No icon

அருள்பணி. ஜேம்ஸ் பீட்டர், கிறிஸ்துவின் சேனை

மன்றாடி மகிழ்ந்திடுவோம்

தாவீது

தம் பெயர்க்கேற்ப எனை நீதிவழி நடத்திடுவார்’ (திபா 23:3)

மலையிலிருந்து ஒரு பெரிய கல் பெயர்ந்து விழுவது போலவும், படுத்திருந்த ஒருவர் அதனை தன் கைகளாலும், கால்களாலும் தாங்கிக்கொள்வது போலவுமான தரிசனத்தை ஒருவர் செபவேளையில் கண்டாராம்.

பெரிய துன்பம் உங்களைத் தேடிவரக் காத்திருக்கிறது. செபித்து ஆயத்தமாயிருங்கள் என்று விளக்கமும் சொன்னாராம்.

தரிசனத்தைப் பொறுத்தவரை, பெயர்ந்து வந்த கல், அம்மனிதரைவிட பெரியது. ஆனால், தனக்கு சேதம் ஏற்படாதவாறு அவரால் தாங்கிக் கொள்ள முடிந்ததென்றால், ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது! ஆண்டவர் செயல் இது! நம் கண்களுக்கு வியப்பே! (திபா 118:23)

உலகத்திலிருப்பவனைவிட, உங்களுக்குள் இருப்பவர் பெரியவர் (1 யோவா 4:4) அதாவது, உலகத்திலிருக்கும் அலகையைவிட, அலகை பயன்படுத்தும் மனிதரைவிட அவன் கொணரும் பிரச்சனைகளைவிட, நம்முன் இருப்பவர் பெரியவர்.

இயேசு ஏன் கைவிடமாட்டார் என்று கேட்டபொழுது, ஒவ்வொருவருமே நன்றாகவே பதில் சொன்னார்கள். ஆனால், ஒரு சிறுமியின் பதில் அனைவர் மனதையும் கவர்ந்துவிட்டது. காரணம், அவரது கை பெரிய கை!.

நம்மை மீட்க முடியாத அளவுக்கு அவரது கரங்கள் குறுகிப் போகவில்லை (எண் 11:23, எசா 59:2) அவரது கால்கள்பட்டால், மலைகளும் உருகிப்போகும் (மீக்7:19).

இறைபணிக்காக சென்றிருந்த போதகரை, காட்டுவாசிகள் விரட்டினார்கள். அவரும் விரைந்தோடி, அருகிலுள்ள ஒரு குகைக்குள் ஒளிந்துகொண்டார்.

இந்தப் பக்கம்தானே வந்தான். இந்தப்பக்கம் தானே ஒளிந்திருக்க முடியும் என்று பேசினார்கள்.

போதகரின் உள்ளமோ, இயேசுவிடம் செல்வதற்கான நேரம் நெருங்கிவிட்டது என முழந்தாள்படியிட்டு மன்றாடினார்.

நிமிடங்கள் கடந்தன. வெளியிலிருந்த காட்டுவாசிகளின் சப்தம் இல்லை. திரும்பி சென்றுவிட்டார்களோ என்ற எண்ணத்தில் போதகர் வெளியே வர முற்பட்டபொழுது, குகையின் நுழைவில் சிலந்தியால் பெரிய வலை பின்னப்பட்டிருந்ததாம்.

! என் ஆண்டவர் எவ்வளவு நல்லவர். இவ்வளவு சிலந்தி வலை பின்னப்பட்டிருக்கும் குகைக்குள் போதகர் போயிருக்க முடியாது என்று அவர்கள் நினைக்கும் அளவுக்கு, ஆண்டவர் சிலந்திகளுக்குக் கட்டளையிட்டிருக்கிறார்.

காடுகளில் அலைந்து கொண்டிருக்கும் தாவீதைக் கொல்வதற்காக சவுல், 3000 வீரர்களுடன் வந்திருக்கிறார்.

சவுல், ஒவ்வொருநாளும் தேடியும், கடவுள் தாவீதை அவரிடம் ஒப்புவிக்கவில்லை. சவுல் தம்மைக் கொலை செய்யத் தேடுகிறார் என்று அறிந்த தாவீது மிகுந்த அச்சம் கொண்டார் (1 சாமு 23:14-15).

சவுல், தன் வீரர்களுடன் தன்னைப் பின்தொடர்வதை அறிந்த தாவீது, மாவோன் பாலைநிலத்தில் உள்ள பாறைக்குச் சென்றார். சவுல் மலையின் ஒரு பக்கத்தில் செல்ல, தாவீதும் அவர்தன் ஆள்களும் அதே மலையின் மறுபக்கத்தில் நடந்தனர்.

சவுலிடமிருந்து தப்பித்துக்கொள்ள தாவீது விரைந்து சென்றபோது, சவுலும் அவர்தம் ஆள்களும், தாவீதையும் அவர்தம் ஆள்களையும் பிடிப்பதற்கு வளைத்துக்கொண்டனர்.

அவ்வேளையில், ஒரு தூதன் சவுலிடம் வந்து, "விரைந்து வாரும்! பெலிஸ்தியர் நாட்டின்மேல் படையெடுத்து வந்திருக்கிறார்கள்" என்றான். அதனால் சவுல் தாவீதைத் தொடர்வதைக் கைவிட்டு பெலிஸ்தியரை எதிர்க்கத் திரும்பிச் சென்றார். ஆதலின், அவ்விடம்பிரிக்கும் பாறைஎன்று அழைக்கப்பட்டது.

இந்தப்பாறை (பிரிக்கும் பாறை) யார்? அவரே, கற்பாறையாம் கடவுள். கடவுளின் திருப்பெயர்களில் ஒன்று கற்பாறை (திபா 18:2).

கடவுள், தம் பெயர்க்கேற்ப, எத்தனை அருமையாக தன்பிள்ளை தாவீதை நீதி வழியில் நடத்திவிட்டார். எதிரியின் கையினின்று விடுவித்துவிட்டார்.

கடவுள், தம்மை வழிநடத்துவதை அனுபவித்த பக்தர்கள், கடவுளுக்கும் பெயர் சூட்டி மகிழ்ந்தார்கள்.

தன் ஒரே மகன் ஈசாக்கைப் பலியிட மோரியா மலைநோக்கி சென்றபொழுது, கடவுளையாவேயிரேஅதாவது ஆண்டவர் பார்த்துக் கொள்வார் என்றார். அந்தப் பெயர்க்கேற்ப ஆண்டவரும் ஆபிரகாமை மகிமைப்படுத்தினார்.

40 வருட பாலைவனப் பயணத்தில், நாமே உங்களை குணமாக்கும் மருத்துவர் யாவே ரபிபாவாக இருப்பேன் என்று ஆண்டவரே வாக்களித்தார்

(விப 15:26).

அமலேக்கியருக்கு எதிராக, யோசுவா தலைமையில் இஸ்ரயேலர் போரிடச் சென்றபொழுது, மோசே மலைமேல் ஏறி, கரங்களை விரித்து மன்றாடினார். ‘யாவே நிசிஅதாவது ஆண்டவர் போராடுவார் என்று பெயரிட்டார் (விப 17:15) ஆண்டவரே போரிட்டு, வெற்றி வாங்கினார்.

நீதித்தலைவராகிய கிதியோன், அந்நிய தெய்வ சிலைகள், கம்பங்கள், கொடிமரங்கள், பலி பீடங்களையெல்லாம் தகர்த்து, ஆண்டவருக்கென்று புதிய பலிபீடம் எழுப்பி, ‘யெகோவா ஷாலோம்அதாவது  ‘நலம் (சமாதானம்நல்கும்ஆண்டவர் என்று பெயரிட்டார் (நீதி 6:24).

எரேமியா இறைவாக்கினர், கடவுளை யாவே சிக்கெனுஸ் அதாவது ஆண்டவர் நம்மைப் பாதுகாப்புடன் வாழச் செய்பவர் என்று பெயரிட்டார் (எரே 23:6).

எசேக்கியேல் இறைவாக்கினர், யாவே ஷம்மா, அதாவது ஆண்டவர் இங்கே நம்முடன் இருக்கிறார் என்றழைத்தார் (எசே 48:35).

நம் ஆண்டவரின் பெயர் இம்மானுவேல் நம்மோடு இருப்பவர்; இயேசு = பாவிகளை மன்னிப்பவர்; கிறிஸ்து = அருள்பொழிவு செய்பவர். தம் பெயர்க்கேற்பவே, நம்மை நீதிவழி நடத்திடுவார்.

Comment