No icon

இறப்பின் முதலாம் ஆண்டு நினைவு தினம்

அருட்தந்தை ஸ்டான் சுவாமிக்கு லண்டனில் சிறப்பு திருப்பலி  

இயேசு சபை அருள்பணியாளர் அருட்தந்தை ஸ்டான் சுவாமி அவர்கள் இறந்து ஒரு வருடம் முடியப்போகிறது. கடந்த வருடம் 2021, ஜூலை 5 ஆம் தேதி, அவர் இறந்தார். அவரது இறப்பின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ஜூலை 5 ஆம் தேதி லண்டனில் சிறப்பு திருப்பலி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. மேஃபேர், ஃபார்ம் ஸ்ட்ரீட் ஆலயத்தில் பிற்பகல் 1:05 மணிக்கு இயேசு சபை அருள்பணியாளர் அருட்தந்தை டொமினிக் ராபின்சன் அவர்களால் திருப்பலி நிறைவேற்றப்படும். அதைத் தொடர்ந்து பிற்பகல் 1:35 மணிக்கு ஃபார்ம் ஸ்ட்ரீட்டில் இருந்து இந்திய தூதரகம் வரை நல்லிணக்கத்திற்கு குரல் கொடுக்கும் வகையில் நடைபயணம் மேற்கொள்ளப்படும். இதில் கலந்து கொள்பவர்கள் அருட்தந்தை ஸ்டான் சுவாமியின் போராட்டத்தைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேனர்கள், சுவரொட்டிகள் அல்லது ஏதாவது ஒரு அடையாளத்தைக் கொண்டு வரும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பிறகு பிற்பகல் 2.15 மணிக்கு இந்திய தூதரகத்திற்கு வெளியே இயேசு சபை அருள்பணியாளர் அருட்தந்தை ஜோவிட்டோ டிசோசா தலைமையில் செப வழிபாடு நடைபெறும்.

அருட்தந்தை ஸ்டான் இந்தியாவில் உள்ள விளிம்புநிலை மக்களுக்காக, குறிப்பாக கிழக்கு இந்தியாவில் உள்ள பழங்குடி மக்களுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார். ஆதிவாசி மற்றும் தலித் சமூகங்களின் நில உரிமைகளுக்காக பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் சுரங்க வணிகங்களுக்கு எதிராக கடுமையாகப் போராடினார். இதனால் மாவோயிஸ்ட் பயங்கரவாத குழுவுடன் தொடர்புடையவர் என்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளின் பேரில் இந்திய தேசிய புலனாய்வு அமைப்பால் அவர் கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்பட்டதைத் கண்டித்து, அவரை விடுதலை செய்யக் கோரி அமைதிவழி போராட்டங்கள் நடைபெற்றன. பார்கின்சன் நோயால் நீண்டகாலம் பாதிக்கப்பட்டிருந்த அவர், 2020, அக்டோபர் 9 ஆம் தேதி முதல் இருட்டான, நெரிசலான சிறையில் அடைக்கப்பட்டிருந்ததால், அவரது நிலைமை மேன்மேலும் சீர்குலைந்தது. 84 வயதான அவரின் உடல்நிலை ஏழு மாதங்களுக்குப் பிறகு படுமோசமடைந்ததால், அவர் மே மாத இறுதியில் மும்பை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுபடி மும்பையில் உள்ள ஹோலி ஃபேமிலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கொரோனோ பெருந்தொற்றால் அவரது நிலை கவலைக்கிடமாக மாறியது. 2021, ஜூலை 5 ஆம் தேதி, அருட்தந்தை ஸ்டான் சுவாமி இறைவனடி சேர்ந்தார்.

 

Comment