No icon

முனைவர் திருமதி S. ரெஜினா, தமிழ்த்துறை பேராசிரியை

கல்விப் பூங்கா ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரி

தமிழ்த் துறை

தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவுதலின்  ஒரு பகுதியாக ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிர் கல்லூரி 1971 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பொழுதே பகுதி தமிழ் பல்துறை மாணவர்களுக்குக் கற்பிக்கப்பட்டது. 1974 இல் இளங்கலைத் தமிழுடன், தமிழ்த்துறை தொடங்கப்பட்டது. 1976 இல் செல்வி A.R. இந்திரா தமிழ்த்துறைத் தலைவராகவும், கல்லூரி முதல்வராகவும் இருந்துள்ளார். 2005 இல் முதுகலைத் தமிழ் துவங்கப்பட்டது. 30 மாணவியருடன் தொடங்கிய துறையானது, இன்று 12 பேராசிரியர்களுடன் 168 மாணவிகளைக்கொண்டு, தொடர்ந்து வெற்றிகரமாக இயங்கி வருகிறது. பட்டி மன்றம், மேடை நாடகம், வானொலி உரை, திரையரங்குகளிலும் பேராசிரியர்கள் கவனம் செலுத்தி வருகின்றனர்.

ஆங்கிலத் துறை

இந்தியா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளின் அலுவல் மொழியான ஆங்கிலத்தைச் சிற்றூர்களைச் சார்ந்த அடித்தட்டு மக்களுக்கும் கொண்டு சேர்க்கின்ற அரும்பணியை ஆற்றி வரும் ஜெ. . கல்லூரியின் ஆங்கிலத் துறையானது 1972 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 22 மாணவிகளுடன் தொடங்கி, தற்பொழுது 18 பேராசிரியர்களையும், 440 மாணவிகளையும் கொண்டு வளர்ந்து வருகிறது. 2001 இல் மொழி ஆய்வுக் கூடமானது Renet மென்பொருளுடன் நிறுவப்பட்டது. 2003 இல் தகவல் தொடர்பு ஆங்கிலத்திற்கான சான்றிதழ் படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. 2005 இல் முதுகலை ஆங்கிலம் தொடங்கப்பட்டது. 2007 ஆம் ஆண்டு, மொழி ஆய்வக விரிவாக்கமும், 2008 ஆம் ஆண்டு, மொழியியல் நடைமுறையும் கொண்டு வந்து மாணவர்களுக்குப் பயிற்சி தரப்படுகிறது. முதலாமாண்டு மாணவியருக்குக் கல்லூரியைப் பற்றிய புரிதலும் ஆங்கிலப் பேச்சுப் பயிற்சியும் அளிக்கும் இணைப்புப் பயிற்சியை (Bridge Course) இத்துறையானது கடந்த 50 ஆண்டுகளாகத் தொய்வின்றி வழங்கி வருகிறது. மாணவர்களின் சுய படைப்புகளுக்கு களம் தரும் இறகு சிற்றிதழ் இத்துறையின் சிறப்பம்சமாகத் திகழ்கிறது.

வரலாற்றுத் துறை

ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிர் கல்லூரி சமூகச் செயல்பாடுகளில் தனக்கென்று முத்திரைகள் பதித்துவரும் வரலாற்று அறிஞர்களையும், ஆட்சியாளர்களையும், அரசியல்வாதிகளையும், சட்டங்களையும் உருவாக்கும் வரலாற்றுத் துறையைத் தன்னகத்தே கொண்டது. இத்துறை 1971 இல் கல்லூரி துவங்கியபோது, 254 PUC மாணவியருடனும், 24 இளங்கலை மாணவியருடனும் தொடங்கப்பட்டது. 1980 இல் முதுகலை வரலாறு தொடங்கப்பட்டது. 2002 இல் சுற்றுலா குறித்த சான்றிதழ் படிப்பும், 2010 ஆம் ஆண்டு மனித உரிமைகளும், கடமைகளும் குறித்த சான்றிதழ் படிப்பும் கொண்டு வரப்பட்டன. 2005 இல் ஆராய்ச்சித் துறையாக உயர்ந்தது. 2013 முதல் முனைவர் பட்டப்படிப்பு வழங்கும் துறையாக மென்மேலும் உயர்ந்தது. தற்போது, 12 பேராசிரியர்கள், 246 மாணவிகளுடன் பயணிக்கின்றது. மாணவியர் காந்தியச் சிந்தனைகளைக் கற்றுக் கொள்ளும் வண்ணம் கல்லூரியின் இளங்கலை இறுதியாண்டு மாணவியர் அனைவருக்கும் காந்தியச் சிந்தனை என்ற சான்றிதழ் பட்டயப்படிப்பினை கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாய் நடத்தி, அண்ணல் காந்தியை இளையோருக்கு அறிமுகப்படுத்தி வருகிறார்கள் இத்துறை பேராசிரியர்கள்.

கணிதத் துறை

எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்என்பதை உணர்ந்து, 1972 இல் இளங்கலைக் கணிதத் துறை தொடங்கப்பட்டது. 1981 இல் முதுகலைக் கணிதம் கொண்டு வரப்பட்டது. 2013 இல் இளங்கலையில் சுயநிதிப் பிரிவும், 2014 இல் ஆய்வியல் நிறைஞர் பட்டப்படிப்புமென வளர்ந்து, இன்று ஆராய்ச்சி மையமாய் உயர்ந்துள்ளது. 12 மாணவிகளுடன் தொடங்கிய துறையானது இன்று 332 மாணவிகளைக் கொண்டு விளங்குகிறது. 2016 முதல் 2019 வரை அன்னைத் தெரசா மகளிர் பல்கலைக்கழகம் நடத்திய பேராசிரியர்களுக்கான மாநிலத் தகுதித் தேர்வில் 12 மாணவிகள் வெற்றி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இயற்பியல் துறை

ஆல்ஃபா, பீட்டா, காமா போன்றவற்றின் துணைகொண்டு, அயனிகளையும் சக பயணிகளாக்கி அகடுகளையும், முகடுகளையும் நேர்கோட்டில் பயணிக்க வைக்கும் இயற்பியல் துறையானது, 1987 இல் 2 பேராசிரியர்களுடன் 32 மாணவிகளைக் கொண்டு தொடங்கப்பட்டது. 2005 இல் முதுகலை இயற்பியல் கொண்டு வரப்பட்டது. 2014 இல் ஆய்வியல் நிறைஞர் பட்டமும் 2015 இல் ஆராய்ச்சி மையமும் தொடங்கப்பட்டு உயர்ந்தது. தற்போது, 247 மாணவிகளும், 14 பேராசிரியர்கள் என இத்துறை வளர்ந்துள்ளது. IISC பெங்களூரு, IIA கொடைக்கானல் நடத்தும் கோடை மற்றும் குளிர்கால பயிற்சி வகுப்புகளில் இத்துறை மாணவியர் கலந்து கொண்டு, பயன்பெறுகின்றனர்.

வேதியியல் துறை

ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிர் கல்லூரியின் உயிர்மூச்சாக விளங்கும் வேதியியல் துறையானது, 1979 ஆம் ஆண்டு இளநிலை பட்டப் படிப்புடன் தொடங்கப்பட்டது. 2008 ஆம் ஆண்டு முதுகலை வேதியியல் படிப்பு கொண்டு வரப்பட்டது. இன்று 11 பேராசிரியர்களையும், 151 மாணவிகளையும் கொண்டு இயங்கி வருகின்றது. அருள்சகோதரி முனைவர் ஒய்.யேசு தங்கம் அவர்களின் முயற்சியால், சிறந்த தொழில் நுட்பக் கருவிகளோடு அடிப்படை அறிவியல் ஆய்வகமானது (BSR) அமைக்கப்பட்டு, ஆராய்ச்சிக்கு வித்திடப்பட்டது. 2014 ஆம் ஆண்டு, நிறைஞர் பட்டப்படிப்பு துவங்கி, ஆராய்ச்சி மையமாக மேம்படுத்தப்பட்டது. பற்பல மாணவர்கள் வீட்டு உபயோகப் பொருட்களான சலவைத்தூள், மெழுகுவர்த்தி, ஃபினாயில் போன்றவற்றை தயாரிக்கும் குறுதொழில் பயிற்சி பெற்று, அதன் வழி பொருளீட்டி வருகின்றனர்கொரோனா நோய்த்தொற்று காலத்தில் இத்துறையினர் தயாரித்த கைக்கழுவும் சானிட்டைசர் மக்களிடம் அதிக வரவேற்பினைப் பெற்றது.

விலங்கியல் துறை

800 கோடி மனிதரையும் ஹோமோசேபியன்ஸ் என்ற ஒற்றைச் சொல்லால் இணைக்கக்கூடிய ஆதித்துறையான விலங்கியல் துறை 1977 இல் 28 மாணவியருடன், இளநிலைப் படிப்புடன் தொடங்கப் பட்டது. 1988 இல் முதுகலைத் தொடங்கப்பட்டது. அதிக எண்ணிக்கையிலான மாணவியர் விலங்கியல் துறைதனைத் தேர்வு செய்ததன் காரணமாய் 1995 இல் இளங்கலை சுயநிதிப் பிரிவும், 2005 இல் ஆய்வியல் நிறைஞர் பட்டப் படிப்பும் கொண்டு வரப்பட்டது. 2013 இல் ஆராய்ச்சி மையமாக உயர்ந்தது. 14 ஆராய்ச்சி மாணவர்களுக்கு வழிகாட்டி தற்போது 215 மாணவிகளுடன் இத்துறை பயணித்துவருகின்றது.

கணினி அறிவியல் துறை

விரல் நுனியில் வித்தை காட்டும் விஞ்ஞானத்தின் அதிசயமான கணினியை கிராமத்து மாணவிகளின் கரங்களில் தவழச் செய்வதற்காக 1991 இல் கணினி பயன்பாட்டியலில் முதுகலைப் பட்டயப் படிப்பு (PGDCA)) இக்கல்லூரியில் அறிமுகப்படுத்தப் பட்டது. 1997 இல் இளநிலைப் படிப்புடன், கணினி அறிவியல் துறை தொடங்கப்பட்டது. 2001 இல் முதுநிலைப் படிப்பும் 2002 இல் பட்டயம் மற்றும் ஒளிப்படச் சான்று படிப்பும் கொண்டு வரப்பட்டது. 2009 இல் திறந்த மூல நிரல் மற்றும் புகைப்பட வடிவமைப்பு சார் பட்டயப் படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. 2012 வரைவியல் வடிவமைப்பு தகவல் தொழில் நுட்பம் கொண்டு வரப்பட்டது. இன்று 110 மாணவர்கள் இத்துறையில் பயின்று வருகின்றனர். 11 பேராசிரியர்கள் முனைப்புடன் பணி புரிகிறார்கள். பேராசிரியர்களின் ஊக்குவிப்பால் மாணவிகளும் இத்துறையில் வெளிவரும் JAC WALL  சிற்றிதழில் பல்வேறு படைப்பாக்கங்களை வெளியிட்டுள்ளனர். கல்லூரிப் பணியோடு பள்ளிகள், சுய உதவிக் குழுக்களுக்கு கணினிக் கல்வி பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகின்றனர்.

வணிகவியல் துறை

விற்பனையிலும், கற்பனையிலும் சாதனைகள் விண்ணைத் தொட சந்தை மதிப்பு சரித்திரம் படைக்க, “வாணிகமே கோயில்; வாடிக்கையாளரே தெய்வம் என்ற அண்ணல் காந்தியின் கருத்திற்கு உருக்கொடுத்திட வணிகவியல் துறை 1983 இல் தொடங்கப்பட்டது. 2011 இல் முதுகலை வணிகவியல் தொடங்கப் பட்டது. 2014 இல் நிறைஞர் படிப்பு மற்றும் வேலை வாய்ப்பினைத் தரும் SAP  சான்றிதழ் படிப்பும் தொடங்கப்பட்டது. 2014 இல் ஆராய்ச்சி மையமாக உயர்ந்தது. 2013 இல் பல்கலைக்கழக மானியக் குழு நிதி நல்கையுடன் அலுவலக தானியக்கச் சான்றிதழ் படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. வணிகவியல் துறைக்கான தேவைதனைக் கருத்தில் கொண்டு, இத்துறையில் இளங்கலை சுயநிதிப் பிரிவானது 2019 இல் துவங்கப்பட்டது. இத்துறை பேராசிரியர்கள் பல்கலைக்கழக நிதி நல்கையுடன் பல சிறுதிட்ட ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர். இத்துறை பேராசிரியர் அருள்சகோதரி முனைவர் B.J குயின்சிலி ஜெயந்தி அவர்கள் எழுதியA Study on National Stock Exchange of Indiaஎன்ற நூல் 2010 இல் உலகளவில் 17 நூலகங்களினால் வெளியிடப்பட்டது.

வணிக நிர்வாகவியல் துறை

உங்களுக்கும் மற்றவர்களுக்குமான வேலைவாய்ப்பை நீங்களே உருவாக்குங்கள்என்ற தொலை நோக்குப் பார்வையுடன் வணிக நிர்வாகவியல் துறையானது இக்கல்லூரியில் 2003 இல் தொடங்கப்பட்டது. தற்பொழுது 5 பேராசிரியர்களையும், 86 மாணவிகளையும் கொண்டு விளங்குகிறது. தேவையை உருவாக்குவதிலும், அதற்கான வாய்ப்புகளை வழங்குவதிலும், வல்லமை கொண்ட வணிக நிர்வாகவியல் நடைமுறைகள் பாடத்திட்டங்கள் வழி கற்றுத் தரப்படுகிறது. நிர்வாகத்திறன், தலைமைத்துவத் திறன், தகவல் தொடர்புத் திறன், நிதித் திறன் உள்ளிட்ட திறன்களை வளர்ப்பதுடன், அர்ப்பணிப்பு உணர்வையும் ஊட்டுகிறது. தொழில் முனைவோர் மற்றும் கார்ப்பரேட் தலைவர்களை உருவாக்குகிறது இத்துறை.

வணிகவியல் மற்றும் கணினிப் பயன்பாட்டுத்துறை

கணக்குப் பதிவியலோடு கணினிப் பயன்பாட்டுக் கல்வியும் இணைந்து, பயிற்றுவிக்கப்படும் வணிகவியல் மற்றும் கணினிப் பயன்பாட்டுத்துறை 2008 இல் தொடங்கப்பட்டது. அருள்சகோதரி முனைவர் B.J. குயின்சிலி ஜெயந்தி அவர்கள் தலைமையில் 70 மாணவிகளுடன் ஆரம்பித்து, தற்போது 210 ஆக மலர்ந்துள்ளது. 2018 இல் சான்றிதழ் பாடங்கள் கொண்டு வரப்பட்டன. இத்துறையில் பயின்ற மாணவிகள் இன்று பல்வேறு நிறுவனங்களில் பணியமர்ந்து உயர்நிலையில் உள்ளனர்.

சமுதாயக் கல்லூரி

என் கடன் சமுதாயத்திற்குப் பணி செய்து கிடப்பதேஎன்ற உயரிய கொள்கையோடு ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிர் தன்னாட்சிக் கல்லூரியில், இயங்கிவரும் சமுதாயக் கல்லூரியானது, 2014 இல் 80 மாணவிகளுடன் தொடங்கப்பட்டு, தற்போது 150 மாணவிகளைக்கொண்டு இயங்கி வருகிறது. இங்கு அடிப்படை செவிலியர் படிப்பு, டெஸ்க்டாப் பப்ளிஷிங் மற்றும் அழகு நிலைய படிப்புகள் கற்றுத்தரப்படுகின்றன. 2015 இல் அழகுக் கலைத்துறை உருவாக்கப்பட்டது. மிகக் குறைந்த கட்டணத்தில் ஏழை, எளிய பின்தங்கிய மாணவிகளுக்கு வேலைவாய்ப்புக் கல்வியைக் கற்றுக்கொடுத்து, தன்னம்பிக்கையுடன் வாழ வழி செய்கிறதுஇங்கு பயிலும் மாணவிகள் சுயதொழில் தொடங்குவதுடன், தொண்டு மனப்பான்மையுடன் விளங்கவும் வழி கோலுகிறது.

Comment