No icon

எழு! ஒளிவீசு!! - 35  

இலக்கை அடைய

கடந்ததை மறந்து விட்டு, முன்னிருப்பதைக் கண்முன் கொண்டு,

பரிசு பெற வேண்டிய இலக்கை நோக்கித் தொடர்ந்து ஓடுகிறேன்.

(பிலி 3:13-14)

இலக்கை தான் அடைய, அதை நோக்கி தொடர்ந்து ஓடுவதாக தூய பவுலடியார் கூறுகிறார். அதாவது இலக்கை அடைய, அதை அடையும்வரை, அதை நோக்கிய நமது ஓட்டம் தொடர்ந்து இருக்க வேண்டுமென அவர் கூறுகிறார். இந்த ஓட்டத்தில் இடைநில்லாமல் ஓடி, பவுல் கூறுவது போல “ஓட்டத்தை முடித்து” வெற்றி வாகை சூடுவது எவ்வாறு? (2 திமொ 4:7-8) என இங்கு காண்போம்.

இலக்கை நிர்ணயம் செய்:

இலக்கை நோக்கி முன்னேற இலக்கை நாம் தேர்வு செய்வது, அதைப் பற்றிய தெளிவு இருப்பது மிக மிக அவசியம். இல்லையென்றால் ஒரே நேரத்தில் இரண்டு மான்களை துரத்தும் சிங்கம்போல் நாம் இருப்போம். இறுதியில் எந்த மானையும் சிங்கத்தால் வேட்டையாட முடியாது. இன்னும் இன்று இருப்பதுபோல எல்லோரும் டாக்டராக வேண்டும் என்ற இலக்கை கொண்டிருப்பதும் சரியானதா என கேள்வி கேட்க வேண்டியுள்ளது. டாக்டராகு, டாக்டராகு என்று பிள்ளைகளை தொந்தரவு செய்து, நீட் தேர்வு காரணமாக தற்கொலை செய்வோர் எண்ணிக்கை தமிழ் நாட்டில் அதிகரித்துக் கொண்டே போகிறது. பிரபல பள்ளிகளில் ஆங்கில மீடியம் வகுப்பு மாணவ, மாணவிகளிடம் நீ யாராக விரும்புகிறாய் என வினவினால் சுமார் 90ரூ பேர் டாக்டராக விரும்புவதாக கூறுவதைக் காண்கிறோம். இது பெற்றோர் கொடுக்கும் அழுத்தம் எனத்தெரிகிறது. இதனால் ‘நீட்’ தேர்வில் மருத்துவ கல்லூரிக்கு தகுதியாகாத பலர் எங்களிடம் மன அழுத்தத்திலிருந்து விடுபட ஆற்றுப்படுத்தலுக்கு வருகிறார்கள்.

 

டாக்டர் அப்துல் கலாம் கேட்ட கேள்வி:

டாக்டர் அப்துல் கலாமை, அவர் குடியரசு தலைவராக இருக்கும் போது தமிழ்நாட்டிலுள்ள ஒரு பிரபலத்தின் மகள் சந்தித்தாள். நீ யாராக விரும்புகிறாய்? என அப்துல்கலாம் கேட்ட போது, அவள் டாக்டராக விரும்புகிறேன் என்றாள். அதற்கு அப்துல்கலாம் அவர்கள் “எல்லாரும் டாக்டராகிவிட்டால், பிறகு நோயாளிகளுக்கு நாம் எங்கே போவது?” எனக் கேட்டாராம். எனவே, தனது பிள்ளை இந்த துறைக்கு ஏற்றவர் தானா? இன்னும் இது ஒன்றுதான் வாழ்வின் இலக்கா, வேறு இலக்கு இருந்தால் வாழ்வில் முன்னேற முடியாதா? என சிந்தித்து, பிள்ளைகளுக்கான இலக்கை தேர்வு செய்வது அவர்களை மன நோயாளியாக்குவதிலிருந்து, தற்கொலையிலிருந்து தப்புவிக்கும்.

இலக்கை அடையும் வழிகள்:

இலக்கை தெளிவாக அறிந்த பிறகு அதை அடையாமல் இருந்தால், ஒருவர் கூறுவதுபோல் நாம் இறக்கும் தருவாயில் நாம் அடையத் தவறிய காரியங்கள் நம்மை சூழ்ந்து நின்று குற்றம் சாட்டுமாம். இறுதியில் ஒரு தாலந்தை புதைத்து வைத்தவன் வாழ்வில் நடப்பது போல் குற்ற உணர்வோடு நாம் மரிக்க நேரிடுமாம். எனவே, எனது இலக்கை / இலக்குகளை நான் அடைவதுவரை ஓயமாட்டேன் என்ற வைராக்கியத்தோடு செயல் பட்டால், என்றாவது ஒருநாள் ஏதாவது ஒரு வழியில் கடவுளின் துணையோடு அதை நாம்  அடைந்தே தீருவோம். “எனது கனவை / இலட்சியத்தை நான் வாழ்ந்து காட்டாமல் இறக்க மாட்டேன்” என ஒவ்வொரு நாளும் நாம் நமக்கே சொல்லிக்கொள்ள வேண்டும்.

தீராத பசி தேவை:

நாம் விரும்பும் இலக்கை அடைய வேண்டுமென்ற வேட்கை அல்லது பசி நமக்குத் தேவை. இந்த பசி நமது இலக்கை அடைவது வரை தீராத ஒன்றாக இருப்பது அவசியம். ‘பசியுள்ளோர் தாங்கள் விரும்புவதை அடைவதை யாரும் தடுக்க முடியாது என “சாதக எண்ணத்தின் ஆற்றல்” (The power of positive thinking) புத்தக ஆசிரியர் நார்மன் வின்சென்ட் பீல் கூறுகிறார்.

இருவகை மனிதர் / எண்ணங்கள்:

நம்மைச் சுற்றி எப்போதும் இருவகை மனிதர்கள் இருப்பார்கள். நமது திறமைகளை வெளிக்கொணர்ந்து நாம் உயருவதற்கு உறுதுணையாக இருக்கும் மனிதர்களும் இருப்பார்கள். அதேவேளையில் நம்மை ஊக்குவிக்காத, குறை கூறும் நச்சுத்தன்மை வாய்ந்த மனிதர்களும் (toxic people) இருப்பார்கள். இவர்களை நாம் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்.  இரண்டாம் வகை மனிதர்களை நாம் பொருட்படுத்தக் கூடாது. அமெரிக்காவைச் சார்ந்த லே பிரவுண் என்ற தூண்டுரை கொடுக்கும் பேச்சாளர் மனவளர்ச்சிக் குன்றியவர். இவரது மூளை வளர்ச்சி குறைவால் இவரை 5 ஆம் வகுப்பிலிருந்து 4 ஆம் வகுப்புக்கு மாற்றினர். ஆனால், அவரை சந்தித்த ஒருவர் “உன்னிடம் நீ கற்பனை செய்து பார்க்க முடியாத அளவு திறமை மறைந்துள்ளது” என்றாராம். பிரவுண் அவரை பார்த்து ஐயா! நான் மனவளர்ச்சி குன்றியவனாச்சே! என்று கூறியபோது, அவர் இவரிடம் “இனி எக்காலத்திலும் இந்த பேச்சு உன் நாவிலிருந்து வரக்கூடாது” என்றார். இன்றுவரை கல்லூரிக்கே செல்லாத பிரவுண் பெரிய பெரிய தொழிலதிபர்கள், பேராசிரியர்கள் யாவருக்கும் தூண்டுரை கொடுத்து வருகிறார். அதுபோல பிரச்சனை நேரங்களில் ஒருபக்கம் இதை செய்து முடிக்க என்னால் முடியும் என்ற குரல் ஒலித்தாலும், மற்றொரு புறம் நீ இதற்கு தகுதியற்றவன், நீ தோற்றுப் போவாய் என்ற குரல்களும் நமக்கு கேட்கும். இதில் எதற்கு நாம் செவிமடுக்கிறோம் என்பது தான் நமது வெற்றி தோல்வியே முடிவு செய்யும். 

பேச்சின் பயனை துய்ப்போம்:

நாட்டு இளைஞருக்கு நீங்கள் சொல்லும் அறிவுரை என்ன என்று ஜூலியஸ் சீசரைக் கேட்டபோது அவர், “நீ எதை அடைய விரும்புகிறாயோ அதை உரக்கச் சொல்” என்றாராம்.

ஆபிரகாம் லிங்கன் ஒரு நாளைக்கு 500 முறை “வெள்ளை மாளிகைக்குச் செல்வேன்” எனக் கூறியதால் இறுதியில் அமெரிக்க அதிபரானாராம். நமது பேச்சின் பயனை நாம் துய்ப்போம் என்கிறது விவிலியம் (நீமொ 18:21). வெற்றியை நமதாக்க எக்காரணம் கொண்டும் எதிர்மறை வார்த்தைகள் நம் வாயிலிருந்து வராதபடி பார்த்துக்கொள்ள வேண்டும். காரணம் நமது சொற்படியே நமக்கு நிகழும் என்கிறார் இயேசு (மாற் 11:23).

நம்பிக்கைகள்:

ஆண்டவரை நம்பு (திபா 37:3) உன்னை நீ நம்பு (சீஞா 32:23). அதாவது இறைநம்பிக்கையும், தன்னம்பிக்கையும் இணைந்தால் நமக்கு வெற்றி நிச்சயம் (நீமொ 16:3). வழக்கமாக 1 ஐ விட 2 பெரியது. ஆனால், 1+1, இரண்டைவிட பெரியது என்பர். இதற்கு ஒருங்கிணைப்பின் பயன் என்று பொருள்.

இறுதியாக நமது இலக்கின் மீது இருக்கும் கவனம் சிதறாதபடி பார்த்துக் கொள்ள வேண்டும் (நீமொ 17:24). நன்கு திட்டமிடல் வெற்றிக்கு அடிப்படை (நீமொ 24:6) கடின உழைப்பும், பயிற்சியும் (coaching) இலக்கை அடையும் மற்ற வழிகள். பி.வி. சிந்து தங்கப்பதக்கம் பெற அவரது அயராத உழைப்பும், அவரது பயிற்றுநரது ஊக்கமும்தான் காரணம். முடியாது என்ற சொல் என் அகராதியில் இல்லை என்று சொன்ன நெப்போலியன் போல், நாமும் நம்பி இலக்கை நோக்கி தொடர்ந்து பயணிப்போம். வெற்றியை நமதாக்குவோம்.

இன்னும் வீசும்-

Comment