No icon

இன்றைய குருத்துவம் மற்றும் இறையழைத்தலின் சவால்கள்

இன்றைய குருத்துவம் மற்றும் இறையழைத்தலின் சவால்கள்

-திரு. செல்வதுரை-பென்னி, திருவொற்றியூர்

அண்ட சராசரங்களைப் படைத்த கடவுளின் ஒரே திருமகனான எம்பெருமான் இயேசுவையே தன் இரு கரங்களில் தாங்கி பிடிக்கும் மிகவும் உன்னதமான செயலை செய்யும் குருத்துவத்தை மதிப்பிடுவதற்கு வார்த்தையே இல்லை என்று பெருமையோடு சொல்லலாம். "குருத்துவம்" என்பது எம்பெருமானையே மக்களிடம் இணைக்கும் அன்பு பாலமாக இருக்கிறது.
பண்டைய காலங்களில் ஆடு, மாடு, புறாக்கள் இவைகளையே ஆண்டவருக்கு, குருக்கள் மூலமாக பலிப் பொருளாக கொடுத்தார்கள். இதுமட்டும் அல்ல; ஆண்டவருக்கு தூபம் காட்டுவது மிகவும் உன்னதமானது. செக்கரியா அவர்களும் ஆண்டவருக்கு தூபம் காட்டினார்கள்.  இதுவும் ஓர் அன்பான குருத்துவம் தான். ஆபிரகாம் கூட தன் மகனையே ஆண்டவருக்கு பலி கொடுக்க போனார். ஆனால், கடவுள் அவர்தம் விசுவாசத்தை பாராட்டி, ஈசாக்கை பலியிடாமல் தடுத்து காப்பாற்றி, திரும்பி அவரிடமே கொடுத்து அனுப்பினார். 
இவையெல்லாம் நினைத்துதான் என்னவோ ஆண்டவர் தன்னையே பலிப் பொருளாக கொடுத்தார். குருக்கள் மூலமாக அப்பத்தையும், திராட்சை ரசத்தையும் தன் உடலாகவும், ரத்தமாகவும் தன்னையே பலிப் பொருளாக கொடுத்தார். தன் சீடர்களிடம் கூறிய ஆண்டவர், ’வாழையடி வாழையாக’  இவையே நம் குருக்கள் மூலமாக வெளிப்படுத்தி உள்ளார். நமது குருக்கள் நம்மை போன்றவர்கள்தான். அவர்கள் குருபட்டம் வாங்குவது எம்பெருமானின் விருப்பம்தான். அவர்களும் மனிதர்கள் தான் எனவே, அவர்கள் சிறுசிறு தவறுகள் செய்தாலும் அதையே பெரிதாக எடுத்து செயல்படுவது அவ்வளவு நல்லது அல்ல.
பாவசங்கீர்த்தனத்தில் நமது பாவங்களுக்கு மன்னிப்பு கொடுத்து அரிய பெரிய செயலைச் செய்து நம்மை ஆண்டவரிடம் இணைக்கும் பாலமாக ஆக்குவது குருக்களே. அவர்களுக்காக நாம் வேண்டுவது நல்லது. நமது குடும்பத்தில் அப்படி ஒரு சம்பவம் நடந்தால் நாம் என்ன செய்ய வேண்டும்? ஆகவே, குருக்களும் நம்மவர்களே என்று நினைக்க வேண்டும்.
70 ஆண்டுகளுக்கு முன் இருந்த குருக்களுக்கும், இப்போது உள்ள குருக்களுக்கும் ஒப்பிட்டு பார்த்தால் பலவாறு மாற்றங்கள் உள்ளன. முன்பு இருந்த குருக்கள் பட்டம் வாங்குவதற்கு நிறைய ஒழுக்கம் , கட்டுப்பாடுகள் இருந்தன. இராயபுரம் வியாகுலமாதா கோயிலில் ஒரு குருவானவர் இருந்தார். Fr. Soupe ஜெர்மன் குருவானவர். பூசை நடக்கும்போது நாய் உள்ளே வந்துவிட்டால், பூசை செய்வதை நிறுத்திவிட்டு பிறகு நாயை வெளியே துரத்த சொல்லுவார். பிறகுதான் பூசை தொடரும். மற்றொரு குருவானவர் அவரும் இராயபுரம் Fr. Sluze கட்டைவண்டியை இழுத்துக்கொண்டு தெருதெருவாக வருவார். நாங்கள் (Alter Boys) ஒவ்வொருவரும் ஒரு பையை எடுத்துக்கொண்டு வருவோம். ஒவ்வொரு வீட்டின் முன் நிற்போம். வீட்டில் உள்ளவர்கள் துணிமணிகளை பையில் போடுவார்கள். அதை எடுத்து கட்டைவண்டியில் போடுவோம் பிறகு குருவானவர் கட்டைவண்டியை இழுத்துக்கொண்டு வருவார். கிறிஸ்துபிறப்பு நாளுக்கு முந்தின நாள்  அதை ஏழை மக்களுக்கு கொடுப்பார். இதை எதற்காக சொல்கிறேன் என்றால் அவ்வளவு தியாக மனப்பான்மை, வித்தியாசம் இருந்தது அந்தக்காலத்தில்.  
இந்த குருக்களுக்கு பிறகு Fr. ஜான் கொட்டாரமும் வந்தார். மாலையில் தேவ நற்கருணை ஆசீர்வாதம் நடக்கும்போது பிள்ளைகள் எப்படி இருக்கிறார்கள் என்று கவனிப்பார். பெண் பிள்ளைகள் யாராவது சிரித்து பேசிக்கொண்டு இருந்தால் அருகில் வந்து நொக்கென்று கொட்டுவார். பெற்றோர்களும் குருக்கள் செய்வதை நல்லதே என்று சொல்லுவார்கள். குச. ஜான் கொட்டாரமும் மிகவும் அருமையான குருவானவர். 
ஒரு நாள் இராயபுரம் வியாகுல மாதா கோயிலுக்குள் நான் விளையாடிக்கொண்டிருந்தேன். ஒவ்வொரு நாற்காலியின் மேலும் ஏறி தாவி தாவி ஓடி வந்தேன். இதை குருவானவர் Fr. ஜான் பிள் லிட்டில் பார்த்துவிட்டார். அவ்வளவு தான் என்னை பிடித்து அவர் அழைத்துச் சென்றார். அறைக்குள் போனதும் (படிகட்டு ஏறிதான் போகவேண்டும்) கதவை சாத்திவிட்டு, பிரம்பை எடுத்து அடி, அடி என்று அடித்து விளாசிவிட்டார். நானோ ஐயோ, ஐயோ, ஐயோ என்று கத்தினேன். பிறகு இந்த மாதிரி செய்வாயா, கடவுள் இருக்கும் இடத்தில் இந்த மாதிரி செய்யக்கூடாது என்று சொல்லிவிட்டு முகத்தை கழுவச் சொன்னார். பிறகு பெரிய கேக் ஒன்றை கொடுத்து கொஞ்சம்கூட வைக்காதே, சாப்பிடு என்று சொன்னார். அடிவாங்கியதை மறந்துவிட்டேன். சில அறிவுரைகளை கூறிவிட்டு,  இனிமேல்  ஒழுங்காக  நடந்துக்கொள் என்று புத்திமதி சொல்லிவிட்டு அனுப்பினார். பல வருடங்களுக்கு பிறகு திருவொற்றியூரில் உள்ள St. Pauls Church-க்கு சென்றேன். அப்போது அந்தக் குருவானவரைப் பார்த்து மிகவும் ஆச்சரியப்பட்டேன். இராயபுரத்தில் வியாகுலமாதா கோயிலில் இருந்தவர், என்னை பிரம்பால் அடித்த முன்னாள் பங்குதந்தை குச. ஜான் பிள் லிட்டில்.  எனக்கு பேச்சே வரவில்லை. என்னைப் பார்த்துவிட்டு, ஏன்டா இப்போதுதான் தெரியுமா? ஏன் என்னை வந்து பார்க்கலாம் அல்லவா? என்று கேட்டார். நீங்க இங்கே இருக்கிறது எனக்கு தெரியவில்லை Father என்று சொல்லிவிட்டு அவரை கையெடுத்து கும்பிட்டேன். சிறிதுநேரம் பேசிவிட்டு வந்தேன். பிறகு நான் கேள்விப்பட்டேன், செங்கல்பட்டில் இருசக்கர வண்டியில் போகும்போது இறந்துவிட்டார். நான் மிகவும் வருத்தப்பட்டேன். மறக்கமுடியவில்லை. இவையெல்லாம் எதற்காக சொல்கிறேன் என்றால் தியாகம் உள்ளவர்கள் கடவுளுக்கு உண்மையாக இருந்தவர்கள் என்று அப்போது எனக்கு தெரியவில்லை. வீடு மந்திரிப்போ, பல கோயில் காரியத்திற்கு கூப்பிட்டால் உடனே வருவார்கள். ஆனால், Fr. Soupe அவர்கள் தமிழ் சரியாக வராது, ஆனால் ஓரளவு தமிழ் பேசுவார். 
குருமாணவர்கள் அக்காலத்தில் குருக்கள் பட்டம் வாங்குவது சாதாரண விஷயம் அல்ல, பல பயிற்சிகள் நடத்துவார்கள். வீட்டிலிருந்து குருமாணவர் மடத்துக்கு அனுப்புவது ஒரு பாக்கியமாகவே கருதுவார்கள். ஒரு குருமாணவர் இருந்தார். குருபட்டம் வாங்குவதற்கு முன்னால் அவருக்கு உடல் நலம் சரிவர இல்லை, பட்டம் கொடுக்கவில்லை. மற்றொரு குருமாணவர் இருந்தார். அவருடைய குடும்பம் சரியில்லை, ஆனால் நேர்மையானவர், கடவுள் பக்தி நிறைந்தவர். அவருக்கும் பட்டம் கொடுக்கவில்லை.
Fr. ஜான் கொட்டாரமும், Fr.. ஜான் பிள் லிட்டில் இருவரும்  இறந்துவிட்டார்கள்Fr.  Soupe, Fr. Sluze அவர்கள் கடைசி காலத்தில் தங்கள் சொந்த நாட்டிற்குச் சென்று விட்டார்கள்.Frச. Manni (Fr. மாணி) என்று ஒரு குருவானவர் இருந்தார். அவரும் இராயபுரத்தில் வியாகுலமாதா கோயிலில் இருந்தவர். அவர் ஞானோபதேசம் வகுப்பிற்கு வருவார். அது எங்கே என்றால் St. Pauls Chruch - St.Peter's Hr.Sec.School. அங்கு Fr. மாணி அவர்கள் எங்களுக்கு வகுப்பு நடத்துவார். பிறகு கேள்வி கேட்பார். என்னையே கேள்வி கேட்பார். உனக்கு சந்தேகம் இருந்தால் கேள் என்று சொல்லுவார். அப்போது நான் ஆதாம், ஏவாள் பாவம் செய்வார்கள் என்று கடவுளுக்கு தெரியும் அல்லவா, ஏன் அவர்களை படைக்க வேண்டும்? மேலும் யூதாஸ் இஸ்காரியுத்தை ஏன் படைக்க வேண்டும் அவர் தன்னைக் காட்டிக்கொடுப்பார் என்று தெரியும் அல்லவா? என்று கேட்டேன். அதற்கு 30 நிமிடங்கள் மேல் எங்களுக்கு பதில் சொல்வார். ஒவ்வொருவரும் சுதந்திரம் கொடுத்து இருக்கிறார்கள். மேலும் என் எண்ணங்கள் உன் எண்ணங்கள் அல்ல; உன் எண்ணங்கள் என் எண்ணங்கள் அல்ல என்று பல பதில்களை சொல்வார்.
மேலும் ஓர் உண்மை நிகழ்ச்சியை சொல்ல விரும்புகிறேன். Fr. இராயப்பா அவர்கள் St. Pauls Churchல் பங்கு குருவானவராக இருந்தபோது நடந்த சம்பவம். இதை மறக்க முடியவில்லை. கோயிலில் திவ்ய பலி பூசை முடிந்து மக்கள் கோயிலைவிட்டு வெளியே வந்தார்கள். நானும் என் மனைவியும் வெளியே வந்தோம், அப்போது நாங்கள் குருவானவரைப் பார்த்து "ஸ்தோத்திரம் Father" என்று வாழ்த்து தெரிவித்தோம். ஆனால், அவர் என்ன செய்தார் தெரியுமா? உடனே அவர் மண்தரையில் முட்டிபோட்டு நாங்கள் அந்தக்காலத்தில் "சர்வேசுரனுக்கு ஸ்தோத்திரம்" என்று சொல்லுவோம் என்று சொன்னார். அவர் மேல் எங்களுக்கு தனி பக்தி எப்போதும் இருக்கும்.
குருத்துவம் என்பது சாதாரண விஷயம் அல்ல. எம்பெருமானையே தன் இருகரங்களால் தாங்கி பிடிக்கும் புதுமை எல்லாருக்கும் கிடைக்காது. ஆகையால் குருக்களை பாராட்டுவோம். நம் ஞானமேய்ப்பர்களான குருக்களுக்கு நம்மால் ஆன உதவிகளைச் செய்வோம்.

Comment