No icon

குடந்தை ஞானி

தத்தளிக்கும் தன்னார்வக் குழுக்கள்

இந்தியாவில் வெளிநாட்டு நன்கொடைகளைப் பெற FCRA  உரிமம் கட்டாயம் இருக்கவேண்டும். இந்தியாவின் வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டமானது (FCRA) வெளி நாடுகளிலிருந்து மனித உரிமைகள் மற்றும் சுற்றுச்சூழலுக்காக குரல் கொடுக்கும் ஒரு சில அரசு சாரா அமைப்புகள் (NGO) மற்றும் சிவில் சமூகக் குழுக்களின் தன்னார்வத்தொண்டிற்கு தரும் நிதியை மேற்பார்வையிட்டு மதிப்பாய்வு செய்யும். பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு பல உள்நோக்கங்களோடு இந்தியாவின் வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத்தின் (FCRA) விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டன.

இதனால் 2015 ஆம் ஆண்டில், கிரீன் பீஸ், ஃபோர்டு அறக்கட்டளை மற்றும் சுமார் 20 கிறிஸ்தவ அமைப்புகள் உட்பட சுமார் 10,000 அமைப்புகளின் FCRA உரிமங்களை மோடி அரசாங்கம் ரத்து செய்தது. மேலும் 1,807 தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் 2019 ஆம் ஆண்டில் தங்கள் நிறுவனங்களை இழந்தன. 2020 ஆம் ஆண்டில், இந்த நிறுவனங்கள் மூன்று ஆண்டுகளுக்கு புதிய உரிமத்திற்கு விண்ணப்பிக்க தகுதியற்றவை என்றும் கூறப்பட்டன.

2021 ஆம் ஆண்டில், ஆக்ஸ்பாம் இந்தியா, ஹம்தார்ட் எஜுகேஷன் சொசைட்டி, இந்தியத் தொழில்நுட்ப நிறுவனம் (டெல்லி), இந்திரா காந்தி தேசிய கலை மையம் (IGNCA), இந்தியப் பொது நிர்வாக நிறுவனம், தேசிய இன நல்லிணக்க அறக்கட்டளை (NFCH), நேரு அருங்காட்சியகம், டெல்லி பொறியியல் கல்லூரி, கோவா கால்பந்து சங்கம், மற்றும் பிரஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா போன்ற பல நிறுவனங்கள் தங்கள் உரிமத்தை இழந்துள்ள பட்டியலில் உள்ளன.

2021, டிசம்பர் 25-26 நாட்களில், அன்னை தெரசாவால் நிறுவப்பட்ட மிஷனரீஸ் ஆஃப் சேரிட்டி நிறுவனங்களின் FCRA பதிவை புதுப்பிக்க உள்துறை அமைச்சகம் மறுத்ததாக செய்திகள்  வெளிவந்த அதே வேளையில், ஏறக்குறைய 911 கிறிஸ்தவ நிறுவனங்களின் FCRA உரிமம் ரத்து செய்யப்பட்டு, 2022, ஜனவரி மாதம் முதல் தேதியிலிருந்து அமலுக்கு வந்துள்ளது.

Comment