No icon

உயிர்ப்பு 3ஆம் வாரம்

எம்மாவுஸ் சம்பவம் எடுத்துரைக்கும் உயிர்த்த இயேசுவின் பரிமாணங்கள்.

திப 2:14 22-28 1 பேது 1:17-21 லூக் 24:13-35

உயிர்ப்பு அனுபவம்
உயிர்த்தபின் பூமியில் நாற்பது நாள்கள் வாழ்ந்த இயேசு தமது மாட்சியடைந்த உடலின் சில பரிமாணங்களைத் தெளிவாக்குகின்றார். இந்த ‘நாற்பது’ ஒரு அடையாள எண். உயிர்ப்பு முற்றிலும் உண்மையானது என்பதைத் திருத்தூதர்களும் மற்றும் அவருக்குத் தெரிந்தவர்களும் முழுமையாக அறிந்து உள்ளத்தில் உணர்ந்து நற்செய்தி அறிவிக்கும் தாகம் கொள்ளும் வரை பூமியில் நடமாடினார் என்று பொருள்கொள்வதே சிறந்தது. இயேசு திருத்தூதர்களுடன் வாழ்ந்த மூன்று ஆண்டுகளைவிட இந்த நாற்பது நாள்கள் அவர்களின் நற்செய்தி அறிவிப்பு தாகத்தை வளர்த்து அவர்களைப் புது மனிதர்களாக வார்த்து எடுத்தன என்பது வெள்ளிடைமலை. யூதர்களுக்குப் பயந்து கதவுளை அடைத்துக்கொண்டு முடங்கிக் கிடந்தவர்கள், தாங்கள் பார்த்ததையும் கேட்டதையும் தொட்டு உணர்ந்ததையும் (1 யோவா 1:1) எங்களால் அறிவிக்காமல் இருக்க இயலாது, என்ற உள்ள உறுதியையும் உத்வேகத்தையும் கொடுத்தது இந்த உயிர்ப்பு அனுபவமே. தாங்கள் அரியணையின் அருகில் அமர்ந்து ஆட்சிசெய்யும் (மத் 19:28) கனவுகள் எல்லாம் தகர்ந்துவிட்டதை உணர்ந்து, கலிலேயா திரும்பி மீண்டும் திபேரியாக் கடலில் மீன்பிடிக்கும் தொழிலைத் துவங்கிவிட்டவர்களை (யோவா 21:1தொ), மந்தையை முழுமையாக அன்பு செய்து அதற்காக உயிரையும் தரக்கூடிய துணிவைத் தந்ததும் இந்த உயிர்ப்பு அனுபவமே. நேராகக் கண்டு காயங்களில் விரலைவிட்டால் தான் நம்புவேன் என்று கூறிய தோமாவை இயேசுவே கடவுளின் முழுமையான வெளிப்பாடாகவும், அவரையே தம் சொந்தக் கடவுளாகவும் ஏற்றுக்கொள்ளும் நிலையை உருவாக்கியது இந்த உயிர்ப்பு அனுபவமே. கிறிஸ்தவத்தை அழித்துவிட வேண்டும் என்ற முனைப்புடன் கொலை பல செய்தவரை, குதிரையிலிருந்து விழுத்தாட்டி பிற இனத்தாரின் திருத்தூதராக்கியதும் உயிர்த்த இயேசுவேதான் (திப 9:1தொ). அமைதி தேடும் உள்ளங்களின் ஆழத்தில் அசைவாடும் ஆன்மிக ஆற்றல் (லூக் 24:36) என்ற உணர்வைக் கொடுத்ததும் உயிர்ப்பு அனுபவமே.  பல்வேறு இனத்தைச் சார்ந்த 3000 பேர்களை ஒரே நாளில் மனம்மாற்றியலும் உயிர்த்த கிறிஸ்துவின் வல்லமையே. இன்றைய நற்செய்தியில் வரும் இருவர் 12 திருத்தூதர்கள் குழுவைச் சேர்ந்தவர்கள் அல்ல. திருத்தூதர் பணி திருமுழுக்குப் பெற்ற அனைத்துக் கிறிஸ்தவர்களையும் திருத்தூதர்கள் என்றே கருதுகின்றது (மத் 28:19). அதாவது, இயேசுவின் மீது நம்பிக்கை கொள்ளும் அனைவரோடும் உறைகின்றார். 

நம்பிக்கையற்ற சூழலில் மனஉறுதி தரும் இயேசு
வாழ்வில் தடம்புரண்ட சமயங்களில், வாழ்வோடு போராடி தோற்றுப்போன நாள்களில், வாழ்வில் நம்பிக்கை இழந்து ‘இதுபோதும் ஆண்டவரே என்னை எடுத்துவிடு’ என்று கதரும் மனிதர்கள் ஏராளம். திருத்தூதர்களின் வாழ்வில் இது கலக்கம் நிறைந்த (லூக் 24:17) குழப்பமான தருணம். இயேசு இஸ்ரயேலை உரோமையர் பிடியிலிருந்து மீட்பார், தாமும் அவரது அரசாட்சியில் பங்கெடுப்போம் என்ற அவர்களின் கனவு மெய்ப்படவில்லை என்ற விரக்தியில் அனைவரும் தங்களின் கால்ப்போன பாதையில் சிதறிவிட்டனர். சிலர் எங்கிருந்தனர் என்பதே தெளிவாக இல்லை. மனித ஆற்றல் தோல்வியுறும் நேரத்தில் கடவுள் வல்லமை செயலாற்றுகின்றது என்பது மீண்டும் நம் கண்களுக்கு முன் நிகழ்கின்றது. இரண்டு சீடர்கள் இயேசுவைப் பற்றியும் எருசலேமில் நடந்தவற்றைப் பற்றியும் அவரது விண்ணரசு போதனைகள் அவரோடு கல்லறையில் புதைக்கப்பட்டுவிட்டன என்ற கலக்கத்தோடும் பேசிச் செல்லும்போது இயேசு அவர்களுடன் நடக்கின்றார். உயிர்த்தவரைக் கல்லறையில் தேடிச்செல்வதும், சாவின் தளைகளை முறியடித்தவரைச் சாவின் சந்நிதியில் தேடுவதும் தவறு என்பதை உணராமல், கல்லறைக்குச் சென்ற பெண்களுக்கு அவரது உடல் அகப்படவில்லை என்று அவர்கள் வாதிட்டனர். உயிருடன் இருந்தபோது தம் வருங்கால வாழ்வை முழுமையாக விளக்கியதை (யோவா 2:21-22) அவர்கள் இதயத்திலிருந்து கேட்டுப் புரிந்துகொள்ளவில்லை (மாற் 8:34, 9:35-37, 10:43) என்பதையே இந்தத் தடுமாற்றம் வெளிப்படுத்துகின்றது. ஆனால் இப்போதும் அவர்கள் தேடல் குறையவில்லை. அவர்களின் சிந்தனைகள் இயேசுவைச் சுற்றியே வலம் வந்தன. எனவேதான் அவரைப் பற்றி பேசிக்கொண்டு செல்லும்போது இயேசுவும் உடன்நடந்தனர். இதுபோன்ற நம்பிக்கையற்ற தருணங்களில் ஆறுதல் தந்து ஆற்றுப்படுத்தும் கடவுளாக அவர் இருக்கின்றார். பாபிலோனில் வாழ்வு முழுவதும் சூன்யமாகிவிட்டது, வல்லசெயல்கள் மூலம் தமது முன்னோர்களைக் காத்து வந்த யாவே தற்போது தம்மை கைகழுவி விட்டுவிட்டார் என்ற விரக்தியான சூழலில், உடனிருந்து ஆறுதல் கூறி படைத்துப் பாதுகாத்துத் தேர்ந்தெடுத்த கடவுள் அவர்களைக் கட்டாயம் மீட்டு விடுதலை வாழ்வுக்கு வழிநடத்துவார் என்று அறிவிப்பதே இரண்டாம் எசாயாவின் முக்கிய பணியாக அமைந்தது. 

உடன் நடக்கும்  இயேசு
இது உயிர்த்த பின்னும் உடன்நடக்கும் உயிர்பிரசன்னம். நிலையில்லாக் காலத்திற்கும் ‘கடவுள் நம்மோடு’ (மத் 1:23, 28:20) என்ற வாக்குறுதியின் வெளிப்பாடு. வேதனையோடு வழிநடக்கையில் விருப்பத்தோடு உதவிட வரும் இறைவனும் அவரது ஆற்றலும் நம் புறக்கண்களுக்குப் புலப்படுவதில்லை. வெற்றி இலக்கை அடையும் வேளையில்தான் ஒரு விண்ணக் கரம் நம்மை வழிநடத்தியது என்பது பலருக்குப் புரியும். பழைய ஏற்பாட்டில் மக்கள் என்ற தளத்தில் பெரும்பாலும் கடவுள் தம்மை வெளிப்படுத்துகின்றார். மக்கள் பாபிலோனுக்கு நாடுகடத்தப்பட்ட வேளையில் அவர்களுடன் வந்துவிட்டார் என்பதை அவர்கள் புரிந்துகொள்ளும் மொழியில் விளக்கும் வண்ணம், யாவே எப்பக்கமும் சுழலும் எல்லாவற்றையும் காணும் கண்கள் கொண்ட நாற்காலியில் அமர்ந்துள்ளார் என்று எசேக்கியேல் (1:15) விளக்குகின்றார். அதுபோல் உயிர்த்த இயேசு காலங்கள் நேரங்கள், இடங்கள் போன்றவற்றை வென்றெடுத்தவர். எல்லா நேரங்களிலும் எல்லா இடங்களிலும் (அடைக்கப்பட்ட அறைக்குள்ளும்) தோன்றும் வல்லமை படைத்தவர். நாம் அவரது அருகில் இருக்கும் காலங்களைவிட அவர் நம் அருகில் இருக்கும் காலங்கள் தான் அதிகம். இந்த நிகழ்வில் திருத்தூதர்கள் வேண்டாமலே அவரே விரும்பி உடன் நடக்கின்றார். இயேசுவை அவர்கள் உடனே கண்டுகொள்ளவில்லை என்று கூறப்படுகின்றது. பூமியில் வாழ்ந்த போதும் இயேசு விண்ணக மதிப்பீடுகளின் விளைநிலமாக இருந்ததை பல நேரங்களில் திருத்தூதர்கள் புரிந்துகொள்ளவில்லை. அவர்களை நம்பிக்கைக்கு அழைக்கும் நோக்குடனே இயேசு தண்ணீரை திராட்சை இரமாக்குகின்றார் (யோவா 2:11).
திருத்தூதர்களின் பாதை இதுவரை இருந்ததைவிட இன்னும் கடினமாகி சவால்களின் சங்கமமாகப்போகின்றது. இனிமேல்தான் அவர்கள் உண்மையான நற்செய்தி அறிவிப்புப் பணியைத் துவக்க வேண்டும். கண்படும் இடங்களில் எல்லாம் எதிர்ப்புகளே நிறைந்திருந்த சூழலில் நற்செய்தி நாற்றுக்களை நட்டு அவை பலன்தரும் வரை பக்கத்தில் இருந்து பாதுகாப்பது எளிமையான காரியம் அன்று. அவர்களை நோக்கி போர்கள் வரும், புயல்கள் வரும், ஒடுக்கப்படும் நிலைகள் வரும். மனித பலவீனம் அதிகமாகும் நேரங்களில் கடவுளின் வல்லமை சிறந்தோங்குகின்றது (2 கொரி 12:9-10).  உண்மையான பிறரன்புப் பணியின் பாதி வேலையைக் கடவுளே செய்து முடிப்பார் என்பது பல நல்லோர்களின் அனுபவ மொழியாகும். இயேசு அவர்களுடன் நடக்கும்போது அவர்கள் எதையும் தாங்கும் இதயத்தைப் பெற்றுக்கொள்கின்றனர். அரசர்கள் முன்னும் அதிகாரிகள் முன்னும் உறுதியுடன் நற்செய்தி அறிவிக்கும் நெஞ்சாற்றல் பெறுகின்றனர் (மத் 10:17-18). 
உயிர்த்த இயேசு புறக்கண்களுக்குப் புலப்படா வண்ணம் வாழ்வு சம்பவங்களில் உடன்; நடக்கின்றார். நல்ல இதயம் இருக்கும் இடங்கள் அவர் செயலாற்றும் களங்கள். அவர் எப்போதும் நமது அருகில், நமது கரத்தைப் பிடித்துக் கொண்டு நம்முடன் பிரசன்னமாகி வழிநடக்கின்றார். நமது கவலைகள் சோகங்கள் அனைத்தையும் சுமந்து நம்மை ஒரு சொல்லால் குணமாக்கும் ஆற்றுப்படுத்துநர் அவர். உள்ளத்தைத் தொடும் விதத்தில் உரையாடி, தெளிவாக்கி வழிநடத்தும் திறன் அவருக்கு உண்டு. நல்ல நண்பனாக நமது சோகங்களை கவலைகள் போராட்டங்கள் அனைத்தையும் அவருடன் பகிர்ந்து கொள்ளலாம். சீடர்கள் இருவரும் தங்களின் எங்கங்களை இயேசுவுடன் பகிர்ந்து கொள்கின்றனர். இயேசு உடன் நடப்பதை உணரும் வேளைகளில் அவர்களது இதயம் பற்றி எரிகின்றது (லூக் 24:32). இந்த உடன் நடக்கும் அனுபவம் இந்த சீடர்களுக்கு வாழ்நாள் முழுவதும் ஊக்கம் தரும் ஆற்றல் மையமாக மாறிவிட்டது. 

விவிலிய உண்மைகளை விளக்கும் இயேசு. 
கடவுளின் மொழியை மனிதர்கள் முழுமையாகப் புரிந்துகொள்வது கடினம். மேலிருந்து வந்தவருக்குத்தான் மேலுக உண்மைகள் தெளிவாகத் தெரியும் (யோவா 3:31). எருசலேமில் நடந்தவற்றை அவர் அறியவில்லை என்று சீடர்கள் நினைக்க, உயிர்ப்பு நிகழ்ந்துவிட்டதை அவர்கள் அறியவில்லை என்ற தோனியில் இயேசு பேசகின்றார். கடவுளின் வார்த்தைக்கு கடவுளே விளக்கும் தருகின்றார். யாராவது விளக்கிச் சொன்னால்தான் விவிலிய உண்மைகள் புலப்படும் (திப 8:31). விண்ணக உண்மைகளை தெளிவாக அறிந்துகொள்ள திருத்தூதர்களுக்கு மூன்று ஆண்டுகள் போதவில்லை. எனவே, விவிலியத்தை விளக்கி, கல்லறைக்கு அப்பால் சிந்திக்காமல் அதைச் சுற்றியே வலம் வந்த சீடர்களுக்குச் சிந்தனைத் தெளிவையும், செயலூக்கத்தையும் தருகின்றார். நற்செய்தியில் இயேசு விளக்குகின்றார், புரிய வைக்கின்றார், அறிவுறுத்துகின்றார், திட்டி ஒழுங்குபடுத்துகின்றார் (லூக் 24:25). விண்ணக உண்மைகளை மனிதர்கள் புரிந்துகொள்ளும் மண்ணக மொழியில் புரிய வைப்பதில் இயேசு திறமையானவர்: இறையரசின் சிறப்பாண்மைகளை உவமைகள் வழியாக விளக்கும் வேளைகளில், விவசாயிகளுக்கும் விதைகள் உவமை (மத் 13:1-9), பெண்களுக்கு புளிப்பு மாவு உவமை (மத் 13:33) நிலக்கிழாருக்கு முத்து (மத் 13:45-46) மீனவர்களுக்கு வலை (மத் 13:47-49) வழியாக விளக்குகின்றார்.

அப்பத்தின் தம்மை முழுமையாக வெளிபடுத்தி நிற்கும் இயேசு. 
இயேசு தாம் எதிர்கொள்ளும் மனிதர்களின் உள்ளத்தில் ஆளுமை மாற்றத்தை உருவாக்கிவிடுகின்றார். சீடர் இருவரும் அதற்கு விதிவிலக்கல்ல. சில மணி நேரத்தில் அவர்களின் நண்பராகிவிடுகின்றார். எனவே, இருவரும் இயேசுவை உணவுண்ண அழைக்கின்றனர். பந்தியைப் பகிர்ந்து கொள்வது உள்ளார்ந்த உறவை ஏற்படுத்துவதன் வெளியடையாளமாகும். இந்த இருவரும் இயேசுவுடன் இறுதி இரவுணவில் பங்கெடுக்கவில்லை. அவர்கள் விருந்துக்கு அழைக்க (வழக்கத்திற்கு மாறாக), இயேசு அப்பத்தை எடுத்து உடைத்துக் கொடுக்கின்றார், அதாவது அழைக்கப்படுவோர்களின் வீடுகளில் தலைவனாகச் செயலாற்றுகின்றார். அப்பத்தையும் உடைக்கும்போது சீடர்கள் அவரை அடையாளம் காண்கின்றனர். உடனே அவர் மறைந்துவிடுகின்றார். உடனே அவர்கள் நற்செய்தி அறிவிக்கக் கிளம்பினர் என்று வாசிக்கின்றோம். உயிர்த்த இயேசு உடனிருப்பவர் அதே சமயத்தில் மறைந்திருப்பவர். கடவுள் கடந்திருப்பவர் அதே சமயத்தில் உள்ளிருப்பவர். 
இயேசுவோடு தங்கும் ஒவ்வொரு சூழலும் நற்கருணைக் கொண்டாட்டமாகவும், அனைவரும் ஒரு தாய்ப்பிள்ளைகள் என்பதை அறிக்கையிடும் வாய்ப்பாகவும், ஒருவர் மற்றவருக்காகத் தம்மையே உடைத்துக் கொடுக்கும் பகிர்வின் சந்நிதானமாகவும், நற்செய்தியைப் பிறருக்கு அறிவிக்கச் செல்லும் அழைப்பாகவும் இருக்க வேண்டும் என்பது செய்தியாகும். அப்பத்தை உடைத்துக் கொடுப்பது (மத் 26:26) இயேசு சிலுவையின் தம்மை உடைத்துச் சிதைப்பதன் முன்னுரையாகும். சிலுவை தியாகத்திற்குத் தயாராக இருக்க இந்த திருவிருந்து இரண்டு சீடர்களையும் அழைக்கின்றது. எனவே, உடனே அவர்கள் தியாகத்தைச் செயலாக்கம் செய்யக்  கிளம்பினர். உடன் நடக்கும் கடவுளின் முகம் எல்லோருக்கும் எல்லா நேரங்களிலும் புலப்படுவதில்லை. கடவுளுக்குள் நாம் நுழையும்போது அல்லது அவர் நம் வாழ்வில் நுழைய அனுமதிக்கும்போது, நம்மையே உடைத்துக் கொடுத்து பலரை வாழ வைக்கும் போதும் அவரை அடையாளம் கண்டு கொள்வோம். 

உடனே அறிவிக்கச் செல்லுதல்.
கடவுளை அனுபவித்தவர்களால் அவரைப் பற்றி அறிவிக்காமல் இருக்க இயலாது. தன்னகத்தே உயிருள்ள கடவுளின் வார்த்தை அதை அனுப்பியவரின் நோக்கத்தைப் பூமியில் செயல்பட வைக்கும். மனித கருவிகள் கடவுளின் செய்தியை கறைபடாமல் அறிவிக்கும் வேளைகளில் அதிசயங்கள் நிகழும்: ஒரே நாளில் 3000 பேர் திருமுழுக்குப் பெறுவர் (திப 2:41). விவிலியத்தில் ‘3’, ‘1000’ (3ù1000) இரண்டும் முழுமையைக் குறிக்கும் அடையாள எண்கள். திருத்தூதர்கள் உடனே அறிவித்தனர். கேட்ட அனைவரும் உடனடியாக வாழ்வு மாற்றம் அடைந்து அவரைப் பின்பற்றினர். 

எம்மாவுஸ் நமது வாழ்வுப் பாதையாகும். 
இயேசு வாழ்வின் வெற்றி-தோல்வி, ஆன்மாவின் இருள்-வெளிச்சம், போராட்டம்-புகழ், மகிழ்ச்சி-கவலை, வாழ்வு-சாவு போன்ற அத்தனை சூழல்களிலும் உடன் நடக்கின்றார். சரியான வாழ்வுப் பாதையில் நம்மை வழிநடத்த அவரால் இயலும். அவநம்பிக்கை நிறைந்த சூழல்களில் நம்பிக்கை நாற்றுக்களை நட்டு அதற்கு நீரூற்றி வளர்க்கின்றார். 
உடன் நடக்கும், உடன் பேசும் கடவுளைக் கண்ட கொள்ளாத நிலை, இறை வார்த்தையின் வளமையைப் புரிந்துகொண்டு அதன்படி வாழாத நிலை, பல உருவங்களில் நடமாடும் ஏழை எளியவர்களிடம் அவரைத் தேடாத நிலை, அப்பத்திலும் இரசத்திலும் பங்கெடுத்துவிட்டு அடுத்திருப்பவரை அன்புசெய்ய மறுக்கும் நிலைகளிலிருந்து உயிர்த்தெழுவோம். 
 

Comment