No icon

+ மேதகு பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி

இலக்கோடு இணைந்த திருப்பயணம்

கூட்டொருங்கியக்கப் பாதைக்கான கிறிஸ்து பிறப்பின் பாடங்கள்

நாம் வாழ்ந்து, நேசித்து, சேவிக்கும் இப்புவியுலகம் இன்றைய காலச்சூழலில் திருஅவையிடமிருந்து எதிர்பார்ப்பது என்ன? நமது அனைத்து பணித்தளங்களிலும், பணிநிலைகளிலும் ஒருங்கிணைப்பின் மறுமலர்ச்சி. மூன்றாவது ஆயிரமாண்டின் திருஅவையிடம் இறைவன் விரும்புவதும் இத்தகைய கூட்டொருங்கியக்கப் பாதையைத் தான் என்று 2015 ஆம் ஆண்டு, நடைபெற்ற ஆயர்கள் மாமன்றத்தின் 50 ஆம் ஆண்டு விழாவில் நமது திருத்தந்தை பிரான்சிஸ் வலியுறுத்தினார். இந்தக் காலத்தின் அழைப்பிற்கு செவிமடுக்கும் வண்ணம் எதிர் வரும் இரண்டு ஆண்டுகளுக்கு (2021 அக்டோபர் துவங்கி 2023 அக்டோபர் வரை) அகில உலக திருஅவை மறைமாவட்டங்கள், கண்டங்கள் மற்றும் சர்வதேச நிலைகளை உள்ளடக்கிய முப்பரிமாண ஒன்றிணைந்த பயணத்தை மேற்கொண்டுள்ளது என்பது நாம் அறிந்ததே. இத்தருணம் நமது ஒட்டுமொத்த திருஅவையின் மாற்றத்திற்கும், மறுமலர்ச்சிக்கும் உகந்த தருணமாக (Kairos) அமைந்திட இயேசுவின் பிறப்பு மறைபொருள் நமக்கு உணர்த்தும் பாடங்களைக் குறித்து இத்திருவருகை மற்றும் கிறிஸ்து பிறப்பு காலங்களில் சிந்திப்பது ஏற்புடையது.

சொற்பிறப்பியலின் பார்வையில், கூட்டொருங்கியக்கத்தைக் குறிக்கும் synod என்னும் ஆங்கில வார்த்தை  syn  (ஒன்றாக/உடன்) மற்றும் hodós (பாதை/சாலை/வழி) என்னும் கிரேக்க சொற்களிலிருந்து உதித்தது. ஒன்றாய் இணைந்து பயணிக்கும் திருப்பயணிகளின் கூட்டமைப்பாக திருஅவையை பாவிக்கும் மாற்றுப்பார்வையைகூட்டொருங்கியம் என்னும் சொல் உணர்த்துவதாக அமைந்திருக்கின்றது. எனவே, ஒருங்கிணைந்து பயணிக்கும் தன்மை நமது திருஅவையின் பணி முறைக்கு (modus operandi) மட்டுமல்லாமல் அதன் வாழ்வியலுக்கும் (modus vivend) உரியது. கிறிஸ்துவின் முதற்சீடர்கள் கிறிஸ்தவர்கள் என்று அழைக்கப்படுவதற்கு முன்பு மார்க்கத்தை/நெறியை சார்ந்தவர்கள் (people of the hodos / Way) என்றே அடையாளப்படுத்தப்பட்டனர் என்ற வரலாற்றுக் குறிப்பை நாம் திருத்தூதர் பணிகள் நூலில் காண்கின்றோம் (9:2; 19:9, 23; 22:4; 24:14, 22). ஆம், திருஅவையின் அடையாளமும், மறைப்பணியும் நமது பொது திருப்பயணத்தை அடிப்படையாகக் கொண்டே வரையறுக்கப்படுகின்றன.

மீட்பின் வரலாறு இறைவன் தனது படைப்போடு உடன் நடக்கும் திருப்பயணம். பொய்மையில் (அஸத்) இருந்து மெய்மைக்கும் (ஸத்), இருளில் (தமஸ்) இருந்து ஒளிக்கும் (ஜ்யோதிஸ்), மரணத்தில் (ம்ர்த்யு) இருந்து அழியா வாழ்விற்கும் (அம்ர்தம்) கடந்து செல்லும் மீட்புப் பாதையில் நமது உடன் பயணியாக இறைவனைச் சித்தரிக்கிறது விவிலியம். ஏதேன் தோட்டத்தில் ஆண்டவராகிய கடவுள் உலவிக் கொண்டிருந்தபோது ஒலித்த ஓசை  (தொநூ 3:8) அவரது மக்களின் விடுதலைப் பயணத்தின்போதும் எதிரொலிக்கிறது. பகலில் மேகத் தூணாகவும், இரவில் நெருப்புத் தூணாகவும் விலகாத வழித்துணையாய் தொடர்கிறது இறைவனின் இருப்பு (13:21). நீதித்தலைவர்கள், அரசர்கள் மற்றும் இறைவாக்கினர்கள் ஆகியோரின் துணை கொண்டு, படைப்பு முழுவதையும் இந்த மீட்புப் பயணத்தில் ஒன்றிணைக்கத் துடிக்கிறது இறைவனின் மீட்புத் திட்டம்.

படைப்பனைத்தோடும் ஒருங்கிணைந்து இறைவன் மேற்கொண்ட இத்திருப்பயணம் இயேசுவின் பிறப்பில் ஒரு புதிய கட்டத்தை அடைகின்றது. 2000 ஆண்டுகளுக்கு முன்பு யோசேப்பு என்ற தச்சர் தனது பேறுகால மனைவி மரியாவோடு நாசரேத்திலிருந்து பெத்லகேம் நோக்கி நடந்த பயணத்தில் இறைவனின் வழித்துணை ஓர் அழகிய மகவையின் வடிவம் பூண்டது. மாட்டுத் தொழுவத்தின் தீவனத்தொட்டியில் நமது உடன் பயணியான இறைவன் பச்சிளம் குழந்தையானார். நமது மீட்புப் பயணத்தின் இலக்கு நம் பயணத்தின் பாதையிலேயே நம்மோடு ஒன்று சேர விரைந்தது. ஆம், இயேசுவின் பிறப்பில் பயணமும் அதன் இலக்கும் சந்தித்துக்கொள்கின்றன. நாம் அன்பு செய்யும் இறைவன் தொடுவானத்தில் நமக்காக காத்திருப்பவரல்ல; மாறாக, நமது வரலாற்றில் இன்றைய நமது பயணத்தில், நம்மில் ஒருவராய் உடன் நடப்பவர் என்ற மறையுண்மையை உரக்க உரைக்கின்றது பெத்லகேம் குடிலின் நள்ளிரவு மௌனம். 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புனித பெர்னார்து குழந்தை இயேசுவைக் குறித்து கூறுகிறார், தனது விண்ணக திருநகரத்தில் மாட்சிமையோடு திகழ்ந்து விண்ணகம் வாழ் தன் மக்களை தனது பிரசன்னத்தால் தூயவர்களாக மாற்றும் இறைவன், மண்ணகம் வாழ் அகதிகளான நம்மோடு மகிழ்ந்து களிகூர, நமது சிறுமையையும், தாழ்ச்சியையும் தானே ஏற்று நம்மத்தியில் புலம் பெயர்ந்தார்.

திருக்குடும்பத்தின் பயணத்தில் இறைவன் துணையாய் இணைந்த தருணம் படைப்பை மீண்டும் ஒன்றிணைப்பதை நாம் விவிலியத்தில் காண்கின்றோம். குடிலின் கால்நடைகள், வயல் வெளியில் இருந்து மேய்ப்பர்கள், கீழ்திசையில் இருந்து ஞானிகள், விண்ணகத்தில் இருந்து வானத்தூதர்கள் என அனைவரும் பேதங்களையும், வேற்றுமைகளையும் கடந்து ஒன்று சேருகின்றனர். ஏதேன் தோட்டத்தில் மறக்கடிக்கப்பட்ட படைப்பின் அடிப்படை உறவுத் தன்மை பெத்லகேமில் மீண்டும் நிலைநிறுத்தப்படுகின்றது. ஆக, இயேசுவின் வருகை நமக்கும் இறைவனுக்குமான இடைவெளியை மட்டுமல்ல; நமக்குள்ளே வளர்ந்து கிடக்கும் வேலிகளையும் தகர்க்கின்றது. இறைவனின் திருநகரை விட்டு பாவத்தால் புலம் பெயர்தலுக்கு ஆளாகியிருக்கும் நம் ஒவ்வொருவரையும் மீண்டும் அவரது திருநகரை நோக்கிய திருப்பயணிகளாய் மாற்றுவது கிறிஸ்துவின் பிறப்பு என்னும் நற்செய்தி. இனி நாம் அகதிகள் அல்ல; இப்பூவுலகம் நம் தாய்வீடு. ஏனெனில், இறைவனின் பிறப்பால் நமது புவியும் திருநகரமானது, நம் வாழ்வும் திருப்பயணமானது. செல்லும் பாதை தெரியாது, இலக்கும் அறியாது தனிமையில் திக்கற்று தவிக்கும் அகதிகளின் வலி இனி நமக்கில்லை. மாறாக, இறைவன் பக்கம் தன் பாதங்களை திருப்பி, அவரது கரம் கோர்த்து நடக்கும் திருப்பயணிகள் நாம்.

இலக்கே உடன் பயணி ஆனதால் இனி பயணமே நம் இலக்கு! எனினும், நாம் நடக்கும் ஒருங்கிணைந்த பயணத்தின் பாதை பூப்பாதை அல்ல; நம்மோடு உடன் பயணிப்பவர் நம்மை எப்போதும் ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும் இறைவன். ‘மாற்றத்திற்கான நேரம்என்ற பிரெஞ்சு மொழிப் படைப்பில் திருத்தந்தை கூறுவது போல, கூட்டொருங்கியக்கப் பாதை என்பது ஏற்கனவே தெளிவாக வரையறுக்கப்பட்ட பாதை அல்ல; இப்பயணத்தில் எதிர்பாரா திருப்பங்களுக்கு நாம் ஆயத்தமாக இருத்தல் அவசியம். நம்மை உந்தித்தள்ள, சவால்களுக்கு உட்படுத்த, எதிர்பாரா வகைகளில் ஆச்சரியப்படுத்த காத்திருக்கும் இறைவனுக்கு நம் உள்ளங்களை திறந்து வைத்திருக்க வேண்டும். திருக்குடும்பத்தின் அனுபவம் உணர்த்துவது போல, கூட்டொருங்கியக்கப் பாதை என்பது வாழ்வின் எல்லா சூழ்நிலைகளிலும் நுண்ணோக்கோடும், நம்பிக்கையோடும் ஒருங்கிணைந்து நாம் மேற்கொள்ளும் கூட்டுப்பயணம். இறைவன் திருக்குடும்பத்தோடு பயணித்த போதும், யோசேப்பிற்கும், மரியாவுக்கும் ஆபத்துகளே இல்லாத எளிதான பயணத்திற்கான வரைபடம் எதுவும் அவர்களுக்கு கொடுக்கப்படவில்லை. ஏழ்மை, வன்முறை, ஆதிக்கவாதம் எனப் பல சவால்களைத் தாண்டி, ஒவ்வொரு நிலையிலும் இறைவனின் வழியைத்தேடி, அறிந்து பயணிக்க வேண்டிய பக்குவம் நமக்கு அவசியம்.

நேர்மையைக் கடைப்பிடித்தலையும், இரக்கம் கொள்வதில் நாட்டத்தையும் உன் கடவுளுக்கு முன்பாக தாழ்ச்சியோடு நடந்து கொள்வதையும் தவிர வேறு எதை ஆண்டவர் உன்னிடம் கேட்கின்றார்?” என்கிறார் இறைவாக்கினர் மீக்கா (6:8). இறைவனோடு நடக்க வேண்டுமெனில் இறைவனைப் போன்று நடக்க கற்றுக்கொள்ளுதல் வேண்டும். கிறிஸ்துவின் பிறப்பில் இறைவன் பதித்த கால் தடங்கள் நமது திருப்பயணத்திற்கு தேவையான தாழ்ச்சி, கனிவு, அன்பு மற்றும் நீதி என்னும் மதிப்பீடுகளின் மாதிரிகைகள். பிளவுகள் நிறைந்த இந்த உலகத்தில் கூட்டொருங்கியக்கப் பாதையில்  இணைந்து நடக்க நம்மிடம் தேவைப்படுவது: கீழ்ப்படிதல் கொண்ட படைப்பாற்றல், நமது தனித்தன்மைகளை மழுங்கடிக்காத ஒருங்கிணைப்பு, தைரியமும் துணிச்சலும் கொண்ட சாட்சிய வாழ்வு, இன்றைய காலத்தின் அறிகுறிகள் வழியாக நம்மோடு தொடர்ந்து உரையாடும் தூய ஆவியாருக்கு செவிமடுக்கும் திறமை.

கூட்டொருங்கியக்கப் பயணத்தின் கதாநாயகர்களும், கதாநாயகிகளும் யார்? ஆயர்களும், குருக்களும், துறவியர்களும் மட்டுமானது அல்ல, இத்திருப்பயணம். அதிகாரப்படி நிலைகளைத் துறந்து, வேற்றுமை கலாச்சாரத்தைத் தாண்டி, திருமுழுக்கு பெற்ற ஒவ்வொருவரும், திருஅவையின் எல்லைகளைத் தாண்டி அனைத்து தரப்பினரோடும் கரம் சேர்த்து பயணிப்பதே நமக்கான அழைப்பு. திருஅவைக்கு உள்ளும், திருஅவைக்கு புறமும் தொடர்ந்து ஒலிக்கும் பலவகை குரல்களுக்கும் பொறுமையுடன் செவிமடுத்தல் அவசியம். இறைவனோடும், ஒருவர் மற்றவரோடும் இணைந்து நடக்கும் நமது ஒருங்கிணைந்த பாதைக்கு இயேசுவின் பிறப்பு ஒளியாகட்டும்.

 

Comment