No icon

அருள்முனைவர் மைக்கேல் ராஜ் புனித பவுல் குருத்துவக் கல்லூரி, திருச்சி.

“இணைந்து நடக்கும்போது  இடம் கிடைக்காதோர் யார்?”

தற்பொழுது தலத்திருஅவையில் நடைபெற்றுவரும் அகில உலக ஆயர்கள் மாமன்றத்தின் முதல் நிலையினை தலத்திருஅவையின் செவிமடுத்தலிலும், கலந்துரையாடல்களிலும், குழு விவாதங்களிலிலும் இதுவரை இணைத்துக் கொள்ளப்படாத நம்பிக்கையாளர்களை நாம் தகுந்த மாண்புடனும் உரிய மதிப்புடனும் இணைத்துக்கொள்வதும், அவர்களின்  குரலுக்கும், கருத்துக்களுக்கும், உரிமை வேண்டல்களுக்கும் கவனமாக ஈடுபாட்டுடன் செவிமடுத்துச் செயல்படுவதும் மிக மிக அவசியமானது என, நம் திருத்தந்தை முன்மொழிந்து வலியுறுத்துகிறார். அதன் அடிப்படையில் கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவின் ஒளியில் இணைந்து நடத்தல் அல்லது இணைந்து பயணித்தல் (ளுலnடின) என்னும் நிலையில் இன்னும் யாரெல்லாம் இணைத்துக் கொள்ளப்பட வேண்டுமென்பதை இறைவார்த்தையின் ஒளியில் சற்று கூர்மையுடன் சிந்திக்க இந்தக் கட்டுரை அழைப்பு நல்கிறது.

அவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை” (லூக் 2:7)

இயேசுவின் பிறப்புக் குறித்து தன் நற்செய்தியில் பேசும் லூக்கா, “அவர் தம் தலைமகனைப் பெற்றெடுத்தார். விடுதியில் அவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை. எனவே, பிள்ளையைத் துணிகளில் பொதிந்து தீவனத் தொட்டியில் கிடத்தினார்என மரியா மற்றும் யோசேப்பு இவர்களின் பொருளாதார ஏழ்மையையும், அவர்களின் சமூக அவல நிலையையும் இங்கே விளக்குகின்றார்.

இயேசு காலத்திய சமூகத்தில்விடுதிஎனப்படும் சொல்லை இன்றைய புரிதல் போல பயணிகள் தங்கும் இடம் என்று மட்டும் நினைத்துவிட முடியாது. லூக்கா 10:35 நமக்குச் சொல்வது போலசாவடிஎனப்படும் வார்த்தை நோயாளர்கள், முதியவர்கள், பயணக் களைப்புற்றோர், திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள், ஓய்வெடுக்கும் இடமாகவும், கவனித்துக் கொள்வதற்கான நபர்கள் அங்கே அந்தச் சாவடிகளில் இருந்ததையும் நமக்கு விளக்குகிறது. எனவேதான்இயேசு தன் நல்ல சமாரியர் (லூக் 10:25-37) உவமையில்  காயப்பட்ட பயணியை பரிவுடன் கவனித்துக் கொண்ட நல்ல சமாரியர் சாவடியில் சேர்த்து, அத்துடன் காவலர்களிடம் இரண்டு தெனாரியத்தைக் கொடுத்து, “இவனைக் கவனித்துக் கொள்ளும்! இதற்கு மேல் செலவானால் நான் திரும்பி வரும்போது உமக்குத் தருவேன்” (லூக் 10:35) என்று சொல்லி விட்டுச் செல்வதாக அறிகிறோம். இது போலவே, இயேசுவின் பிறப்பின் போதும் யோசேப்பும், மரியாவும் சாவடியிலோ, விடுதியிலோ மரியாள் பேறுகால வேதனையின் போது இடம் தேடியிருக்க வேண்டும். ஆனால், தொலைதூரத்தில் பின் தங்கிய அவர்களுக்கு உதவும் நல்ல சமாரியர்கள் அன்று கிடைக்கவில்லை என்பது போல, “விடுதியில் அவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை” (லூக் 2;7)  என்று குறிப்பிடுகிறது. யோசேப்பு மற்றும் மரியாள் குடும்பச்சூழல், பின்தங்கிய பொருளாதார ஏழ்மை என்பது விடுதியில் பணம் செலுத்தி இடம் பெறும் நிலையை மறுத்ததன் விளைவாக குழந்தையைதீவனத் தொட்டியில் கிடத்தினார்” (லூக் 2:7) என்ற ஏழ்மையின் உச்சநிலை இங்கே வெளிப்படுகிறது. பரிவு, இரக்கம், கருணை என்பதெல்லாம் எந்த விடுதியிலும், சாவடியிலும் அன்றைய பெத்லகேமில் மரியாவுக்குக் காட்டப்படவில்லை என்பது இன்றைய நுகர்வுவெறி பிடித்த, பண ஆசை பிடித்த சமூகத்தின் எதார்த்தமே, அவர்களுக்கு இடம் தர மறுத்தது என்பதை விளக்குவதாக நான் பார்க்கிறேன்.

விடுதியும், சாவடியும் மரியாவின் பேறுகாலத்தில் எண்ணற்ற பயணிகளால் நிறைந்து விளங்கிய போது, ஏதோ ஓர் இடத்தில் தன் வீட்டில் தீவனத்தொட்டி இருந்த இடத்தில் இடம் தந்து உதவிய  அந்தநல்ல சமாரியரின்இடத்தில், அடைக்கலம் தேடிய மரியா மற்றும் யோசேப்புவைப் போல, இன்றும் திருஅவையில் இடம் தேடி, உரிமை தேடி, மாண்புத் தேடி, பங்கேற்பு தேடி, சமத்துவம் தேடி, இயக்கத்தில் இணைந்துக் கொள்ளப்பட வேண்டுமென்ற ஏக்கத்துடன் பயணிப்போர் பலர் உண்டுஅவர்களை இன்று நாம் முதலில் இனம் காண வேண்டும். சேர்த்துக்கொள்ள வேண்டும்.

இன்று திருஅவை என்னும் விடுதியில், சாவடியில் இடம் தேடுவோர்

திருத்தந்தை பிரான்சிஸ் 2013ஆம் ஆண்டு, திருத்தந்தையாகப் பொறுப்பேற்ற பின்பு, இது வரை குடும்பம் (2015) இளையோர் (2018) என்ற இரண்டு அகில உலக ஆயர்கள் மாமன்றங்களைக் கூட்டி அதனைத் தலைமையேற்று நடத்தினார். இரண்டு ஆயர்கள் மாமன்றங்களின் நிறைவிலும் யாரெல்லாம் இன்று திருஅவையின் மைய நீரோட்டத்தில் இணைத்துக் கொள்ளப்பட வேண்டும் என்பதைஅன்பில் மகிழ்ச்சி மற்றும் கிறிஸ்து வாழ்கிறார் என்ற தன் இரண்டு திருத்தூது விளக்க iகைள் அடங்கிய ஏடுகளில் வெளிப்படுத்துகிறார். குடும்பத்தை மையப்படுத்தி நடைபெற்ற அகில உலக ஆயர்கள் மாமன்றத்தின் விளைவாக தான் எழுதிய அன்பில் மகிழ்ச்சி ஜெபம் ஏட்டில் முறையற்ற திருமணம் செய்து கொண்ட இறை மக்களையும், நாம் நமது வழிபாடுகள் மற்றும் செயல்பாடுகளில் யாரையும் ஒதுக்கிவிடாமல் இணைத்துக் கொள்ள வேண்டுமென அழைப்புக் கொடுக்கிறார். அவர்கள் திரும்பி வரும்போது, ஏற்றுக் கொள்ளும் திருஅவையாக, திறந்த மனமும், தாராள உள்ளமும் கொண்ட திருஅவையாக, அவர்களை வரவேற்க வேண்டுமென அழைப்புக் கொடுக்கிறார். யாரையும் புறக்கணிக்கும் திருஅவையாக அல்ல; ஆனால், கரம் கொடுக்கும் திருஅவையாக, தோள் கொடுக்கும் திருஅவையாக, உறவை ஏற்படுத்தும் திருஅவையாக, திருஅவை அனைவருக்கும் இடம்தர வேண்டுமென்று மிக ஆழமான, அழுத்தமான கருத்தைப் பதிவுச் செய்கிறார்.

2018 ஆம் ஆண்டு, அகில உலக ஆயர்கள் மாமன்றம் இளையோரைக் குறித்து சிந்தித்த போதும், திருஅவையால் இளையோர் இணைத்துக் கொள்ளப்பட வேண்டும் என்ற அழைப்பினை நல்கினார். அவர்களைக் கலகக்காரர்களாக அல்ல; பிரச்சனையை ஏற்படுத்துவோராக அல்ல; மேன்மையான சாதனையாளர்களாக, செயற்பாட்டாளர்களாக நாம் அவர்களையும் மதித்து, இணைத்துக் கொள்ள வேண்டுமென திருஅவையை அறிவுறுத்திக் கேட்டுக் கொள்கிறார்.

சமூகப் புறக்கணிப்பு திருஅவையில் வேண்டாம்

திருஅவையில் பாரம்பரிய வாதிகள் அல்லது பழமைவாதிகள் இவர்களின் எதிர்பார்ப்புகள் மற்றும் அடக்குமுறை சிந்தனைகளை புறம் தள்ளி விட்டு, திருஅவை எல்லாரையும் மனிதாபிமானத்துடனும், மாண்புடனும் ஏற்றுக்கொள்ளும் திருஅவையாகச் செயல்பட  அழைப்புத் தருகிறார். திருஅவையில் இன்னும் சமத்துவ உரிமைக்காக குரல் கொடுக்கும் பெண்களை உரிய மதிப்பளித்து, ஏற்றுக் கொள்ளவும், முடிவெடுக்கும் அதிகாரம் கொண்ட பணி நிலையில் அவர்களை இணைத்துக் கொள்ள இடம் தரவும் திருத்தந்தை ஆவணச் செய்கிறார். அண்மைக் காலங்களில் திருஅவையின் உயர்ந்த பொறுப்புகளில் பெண்களை நியமித்திருப்பது, திருஅவை என்னும் சாவடியில் வழிப்போக்கருக்கும், களைப்புற்ற பயணிகளுக்கும், சோர்வுற்ற நபர்களுக்கும் எந்தவித எதிர்பார்ப்புமின்றி, பொருளாதார ஆதாய நோக்கின்றி, அரவணைக்கும் திருஅவையாக செயல்பட இன்று திருத்தந்தை முழக்கமிடுகிறார்.

ஒரே பாலின உறவு உள்ளம் கொண்ட உறவுகளையும் (ழடிஅடிளநஒரயட ஞயசவநேசளாiயீ) கூட ஒதுக்கிவிடாமல் அவர்களையும் கரிசனையுடன் அணுக திருத்தந்தைக் கேட்டுக் கொள்கிறார். புலம்பெயர்ந்த மக்களையும், அகதிகளையும் அரவணைத்து, திருஅவையில் அவர்களுக்கு மனித மாண்புடன் நீடிய இடமளிக்கத் திருத்தந்தை கேட்டுக் கொள்கிறார். கைம்பெண்கள் முதல் முதியோர் வரை யாரையும் பயன்படுத்தி தூக்கியெறியும் பண்பாட்டை நாம் விட்டுவிட்டு, அனைவரையும் சமூகத்தில் அனைத்து நிலையினரையும் மாண்புடன் இணைத்துக்கொள்ள அழுத்தமாக உரைக்கிறார்

மாற்றுத் திறனாளிகளை தானே அரவணைத்துக்கொள்வது, அவர்களையும் மனிதர்களாக நடத்துவது என்பதையும் தன் செயல்பாடுகள் மூலம் எண்பிக்கிறார். சமூகத்தில் குழந்தைகள் முதல் மூத்தோர் வரை யாரும் புறக்கணிக்கப்படக்கூடாது என்ற செய்தியை தன் பணியின் முன்னுரிமைகளாக திருத்தந்தை பிரான்சிஸ் வெளிப்படுத்துகிறார். எனவே, இவர்களுக்கு இன்றைய திருஅவை உரிய இடமளிப்பது என்பது இப்போது நடைபெறும் 16 வது அகில உலக ஆயர்கள் மாமன்றம் விடுக்கும் அழைப்பாக நாம் நோக்க வேண்டியுள்ளது.

எளியோரை இயேசுவில் காண அழைப்பு

மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்” (மத் 25:40) என்ற இயேசுவின் அழைப்புக்கேற்ப திருஅவையின் மகிழ்ச்சியான கிறிஸ்து பிறப்புக் காலத்தில் இடம் மறுக்கப்பட்ட மரியாவையும், யோசேப்பையும் தேடி குடிலுக்குச் செல்லும் முன், இன்று இடம் மறுக்கப்பட்டு வெளியில் நின்று கொண்டிருக்கும் சகோதர, சகோதரிகளைத் தேடிச் சென்று, அவர்களையும் ஒன்றிணைத்து, அவர்களோடு இணைந்து நடப்பதும், வாழ்வதும், தொடர்ந்து பயணிப்பதுமே இன்று உண்மையான கிறிஸ்து பிறப்பு மகிழ்வாக அமையும்.

Comment