No icon

வத்திக்கான் கண்காட்சி

வத்திக்கானில் கிரேக்க ஓவியக் கண்காட்சி

கிரேக்க நாட்டிற்கும் திருப்பீடத்துக்கும் இடையே முழு அரசியல் தொடர்புகள் உருவாக்கப்பட்டதன் 40ம் ஆண்டு நிறைவை சிறப்பிக்கும் விதமாக, வத்திக்கானில், கிரேக்கக் கலைகளின் கண்காட்சியொன்று, நவம்பர் 8ம் தேதி திங்கள் மாலையில் திறக்கப்பட்டது.

கிரேக்க நாடும் வத்திக்கானும் அரசியல் தூதர்களை தங்களுக்கிடையே நியமித்ததன் 40ம் ஆண்டு நிறைவு, மற்றும் 1821ம் ஆண்டு கிரேக்கத்தில் இடம்பெற்ற மறுமலர்ச்சி போராட்டத்தின் 200ம் ஆண்டு நிறைவு ஆகியவைகளை சிறப்பிக்கும் விதமாக திருப்பீடத்திற்கான கிரேக்கத் தூதரகத்தால் வத்திக்கானில் ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ள இந்த ஓவிய கண்காட்சியில், 66 ஓவியங்கள் பார்வைக்கு வைக்கப்பட உள்ளன.

ஏதென்சுக்கும், லெஸ்போஸ் தீவுக்கும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், டிசம்பர் மாதம் 4ம் தேதி முதல் 6ம் தேதி வரை திருத்தூதுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இவ்வேளையில் துவக்கப்படும் இந்த ஓவியக் கண்காட்சி, நவம்பர் 8 முதல், டிசம்பர் 8 வரை பார்வையாளர்களுக்கு திறந்துவைக்கப்பட்டிருக்கும்.

பைசன்டைன் காலத்திற்குப் பின்பிருந்து தற்போது வரை கிரேக்கப் புகழ்பெற்ற ஓவியர்களின் படைப்புகள், தேசிய அரங்குகளிலிருந்தும், தனியார் வசமிருந்தும், திரட்டப்பட்டு, வத்திக்கானில் பார்வைக்கு வைக்கப்படுவது, கிரேக்கத்திற்கும் வத்திக்கானுக்கும் இடையே நிலவும் நெருங்கிய உறவை வெளிப்படுத்துவதாகவும் பலப்படுத்துவதாகவும் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புலம்பெயர்தல், காலநிலை மாற்ற விளைவுகள், கோவிட் பெருந்தொற்றின் விளைவுகளை சமாளித்தல் போன்ற உலக பொதுப்பிரச்சனைகளில் கிரேக்கம், மற்றும் வத்திக்கானின் ஒத்துழைப்பை வலியுறுத்துவதாகவும், இரு நாடுகளுக்கும் இடையே உறவை மேலும் பலப்படுத்துவதாகவும் இக்கண்காட்சி உள்ளது என கிரேக்க நாட்டின் வெளியுறவு அமைச்சர் Nikos Dendias தெரிவித்தார்.

Comment