No icon

தாத்தா பாட்டி வேண்டும்!

1991 முதல் உலக அரங்கில் ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் முதல் தேதி அகில உலக முதியோர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த உலகளாவிய பார்வையில் முதியோர் என்னும் போர்வை யின்கீழ் 60வது அகவையைத் தாண்டிய அனைவரையும் ஒருங்கிணைத்தாலும், இந்தியா போன்ற வளரும் நாடுகளில் 70 வயதை எட்டியவர்களும் தாங்கள் முதுமை எய்திவிட்டதாகக் கருத முடியாத கட்டாயத்தில் கடுமையாக  தொடர்ந்து உழைக்க நிர்ப்பந்திக்கப் படுகின்றனர்.
திருஅவை தன் திருவழி பாட்டுத் திட்டத்தில் ஜூலை 26ஆம் தேதியன்று இயேசுவின் தாய்வழித் தாத்தா பாட்டி என்று புனித யோவாக்கீம் புனித அன்னா இவர்களை நினைவு கொண்டாட்டமாக நிறுத்துகிறது.
"யார் என் தாய்? யார் என் சகோதரர்கள்?" (மத் 12:48) என்று வினா எழுப்பும் இயேசுவிடம் "யார் உமது தாத்தா? யார் உமது பாட்டி?" என்று கேட்கத்தான் தோன்றுகிறது. ஆபிரகாம் லிங்கனிடம் ஒருமுறை அவரது மூதாதையர் பற்றிக் கேட்டபோது, ‘எனது தாத்தா யார் என்று எனக்குத் தெரியாது. ஆனால் அவருடைய பேரன் எப்படிப்பட்ட வனாக இருப்பான் என்பதுதான் எனக்கு முக்கிய கவலை’ என்று பதிலிறுத்தார். இயேசு இந்தக் கருத்தைக் குறிப்பிடும்போது, ‘ஒவ்வொரு மரமும் அதனதன் கனியாலே அறியப்படும்’ (லூக் 6:43) என்று சொல்வார். இன்று தரமாகக் கனிகின்ற காய்களுக்கு நேற்று வரமாக வைக்கப்பட்டு வளர்க்கப்பட்ட மரங்கள்தாம் காரணங்களாக இருக்க முடியும்.
மூப்பும் முதுமையும் முக்கிய மன்றோ!
வயதில் முதியோரும் நம் தலைமுறைகளில் முன் னோரும் நமக்குப் பயன்படுகிறார்கள் (they are useful) என்பதைவிட அவர்கள் நமக்குத் தேவைப்படுபவர்கள் (we need them) என்பது அவர்களுடைய முக்கியத்துவத்தை முன்னிறுத்துகிறது. இந்தப் பெரியவர்கள் உடல்கட்டு குறைந்து, பலம் கரைந்து, தோல் சுருங்கி, நவீன ஈர்ப்பு ஏதுமின்றி தோற்றத்தில் வனப்பிழந்து இருப்பதோடு, ஒருவிதத்தில் சற்று பாரமானவர்களாக, சுமக்கப்பட வேண்டியவர்களாக, சகித்துக்கொள்ள வேண்டியவர்களாக இருந்தாலும், அவர்களின் பட்டறிவும் அனுபவ முதிர்ச்சியும் தியாக முயற்சிகளும் நமது சிறப்பு அக்கறைக்கு அவர்களைத் தகுதியுடையவர்களாக, தாங்கிப் பிடிக்க வேண்டியவர்களாக உயர்த்துகிறது. ‘அவரது அறிவாற்றல் குறைந்தாலும் பொறுமையைக் கடைபிடி; நீ இளமை மிடுக்கில் இருப்பதால் அவரை இகழாதே’ (சீஞா 3:13).
விவிலியப் பின்னணி உலகில் ஒரு மாமனிதரை முன்மொழியும் போது அவருடைய தலைமுறைப் பட்டியலைத் தாக்கல் செய்வது இன்றியமையாத பாரம்பரியமாகும். இவ்வாறு முதல் மனிதன் ஆதாமுக்கு (தொநூ 5:1-32), அருள் பார்வை பெற்ற தனிமனிதர் நோவாவுக்கு (தொநூ 10:1-32), முக்கிய மனிதர் ஆபிரகாமுக்கு (தொநூ 11:27-30), ஈடிணையில்லா மானிட மகனான இயேசுவுக்கு (மத் 1:1-17, லூக் 3:23-38) வழி மரபு அட்டவணைகள் கோர்த்தெடுத்து உருவாக்கித் தரப்படுகின்றன. காரணம், ஒருவர் வாழ்வின் உயரங்களை எட்டுவதற்கும் உச்சங்களைத் தொடுவதற்கும் அவரவரது திறமை, முயற்சி, கொடுப்பினை, அதிர்ஷ்டம் மற்றும் சக்தி, புத்தி, யுக்தி போன்றவற்றைக் காரணிகளாக்கினாலும், ஒருவருடைய வாழ்வின் மேம்பாட்டில் நம் கண்ணுக்குத் தெரியாத வேர்களாக, ஏன் ஆணிவேர்களாக, அவரை முன்னே உந்தித் தள்ளுவதும் ஊக்கப்படுத்தி மேலே உயர்த்திப் பிடிப்பதும் அவரவர்களின் தலைமுறைப் பட்டியலில் இடம்பெறும் முதியோர்களும் முன்னோர்களும் ஆவார்களன்றோ!
இறையியல் மற்றும் விவிலியக் கண்ணோட்டத்தின்படி, மீட்பு வரலாற்றில் இயேசுவுக்கான முக்கிய அடையாளம் அவர் தாவீதின் வழிவந்தவராக, வழித்தோன்றலாக வழிமொழியப்படுவதாகும் (மத் 1:1; 22:41-46). ஆனால் திருஅவை சற்று வித்தியாசமாக, நேரடியான, அழுத்தமான குறிப்பு திருவிவிலியத்தில் காணப்படாத நிலையிலும், மனுவுரு ஏற்ற இயேசுவுக்கு (யோவா 1:14), பெண்ணிடம் பிறந்தவராக வந்த இயேசுவுக்கு (கலா 4:4), நம்மில் ஒருவராக மாறிய இயேசுவுக்கு (எபி 2:17), தம் சகோதர சகோதரிகளை நம் மத்தியில் இருக்கச் செய்த இயேசுவுக்கு (மாற் 6:3) ஒரு மூதாதையர் மரம், ஒரு வம்சாவழி மரபு சங்கிலி இருந்திருக்க வேண்டும் என்பதால், 100 விழுக்காடு கடவுளான அவர் 100 விழுக்காடு மனிதத்தையும் தழுவிக் கொண்டார் என்பதைச் சாத்திய மாக்கவும், சத்தியமாக்கவும் அவர் தம் தாய்வழி மரபில் அவருக்குப் பாட்டியாக அன்னாவையும், தாத்தாவாக யோவாக்கீமையும் பாரம்பரிய பின்புல பலத்தில் முன்வைத்து, ஆண்டுதோறும் நாம் அவர்களை நினைவுகூர்ந்துக் (யள அநஅடிசயைட) கொண்டாடச் செய்கிறது.
மன அழுத்தங்கள், மனப் புழுக்கங்கள், மன இறுக்கங்கள் நிறைந்த இன்றைய வாழ்க்கைக் களத்திலே 60 ஆண்டுகள் பயணித்தால்தான் "பெரியவர்" "முதியவர்" என்ற தகுதி கிடைக் கும் என்னும் நிலை தடுமாறி, தலையில் நரைத்தட்டும் முன்பே சுகவீனங்களும் சுமைகளும் நெருக்கடிகளும் வாழ்வில் தரைதட்ட, வசந்தங்கள் குறைந்து முன்கூட்டியே மூப்பும் மூச்சுத்திணறலும் வாழ்வைச் சுமையாக்குவ தால், இன்று முதுமையைக் கணிக்க வயது ஓர் அளவீடாக இல்லாமல் போயிற்று. உண்மை யாதெனில், இன்று முதுமை இளமையைச் சூறையாடுகின்றது,பிற்காலம் முற்காலத்தை ஊனமாக்குகிறது. நாளை வர வேண்டிய நோய் நொடிகள், வலி வருத்தங்கள், இயலாமை இல்லாமைகள், எல்லாம் இன்றே மனத்தை ஆக்கிரமித்து வாழ்வை ஆட்டிப் படைக்கின்றன. இந்தச் சூழலில் முதுமை இரண்டாம் குழந்தைப்பருவம் (Old age is second childhood) என்னும் நிலைமை மாறி, ஏற்கெனவே இளமையை யும் வளமையையும் சூறையாடி விட்ட முதுமை இரண்டாம் கட்ட சுமையாக மீண்டும் சுமக்கப்பட வேண்டிய கட்டாயமாகிவிட்டது.
சமூகக் கௌரவத்தை முன்வைத்து நியமானத் தயக்கத்தை ஏற்படுத்தும் இந்தியக் கலாச்சாரப் பின்னமைவால் நம் நாட்டில் முதியோர் இல்லங்கள் சற்று பதுக்கியே வைக்கப்பட்டுள்ளன. முதியோரை அங்கு சேர்த்துவிடும் நிகழ்வுகளும் மறைவாகவே அரங்கேறிக் கொண்டுள்ளன. ஆனால் உறவுகளை இரண்டாம் மூன்றாம் நிலைக்குத் தள்ளி வைத்துவிட்ட மேற்கத்தியக் கலாச்சாரச் சீரழிவு, முதியோர் இல்லங்களை எல்லாராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நியாயப்படுத்தப்பட்ட இன்றியமையாததாகப் பட்டியலிடப்பட்ட இன்றைய வாழ்வின் வெளிப்படைக் கூறாக, படிக்கின்ற பிள்ளைக்குப் ‘பள்ளிக்கு அடுத்த கட்டம்’ கல்லூரி என்று சொல்வதுபோல, மூப்பு எட்டிய முதியவர்க்கு ‘வீட்டுக்கு அடுத்த கட்டம்’ முதியோர் இல்லமாக மாறிவிட்டது.
நம் வீட்டுத் திண்ணையிலும் கட்டிலிலும் சரிந்து சாய்ந்துக் கிடக்கும் முதியவர்கள், சந்தை வாசலிலும் கோவில் முகப்புகளிலும் அன்னதான சாலைகளிலும் முடங்கிக் கிடக்கும் முதியவர்கள், பணி ஓய்வு என்ற நிர்ப்பந்தத்தில் தங்களுக்கு ஊதியம் இல்லை ஆனால் ஓய்வூதியம் அல்லது முதியோர் உதவித்தொகை மட்டுமே என்ற பிணியுற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள பல முதியவர்கள், சொத்து சுகம் என்று தன் தலைமுறைகளுக்காகச் சம்பாதித்துச் சேர்த்து வைத்து சாதனை செய்துவிட்டு இன்று வீட்டின் சொத்தைகளாக, செத்தைகளாக மூலையிலே ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள முதியவர்கள், தள்ளாத வயதில் தரமான காரியங்களைத் தாமாகச் செய்ய முடியாத நிலையில் கைக்கோல்களாகத் தாங்கிப் பிடித்து உடன்வரும் உறவுகள், உள்ளங்கள், உணர்வுகள் இல்லாத முதுமையின் வறட்சியைச் சந்தித்து சுவாசித்துக் கொண்டிருக்கும் முதியவர்கள் - இவர்களுக்குப் பாட்டி புனித அன்னாவையும் தாத்தா புனித யோவாக்கீமையும் பாதுகாப்புப் புனிதர்களாக (ஞயவசடிn ளுயiவேள) அறிவிப்பு செய்து, நினைவு கொண்டாடினால் மட்டும் போதுமா? வாழ்வின் அந்திப் பொழுதை அனுபவிக்கத் தொடங்கியுள்ள முதியவர்களின் மூப்பு, இளவல்களுக்குத் தரப்படும் இனிய வாய்ப்பு. "நேற்று அவர்கள் எனக்குச் செய்ததற்கு இன்று நான் அவர்களுக்குச் செய்வதையே நாளை எனக்கு ஒருவர் செய்வார்" என்ற வாழ்வின் கட்டாயத் தத்துவத்தைத் தமதாக்கிக் கொள்ளும் பேரன் இயேசுவாக நாம் மாற இந்த நினைவுக் கொண்டாட்டம் அறைகூவலிட்டு அழைத்து அருள் சேர்க்கிறது. 

Comment