No icon

குடந்தை ஞானி

நூற்றாண்டு விழாக் கொண்டாட்டத்தைத் தொடங்கிய தூத்துக்குடி மறைமாவட்டம்

இந்தியத் திரு அவை வரலாற்றில் பழம்பெரும் மறைமாவட்டமான தூத்துக்குடி மறைமாவட்டம் ஏற்படுத்தப்பட்டதன் நூற்றாண்டுப் பெருவிழாவின் தொடக்க நிகழ்வு ஜூன் மாதம் 19 ஆம் தேதி தூத்துக்குடி மறைமாவட்டப் பேராலய வளாகத்தில், ஆயர் மேதகு ஸ்டீபன் அவர்களின் தலைமையில் மிகச் சிறப்பாகவும் கோலாகலமாகவும் தொடங்கப்பட்டது. உலக அமைதிக்காக வெள்ளைப் புறாக்கள் வானில் சுதந்திரமாகப் பறக்கவிடப்பட்டன. நூற்றாண்டு விழாவிற்கான இலட்சினை, விருதுவாக்கு அறிமுகப்படுத்தப்பட்டு, நூற்றாண்டு விழாக் கொடி ஏற்றப்பட்டு, தூத்துக்குடி ஆயர் மேதகு ஸ்டீபன் அவர்களால் பதினொரு விதமான மறைமாவட்ட மறுமலர்ச்சிப் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டன. இதில் கடல்சார் தொழில்நுட்பக்கல்லூரி, மத்திய அரசுத் தேர்வுகளுக்கான மையம், வீடற்ற ஏழைகளுக்கு வீடுகள், நூற்றாண்டுக் கொண்டாட்டத்திற்கான புதிய இணைதளம் போன்றவை மிகுந்த வரவேற்பைப் பெற்றன.

ஐந்து  மறைவட்டங்களிலிருந்து 5 இளைஞர்கள் நூற்றாண்டு அணையா ஜோதியை தொடர் ஓட்டத்தில் கொண்டுவந்து, ஆயரிடம் ஒப்படைத்து, கூட்டுத் திருப்பலி நடைபெற ஒளியேற்றினர். பணி நிறைவுபெற்ற ஆயர் மேதகு யுவான் அம்புரோஸ், முதன்மை குரு பேரருள்திரு. பன்னீர் செல்வம், மறைமாவட்டப் பொருளாளர் அருள்பணி. சகாயம், தலைமையகச் செயலர் அருள்பணி. லூட்ரின், நூற்றாண்டுப் பணிகள் ஒருங்கிணைப்பாளர் அருள்திரு. ஜேம்ஸ் விக்டர் சுந்தரி மைந்தன், பேராலயப் பங்குத்தந்தை அருள்திரு. ரோலிங்டன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட அருள்பணியாளர்கள் பங்கேற்க மேதகு ஆயர் ஸ்டீபன் அவர்களின் தலைமையில் நூற்றாண்டு தொடக்க விழாத் திருப்பலி நடைபெற்றது. மறைமாவட்டத்தின் பெரும்பாலான பங்குகளிலிருந்து திரளான எண்ணிக்கையில் இறைமக்களும், அருள்சகோதரிகளும், இளைஞர்களும் பங்கேற்று உற்சாகத்துடன் நூற்றாண்டு விழாவைத் தொடங்கியுள்ளனர். இறைமக்கள் அடிப்படையில் தமிழகத்தில் மிகப்பெரிய முதல் மறைமாவட்டம், இந்திய அளவில் மூன்றாவது மிகப்பெரிய மறைமாவட்டம் தூத்துக்குடி மறைமாவட்டம் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. ஏறக்குறைய ஓராயிரம் ஆண்டு கிறிஸ்தவத்தின் அடிச்சுவடுகளைக் கொண்டு இம்மறைமாவட்டம் தமிழகத்தின் தலையாய மறைமாவட்டம் என்பது மிகவும் பாராட்டுக்குரியது.செய்தி- தூத்துக்குடி TMA  ரெடம்டர்

Comment