No icon

​​​​​​​Sr. மேரி ஆனந்த் DM

இந்த வாரப் புனிதர்கள்

டிசம்பர்  7     புனித அம்புரோஸ்

புனித அம்புரோஸ் பிரான்ஸ் நாட்டில் 339 ஆம் ஆண்டு பிறந்தார். இனிய சொல்வன்மை மிகுந்த இறையன்பர். இலக்கியம், சட்டம் கற்றுத்தேர்ந்து 372 ஆம் ஆண்டு ­லிகூரியா, எமி­லியா மாநிலங்களின் ஆளுநராக பதவி ஏற்று, சிறப்பாக செயல்பட்டார். ஆளுநர் பதவியை துறந்து, சொத்துகளை விற்று ஏழைகளுக்கு கொடுத்து துறவு மேற்கொண்டார். திருமுழுக்கு பெற்று குருவாகவும், ஆயராகவும் அருள்பொழிவு பெற்றார். அன்பு, நீதியின் பாதையில் இறைதிட்டத்திற்கு முற்றிலும் கீழ்ப்படிந்தார். திருச்சபையின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்தார். மிகுந்த துணிச்சலுடன் ஜெபசல் அரசியின் தப்பறைகளுக்கு எதிராக குரல் கொடுத்தார். இறைஞானம் மிகுந்த சொற்களுடன் மறையுரை நிகழ்த்தினார். இவரது போதனையால் பலர் மனந்திரும்பினர். குறிப்பாக ஹீப்போ நகர் அகுஸ்தீன். பல மொழிகள் கற்று அறிவில் சிறந்த இறையியலாளர் அம்புரோஸ் 397 ஆம் ஆண்டு இறந்து புனிதரானார்.

டிசம்பர்  8     தூய அமல அன்னை

பேறுபெற்ற கன்னி மரியா கருவான முதல் நொடியிலி­ருந்தே, எல்லாம் வல்ல இறைவனுடைய தனிப்பட்ட அருளாலும், சலுகையாலும் மனித குலத்தின் மீட்பராம் இயேசு கிறிஸ்துவின் பேறுபலன்களை முன்னிட்டுச் சென்மப் பாவத்தின் எல்லாக் கறையினின்றும் விடுவிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டார். “உனக்கும் பெண்ணுக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் இடையே பகையை உண்டாக்குவோம். அவள் வித்து உன் தலையைக் காயப்படுத்தும்” (தொநூ 3:15). அலகையை அழிக்கும் அவளது வித்து என்பது இயேசு கிறிஸ்துவே. அந்த தாய் அன்னை மரியா. மரியா பாம்பின் தலையை நசுக்கி, அழிக்க முன்குறிக்கப்பட்டவர். 1858 மார்ச் 25 ஆம் நாள் லூர்து கெபியில் காட்சிகொடுத்த அன்னை, “நாமே அமல உற்பவம்என்று புனித பெர்னதெத் வழி உலகிற்கு அறிவித்தார். மரியா முற்றிலும் புனிதமானவள், பாவக்கறை ஏதுமில்லாதவள். கருவான முதல்நொடியி­லிருந்து தனிச் சிறப்பான புனிதத்தின் மாட்சியால் அணிசெய்யப்பட்டிருந்தார். (திருச்சபை.எண். 56).

டிசம்பர்  9     புனித பேதுரு ஃபோரியர்

புனித பேதுரு ஃபோரியர் பிரான்ஸில் 1565 ஆம் ஆண்டு, நவம்பர் 30 ஆம் நாள் பிறந்தார். 1685 ஆம் ஆண்டு புனித அகுஸ்தீன் துறவு மடத்தில் சேர்ந்து 24ஆம் வயதில் குருவானார். இறைமக்கள் ஆன்மீக வாழ்விலும், பொருளாதார வாழ்விலும் வளர்ச்சி பெற வழிகாட்டினார். கிறிஸ்தவ புண்ணியங்களைப் பின்பற்றி வாழ்வின் பெரும்பகுதியை நற்செய்தி அறிவிக்கவே செலவிட்டார். இறைவேண்ட­லிலும், செபமாலை செபிப்பதிலும் அனைவருக்கும் முன்மாதிரியானார். குழந்தைகளை அன்பு செய்து, இலவசமாக கல்வி வழங்கினார். பிளேக் நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவினார். மக்கள் கிறிஸ்துவை அரசராக ஏற்றுக்கொள்ள தவ ஒறுத்தல்கள் செய்தார். இறையன்பிலும், பிறரன்பிலும் வாழ்ந்து, 1640 ஆம் ஆண்டு டிசம்பர் 9 ஆம் நாள் இறந்து புனிதரானார்.

டிசம்பர்  10     புனித யுலா­யா

புனித யுலா­யா 304 ஆம் ஆண்டு ஸ்பெயின் நாட்டில் பிறந்தார். அன்னை மரியாவிடம் பக்தி கொண்டு, வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் அவரின் துணை நாடினார். இறைவார்த்தையை வாழ்வாக்கி இறையன்பிற்கு சான்று பகர்ந்தார். கிறிஸ்தவர்களை துன்புறுத்திய டயோக்கிளேசியன் யுலா­யாவை கைது செய்து, சிறையில் அடைத்தான். பேரரசன் வணங்கும் கடவுளுக்குப் ­லி செலுத்த வற்புறுத்தினான்.

யுலா­யா, “நான் கிறிஸ்தவள், கிறிஸ்துவுக்காக என் வாழ்வை அர்ப்பணம் செய்கிறேன். நீ வழிபடும் கடவுளை வணங்கமாட்டேன்ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே உயிருள்ள ஒரே கடவுள் அவர் ஒருவரை மட்டுமே வணங்கி, ஆராதிப்பேன். என் உடல்மீது உனக்கு அதிகாரம் இருக்கலாம். ஆனால், என் ஆன்மா, கடவுளுக்கு மட்டுமே சொந்தமானதுஎன்றார். அரசன் கோபம் கொண்டு யுலா­யாவை நெருப்பி­ட்டு எரித்துக்கொலை செய்தான்.

டிசம்பர்  11     புனித தாமசுஸ்

புனித தாமசுஸ் உரோம் நகரில் 304 ஆம் ஆண்டு பிறந்தார். இறைநம்பிக்கையில் வளர்ந்து, தலைமைத் திருத்தொண்டராக பணிற்றினார். 367 ஆம் ஆண்டு திருத்தந்தையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்பொல்லினாரியக்­ தவறான கொள்கைகளுக்கு எதிராக குரல் கொடுத்தார். இறைமக்கள் கிறிஸ்துவுக்கு நற்சான்று பகர வழிகாட்டினார். அன்னை மரியாவின் துணையுடன், திருச்சபையை வழிநடத்தினார். ஏழைகள்மீது மிகுந்த அன்பு செலுத்தி, அவர்களின் நலனுக்காக உழைத்தார். தனக்கு எதிராக குற்றம் செய்தவர்களை மன்னித்து, அன்பு செய்தார். அரியுஸ் தப்பறைக்கு எதிராக குரல் கொடுத்தார். கன்னித்தன்மையுடன் வாழ்ந்த தாமசுஸ் 384 ஆம் ஆண்டு, டிசம்பர் 11 ஆம் நாள் இறந்து புனிதரானார்.

டிசம்பர் 12     புனித ஜேன் பிரான்செஸ் தே சாந்தால்

புனித ஜேன் பிரான்செஸ் தே சாந்தால் பிரான்ஸில் 1572 ஆம் ஆண்டு ஜனவரி 28 ஆம் நாள் பிறந்தார். 20 ஆம் வயதில், சாந்தால் என்பவரை திருமணம் செய்து, கிறிஸ்தவ மதிப்பீடுகளுக்கு சான்றாக வாழ்ந்து 6 குழந்தைகளுக்கு தாயானார். குழந்தைகளுக்கு நற்பண்புகளை அமுதாய் ஊட்டி, கணவரையும் மகிழ்ச்சியுடன் அன்பு செய்தார். கணவரின் இறப்புக்கு பின், பிள்ளைகளுக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்து, பின் துறவு மேற்கொண்டார். புனித பிரான்சிஸ் சலேசியாரை 1604 ஆம் ஆண்டு சந்தித்தார். 1610 ஆம் ஆண்டு சலேசியாரிடமிருந்து, துறவு வாழ்வுக்குரிய விதிமுறைகள் பெற்றுக்கொண்டு, விசிட்டேசன் சபைக்கு அடித்தளமிட்டார். இறைமாட்சிக்காக வாழ்ந்த ஜேன்,  1641 ஆம் ஆண்டு டிசம்பர் 13 ஆம் நாள் இறந்து புனிதரானார்.

Comment