No icon

தலையங்கம்

சூடு

மே 22, 2018 அன்று தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் அநியாயமாக சுட்டுக்கொல்லப்பட்ட நிகழ்வு ஒரு துன்பியல் சம்பவம். ஜாலியான் வாலாபாக் படுகொலையைவிட மிகவும் மோசமானது. இது ஓர் அரசு பயங்கரவாதம். ஜனநாயக விரோதமானது. கார்ப்பரேட் சார்பானது. மக்கள் விரோதமானது. திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலை.

மே 23, 2018 அன்று, நான்கு ஆண்டுகளாக இது குறித்து அமைக்கப்பட்ட சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் அவர்களின் தலைமையிலான ஒரு நபர் ஆணையம் 1426 பேருக்கு சம்மன் அனுப்பி, பல்வேறு தரப்பினரிடமும் 36 கட்டங்களாக விசாரணை நடத்தி, நன்கு விசாரித்து, ஏறக்குறைய 3000 பக்கங்கள் கொண்ட அறிக்கையை மே மாதம் 18,2022 அன்று தமிழக முதல்வரிடம்  கொடுத்தது. தற்போது நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தில் அக்.18 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது.

இந்த அறிக்கையில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாகவும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் பரிந்துரைகள் இடம்பெற்றுள்ளன. பொதுமக்கள் மீது பதிவுசெய்யப்பட்ட 38 வழக்குகள் திரும்பப் பெறவும், போராட்டத்தின்போது காவல்துறையால் கைது செய்யப்பட்டு மன உளைச்சலுக்கு ஆளான 93 நபர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாய் வீதம் உதவித்தொகை வழங்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அக்கறையில்லாத மாநகராட்சி ஆணையர், கோவில்பட்டி விடுமுறை முகாமில் தங்கி அலட்சியம் செய்த ஆட்சியர் வெங்கடேஷ், அசம்பாவிதங்கள் ஏற்படும் என்று எச்சரித்த உளவுத்துறை, நடைமுறைகளைப் பின்பற்றாமல் துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு உத்தரவிட்ட அதிகாரிகள், பொய் பேசிய முதல்வர், அரசியல் தலைமையின் தோல்வி, மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறைக்கு இடையிலான ஒருங்கிணைப்பின்மை என்று ஒட்டுமொத்த நிர்வாக குளறுபடிகளைப் பட்டவர்த்தனமாக சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துமீறி செயல்பட்ட காவல்துறையை தோலுரித்துக் காட்டி, துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஈடுபட்ட 17 காவலர்கள்மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கவும், அப்போதைய மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் மற்றும் 3 வருவாய்த்துறை அலுவலர்கள்மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

காவல்துறையினர் வேட்டைக்காரர்களாக செயல்படக்கூடாது என்று அறிவுரைத்துள்ள ஆணையம், சுடலைக்கண்ணு என்னும் போலீசார் காட்டில் வேட்டையாடுவதுபோல 17 ரவுண்டு கண்மூடித்தனமாக சுட்டதையும், போராட்டக் காரர்கள் எங்கிருந்து குண்டு வருகிறது என்று தெரியாத வண்ணம் பூங்காவில் மறைந்து சுட்டதையும் சுட்டிக்காட்டியுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் பின்னந்தலை மற்றும் முதுகு பகுதியின் வழியாக குண்டு துளைத்து, முன் வழியாக உள்ளுறுப்புகளை சிதைத்து வெளியே வந்திருக்கிறது. இடுப்புக்கு கீழே யாரையும் சுடவில்லை. துப்பாக்கிச் சூடு நடைபெறும்போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை. காவல்துறையினர் வரம்பு மீறியும், அத்து மீறியும் செயல்பட்டிருக்கிறார்கள். தற்காப்புக்காக காவல்துறையினர் யாரையும் சுடவில்லை.

இந்த அறிக்கை மிகவும் தெளிவாகவே இது அரசுப் பயங்கரவாதம், திட்டமிட்டு நடத்திய படுகொலை என்று குறிப்பிடுகிறது. குடிப்பதற்கு தண்ணீர் பாட்டிலையும் உண்பதற்கு உணவுப் பொட்டலத்தையும் மட்டுமே சுமந்து சென்ற அப்பாவி பொதுமக்களை, நிராயுதபாணிகளை, குருவிகளைச் சுடுவதுபோல சுட்டுக்கொன்றது அரசுப் பயங்கரவாதம் என்று சொல்லாமல் வேறு என்ன சொல்வது?

 17 ரவுண்டு வரை வேட்டைக்காரனைப்போல சுட்டுக்கொன்ற சுடலைக்கண்ணு முதல் டி.வியில் பார்த்துதான் தெரிந்துகொண்டேன் என்ற முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வரை அத்தனை பேருமே குற்றவாளிகள். சுடலைக்கண்ணு என்ற காவலர் மட்டும் அபாயகரமான துப்பாக்கியால் 17 ரவுண்டுகள் சுட்டுள்ளார். அவரை 4 இடங்களில் வைத்து, சுட வைத்துள்ளதன் மூலம், அவரை அடியாள்போல் காவல்துறை பயன்படுத்தியுள்ளது. காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு இடையே ஒருங்கிணைப்பு இல்லை. டிஐஜி மற்றும் உதவி எஸ்பி உத்தரவிட்ட துப்பாக்கிச் சூடு, ஐஜிக்கு கூட தெரியவில்லை. டிஐஜி தானாகவே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.

துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். 64 பேர் பலத்த காயமும், 40 பேர் லேசான காயமும் அடைந்துள்ளனர். துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் 17 பேர் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிபிசிஐடி வசமிருந்த விசாரணையை சிபிஐ எடுத்துக்கொண்ட நிலையிலும் இதுவரை நியாயம் கிடைக்காத நிலையில், நீதிபதி அருணா ஜெகதீசன் அவர்களின் ஒரு நபர் ஆணைய அறிக்கை காயத்தின் மீது கட்டப்பட்ட மருந்தாக இருக்கிறது.

துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் இறந்தவர்களின் சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். ஏற்கனவே வழங்கப்பட்ட ரூ.20 லட்சம் போக, எஞ்சியத் தொகையை வழங்க வேண்டும். காயம் அடைந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும். ஏற்கனவே வழங்கிய ரூ. 5 லட்சம் போக, எஞ்சியத் தொகையை வழங்க வேண்டும்.

கலவரத்தின்போது நிகழ்ந்த ஜஸ்டின் செல்வமிதிஷின் இறப்பை இந்த துப்பாக்கிச் சூட்டில் இறந்துபோன 13 நபர்களுக்கு இணையாக பாவித்து அவரது குடும்பத்தாருக்கு அரசு தரப்பில் உரிய நிவாரணம் வழங்க வேண்டும். அவரது தாயாருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். பலத்த காயமடைந்த காவல்துறையைச் சேர்ந்த மணிகண்டனுக்கு மருத்துவ வசதிக்கான நிவாரணம் வழங்க வேண்டும். தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் போன்ற நிகழ்வுகள் வருங்காலத்தில் மீண்டும் நிகழாமல் இருப்பதற்கான தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் ஒருபடி மேலே சென்று, சமூக விரோதிகள் நுழைந்து போலீசார் மீது தாக்குதலை நடத்தினர் என்று நடிகர் ரஜினிகாந்த் கருத்து கூறிவிட்டு பின்னர் அந்த கருத்துக்கு அடிப்படை ஆதாரம் எதுவும் தன்னிடம் இல்லை என்பதை தெளிவாகக் கூறிவிட்டார். இது போன்ற கருத்துக்களை புகழ்பெற்றவர்கள், பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் சினிமா நடிகர்கள் தவிர்ப்பது நல்லது என்று ஆணையம் அறிவுரை வழங்கி இருக்கிறது.

இதற்கிடையே, ஆணையத்தின் பரிந்துரையை தமிழக அரசு ஏற்று உடனடி நடவடிக்கை எடுத்துள்ளது. இதுதொடர்பாக தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு வெளியிட்ட அரசாணையில், “ஆணையத்தின் பரிந்துரைகளை அரசு முழுமையாக ஏற்றுக் கொண்டுள்ளது. விசாரணை ஆணையத்தின் பரிந்துரைகளின்படி, உள்துறை மற்றும் வருவாய் துறைகளின் மூலம் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆணையத்தின் ஆலோசனைகள் ஏற்று தொடர்புடைய துறைகளால் பொருத்தமான ஆணைகளை வழங்குவதற்காக விரிவாக ஆய்வு செய்ய அரசு முடிவு செய்துள்ளதுஎன்று தெரிவித்துள்ளார்.

தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தன் பொறுப்பைத் தட்டிக் கழித்ததும், எனக்குத் தெரியாது என்று சொல்வதும் சிறுபிள்ளைத்தனமானது, பொறுப்பைத் துறப்பது அநீதியானது, மாவட்ட ஆட்சியரும் தன் பொறுப்பிலிருந்து தப்பித்துக்கொள்கிறார். மாவட்ட நிர்வாகமும் மாநில நிர்வாகமும் தன் நிலை தவறியிருக்கிறது. காவல்துறை நிர்வாகத்திற்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் இடையே ஒருங்கிணைப்பே இல்லை. 144 தடையுத்தரவு குறித்த விளம்பரமும் செய்யப்படவில்லை. இரண்டு எஸ்பிக்களும் இரண்டு ஐபிஎஸ் அதிகாரிகளும் ஒன்றரை மணிநேரம் காணவில்லை என்பதே மிகப்பெரிய தவறு. ஐஜிக்கும் டிஐஜிக்கும் தமிழ்மொழியும் நில அமைப்பு முறையும் தெரியவில்லை. சரமாரியான கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு. ஒட்டுமொத்த நிர்வாகத் தோல்வியின், தலைமையின்மையின் விளைவே பதிமூன்று பேரின் உயிரிழப்பு. தற்காப்புக்காக போலீசார் யாரையும் சுடவில்லை என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக அரசு இனியொரு விதி செய்து தன்னைத் தானே ஜனநாயகக் காவலனாக முன்னிலைப்படுத்த வேண்டும். ஆணையத்தின் பரிந்துரைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். துறை ரீதியிலான நடவடிக்கையை உடனே மேற்கொள்ள வேண்டும். குற்றவாளிகள் யாரும் தப்பிக்கக் கூடாது. சிபிஐ விசாரணையை விரைவுப்படுத்த வேண்டும். மக்களுக்கு நீதி வழங்க வேண்டும்.

சூடு - 1. துப்பாக்கிச் சூட்டையும் குறிக்கும். 2. மக்களின் கொதிநிலையையும் குறிக்கும். 3. சொரணைக்கு முந்தைய நிலையையும் குறிக்கும். முதலாவது அன்று, இரண்டாவது இன்று, மூன்றாவது என்று?

Comment