No icon

அருள்சகோ. பெனிட்டோ, சே.ச, அருள்கடல், சென்னை

கிறிஸ்துவைப் போல நாமும் இறங்கி வருவோம்

கிறிஸ்து பிறப்பு விழா என்றவுடனே நினைவிற்கு வருவது என்னவென்று எனது நண்பர்களிடம் கேட்ட கேள்விக்கு இது ஒரு விழா, விடுமுறை நாள், கிறிஸ்மஸ் கேரல்ஸ் இருக்கும், தாத்தா வீடு வீடா வந்து வாழ்த்துச் சொல்வாரு; பரிசு தருவாரு என்று ஒருவர் கூறினார்.குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து வருவோம், வீடுகளில் குடில் செய்வோம், புத்தாடை உடுத்துவோம், நள்ளிரவுத் திருப்பலியில் கலந்து கொள்வோம் என்றார் இன்னொரு நபர். கிறிஸ்து பிறப்பு விழா என்றால் இவை அனைத்தும் நிச்சயமாக இருக்கும்; தனிப்பட்ட அளவில் நமக்கும் நமது குடும்பத்திற்கும் மேற்சொன்ன அனைத்தும் மகிழ்வை அளிக்கும். ஆனால், இவை மட்டும்தான் கிறிஸ்து இயேசுவின் பிறப்புக் கொண்டாட்டமா? இதையும் கடந்து இவ்விழாக் கொண்டாட்டம் நமக்குச் சொல்லும் ஆழமான செய்தி என்னவென்று நாம் சிந்திக்க வேண்டிய அவசியம் உள்ளது.

ஆழமான அர்த்தம்

தமது படைப்பான இவ்வுலகின் மீதும், அதன் மக்களினம் மீதும் கடவுள் அளவுகடந்த அன்பு கொண்டுள்ளார். அதற்கு மாறாக, கடவுள் வெளிப்படுத்திய நல்லொழுக்கங்கள், நற்செயல்கள் மற்றும் நல் வாழ்வின் விழுமியங்களை மனித இனம், தமது தவறுகளாலும், உலகப் போக்கினாலும் மறந்து அவரது அன்பை விட்டு விலகிச் சென்றது. இருப்பினும், இம்மனிதத்தை மீட்கக் கடவுளே விண்ணுலகிலிருந்து மகிழ்வுடன் மண்ணுலகிற்கு மனுவுருவாகி வந்த நாளை நாம் கிறிஸ்து பிறப்பு விழாவாகக் கொண்டாடுகிறோம். இவ்வாறாக, வார்த்தையான கடவுள் மனுவுருவாகி (யோ 1:14) இவ்வுலகில் முழுமையான மனிதராகவே வாழ்ந்த இயேசுவின் வாழ்வை நமது அன்றாட வாழ்வோடு உரசிப் பார்க்கின்ற பொழுது இவ்விழா இன்னும் ஆழமான, அர்த்தம் பெறுகிறது.

இறங்கி வந்த / வரும் இயேசு

வரலாற்றில் கடவுள் தனது ஆற்றலை பலமுறை வெளிப்படுத்தினாலும், தனது நிபந்தனையற்ற அன்பை வெளிப்படுத்தவே தன்னை வெறுமையாக்கி மனுவுரு ஏற்று தனது அன்பை நம்மோடு வாழ்ந்து வெளிப்படுத்துகிறார். இவரது வாழ்வு அன்பின் ஆழத்தை நமக்கு உணர்த்துகின்றது. மேலும், தனது வாழ்நாள் முழுவதும் ஏழை, எளியவர்களைக் கண்ணோக்கி அவர்களோடு தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டார். ஏழைகள், பாவிகள், நோயாளர்கள், பெண்கள், குழந்தைகள் என சமுதாயத்தால் கண்டு கொள்ளப்படாதவர்களை முதன்மைப்படுத்தினார். அதற்காகத் தமது உயிரையும் சிலுவையில் அளித்ததால் கடவுளால் மேன்மைக்கு உயர்த்தப்பட்டார்.

அதிகாரத்தின் பயன்பாடு

மற்றவர்களை தமது கட்டுக்குள் வைத்திருப்பதே ஆட்சி அதிகாரத்தைச் சரியாகப் பயன்படுத்தும் முறை என்ற கருத்து மக்கள் மனதில் ஆழமாக உள்ளது. ஆனால், பணியிடங்களில் தமது அதிகாரத்திற்குட்பட்ட அலுவலர்கள், பணியாளர்கள், பொது வெளியில் மக்கள், குடும்ப உறுப்பினர்கள் ஆகியோரை அடக்கித் தம் முழுக்கட்டுப்பாட்டில் வைத்திருப்பது முறையா? எனச் சிந்திக்க வேண்டும். நமது குடும்பங்களிலும், சமுதாயத்திலும் அதிகாரம் பெற்றவர்கள் பிறரை கட்டுப்படுத்த அதனைப் பயன்படுத்தாமல், முடிந்தவரை பிறரின் நிலைக்கு இறங்கி சென்று அவர்களது திறமைகளையும், படைப்பாற்றலையும் வளர்த்தெடுப்பதற்குப் பயன்படுத்த வேண்டும். மேலும், ஆட்சி அதிகாரங்களைப் பெற்றுள்ளவர்கள் ஏழை, எளியமக்களின் நிலைகண்டு அவர்களுக்காக இறங்கி வந்து அவர்களது வாழ்வின் முன்னேற்றத்திற்காக அவற்றைப் பயன்படுத்திப் பணியாற்றும்போது, இறை மகன் இயேசுவைப் போல உயர்த்தப்படுவர்.

பிறரை மதிக்கும் குடும்ப உறவுகள்

குடும்பம் சமுதாயத்தின் ஓர் அங்கம் என்பது சமூகப்பார்வையாகும். சமூகத்தின் முதல் மற்றும் முக்கிய சொல் குடும்பம் என்று திருத்தந்தை புனிதர் இரண்டாம் ஜான்பால் அவர்கள் கூறுகிறார். வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த குடும்ப உறவுகள் இன்றையச் சூழலில், விட்டுக்கொடுக்காமை, நம்பிக்கைச் சிதைவு, சுய சுதந்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் போன்ற காரணங்களினால் உறவுப் பிணைப்பை விட விரிசல் அதிகமாகிக்கொண்டே செல்கிறது. எனது நிலையை மற்றவர் புரிந்து கொண்டு அதற்கேற்றவாறு அவர்கள் செயலாற்ற வேண்டும் என்று ஒவ்வொருவரும் தன்னை முன்னிலைப்படுத்துகின்ற போது அங்கே விரிசல் இன்னும் அதிகமாகிறது. அதற்குப் பதிலாக, ‘நான், எனதுஎன்ற நிலைகளிலிருந்து இறங்கி வருகின்ற போது குடும்ப உறவு வலுப்படுத்தப்படும். ஆரோக்கியமான குழந்தை வளர்ச்சியும் உறுதி செய்யப்படும்.

கற்போர் நிலைக்கு வரும் கற்பிப்போர்

வகுப்பில் உள்ள அனைத்து மாணவ-மாணவிகளும் ஒரேவிதமான அறிவுக் கூர்மை உடையவர்கள் அல்ல. ஒவ்வொருவரும் தனித்திறமைகளிலும், பல்வேறு பாடங்களைப் புரிந்துகொள்வதிலும் வேறுபாடு உடையவர்களாக இருக்கின்றனர். இது இயற்கையான ஒன்றாகும். ஆகவே, கற்றலில் புலமை பெற்றவர்தமது திறமையை, பல்வேறு காரணங்களினால்  கற்கச் சிரமப்படுபவர்களைப்  புரிந்து அவர்களின் நிலைக்கு இறங்கி வந்து அவர்களுக்குப் புரிகின்ற விதத்தில் சொல்லிக் கொடுக்க வேண்டும். ஆர்வமிருந்தும் கற்றலில் சற்று நேரமெடுத்துக் கொள்பவர்களையும், ஆசிரியப் பெருமக்கள் கருத்தில் கொண்டு அவர்களின் நிலைக்கு இறங்கி வந்து கற்பிக்கின்றபொழுது அவர்களும் கற்று முன்னேற வாய்ப்பு அதிகமாகிறது.

அனைவரையும் சென்றடையும் அறிவியல்

அறிவியல் கண்டுபிடிப்புகளும், பயன்பாடுகளும் மனித வாழ்வை வளப்படுத்துவதோடு எளிமையாக்குகின்றன. நமது அன்றாட வாழ்வின் அங்கமாகிவிட்ட அறிவியல் கண்டுபிடிப்புக்கள் அனைத்தும் அனைவரையும் சென்றடைகின்றனவா? என்ற கேள்வி எழுப்ப வேண்டியுள்ளது. எப்பொழுது ஓர் அறிவியல் படைப்பு அல்லது கண்டுபிடிப்பு சமூகத்தின் அனைத்துத் தரப்பினரையும் சென்று சேர்கிறதோ அப்பொழுதுதான் அக்கண்டுபிடிப்பு வெற்றியைப் பெற முடியும். வியாபார, இலாப நோக்கைக் கடந்து அறிவியல் கண்டுபிடிப்புக்களும், ஆராய்ச்சியும் அனைத்து மக்களையும் சென்றடையும் வகையில் அறிவியல் அறிஞர்களும் கண்டு பிடிப்புக்களும் சாதாரண மக்களையும் நோக்கி இறங்கி வரவேண்டும்.

இடைவெளியைக் குறைக்கும் ஆன்மீகம்

கடவுள் பக்தி மக்களுக்கு இருந்தாலும், கடவுளுக்கும் மனிதருக்கும் இடையே உள்ள இடைவெளி தொடர்ந்தே வருகின்றது. தங்களது வேண்டுதலைக்  கடவுளிடம் எடுத்துச் செல்வதும், அது கிடைத்து விட்ட பிறகு சற்று ஒதுங்கி இருப்பதும் எதார்த்தமான செயலாகி விட்டது. அடையாளச் செயல்களான சடங்குகளுக்கு முக்கியத்துவம் அளித்து, உண்மையான இறை-மனித உறவை வளர்க்க பல நேரங்களில் ஆன்மீகவாதிகள் தவறி விடுகின்றனர். எனவே, ஆன்மீக வாதிகள் மக்களின் நிலைக்கு இறங்கிவந்து, தங்களது மறையுரை, ஆன்மீகக் கருத்துக்கள் மற்றும் எடுத்துக்காட்டான வாழ்வால் இறைவனைப் பற்றிய சரியான புரிதலை மக்களுக்கு அளித்து, கடவுளுக்கும், மக்களுக்கும் இடையே உள்ள இடைவெளியை நீக்கவேண்டியது அவர்களின் தார்மீகக் கடமையாகும்.

வாழ்வில் முன்னேற நமது எண்ணங்களும், செயல்களும் என்றும் மேல் நோக்கிய பார்வை கொண்டிருக்க வேண்டும் என்பது உண்மையே. அதே வேளையில், துன்புறுகின்ற மானிடத்திற்காக, தேவையில் இருப்போருக்காக, எல்லா நிலைகளிலும் நமக்குக் கீழே இருப்பவர்களுக்காக நமது பார்வை கீழ் நோக்கியும் இருக்க வேண்டும். நமது நிலையிலிருந்து இறங்கி வந்து அவர்களின் நிலையை உயர்த்த, அவர்களையும் மேல் நோக்கிய பார்வை கொண்டவர்களாக மாற்ற முயற்சி செய்ய வேண்டும்இவ்வாறு, தேவைப் படுபவர்களுக்கு உதவுவதே சமூகமாற்றத்திற்குத் தேவையான உண்மையான நீதிச் செயலாகும். இச்செயல்கள் வழியாக இயேசு கிறிஸ்து மண்ணுலகிற்கு மனுவுரு எடுத்து இறங்கி வந்த நிகழ்வு நமது வாழ்வில் அர்த்தம் பெறுகிறது.இப்படிப்பட்ட அர்த்தமுள்ள கிறிஸ்து  பிறப்பு விழாவைக் கொண்டாடுவோம்.

அனைவருக்கும் அர்த்தமுள்ள கிறிஸ்து பிறப்புப் பெருவிழா வாழ்த்துக்கள்.

Comment