No icon

மரியன்னை பக்தி வரலாறு

கத்தோலிக்கத் திருஅவை, மே மாதத்தை அன்னை மரியாவின் வணக்க மாதமாகச் சிறப்பித்து மகிழ்கிறது. இறைவனின் தாயைக் கொண்டாடும் இம்மாதத்தில், அவர் மீதான பக்தி வரலாற்றில் வளர்ச்சி அடைந்த விதம் குறித்து இக்கட்டுரையில் காண்போம்.
கன்னி மரியா ‘இறைவனின் தாய்’ என்ற உண்மை, திருத்தூதர்களின் காலத்தில் இருந்தே திருஅவையால் போதிக்கப்பட்டும் ஏற்கப்பட்டும் வரு கிறது. கி.பி.70களில் நற்செய்தி நூலை எழுதிய லூக்கா, மரியாவை “ஆண்டவரின் தாய்” (1:43) என்று அறிமுகம் செய்கிறார். இது, திருத்தூதர்களின் போதனையால் விசுவாசத்தைப் பெற்றுக்கொண்ட முதல் கிறிஸ்தவ சமூகத்தின் நம்பிக்கையைத் தெளிவாக எடுத்துரைக்கிறது. முதல் நூற்றாண்டிலேயே கன்னி மரியாவை, ‘பெண்களுக்குள் ஆசி பெற்றவர்’ (லூக்கா 1:42, 11:27) என்றும் கிறிஸ்தவர்கள் போற்றினர்.
திருத்தூதர் யோவானின் சீடரும்,
அந்தியோக்கு ஆயருமான புனித இக்னேசியஸ் (-கிபி.117), “நம் கடவுளாகிய இயேசு கிறிஸ்து, தாவீது குலத்தின் வித்தாக தூய ஆவியின் வல்லமையால் கன்னி மரியாவின் வயிற்றில் கருவானார்” என்பதை சுட்டிக்
காட்டுகிறார். கி.பி.120ஆம் ஆண்டில் ரோமின் பிரிசில்லா கல்லறைச் சுரங்கத்தில் வரையப்பட்ட குழந்தை இயேசுவை ஏந்திய கன்னி மரியாவின் ஓவியம், அவர் கடவுளின் அன்னையாகப் போற்றப்பட்டதைக் காண்பிக்கிறது.
அன்னை மரியா வல்லமை மிகுந்த பரிந்துரையாளராகக் கருதப்பட்டதை 3ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நூல்கள் உறுதி செய்கின்றன. “ஓ, இறைவனின் புனித அன்னையே, நாங்கள் உமது பாதுகாவலைத் தேடி வருகிறோம், எங்கள் தேவைகளில் எங்கள் விண்ணப்பங்களைத் தள்ளிவிடாதிரும், எல்லா ஆபத்துகளில் இருந்தும் எங்களை விடுவித்தருளும், எப்பொழுதும் மகிமை துலங்கும் ஆசிபெற்ற கன்னியே!” என்ற செபத்தை அக்காலக் கிறிஸ்தவர்கள் செபித்தனர்.
4ஆம் நூற்றாண்டில், முதல் ஏவாளுக்கும் மரியாவுக்கும் இடையிலான ஒப்பீட்டு இறையியல் தோன்றியது. புனித எப்ரேம் (306-373), “சாவுக்குரிய மரத்தில் இருந்து ஏவாள் பறித்த கசப்பான கனியின் இடத்தில், இனிமை நிறைந்த ஒரு கனியை மரியா நமக்கு தந்தார். கன்னிமையில் கருவுற்று ஆண்டவரை ஈன்றெடுத்த மரியா ஆசி பெற்றவர். தம் மகனை ‘படைத்தவரின் மகன்’ என்றும், ‘உன்னத கடவுளின் மகன்’ என்றும் அழைக்க, மரியாவைத் தவிர யாருக்குத் துணிவு வரும்?” என்று வியப்புடன் புகழ்ந்துரைக்கிறார். 370ஆம் ஆண்டு எகிப்தின் அந்தியோக்கு நகரிலும், 400ல் பாலஸ்தீனிலும் மரியாவின் விண்ணகப் பிறப்பு விழாக் கொண்டாடப்பட்டது.
5ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், மரியாவின் பிறப்பு விழாவை செப்டம்பர் 8 ஆம் தேதியில் கொண்டாடும் வழக்கமும், விண்ணேற்புக் குறித்த இறையியலும் தோன்றின. கொன்ஸ்தாந்திநோபிள் ஆயரான நெஸ்தோரியுசின் தப்பறையைக் கண்டித்து, மரியாவை ‘இறைவனின் தாய்’ என்பதை 431ஆம் ஆண்டு எபேசு பொதுச்சங்கம் உறுதி செய்தது. அதன் நினைவாக, உரோமில் புனித மரியன்னைப் பேராலயம் கட்டியெழுப்பட்டது. கால்சீதோன் பொதுச்சங்கத்தில் (451) எருசலேம் ஆயர் புனித யுவனல், மரியன்னை விண்ணேற்பு அடைந்த நிகழ்வை எடுத்துரைத்தார்.
கி.பி.543ல் ‘கன்னி மரியாவின் அர்ப்பண’ திருநாளும், அதையொட்டி மரியாவின் விண்ணகப் பிறப்பு விழாவும் தோன்றின. 553ஆம் ஆண்டு கூடிய 2ஆம் கொன்ஸ்தாந்திநோபிள் பொதுச்சங்கம், அன்னை மரியாவை ‘எப்பொழுதும் கன்னி’ என்று அழைத்தது. கி.பி.649ல் நடைபெற்ற லாத்தரன் சங்கம், ‘மரியா முப்பொழுதும் கன்னி’ என்பதை விசுவாசக் கோட்பாடாக அறிக்கையிட்டது. 3ஆம் கொன்ஸ்தாந்திநோபிள் (680-81) பொதுச்சங்கமும் இந்தக் கோட்பாட்டை உறுதி செய்தது.
8ஆம் நூற்றாண்டின் நடுவே அயர்லாந்தில் தோன்றிய மரியாவின் மன்றாட்டுமாலை, “விண்ணகத் தலைவி, வாழ்வின் அரசி, விண்ணக மண்ணகத் திருஅவையின் தாய்” என அவரைப் புகழ்கிறது. திருத்தந்தை முதலாம் ஆத்ரியன் (-795), மரியாவின் விண்ணேற்பு விழாவை திருஅவை முழுவதும் சிறப்பிக்க ஆணையிட்டார். சால்ஸ்பர்க் (799) சங்கத்தின் 10வது விதி, மரியாவின் தூய்மைச் சடங்கு (பிப்ரவரி 2), மங்கள வார்த்தை (மார்ச் 25), மரியாவின் விண்ணேற்பு (ஆகஸ்ட் 15), மரியாவின் பிறப்பு (செப்டம்பர் 8)
ஆகிய விழாக்கள் கொண்டாடப்பட்டதைக் குறிப்பிடுகிறது.
புனித அல்குய்ன் (735-804), சிறப்புத் திருப்
பலிகளை உருவாக்கி மரியன்னையின் சனிக்கிழமைப்
பக்தியைத் தொடங்கி வைத்தார். கி.பி.847ல் திருத் தந்தை புனித 4 ஆம் லியோ, மரியாவின் விண்ணேற்பு விழாவில் எண்கிழமை கொண்டாட்டத்தை இணைத்தார். 9ஆம் நூற்றாண்டின் இறுதியில், விண்ணக அரசி வணக்கத்தில் பயன்படும் தொடர்பாடல் தோன்றியது. மங்கள வார்த்தை செபங்களைச் சொல்வதற்காக, 50 மணிகள் கொண்ட செபமாலையைப் பயன்படுத்தும் வழக்கம் 10ஆம் நூற்றாண்டில் தோன்றியது.
“இறையன்னை மரியா பிறப்பு நிலைப் பாவ
மின்றி உற்பவித்தார்” என்ற ‘அமல உற்பவ நம்பிக்கை’
11ஆம் நூற்றாண்டில் உருவானது. 1050ல் கூடிய வெர்செல்லி சங்கத்தில், மரியாவின் அமல உற்பவத்துக்கான விழாவை திருத்தந்தை 9 ஆம் லியோ பரிந்துரை செய்தார். 1166ஆம் ஆண்டு, பைசாந்திய பேரரசு முழுவதும் மரியாவின் அமல உற்பவ விழாவைக் கொண்டாடுமாறு பேரரசர் முதலாம் மனுவேல் கொம்னேனொஸ் ஆணையிட்டார். 1208ல் அன்னை மரியாவைக் காட்சியில் கண்ட புனித தோமினிக், செபமாலை பக்தியை மக்களிடையே ஊக்குவித்தார்.
1251 ஜூலை 16 ஆம்தேதி, கர்மேல் அவையின் தலைவர் புனித சைமன் ஸ்தோக் (-1265) அன்னை மரியாவின் காட்சியைக் கண்டார். ‘கர்மேல்’ உத்தரியத்தை அவருக்கு அறிமுகம் செய்த அன்னை, அதை அணிவோர் மீட்புப் பெறுவார்கள் என வாக்குறுதி அளித்ததால் அந்தப் பக்தி வேகமாகப் பரவியது. அதே காலத்தில் திருத்தந்தை 4 ஆம் உர்பான் (-1264) மங்கள வார்த்தை செபத்தில் இயேசுவின் பெயரை இணைத்து, “உம் திருவயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசி பெற்றவரே!” என்று திருத்தம் செய்தார்.
உரோம் புனித மரியன்னைப் பேராலய நேர்ந்தளிப்பு நாளை விழாவாக சிறப்பிக்கும் வழக்கம் 14ஆம் நூற்றாண்டில் தோன்றியது. 1383ஆம் ஆண்டு, கர்மேல் உத்தரிய விழா மேற்கத்தியத் திருஅவையில் நிறுவப்பட்டது. பிரான்சிஸ்கன் அவையினரின் முயற்சியால் 1389ல் திருத்தந்தை 6 ஆம் உர்பான், கன்னிமரியா எலிசபெத்தைச் சந்தித்த விழாவை உருவாக்கினார். பெர்னார்துவின் செபம் என்று அறியப்படும், “மிகவும் இரக்கமுள்ள தாயே” மன்றாட்டு 14ஆம் நூற்றாண்டின் இறுதியில் தோன்றியது.
1423ல் கூடிய கொலோன் மன்றம், ‘மரியாவின் வியாகுலங்கள்’ என்ற திருநாளை ஏற்படுத்தியது. 1457ஆம் ஆண்டு, ‘கன்னி மரியாவின் சிறு புகழ்மாலை’ முதல்முறையாக அச்சிடப்பட்டது. பிரிட்டனைச் சேர்ந்த அருளாளர் ஆலன் தெ ரூப்பே (1428-75), மகிழ்ச்சி, துயரம், மகிமை ஆகிய மூன்று பிரிவுகளில் 15 மறையுண்மைகளை 1464ல் வெளியிட்டார். 1472ஆம் ஆண்டு, மரியாவைக் கோவிலில் அர்ப்பணித்த விழாவை திருப்பலி நூலில் சேர்த்த திருத்தந்தை 4 ஆம் சிக்ஸ்துஸ், அதற்கான திருப்புகழ்மாலை செபத்தை 1476ல் அறிமுகம் செய்தார்.
மரியன்னைக்கு மே மாதத்தில் சிறப்பு வணக்கம் செலுத்தும் வழக்கம் 16ஆம் நூற்றாண்டில் தோன்றியது. 1531 டிசம்பரில் மெக்சிகோவின் குவாதலூப்பே நகரில், காட்சியளித்த மரியன்னை, “வாழ்வளிக்கும் உண்மைக் கடவுளின் கன்னித் தாய் நான். என்னைத் தேடிவரும் அனைவருக்கும் தாய்க்குரிய அன்பையும் கனிவையும் பொழிவேன்” என்று கூறினார். 1569ஆம் ஆண்டு, பதினைந்து மறையுண்மைகள் கொண்ட செபமாலைப் பக்தியை திருத்தந்தை 5ஆம் பயஸ் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்தார். 1587ல் திருத்தந்தை 5 ஆம் சிக்ஸ்துஸ், நாம் பயன்படுத்துகின்ற லொரெத்தோ மன்றாட்டுமாலைக்கு அங்கீகாரம் வழங்கினார்.
17ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், அன்னை மரியாவின் இதயத்தின் மீதான பக்தி வளர்ச்சி கண்டது. 1648ஆம் ஆண்டு பிரான்சின் அட்டூன் நகரில், ‘மரியாவின் மிகத்தூய இதயம்’ விழா முதன்முதலாகக் கொண்டாடப்பட்டது. அக்காலத்தில், மே மாதத்தில் கன்னி மரியாவுக்கு வணக்கம் செலுத்தும் வழக்கம் இயேசு சபையினர் மத்தியில் மேலோங்கி இருந்தது. புயலில் சிக்கி நடுக்கடலில் தத்தளித்த போர்ச்சுக்கீசிய வணிகர்கள் வேளாங்கண்ணியில் கரை சேர்ந்ததற்கு நன்றியாக, ஆரோக்கிய அன்னையின் ஆலயத்தை விரிவுபடுத்திக் கட்டினர்.
18ஆம் நூற்றாண்டில் இயேசு சபையினரின் முயற்சியால், மே மாதத்தில் அன்னை மரியாவுக்கு சிறப்பு வணக்கம் செலுத்தும் பக்தி கிறிஸ்தவர்கள் மத்தியில் வேகமாகப் பரவியது. 1708ஆம் ஆண்டு திருத்தந்தை 11 ஆம் கிளமெந்த், மரியாவின் அமல உற்பவ விழாவைக் கடன் திருநாளாக அறிவித்தார். 1724ஆம் ஆண்டு திருத்தந்தை 13 ஆம் பெனடிக்ட், தற்போதுள்ள முறையில் பாஸ்கா காலத்தில் விண்ணக அரசி வணக்கத்தையும், மற்ற காலங்களில் தூதுரை வணக்கத்தையும் மூவேளை செபமாகச் சொல்ல அனுமதி வழங்கினார்.
19ஆம் நூற்றாண்டில், மரியாவின் மாசற்ற இதயத்தின் மீதான பக்தி வேகமாக வளர்ச்சி கண்டது. திருஅவையின் அனைத்து ஆலயங்களிலும் அன்னை மரியாவுக்கு மே மாதத்தில் சிறப்பு வணக்கம் செலுத்த 1815ல் திருத்தந்தை 7 ஆம் பயஸ் அனுமதி அளித்தார். 1854ஆம் ஆண்டு திருத்தந்தை 9 ஆம் பயஸ், ‘மரியாவின் அமல உற்பவம்’ திருஅவையின் விசுவாசக் கோட்பாடு என அறிவித்தார். 1858ல் லூர்து நகரில் காட்சியளித்த மரியன்னை, “நாமே அமல உற்பவம்” என்று கூறி திருஅவையின் விசுவாசத்தை உறுதிப்படுத்தினார். 1883ஆம் ஆண்டில் திருத் தந்தை 13 ஆம் லியோ, அக்டோபர் மாதத்தை செபமாலை மாதமாக அறிவித்தார்.
1917ல் போர்ச்சுக்கல் நாட்டின் பாத்திமாவில் காட்சியளித்த அன்னை மரியா, “பாவிகள் மனம் திரும்பி இயேசுவிடம் வரவேண்டும்” என்று அழைப்பு விடுத்தார். மரியாவின் விண்ணேற்பை 1950ஆம் ஆண்டு திருஅவையின் விசுவாசக் கோட்பாடாக அறிவித்த திருத்தந்தை 12 ஆம் பயஸ், ‘அரசியான கன்னி மரியா’ விழாவை 1954ல் ஏற்படுத்தினார். 2ஆம் வத்திக்கான் பொதுச்சங்கம் (1962-65), “நம் கடவுளும் ஆண்டவருமான இயேசு கிறிஸ்துவின் தாயும், என்றும் கன்னியுமான மரியாவுக்கு நாம் முதற்கண் வணக்கம் செலுத்த வேண்டும்” என மீண்டும் வலியுறுத்தியது.
2002-2003ஐ செபமாலை ஆண்டாக அறிவித்த திருத்தந்தை 2 ஆம் யோவான் பவுல், ஒளியின் மறையுண்மைகளை அறிமுகம் செய்து செபமாலைப் பக்தியைப் புதுப்பித்தார். “இறைவனின் தாய் என்பதே நம் அன்னையின் முதன்மைப் பட்டமாக இருக்கிறது. மரியா நமது நம்பிக்கையாகத் திகழ்கிறார். தீய சக்திகளுக்கு எதிரான போரில் கிறிஸ்தவர்களுக்கு அவர் உதவி செய்கிறார். செபமாலை வழியாக நாம் அவரது உதவியை நாடுவோம்” என்று அறிவுறுத்தும் திருத்தந்தை பிரான்சிஸ், 2018ல் ‘திருஅவையின் தாய் மரியா’ என்ற திருநாளை ஏற்படுத்தினார்.
“இறைத்திட்டத்தை நிபந்தனையற்ற தாழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டதால், மரியாவைப் படைப்புகள் அனைத்திற்கும் மேலானவராக கடவுள் உயர்த்தியுள்ளார். இயேசு கிறிஸ்துவைக் குறித்த உண்மையைப் புரிந்துகொள்ள, நாம் மரியாவிடம் செல்வது தேவையாக இருக்கிறது” என்ற முன்னாள் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்டின் வார்த்தைகளை மனத்தில் கொண்டு, மரியன்னையின் பிள்ளைகளாய் இயேசுவை அணுகுவோம். மரியே வாழ்க!

Comment