No icon

திருத்தந்தை பிரான்சிஸ்

கிறிஸ்து பிறப்பின்போது உக்ரைனில் அமைதி திரும்பும் என்ற நம்பிக்கை

அனைத்துலக சமுதாயம், பதட்ட நிலைகளுக்குத் தீர்வுகாண, உரையாடல் பாதையைக் கையில் எடுக்கவேண்டும் என்ற விண்ணப்பத்தை முன்வைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த கிறிஸ்து பிறப்பு காலம், உக்ரைன் நாட்டிற்கு அமைதியைக் கொணரும் என்ற நம்பிக்கையை வெளியிட்டார்.

டிசம்பர் 12 ஆம் தேதி ஞாயிறு நண்பகல் மூவேளை செபவுரைக்குப்பின் உக்ரைன் நாட்டின் அமைதிக்காகச் செபிக்க அழைப்புவிடுத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அன்புநிறை உக்ரைன் நாட்டிற்காகவும், அதன் திருஅவைக்காகவும், ஏனைய மதத்தினருக்காகவும், மக்களுக்காகவும் தான் செபிப்பதாகவும் எடுத்துரைத்தார்.

உக்ரைன் நாட்டில் அமைதியை ஏற்படுத்தும் முயற்சியில் ஆயுதங்கள் வழியாக அல்ல, மாறாக, தீவிரப் பேச்சுவார்த்தைகள் வழியாக தீர்வுகாண அனைத்துலக சமுதாயம் முன்வரவேண்டும் என்ற அழைப்பையும் விடுத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆயுதங்கள் ஒரு வழிமுறையாக முடியாது எனவும், இந்த கிறிஸ்து பிறப்புக் காலத்தில் உக்ரைன் நாட்டில் அமைதி திரும்பும் என்ற நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் மேலும் எடுத்துரைத்தார்.

உலகில் கடந்த ஆண்டு, அதற்கு முந்தைய ஆண்டைவிட அதிக ஆயுதங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன என்ற செய்தியையும் கவலையுடன் திருத்தந்தை பிரான்சிஸ் தெரிவித்தார். இதற்கிடையே, இரஷ்ய-உக்ரைன் எல்லைகளில் இரஷ்யத் துருப்புக்கள் குவிக்கப்பட்டு வருவது குறித்து, உக்ரைனும், ஐரோப்பிய நாடுகளும் தங்கள் கவலையையும், கண்டனத்தையும் வெளியிட்டுள்ளன.

Comment