட்டம் வழங்குவதற்கான வேலைகளைத் தொடங்குவதற்கு அனுமதி அளித்துள்ளது. இது குறித்து இந்தியா மற்றும் நேபாளத்திற்கான திருத்தந்தையின் தூதுவர் மேமிகு லியோ போல்தோ ஜிரெல்லி அவர்கள் இதற்கான ஒப்புதல் கடிதத்தை, கட்டாக் மற்றும் புவனேஸ்வர் உயர் மறை மாவட்டத்தின் பேராயர் ஜான் பார்வா அவர்களிடம் ஒப்படைத்தார்.

பேராயர் ஜான் பார்வா அவர்கள், அருள்தந்தை பெர்னாட் டிஹால் அவர்களோடு சேர்ந்து கலவரத்தில் மறைசாட்சிகளாய் மரித்த 34 பொதுநிலையினருக்குப் புனிதர் பட்டம் வழங்க வேண்டுமென்று திருத்தந்தைக்கு விண்ணப்பக் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். அக்கடிதத்திற்குப் பதில் அளித்த வத்திக்கான் பேராயமானது, மறைசாட்சியாய் மரித்துள்ள 35 நபர்களுக்கும் புனிதர் பட்டம் வழங்குவதற்கான வேலைகளை ஆரம்பிப்பதற்கு எந்தத் தடையும் இல்லை என்று பதில் அளித்துள்ளது. இச்செய்தியானது கட்டாக் மற்றும் புவனேஸ்வர் உயர் மறைமாவட்டத்தின் திரு அவைக்கு, குறிப்பாக கந்தமால் இறைமக்களுக்குப் பெருமகிழ்வை அளித்துள்ளது.  இந்த 35 பேர்களில் அருள்பணியாளர் ஒருவரோடு சேர்த்து 24 ஆண்களும், 11 பெண்களும் அடங்குவர். இது உண்மையாகவே இந்தியத் திரு அவை பெருமை கொள்ளக்கூடிய ஒரு மகிழ்வான செய்தியாகும்.

Comment