No icon

கனடாவிற்கான ‘தவத் திருப்பயணம்’

திருத்தந்தையின் 37வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணம்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனது 37வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணத்தை, ஜூலை 24, ஞாயிறு உள்ளூர் நேரம் காலை 8.10 மணிக்கு வத்திக்கானில் தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்திலிருந்து தொடங்கினார். ஒரு வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணத்தை தொடங்குவதற்கு முன்பும், அதை முடித்துத் திரும்பும்போதும், திருத்தந்தை, உரோம் மேரி மேஜர் அன்னை மரியா பெருங்கோவிலுக்கு சென்று அவ்வன்னையிடம் அப்பயணத்தை அர்ப்பணித்து செபிக்கும் பழக்கத்தைக் கொண்டிருக்கிறார்.

“ஒன்றிணைந்து நடப்போம்” என்ற தலைப்பில் நடைபெறும் 37வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணமாகிய, கனடா நாட்டுக்குத் திருத்தூதுப் பயணத்தைத் தொடங்குவதற்கு முன்னரும் அந்த பழக்கத்தை திருத்தந்தை நிறுத்திவிடவில்லை.

சாந்தா மார்த்தா இல்லத்தில் தன்னை வழியனுப்ப வந்திருந்த சில வறியோர் மற்றும் பலருக்கு வாழ்த்துச் சொல்லி, உரோம் பிஃயூமிச்சினோ பன்னாட்டு விமான நிலையத்திற்கு காரில் சென்ற, திருத்தந்தை பிரான்சிஸ், ஞாயிறு காலை 9.16 மணிக்கு ITA A

 330 இத்தாலிய விமானத்தில் கனடா நாட்டின் எட்மன்டன் பன்னாட்டு விமான நிலையம் நோக்கிப் புறப்பட்டார்.

திருத்தந்தை, ஏறத்தாழ பத்தரை மணி நேரம் விமானப் பயணத்தை மேற்கொண்டு கனடாவின் எட்மன்டன் நகரின் பன்னாட்டு விமான நிலையத்தை, உள்ளூர் நேரம் ஞாயிறு பகல் 11.09 மணிக்குச் சென்றடைந்தார். 

இந்நீண்ட பயணத்தில் தான் கடந்துசென்ற, இத்தாலி, சுவிட்சர்லாந்து, பிரான்ஸ், பிரித்தானியா, ஐஸ்லாந்து, கிரீன்லாந்து, டென்மார்க் ஆகிய நாடுகளின் அரசுத்தலைவர்களுக்கு இறைவேண்டல், ஆசீருடன்கூடிய நல்வாழ்த்துத் தந்திச் செய்திகளை திருத்தந்தை பிரான்சிஸ் அனுப்பினார். இத்திருத்தூதுப் பயணம் குறித்த செய்திகளை உடனுக்குடன் வெளியிடுவதற்காக, தன்னோடு பயணம் செய்த ஏறத்தாழ எண்பது பன்னாட்டு செய்தியாளர்களையும் திருத்தந்தை வாழ்த்துவதற்குத் தவறவில்லை. திருத்தந்தையின் உடல்நலம் கருதி, அவரோடு ஒரு மருத்துவரும், செவிலியரும் சென்றனர். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருத்தூதுப் பயண நிகழ்வுகளை கனடாவின் எட்மன்டன் நகரில் தொடங்குகிறார்.

தவத் திருப்பயணம்

திருத்தந்தையின் 37வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணம், ஒரு தவத் திருப்பயணமாக அமைந்துள்ளது. வட அமெரிக்காவிலுள்ள கனடாவின் பூர்வீக இன மக்களுக்கு, கடந்த காலத்தில், குறிப்பாக கிறிஸ்தவ சபைகளால் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு மன்னிப்புக் கேட்கவும், அவற்றால் அவர்கள் அடைந்த மனப்புண்களைக் குணப்படுத்தவும், அம்மக்களோடு தான் கொண்டிருக்கும் நெருக்கத்தை வெளிப்படுத்தவும், ஒரு தவப் பயணத்தை திருத்தந்தை கனடா நாட்டில் மேற்கொண்டார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனது தலைமைப் பணியில் திருத்தூதுப் பயணத்தை மேற்கொண்டுள்ள 56வது நாடாக கனடாவுக்கு அவர் சென்றுள்ளார்.

1984, 1987, 2002 ஆகிய ஆண்டுகளில் மூன்றுமுறை கனடாவுக்குத் திருத்தூதுப் பயணங்களை மேற்கொண்ட திருத்தந்தை புனித இரண்டாம் யோவான் பவுல் அவர்களின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, இந்த 37வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணத்தைத் தொடங்கியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எட்மன்டன் நகரை உள்ளூர் நேரம் பகல் 11 மணி 20 நிமிடங்களுக்குச் சென்றடைந்தார்.

எட்மன்டன் பன்னாட்டு விமான நிலையத்தில் கனடாவின் ஆளுநர், பிரதமர் உட்பட முக்கிய அரசு மற்றும், திரு அவைத் தலைவர்கள் திருத்தந்தையை வரவேற்றனர். பின்னர் அங்கிருந்து 31.3 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள அந்நகரின் புனித யோசேப்பு அருள்பணித்துவ பயிற்சிக் கல்லூரி சென்று இரவு உணவருந்தி திருத்தந்தை பிரான்சிஸ் ஓய்வெடுத்தார்.

இந்த 37வது வெளிநாட்டுப் பயண நிகழ்வுகள் ஜூலை 25 திங்களன்று தொடங்கியது.

இந்நாளில் மஸ்காவாசிஸ் நகருக்குக் காரில் சென்று, ஃபர்ஸ்ட் நேஷன்ஸ், மெட்டிஸ், இன்னுயிட் (First Nations, Me'tis, Inuit) ஆகிய பூர்வீக இன மக்களைச் சந்தித்தார். 1884, 1885 ஆம் ஆண்டுகளில் இப்பகுதியில் கத்தோலிக்க மறைப்பணித்தளத்தை மீண்டும் உருவாக்க முயற்சித்தபோது, அருள்பணி. கான்ஸ்டான்டைன் ஸ்கோலன் (Constantine Scollen) அவர்கள், இந்நகரை "கரடியின் குன்றுகள்" என்றே எப்போதும் அழைத்தார் என்று சொல்லப்படுகிறது.

மேலும், ஜூலை 24, ஞாயிறு தாத்தாக்கள் பாட்டிகள், மற்றும் முதியோர் இரண்டாவது உலக நாளாகையால், அன்று கனடாவின் க்யூபெக் (Quebec) நகரிலுள்ள புனித அன்னா திருத்தலத்திற்கு சென்று திருத்தந்தை செபித்தார். அத்திருத்தலத்தில் அமெரிக்க பூர்வீக இனத்தைச் சார்ந்த புனித கட்டேரி தெக்காக்வித்தா (Kateri Tekakwitha) திருவுருவத்தை அர்ச்சித்தார். இவரே முதல் அமெரிக்க பூர்வீக இனப் புனிதராவார். இத்திருத்தூதுப் பயணத்தில், கனடாவின் எட்மன்டன், க்யூபெக், ஈக்குவாலுயிட் (Edmonton, Quebec, Iqaluit) ஆகிய நகரங்களில் பயண நிகழ்வுகளை திருத்தந்தை பிரான்சிஸ் நிறைவேற்றியுள்ளார்.

“ஒன்றிணைந்து பயணம்” என்ற தலைப்பில், கனடாவில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொண்ட 37வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணத்தின் நோக்கம் நிறைவேற செபிப்போம். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜூலை 24, ஞாயிறு முதல், 29 ஆம் தேதி வெள்ளிக்கிழமை வரை, கனடாவில் திருத்தூதுப் பயணம் மேற்கொண்டு, 30 ஆம் தேதி உள்ளூர் நேரம் காலை 7.50 மணிக்கு உரோம் பியூமிச்சினோ பன்னட்டு விமான நிலையம் வந்திறங்கினார்.  (தொடரும்)

திருத்தந்தையின் கனடா திருத்தூதுப் பயணக்கட்டுரை வரும் இதழில் தொடரும். இக்கட்டுரை கனடாவைப் புரிந்து கொள்ளும் வகையில் ஒரு முன்னோட்ட கட்டுரையாக படைக்கப்பட்டுள்ளது.

Comment