No icon

பாளை மரிய அந்தோணிராஜ்

எண்ணம்போல் வாழ்க்கை – 33

எண்ணம்போல் வாழ்க்கை – 33

புதுப்பித்துக்கொண்டே இரு

தாமஸ் ஆல்வா எடிசன்

மின்விளக்குகளைத் தயாரிக்கும் ஆராய்ச்சியில் மிகத் தீவிரமாக ஈடுபட்டிருந்த தருணம். ஒருநாள் அவர் மின்விளக்கு களின் நடுவில் மெலிய மூங் கில் இலையைப் பொருத்தி ஆராய்ச்சி செய்து பார்த்தார். அது நன்றாக எரிந்தது.

உடனே அவர் தனக்குத் தெரிந்த புவியியல் ஆசிரியரான ஜேம்ஸ் ரிகால்டனைக்  கூப்பிட்டு, மின்விளக்குகளைக் கண்டு பிடிப்பதற்கு மூங்கில் இலையை வைத்துத் தான் செய்யும் ஆராய்ச்சியைக் குறித்தும் அத்தகைய ஆராய்ச்சிக்குத் தேவையான அரியவகை மூங்கில் இலைகள் தெற்காசியப் பகுதிகளில் அதிகமாகக் கிடைப்பதைக் குறித்தும் அவரிடத்தில் எடுத்துச் சொல்லி, அந்த அரியவகை மூங்கில் இலை களை நீங்கள் எவ்வளவு சீக் கிரம் சேகரித்து வரமுடியுமோ, அவ்வளவு சீக்கிரம் சேகரித்து வருமாறு அவரை அனுப்பி வைத்தார். பயணம் மிகவும் ஆபத்துகள் நிறைந்தது என்பதால் ஜேம்ஸ் ரிகால்டனின் பெயரில் (அப்போதே) 1500 டாலர் பணம் இன்சூரன்சாகக் கட்டி அனுப்பி  வைத்தார்.

ஜேம்ஸ் ரிகால்டன் எடிசனிடமிருந்து மாதிரி மூங்கில் இலையை வாங்கிக்கொண்டு, பயணத்திற்கான எல்லா ஏற்பாடு களையும் செய்துகொண்டு இங் கிலாந்திலிருந்து புறப்பட்டுச் சென்றார். அவர் பயணம் செய்த கப்பல் இங்கிலாந்திலிருந்து தொடங்கி, சூயஸ் கால்வாய் வழியாக வந்து, இலங்கையை வந்தடைந்தது. அங்கு அவர் சில நாட்கள் தங்கியிருந்து தான் தேடிவந்த மூங்கில் இலை இருக்கிறதா என்று தேடியலைந்தார். அவருடைய தேடலில் பலவகையான மூங்கில் இலைகள் கிடைத்தன. அவற்றையெல்லாம் சேகரித்துக்கொண்டு, அங்கிருந்து கல்கத்தாவிற்கும் அதன்பின்னர் மியான்மருக்கும் பயணமானார். அங்கேயும் அவர் தேடிய மூங்கில் இலைகள் கிடைத்ததனால் அவற்றை யெல்லாம் சேகரித்துகொண்டு தொடர்ந்து சீனாவிற்கும் பின்னர் ஜப்பானுக்கும் பயணமானார். இவ்வாறு போகிற இடங்களில் எல்லாம் அவர் தேடிவந்த மூங்கில் இலைகளை விடவும் கூடுதலான மூங்கில் இலைகள் கிடைத்தன. அவற்றையெல்லாம் அவர் சேகரித்துக்கொண்டு திரும்பி வந்தார்.  திரும்பிவரும்போது பசிபிக் கடல் வழியாகப் பயணம். ஏறக்குறைய பதினான்கு நாள் கள் இருந்த அந்தப் பயணம் மிகவும் சவாலாகவே இருந்தது. அந்த சவால்களை எல்லாம் சமாளித்துகொண்டு, தான் போன காரியம் மிகவும் வெற்றிகரமாக முடிந்துவிட்டது என மகிழ்ச்சியில் தான் சேகரித்து வந்த மூங்கில் இலைகளை எல்லாம் எடிசனிடம் காட்டினார். ஓராண்டுகாலம் கடினமானதொரு பயணத்தை மேற்கொண்டுவிட்டு, அரியவகை மூங்கில்  இலைகளைச் சகரித்துக் கொண்டுவந்திருக்கும் தன்னை எடிசன் வானளாவப் பாராட்டு வார் என்று ஜேம்ஸ் ரிகால்டன் நினைத்தார். ஆனால் அவர் நினைத்ததற்கு மாறாக எடிசன்,

“நீங்கள் கொண்டுவந்திருக் கின்ற மூங்கில் இலைகளை அங்கே ஓரமாக வைத்துவிட்டு, உங்களுக்குச் சேர வேண்டிய பணத்தைப் பெற்றுக்கொண்டு போங்கள்” என்று மிகவும் கூலாகச் சொன்னார்.

“என்னடா இவர், ஓராண்டு காலம் நாம் கஷ்டப்பட்டு அரிய வகை மூங்கில் இலைகளை எல்லாம் சேகரித்து வந்திருக்கின் றோம்... இவர் மிகவும் கூலாக அவற்றை ஓரமாக வைத்துவிட்டுப் போங்கள்” என்று சொல்கிறாரே என்று எடிசனை மிகவும் பாவ மாகப் பார்த்தார். எடிசனோ, “நீங்கள் வருவதற்கு எப்படியும் ஓராண்டு காலம் ஆகும்.

அதுவரைக்கும் ஏன் சும்மா இருக்கவேண்டும் என்று மிகக் குறைந்த செலவில் இருந்த செயற்கை கார்பன் இழையை வைத்து ஆராய்ச்சி செய்து பார்த்தேன். ஆராய்ச்சியில் வெற்றியும் பெற்றேன்” என்றார். ஜேம்ஸ் ரிகால்டனுக்கு என்ன சொல்வ தென்றே தெரியவில்லை. பின்னர் அவர் எதுவும் பேசமால் தனக்குச் சேரவேண்டிய பணத்தை வாங்கிக்கொண்டு போனார்.

தான் அதிகமாக செலவு செய்து ஜேம்ஸ் ரிகால்டனை மூங்கில் இலையைச் சேகரித்து வரச் சொல்லியிருக்கிறோமே என்பதைப் பற்றியெல்லாம் எடிசன் கவலைப்படமால், மக்களுடைய தேவைக்கு மின் விளக்குகள் கிடைக்கவேண்டும் அதுவும் குறைந்த செலவில் கிடைக்கவேண்டும் என்று பல்வேறு ஆராய்ச்சிகளின் வழியாக தன்னைப் புதுப்பித்துக்கொண்டே - அப்டேட் செய்துகொண்டே - இருந்தார். அதனால்தான் அவரால் மக்கள் வாங்குகிற அளவுக்கு குறைந்த செலவில் மின்விளக்கைக் கண்டுபிடிக்க முடிந்தது. இன்றைக்கு நாம் பயன்படுத்துகின்ற பல பொருள் களைக் கண்டுபிடித்தவர் அவர் தான் என்று நினைக்கும் அவர் எந்தளவுக்குத் தன்னை ஒவ்வொருநாளும் அப்டேட் செய்து கொண்டே இருந்தார் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகின்றது.

‘எண்ணம்போல் வாழ்க்கை’ வாழ ஒருவருக்கு என்ன வென்னவெல்லாம் தேவைப்படு கின்றன என்று தொடர்ந்து சிந்தித்துக் கொண்டிருக்கின்றோம். இந்தப் பயணத்தில் அடுத்த நகர்வாக இருப்பதுதான் ‘புதுப் பித்துக்கொண்டே இரு’ அல்லது ‘அப்டேட் செய்துகொண்டே இரு’என்ற தத்துவம் ஆகும். இது நம்முடைய வாழ்விற்கு எந்தள வுக்குத் தேவையானது என்பதை இப்போது சிந்தித்துப் பார்ப்போம்.

கவிக்கோ அப்துல் ரகுமான் சொல்வார், “குட்டைதான் தேங்கிக் கிடந்து நாற்றம் அடிக் கும். ஆறானது அப்படியல்ல. அது தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும். அதனால் அது வாழ் வின் ஊற்றாக இருக்கும்”. இதனை நாம் மனித வாழ்வுக்கும் பொருத்திப் பார்க்கலாம். உலகில் தோன்றுகின்ற எந்தவொரு மாற்றத்திற்கும் உட்படுத்தாமல், ‘கிணற்றில் போடப்பட்டகல்லை’ப் போன்று அப்படியே இருந்தால்,

நாம் நாற்றமடிக்கும் சாக்கடை க்குச் சமமானவர்களாகத்தான் இருப் போம். மாறாக, எப்போது நாம் காலத்திற்கு ஏற்ப நம்மையே நாம் புதுப்பித்துக்கொண்டு, தக வமைத்துக் கொள்கின்றோமோ அப்போது நாம் நம்மால் ஆற்றைப் போல் வாழ்வுகொடுக்க முடியும்; வளம்கொழிக்க முடியும்.

“நாம் ஏன் நம்மைப் புதுப்பித்துக்கொண்டே இருக்கவேண்டும். அப்படிப் புதுப்பிப்பதற்கான தேவையென்ன?”என்று நாம் கேட்கலாம். இந்த உலகம் முன்னெப்போதையும்விட இப்போது போட்டி நிறைந்ததாக இருக்கின்றது. ஆகவே, இந்தப் போட்டிகளுக்கு மத்தியில் நாம் நிலைத்து நிற்கவேண்டும் என்றால், நம்முடைய சிந்தனைகளையும் செயல்பாடுகளையும் புதுப்பித்துக்கொண்டே இருக்க வேண்டும். இன்றைக்குச் சந்தையில் பல நிறுவனங்கள் நிலைத்து நிற்கக் காரணம், அவையெல்லாம் தங்களைக் காலத்திற்கு ஏற்ப, அறிவியல் வளர்ச்சிக்கு ஏற்ப புதுப்பித்துக் கொண்டே இருக்கின்றன என்பதுதான். ஒருவேளை அவையெல்லாம் தங்களைப் புதுப்பித்திருக்காவிட்டால் என்றைக்கோ இருந்த இடம் தெரியாமல் போயிருக்கும் என்பதுதான் உண்மை. நாமும்கூட நிலைத்த பேரோடும் புகழோடும் வாழவேண்டும் என்றால் நம்மைப் புதுப்பித்துக்கொள்வது தேவையான ஒன்று. இல்லையென்றால், நாமும் காலாவதி ஆகிவிடுவோம்.

அடுத்ததாக, நாம் ஏன் நம்மைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்றால், புதுப்பித்தல் நடைபெறுகின்றபோது, நம்மால் புதிய உத்வேகத்துடன் செயல்பட முடியும் என்பதாகும். ஒருசில பேச்சாளர்கள் இருக்கிறார்கள், அவர்கள் பத்து, பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பாக என்ன பேசினார்களோ அதையேதான் பேசிக்கொண்டே இருப்பார்கள். இதனால் கேட்கின்ற நமக்கு மட்டுமல்ல, பேசுகின்ற அவருக்கே போரடித்து விடும். இது எல்லா தளத்துக்கும் பொருந்தும். ‘அரைத்த மாவையே அரைத்துக்கொண்டிருப்பது’ அல்லது காலாவதியாகிப்போன கம்யூட்டராக இருப்பதால் யாருக்கும் எந்தவொரு பலனும் இல்லை.

நிறைவாக நம்மைப் புதுப்பித்துக் கொள்ளும்போது புதிய மனிதர்களாக நாம் மாறி நிற்கின்றோம். அதன்மூலம் நாம் எவ்வளவு பெரிய பிரச்சினையையும் எதிர்கொள்ளத் தயாராகி விடுகின்றோம்.

குல்லா விற்று பிழைப்பை ஓட்டிவந்த குல்லா வியாபாரி, களைப்பு மிகுதியால் ஒரு மரத்தடியில் இளைப்பாறும்போது, அவர் வைத்திருந்த குல்லாக்களை மரத்தின் மேலிருந்த குரங்கள் ஆளுக்கொன்று எடுத்து மாட்டிக்கொண்டதும் அவர் விழித்தெழுந்த பின்னர் மிகவும் அறிவுப்பூர்வமாக யோசித்து தன்னுடைய தலையில் இருந்த குல்லாவைக் கீழே  கழற்றிப் போட, அந்தக் குரங்குகளும் அதனைப் பார்த்துவிட்டு தங்களுடைய தலையில் மாட்டியிருந்த குல்லாக்களைக் கழற்றிப் போட, எல்லாவற்றையும் அவர் அள்ளிக்கொண்டு ஓடின பழங்கதையைக் கேட்டிருப்போம். அதனுடைய அப்டேட் வெர்சன் தான் கீழே உள்ள கதை.

இது மாதிரி குல்லா விற்று பிழைப்பை ஓட்டி வந்த ஒரு குல்லா வியாபாரி, களைப்பு மிகுதியால்தான் வைத்திருந்த குல்லாக்களை ஓர் ஓரமாக வைத்துவிட்டு மரத்தடியில் தூங்கப்போனார். அவர் விழித்தெழுந்து பார்த்தபோது அவருடைய குல்லாக்களை எல்லாம் மரத்தில் இருந்த குரங்குகள் ஆளுக்கொன்றாய் மாட்டிக் கொண்டு ஆடிப்பாடிக் கொண்டிருந்தன. உடனே அவர் ஒரு காலத்தில் செய்ததுபோல் தன்னுடைய தலையில் இருந்த குல்லாவைக் கழட்டிப் போட்டால், அவையும் கழட்டி போட்டுவிடும். பிறகு நாம் அவற்றை எடுத்துக்கொண்டு ஓடிவிடலாம் என நம்பிக்கையில் தன் தலையில் இருந்த குல்லாவைக் கழற்றிப் போட்டார்.

அப்போது மேலிருந்து பாய்ந்து வந்த ஒரு குரங்கு அவர் கழற்றிப் போட்ட குல்லாவையும் தூக்கிக்கொண்டு மேலே ஓடியது. வியாபாரியோ, உள்ளதும் போய்விட்டதே என்று குரங்குகளைப் பார்த்தார். அப்போது அவருடைய குல்லாவைத் தூக்கிச் சென்ற குரங்கு சொன்னது, “எங்கள் முன்னோர்களைப் போன்று நீ குல்லாவை கழற்றிப்போட்டதும் நாங்களும் கழற்றிப் போட்டுவிடுவோம் என்று தப்புக் கணக்குப் போட்டுவிட்டாயா... இப்போது நாங்கள் ரொம்பவும் அப்டேட்டட்” என்றது. இதைக் கேட்ட அந்த வியாபாரி மிக வருத்தத்தோடு வீட்டுக்குச் சென்றாராம்.

அப்டேட்டடாக இருக்கும்போது என்னென்ன பலன்களை அடைகின்றோம் என்பதற்கு இந்த கற்பனைக் கதை ஓர் உதாரணம். ஆகவே, எண்ணம் போல் வாழ நினைக்கும் நாம், ஒவ்வொரு நாளும் நம்மைப் புதுப்பித்துக்கொண்டு அப்டேட்டடாக இருப்போம். அதன்வழியாக நிலையான புகழை அடைவோம். 

Comment