No icon

37. ‘தவறுக்குப் பொறுப்பெடு’

எண்ணம் போல் வாழ்க்கை

முல்லா தன் சீடர்களுடன் ஒருநாள் கடைத்தெருவுக்குச் சென்றார். அவர் சென்ற நேரம், ஓரிடத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. என்னவென்று அவர் கூட்டத்தை விலக்கிக்கொண்டு பார்த்தபோது, அங்கு
ஆப்பிள் பழத்தைக் குறிபார்த்து சுடும்
விளையாட்டுப் போட்டியானது நடைபெற்றுக்
கொண்டிருந்தது.  ‘நூறு ரூபாய் கட்டி போட்டி யில் கலந்துகொண்டு வெற்றிபெற்றால், ஐநூறு ரூபாய் பரிசாகக் கிடைக்கும். ஆனால் ஒரே ஒரு வாய்ப்புதான் கொடுக்கப்படும்’ என்று போட்டியை நடத்திக்கொண்டிருந்தவர் அறிவித்துக் கொண்டிருந்தார்.
போட்டியை நடத்துபவரின் அருகே சென்ற முல்லா, “இந்தப் போட்டியில் நானும் கலந்துகொள்ளலாமா?” என்றார். “தாராளமாகக் கலந்துகொள்ளுங்கள் ஐயா” என்றார் போட்டியை நடத்துபவர். முல்லா நூறு ரூபாய் கட்டி போட்டியில் கலந்துகொண்டார்.
 இதற்கிடையில் முல்லா துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்துகொள்ளப்போகிறார் என்று தெரிந்து, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் எல்லாம் அந்தக் கண்கொள்ளாக் காட்சியைப் பார்க்க ஆர்வமாய் ஓடிவந்தார்கள்.
மக்களுடைய பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் முல்லா துப்பாக்கியைக் கையில் ஏந்தி, சற்றுத் தொலையில் இருந்த ஆப்பிள் பழத்தைக் குறிபார்த்துச் சுட்டார். ஆனால், துப்பாக்கியிலிருந்து வெளிப்பட்ட தோட்டாவானது ஆப்பிள் பழத்திற்குச் சற்று கீழே போய் விழுந்தது. எல்லாரும் அவரைப் பாவமாகப் பார்த்தார்கள். அப்போது அவர்களிடம், முல்லா, “தாழ்வு மனப்பான்மை உள்ள ஒருவன் இந்தப் போட்டியில் கலந்துகொண்டான் என்றால், அவன் இப்படித்தான் சுடுவான் என்பதைச் சுட்டிக்காட்டவே, நான் இப்படிச் சுட்டேன்” என்றார். சுற்றியிருந்த மக்கள் யாவரும், “என்ன ஓர் அற்புதமான சிந்தனை. இதுவரைக்கும் யாரும் இப்படியெல்லாம் நமக்குச் சொன்னதில்லையே” என்று அவரை வியப்போடு பார்த்தார்கள்.
மீண்டுமாக ஆப்பிள் பழத்தை குறிபார்த்துச் சுடத் தொடங்கினார் முல்லா. இந்த முறையும் தோட்டா ஆப்பிள் பழத்தின்மீது படாமல், அதற்கு மேலே பட்டது. இதைப் பார்த்துவிட்டு சூழ்ந்திருந்த மக்கள், “இப்போது முல்லா நமக்கு என்ன கருத்தினைச் சொல்லப்போகிறாரோ” என்று ஆவலோடு காத்துக்கொண்டிருந்தார்கள். முல்லா பொறுமையாகப் பேசத் தொடங்கினார். “உயர்வு மனப்பான்மை உள்ள ஒருவர் துப்பாக்கியைக் குறிவைத்துச் சுட்டால், எப்படிச்  சுடுவார் என்பதை நிரூபித்துக் காட்டவே இப்படிச் சுட்டேன்” என்றார். “அருமையான கருத்து” என்று மக்கள் முல்லாவைப் பாராட்டத் தொடங்கினார்கள்.
மறுபடியும் முல்லா ஆப்பிள் பழத்தைக் குறிபார்த்துச் சுடத் தொடங்கினார். இந்த முறை தோட்டாவானது குறிதவறாமல் ஆப்பிள் பழத்தின்மீது சரியாகப் பட்டது. தோட்டா ஆப்பிள் பழத்தின்மீது பட்டதும் அது தெறித்து நாலாபக்கமும் சிதறி ஓடியது. இப்போது முல்லா என்ன செய்தியைச் சொல்லப்போகிறார் என்று மக்கள் அவரையே உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தார்கள். முல்லா எதுவும் பேசவில்லை. மாறாக, நேராகப் போட்டியை நடத்திக் கொண்டிருந்தவரிடம் சென்று, “ஆப்பிள் பழத்தைக் குறிபார்த்துச் சுட்டுவிட்டேன் அல்லவா!
எங்கே எனக்குச் சேரவேண்டிய ஐநூறு ரூபாய்”
என்றார். போட்டியை நடத்திக் கொண்டிருந்தவருக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
‘பழத்தைச் சரியாகக் குறிபார்த்துச் சுடமுடி யாத போதெல்லாம், கருத்துச் சொன்ன முல்லா சரியாகச் சுட்டபோது மட்டும் ஏன் கருத்துச் சொல்லவில்லை’ என்று கேட்பதா, இல்லை ‘ஒரே ஒருமுறை கொடுக்கப்பட்ட வாய்ப்பினை ஏன் மூன்றுமுறை பயன்படுத்தினீர்கள்?’ என்று கேட்பதா என்று புரியாமல் விழித்தார். பிறகு ‘இந்த ஆள் விதண்டாவாதம் செய்யக்கூடிய பேர்வழி... இவரிடம் எதற்கு வீண்வம்பு” என நினைத்துக்கொண்டு, அவர் முல்லாவிடம் ஐநூறு ரூபாயை எடுத்துக் கொடுத்து அனுப்பி வைத்தார்.
ஆப்பிள் பழத்தைச் சரியாகச் சுட முடியாமல் போனபோதெல்லாம் அதற்கு ஏதோவொன்று பேசி சப்பைக்கட்டுக் கட்டிய முல்லா, அதனைச் சரியாகச் சுட்டபோது மட்டும் அதற்கான பரிசைக் கேட்டது நமக்கு வியப்பாக இருக்கின்றது. முல்லாவைப் போன்றுதான் பலர், வெற்றி என்றால் அதற்குத் தாங்கள்தான் முழுமுதல் காரணம் என்று சொந்தம் கொண்டாடுவதும், தோல்வி என்றால் அதற்கு ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லியும் அல்லது யாரையாவது ஒருவரைக் காரணமாகச் சொல்லியும் தப்பித்துக்கொள்வதும் மிகவும் வியப்பாக இருக்கின்றது.
இப்படிப்பட்ட பச்சோந்தித்தனமானபோக்கு யாருக்கும் அதிலும் குறிப்பாக எண்ணம் போல் வாழ்க்கை வாழ நினைக்கும் எவருக்கும் இருக்கக் கூடாத பண்பாகும். இத்தகைய சூழலில் எண்ணம் போல் வாழ்க்கை வாழ விரும்பும் ஒருவர் என்ன செய்ய வேண்டும் என்று இப்போது சிந்தித்துப் பார்ப்போம்.
பிரஃபுல்குமார் கட்ஜ் (ஞசயகரடமரஅயச ழுயனபந)
என்ற பிரபல எழுத்தாளர் ஒரு முக்கியமான கருத்தினைச் சொல்வார். “நீ செய்த தவற்றினை எவ்வளவு சீக்கிரம் ஏற்றுக்கொள்ள முடியுமோ,
அவ்வளவு சீக்கிரம் ஏற்றுக்கொள். இல்லையென் றால் அடுத்தவரை மட்டுமல்ல, உன்னையும் நீ சேர்த்து இழப்பாய்” (ஹஉஉநயீவ லடிரச அளைவயமந யள நயசடல யள யீடிளளiடெந. டீவாநசறளைந லடிர படிnயே டடிடிளந நஎநசலடிநே in லடிரச டகந, inஉடரனiபே லடிரசளநடக) எவ்வளவு அர்த்தம் நிறைந்த வார்த்தைகள் இவை. ஒரு நிறுவனத்திலோ அல்லது குழுவிலோ வாழ்ந்து கொண்டிருக்கின்ற ஒருவர், தன்னால்தான் தவறு நடந்திருக்கின்றது என்று தெரிந்த பின்பும், அந்தத் தவற்றிற்கு வேறொருவரைக் காரணம் காட்டுவதையும் அல்லது எதுவுமே நடக்காதது போல் இருப்பதையும் என்னவென்று சொல்வது?. அப்படிப்பட்டவர் எல்லாரையும் வெகுவிரைவில் இழப்பார் என்பதில் எந்தவொரு மாற்றுக் கருத்தும் கிடையாது.
இன்றைக்கு பலருக்கும் இருக்கின்ற பிரச்சினை, வெற்றியென்றால் அது தன்னால்தான் என்று உரிமைகொண்டாடுவதும் தோல்வி என்றால் அது யாரோ ஒருவரால் என்று நழுவிச் செல்வது மாகும். இப்படிப்பட்ட ஒருவர்மீது யாருக்கும் எப்போதும் நம்பிக்கை வராது என்பதுதான் அப் பட்டமான உண்மை. ஒருவர் மீது எல்லாருக்கும் நம்பிக்கை ஏற்படவேண்டும் என்றால், அவர் தான் செய்த தவற்றிற்கு ‘இது என்னால்தான் ஆனது’ என்று பொறுப்பெடுக்கவேண்டும்.
தவறு செய்வது மனித இயல்புதான் என்றாலும், அதனை யாரும் அவ்வளவு எளிதாக ஏற்றுக்கொள்வதில்லை. மேகா ஜோசி என்ற எழுத்தாளர் சொல்வதுபோன்று ‘தவற்றினை ஏற்றுக்கொள்வதற்கு மனப்பக்குவமும் நிறையத் துணிச்சலும் வேண்டும்’.  ‘அடுத்தவர் என்ன நினைப்பரோ’ ‘ஊரார் என்ன பேசுவார்களோ’ என்று நினைத்துக் கவலைப்பட்டுக் கொண்டிருந்தால், தவற்றினை ஏற்றுக்கொள்வதற்கோ அல்லது நடந்த தவற்றிற்குப் பொறுப்பெடுத்துக் கொள் வதற்கோ வாய்ப்பே இராது. என்றைக்கு நாம் நடந்த தவற்றிற்குப் பொறுப்பெடுக்கின்றோமா அன்றைக்குத்தான் நாம் முன்னேறுவதற்கான முதல் படியை எடுத்து வைக்கின்றோம் என்று அர்த்தமாகின்றது.
தவற்றிற்குப் பொறுப்பெடுப்பது முதல் படி என்றால், அந்தத் தவற்றைத் திருத்திக்கொண்டு, அதிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, தொடர்ந்து நம்மை நாமே நிரூபித்துக்காட்டுவது அடுத்த கட்டமாக இருக்கின்றது. எவர் ஒருவர் தவற்றைத் திருத்திக்கொண்டு, தன்னைத்தானே நிரூபித்துக் காட்டுகின்றாரோ அவர்மீது எல்லாருக்கும் கூடுதல் மதிப்பு வரும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
நண்பர்கள் இருவர் சேர்ந்து தொழில் செய்து
வந்தார்கள். எல்லாம் நன்றாகப் போய்க் கொண் டிருந்த தருணத்தில், திடீரென்று தொழிலில் பெரிய இழப்பு அதாவது நஷ்டம் ஏற்பட்டுவிட்டது. அப்போது அந்த நண்பர்களில் ஒருவர், “இந்த இழப்புக்கு நாம் இருவரும் ஆளுக்கு ஐம்பது சதவீதம் பொறுப்பேற்றுக் கொள்வோம்” என்றார். இரண்டாமவர் அமைதியாக இருந்தார். உடனே முதலில் பேசியவர் சொன்னார், “இல்லை! இல்லை! இந்த இழப்புக்கு நான் எழுபத்து ஐந்து சதவீதம் பொறுப்பெடுத்துக் கொள்கிறேன். நீங்கள் ஐம்பது சதவீதம் பொறுப்பெடுத்துக் கொண்டால் போதும்” என்றார். அப்போதும் இரண்டாமவர் அமைதியாக இருந்தார். “சரி இதைக் குறித்து நாம் பிறகு பேசுவோம்” என்று சொல்லிவிட்டு முதலாவது நண்பர் வீட்டிற்கு வந்து, நடந்தது அனைத்தையும் தன் மனைவியிடம் எடுத்துச் சொன்னார். அதைக் கேட்டுவிட்டு அவருடைய மனைவி, “நடந்த இழப்புக்கு நூறு சதவீதம் நீங்களே பொறுப்பெடுத்துக் கொள்ளுங்கள். அதன்பிறகு பாருங்கள்... உங்களுடைய தொழில் எவ்வளவு வளர்ச்சியடையுமென்று” என்று சொல்லி அவரை அனுப்பி வைத்தார். அவரும், “நிகழ்ந்த இழப்புக்கு நூறு சதவீதம் நானே பொறுப்பு” என்று பொறுப்பெடுத்துக் கொண்டார். அதன்பிறகு நடந்தது எல்லாம் வரலாறு.
செய்யாத தவற்றுக்கு நாம் பொறுப்பெடுத்துக் கொண்டு பலியாடாக வேண்டிய அவசியம் இல்லை. நாம் செய்த தவறுகளுக்குப் பொறுப்பெடுத்துக் கொண்டு, அவற்றைக் களைந்து, சாதித்துக் காட்டினால் அதன்வழியே தனி.
ஆகவே, எண்ணம் போல் வாழ்க்கை வாழ விரும்பும் நாம், செய்த தவறுகளுக்குப் பொறுப்பெடுத்துக் கொண்டு, அவற்றைக் களைந்து சாதித்துக் காட்டுவோம். அதன்வழியாக வையத்துள் வாழ்வாங்கு வாழ்வோம்.

Comment