No icon

தமிழ் மண் ஈன்ற முதல் புனிதர், மறைசாட்சி தேவசகாயம்

தமிழ் மண் ஈன்ற முதல் புனிதர், மறைசாட்சி தேவசகாயம்

 

இறைவனின் திருவுளப்படி ஒரு புதுமையாக மறைசாட்சி தேவசகாயம் அவர்களைப் பற்றிய ஓலக்கோடு திரு. ஜான் அவர்கள் எழுதிய சிறப்பான வரலாற்றுத்தொடர் கடந்த இதழோடு முடிவுக்கு வந்து, அவருக்கு மேற்கொள்ளப்பட்ட புனிதர் பட்டத்திற்கான நடவடிக்கைகள் பற்றிய புதிய தொடரின் தொடர் இக்கட்டுரை முதல் நம்வாழ்வில் இடம் பெறுகிறது. படித்து இன்புறவும்.  மே மாதம் 3 ஆம்தேதி தேவசகாயம் அவர்களைப் புனிதராக அறிவிக்கிற திருச்சடங்கு வத்திக்கானில் நடைபெற உள்ளது. அதற்கான திருப்பீட ஆணை முறைப்படி வெளியிடப்பட்டுள்ளது. 

புனிதர் பட்டத்திற்கான நடவடிக்கைகள்
நம் மறைசாட்சி தேவசகாயம் அவர்கள் 1752 ஜனவரி 14 அன்று காற்றாடி மலையில் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார். அவர் இன்றைய புனிதர். ஒரு மறைசாட்சியாக, ஒரு புனிதராக அன்றே மதிக்கப்பட்டதால்தான் கோட்டாறு ஆலயத்தில் அவரது உடலை நல்லடக்கம் செய்தனர். அவரது வீர மரணம் பற்றி கேள்விப்பட்டதும் கொச்சி மறைமாவட்ட மேதகு ஆயர். கிளமென்ட் ஜோசப் சே.ச. அவர்கள் (அன்று இப்பகுதி அம்மறைமாவட்டத்திற்கு உட்பட்டிருந்தது) தமது மறைமாவட்டத்திலுள்ள அனைத்து ஆலயங்களிலும் நமக்கு ஒரு மறைசாட்சி கிடைத்துள்ளார் என்ற பெருமிதத்தோடு “தெதேயும்” என்ற நன்றிக் கீதம் பாடி இறைவனுக்கு நன்றித் திருப்பலி ஒப்புக்கொடுத்தார். விசுவாசத்திற்காக மறைசாட்சியாக தேவசகாயம் அவர்கள் உயிர் நீத்தார் என்று மறையுரை ஆற்றினார். ஆயரின் அதிகாரத்தோடு இவை நடைபெற்றன. (அடுத்ததாக மறைசாட்சிக்கு 02-02-2012 ஆம் நாள் குமரி மாவட்டம், நாகர்கோவிலில் நடைபெற்ற முத்திப்பேறு விழாவில்தான் “தெதேயும்“ பாடப்பட்டது).
கொச்சி ஆயரின் ஐந்தாண்டு அறிக்கை
மறைசாட்சியாக தேவசகாயம் உயிர்நீத்த நான்காம் ஆண்டு 15-11-1756 இல் கொச்சி ஆண்டகை அன்றைய திருத்தந்தை 14 ஆம் பெனடிக்ட் அவர்களைச் சந்திக்கச் சென்ற தருணத்தில் தமது மறைமாவட்டம் பற்றிய ஐந்தாண்டு அறிக்கையை (குயிங் கேனியல் ரிப்போர்ட்) திருத்தந்தைக்குச் சமர்ப்பித்தார். அதில் இறைஊழியர் தேவசகாயத்தின் வாழ்க்கை, அவர் விசுவாசத்திற்காகப் பட்ட பாடுகள், வீரமரணம், நல்லடக்கம் பற்றிய தெளிவான வரலாறு பற்றி குறிப்பிட்டார். (இதன் தமிழாக்கம்.இத்தொடரில் அடுத்து இடம் பெறுகிறது). 
இது உரோம் இரகசிய ஆவணக் காப்பகத்திலிருந்து அருள்தந்தை ஜான் குழந்தையால் 28-10-2005 ஆம் நாள் கண்டெடுக்கப்பட்டது. இது நமக்கு கிடைத்த ஈடு-இணையற்ற ஆவணம். இது கொச்சி ஆயர் திருத்தந்தைக்கு அதிகாரப்பூர்வமாக அனுப்பிவைத்த, மறைசாட்சி தேவசகாயத்தின் புனிதர் பட்டத்திற்கான முதல் விண்ணப்பம் எனலாம். இவர் ஒரு மறைசாட்சி மட்டுமல்ல; அன்று ஒரு புனிதர் என அறிக்கையிட அது போதுமானது. அவ்விண்ணப்பம் கவனிக்கப்படாமல் இருந்துவிட்டது. இதுபோல் மறைசாட்சியின் பள்ளி நண்பரும், கிறிஸ்தவ மறையைச் சார்ந்தவரும் மன்னரால் தண்டிக்கப்பட்டவருமான புலவர் தொம்மன்திருமுத்து அவர்கள் குறள் வடிவில் ஓலைச்சுவடியில் எழுதிய “வேத சாட்சியின் துயரமான பாதைகள்” என்ற முழு வரலாறு இவரது வாரிசுகளில் ஒருவரான திரு. அமலகிரி எழில் அவர்களால் புனிதர் பட்டக் குழுவில் ஒப்படைக்கப்பட்டது. பிற்காலத்தில் மறைசாட்சியின் வரலாறு தமிழ், ஆங்கிலம், மலையாளம், இத்தாலியன், இலத்தீன், பிரெஞ்சு, இந்தி, ஸ்பானிஷ், கொங்கனி போன்ற மொழிகளில் வெளியாகியுள்ளது. 
மேதகு ஆயர் கிளமென்ட் ஜோசப் சி.லித்தா சே.ச அவர்கள் அன்றைய திருத்தந்தை 14-ம் பெனடிக்ட் அவர்களுக்கு 15-11-1756 ஆம் நாள் இலத்தீன் மொழியில் எழுதிய ஐந்தாண்டு அறிக்கையின் தமிழாக்கம் இதன் விபரம் இதோ:
பேரருள் தந்தையே, எனது மேய்ப்புப்பணி பற்றிய அறிக்கையை தங்களது திருமுன் சமர்ப்பிக்க முன்வந்துள்ளேன். தகுதியற்ற ஊழியனாகிய நான் பொறுப்பேற்றுள்ள கொச்சி மறைமாவட்டத்தின் சூழலமைவு, குருக்கள் மற்றும் மக்களின் மீட்பு இவற்றோடு எந்த விதத்திலாவது தொடர்புடைய எல்லாக் காரியங்கள் பற்றி எதை, எப்படி வரைய வேண்டுமென்று கவலையோடும், கலக்கத்தோடும் தவித்துக்கொண்டிருந்தேன். அந்த வேளையில் திருப்பேராய அவையின் அறிவுரை தற்செயலாக என் கைக்கு எட்டியது. இவ்வறிக்கை ஒரு காலத்தில் தாங்கள் திருப்பேராய அவையின் செயலராக இருந்தபோது தங்களாலே ஆயர்களுக்காக வரைவு செய்யப்பட்டு, கையொப்பம் இடப்பட்டதாகும். ஆயர்கள் திருத்தூதர்களின் கல்லறைகளுக்காக வரைவு செய்யப்பட்டு, கையொப்பம் இடப்பட்டதாகும். ஆயர்கள் திருத்தூதர்களின் கல்லறைகளைச் சந்திக்கும் வேளையில் (ஹன டுiஅiயே ஏளைவை) தாங்கள் பொறுப்பேற்றுள்ள தலத்திருச்சபையின் நிலைகள் பற்றி இதோ திருப்பேராயத்திற்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டிய அறிக்கைகள் எவ்வாறு வரையப்பட வேண்டும் என்பது பற்றியதாகும். இந்த அறிவுரை எல்லாவிதக் கவலையிலிருந்தும் என்னை விடுவித்தது. ஏனெனில் இது நான் கடைப்பிடிக்க வேண்டிய மிகச் சரியான, மிகப் பாதுகாப்பான, மிகச்சிறப்பான வழியைக் காட்டுவதோடு மட்டுமல்லாமல், கடைப்பிடிக்கவும் கற்பிக்கின்றது. மேலும் அந்த வழியிலிருந்து விலகிச் செல்லாமல் எனது ஆற்றலுக்கு ஏற்ப முயல வேண்டும் என்பதை அல்லாமல், வேறு எதையும் எனக்கு அது குறிப்பிடவில்லை. எனவே, எதைச் செய்யப் பணிக்கப்படுகின்றேனோ அதை முழுமனதோடு செய்வேன். இவ்வாறு மகிழ்ச்சியோடு எனது கடமையை நிறைவேற்றுவேன். அவ்வாறே உண்மையும் கடைப்பிடிப்பேன்...
மக்களைப்பற்றி
ஒரு காலத்தில் இந்த மறைமாவட்டத்தில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை பெருமளவில் இருந்ததாக நான் கருதியிருந்தேன். ஆனால், அண்மையில் எனது ஆணைப்படி பங்குத்தந்தையர்கள், மறைபரப்பு பணியாளர்கள் ஆகியோரின் உதவியுடன் எடுத்த மக்கள் தொகைக் கணக்கு அது தவறு எனக் காட்டியது. இந்தக் கணக்கெடுப்பின்படி மக்கள்தொகை ஒரு லட்சத்து இருபதாயிரத்திற்கு அதிகமாக இல்லை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அவர்களுடைய ஒழுக்கம் மற்றும் இறைபக்தி ஆகியவற்றைப் பொறுத்தவரையில் சொல்ல வேண்டியதெல்லாம் அவை பொதுவானவையாகவும், தெரிந்தவையாகவும் உள்ளன. எனவே, பிற காரியங்களை விட்டுவிட்டு இந்நாட்களில் மக்கள் விசுவாசத்தில் நிலைத்திருப்பதிலும் அதைப் பாதுகாப்பிலும் எவ்வாறு சிறந்து விளங்குகின்றார்கள் என்பதிலும் பற்றி மட்டும் குறிப்பிடுவேன். இப்பொழுது நான் சொல்வது இன்று நடந்து கொண்டிருப்பவை பற்றியதாகும்.
மறைமாவட்டத்தின் ஒரு கோடியிலிருந்து ஆரம்பிக்கிறேன். தீவுகளில் கண்டி நாட்டு மன்னன் 1746 ஆம் ஆண்டில் அங்குள்ள கோவில்களைக் கொள்ளையடித்து அவற்றை அழித்தான். பின்னர் மறைப்பரப்புப் பணியாளர் பத்துப்பேரைச் சிறைப் பிடித்தான். சில நாட்கள் அவர்களை விலங்கிட்டு வைத்திருந்தபின், மீண்டும் அவர்கள் கொல்லப்படுவார்கள் என்று அச்சுறுத்தி அவர்களை நாடு கடத்தினான். நான்கு ஆண்டுக்குப் பின்னர் அந்தக் கொடுங்கோலனின் வழித்தோன்றல் அவர்களை நாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்டவர்களைத் தனக்குமுன் ஆட்சி புரிந்தவனின் இறையாட்சியின்மையைப் பின்பற்றி நாட்டை விட்டு வெளியேற மீண்டும் பணித்தான். மேய்ப்பர்களினின்று விடப்பட்ட, ஆன்ம உணவு மறுக்கப்பட்ட ஆடுகள் ஓநாய்களுக்கிடையே என்ன செய்வார்கள்? பலபேர் அழிந்து போயிருந்தாலோ, ஓநாய்களால் சிதறடிக்கப்பட்டிருந்தாலோ, விசுவாசத்தைக் கைவிட்டு செங்குத்தான மலைப்பகுதிகளில் அலைந்து திரிந்தாலோ வியப்பதற்கு ஒன்றுமில்லை. மாறாக, பரிதாபத்திற்குரிய இக்கிறிஸ்தவர்களில் பலர் அருளடையாளங்களால் வலிமை பெறுவதற்காக, நான்கு, ஐந்து அல்லது சில வேளைகளில் பன்னிரண்டு நாட்கள் பயணம் செய்து, தங்கள் நாட்டுக்கு வெளியிலுள்ள மறைப்பரப்புப் பணியாளர்களிடம் சென்றார்கள் என்பது வியப்புக்குரியதும், சிந்தனைக்குரியதுமாகும். இன்னும் அதிகமாய் வியப்புக்குரியது என்னவென்றால், தளர்ச்சியுற்ற வயதான பெண்மணி ஒருவர் ஒருசமயம் மற்றவர்களோடு புறப்பட்டு சென்றபோது, முதுமை களைப்பு மற்றும் திடீரென்று ஏகப்பட்ட நோய் ஆகியவற்றின் காரணமாகப் பாதிக்கப்பட்டு, உடன் பணியாளர் இருந்த இடத்தை கடைசியாக ஒரு மாதத்திற்குப் பின்னர் அடையும்வரை கால்நடையாகச் சென்றார். அவர் பயணத்திற்காக அவர் எதிர்பார்த்த பரிசு பாவங்களிலிருந்து விடுதலை பெறவும், விண்ணக உணவால் ஊட்டம் பெறவும், தமக்கு வாய்ப்புக் கிடைக்க வேண்டும் என்பதே அல்லாமல் வேறொன்றும் இல்லை என்பதாகும்.
டச்சுக்காரர்களின் கட்டுப்பாட்டிலிருந்த  இடங்களில் வாழ்ந்து வந்த கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களும் அவர்களால் பெரிதும் துன்புறுத்தப்பட்டார்கள். ஏனெனில் அம்மக்கள் பதிதர்களான போதகர்களால் நடத்தப்படும் வழிபாடுகளில் பங்கெடுக்க, அவர்கள் முன்னிலையில் திருமணங்களைக் கொண்டாட, திருமுழுக்குப் பெறுவதற்கென தங்கள் குழந்தைகளை அவர்களிடம் அளிக்க, மேலும் தவறான கொள்கைகளைப் புகுத்தும் அவர்களுடைய கல்வி நிலையங்களுக்குத் தங்கள் பிள்ளைகளை அனுப்ப, இவைபோன்ற இன்னும் பலவற்றைச் செய்ய மறுத்தார்கள். அவர்கள் சட்டங்களையும், ஆணைகளையும் அவ்வப்போது கொடுத்து இவற்றை நிறைவேற்றுமாறு பணித்தார்கள். மறுத்தவர்களில் பலர் பணம் செலுத்தும் தண்டனைகளாலும், சிறைவாசத்தாலும், நாடு கடத்தப்பட்டும் தண்டிக்கப்பட்டார்கள். சிலர் கட்டாய வேலைக்குத் தள்ளப்பட்டார்கள். இவ்வேலைகளை இவர்கள் கை, கால்களில் சங்கிலியால் பிணைக்கப்பட்ட நிலையில் செய்யவேண்டியிருந்தது. மூன்று பேர் தூத்துக்குடிக்கு அருகிலுள்ள ஒரு தீவுக்கு அனுப்பப்பட்டு அங்கே மேற்குறிப்பிட்டவாறு வேலை செய்யப் பணிக்கப்பட்டார்கள். அங்கே ஒருவர் நான்கு மாதங்களுக்குப் பின் இறந்துவிட்டார். எஞ்சிய இருவரும் மிகுந்த வீரத்துடன் ஐந்து ஆண்டுகளாகப் பயங்கரமான கொடுமைகளைத் தாங்கினார்கள். கத்தோலிக்கர்கள் எல்லாரும் தங்கள் விசுவாசத்தையும், மதத்தையும் வெளிப்படையாக அறிக்கையிட்டவர்களாய் ஆட்சியாளர்களிடம் பல இடங்களில் ஒன்றுக்கூடித் தங்களுக்கென்று கேட்டு நின்றார்கள். “நாங்கள் டச்சு அரசுக்கு உட்பட்டு அதற்கு எல்லாவற்றிலும் கீழ்ப்படிவோம். எனினும் எங்கள் மதத்தையும் மற்றும் மனச்சான்றுக்கும் கீழ்ப்படிவோம். எங்கள் மதத்தையும் மற்றும் மனச்சான்றையும் தொடுகின்றவற்றில் கீழ்ப்படிய மாட்டோம்” என்று கூறினார்கள். இவற்றில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம் என்று மனிதர்களுக்குக் கீழ்ப்படிவதைவிட, கடவுளுக்கே கீழ்ப்படிவோம் என்றும் எடுத்துரைத்தார்கள்.
(தொடரும்)

Comment