No icon

02.06.2019 ஆண்டவரின் விண்ணேற்றம்

திருப்பலி முன்னுரை
கிறிஸ்து இயேசுவில் பேரன்புக்குரியவர்களே,  மறைநூலில் கூறியிருந்தபடி இறந்து உயிருடன் எழுப்பப்பட்ட கிறிஸ்து, தாம் உயிருடன் இருப்பதைப் பல சூழல்களில் பலருக்கு வெளிப்படுத்தி அனைவரையும் வியப்புக்கு உள்ளாக்கினார். தொடர்வியப்புகளுக்கு சிகரம் வைத்தாற்போல விண்ணேற்றமடைந்து தமக்குரிய மாட்சியைக் குறிக்கும் தந்தையின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கிறார்.
ஆண்டவர் இயேசுவின் விண்ணேற்றம் நமக்கு அறிவிப்புகள் பலவற்றையும் அழைப்புகள் சிலவற்றையும் கொடுக்கிறது. அதன்படி 1. நாமும் ஒருநாள் நிச்சயம் உயிர்ப்போம். 2. நாமும் விண்ணகத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுவோம் 3. இயேசுவின் இரண்டாம் வருகை நிச்சயம் ஒருநாள் நிகழும். 4. தந்தையால் வாக்களிக்கப்பட்ட வல்லமை வந்து நம்மை ஆட்கொள்ளும். எனவே நாம் : 1. நம்பிக்கை வாழ்வில் நாளும் தொடர வேண்டும். 2. இயேசுவின் இறப்பு-உயிர்த்தெழுதல் - மாட்சிநிறைவிண்ணேற்றம் ஆகியவற்றுக்கு சாட்சிகளாய் திகழ வேண்டும்.
3. அனைத்து நாடுகளிலும் வாழ்வோருக்கு பாவமன்னிப்பு பெற மனம் மாற வேண்டும் என்ற அழைப்பைக் கொடுக்க வேண்டும். 4. விண்ணகம் சென்ற இயேசு, மாட்சிபெற்ற தீர்ப்பு வழங்கும் மன்னராக வருவதற்குக் காத்திருக்க வேண்டும். இத்துணை மாண்புக்குரிய பெருவிழாவை இன்று கொண்டாடும் நாம், நாம் வாழும் தளங்களில் நமது நற்செயல்கள் வழியாக ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்பும், விண்ணேற்றமும் அவரது உடனிருப்பும் தொடர வேண்டுமென்று உருக்கமாக மன்றாடுவோம்.
முதல்வாசக முன்னுரை: திருத்தூதர் பணிகள் 1:1-11
நற்செய்தியாளர் லூக்கா தமது திருத்தூதர் பணிகள் நூலில் இயேசுவின் விண்ணேற்றம் எப்படி நிகழும் என்றும் அதை நாம் எந்த மனநிலையில் புரிந்து கொண்டு, எந்தெந்தக் கடமைகளை எப்படியெல்லாம் செய்து, விண்ணக வாழ்வை உரிமையாக்கிக் கொள்ள முன்வர வேண்டும் என்றும் அறிவுறுத்துகிறார். இதைக் கவனத்துடன் கேட்போம்.
பதிலுரைப்பாடல்: திருப்பாடல் 47:1-2; 5-6; 7-8
பல்லவி: எக்காளம் முழங்கிடவே உயரே ஏறுகின்றார் ஆண்டவர்
இரண்டாம் வாசக முன்னுரை: எபிரேயர் 9:24-28; 10:19-23
கிறிஸ்து மாபெரும் தலைமைக் குரு, அவர் மற்ற தலைமைக் குருக்களைப் போல விலங்குகளின் இரத்தத்தினால் திருத்தூயகத்திற்குள் சென்றவர் அல்ல, தமது சொந்த இரத்தத்தினாலேயே அதற்குள் சென்று, ஒரே முறையில் நமக்குப் புதியவழியைத் திறந்து வைத்துள்ளார். ஆதலால் நாம் தூய்மை பெற்ற நிலையில் நேரிய உள்ளத்தோடும் உறுதியான நம்பிக்கையோடும் கிறிஸ்துவை அணுகிச் செல்ல வேண்டும் என்று அழைப்புவிடுக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிகொடுப்போம்.
நற்செய்தி: லூக்கா 24:40-53
நம்பிக்கையாளர்களின் மன்றாட்டுகள்
1. எம்மை மாட்சிப்படுத்தும் இறைவா!
உமது மாட்சியைப் பறைசாற்றும் ஒப்பற்ற பணியில் ஈடுபடும்  எங்கள் திருத்தந்தை பிரான்சிஸ், ஆயர்கள், குருக்கள், துறவிகள் திருநிலையினர் அனைவரும் உம் மகன் இயேசு பெற்ற விண்ணேற்றத்தின் மறைபொருளை ஏற்றமுறையில் நாங்கள் நினைவுகூரவும், எல்லாத்துறையிலும் நாங்கள் மாட்சிபெறவும் எமக்கு  வழிகாட்ட வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. அனைத்துக்கும் ஊற்றான அன்பு இறைவா!
புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம் இந்திய நடுவண் அரசு, அன்பில் நீதியையும், கடமையில் பொதுநலத்தையும், வலிமையில் பாதுகாப்பையும் வெளிப்படுத்தி எம்மைச் சிறப்பாக வழிநடத்த வேண்டுமென்றும் எந்தச் சூழலிலும் மதம், மொழி, பண்பாடு ஆகியவற்றின் பெயரால் பேரினவாதம் தலைதூக்காமல் சனநாயகத்தைப் போற்றும் வகையில் செயல்பட வேண்டுமென்றும் உம்மை மன்றாடுகிறோம்.
3. பேரொளியான இறைவா!
புதிய கல்வி ஆண்டு பிறந்துள்ள சூழலில் எம் கல்வி நிலையங்கள் அனைத்தும் உமது மேலான விழுமியங்களின் தடத்தில் பயணித்து பெருவெற்றி காணவும் பெற்றோர், ஆசிரியர், மாணவர்கள், நிர்வாகம் ஆகிய எல்லாத்தரப்பிலும் பொறுப்புணர்வும் கட்டுப்பாடும் மேலோங்கவும் வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
4. எம்மை அழைத்து அரவணைக்கும் இறைவா!
உம் திருமகனின் இதயத்தை நினைவு கூரும் இந்த ஜுன் மாதத்தில், அந்த இதயத்தில் நிரம்பி வழியும் அனைத்து நலன்களையும் பெற்று, எங்கள் குடும்பம், நிறுவனங்கள், அன்பியங்கள், பங்கு, பக்த சபைகள் ஆகியவை பெருவளர்ச்சியுறும் விதத்தில் எங்களது பக்தி முயற்சிகளும் மனிதநேயச் செயல்களும் பெருகிட வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
5. வளமை தந்து வழிநடத்தும் இறைவா!
அனைவருக்கும் பொது இல்லமாகிய பூமியை நாங்கள் எல்லாரும் நன்கு பாதுகாக்கும் நோக்கில் செயல்படவும், அது வளம் பெறும் பொருட்டு கோள்கள், வான்வெளிகள், மேகங்கள் அனைத்தும் நல்ல மழை, பேரொளி, சுத்தமான காற்று ஆகியவற்றைத் தரும்விதத்தில் நீர்வழி நடத்துவதன் வழியாக நாங்கள் வளமும் நலமும் பெற்று வாழ அருள்புரிய வேண்டுமென்றும் உம்மை மன்றாடுகிறோம்.

Comment