No icon

குடந்தை ஞானி

கிஸான் மனநிலை வேண்டும்

நவம்பர் மாதம் 19 ஆம் தேதி வழக்கம்போல் திடீரென்று பணமதிப்பிழப்பு பாணியில் தொலைக்காட்சியில் காலை 9 மணிக்கு  தோன்றிய இந்திய பிரதமர் மோடி அவர்கள் தம் 56 இஞ்ச் மார்பை விரித்து மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக அறிவித்து, தம் தாராள இதயத்தை அனைத்து விவசாயிகளுக்கும் காட்டியுள்ளார்

தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்ற வீதத்தில், கீழே விழுந்தும் மீசையில் மண் ஒட்டாதவராக விவசாயிகளின் ஒரு பகுதியினருக்கு இச்சட்டங்களின் சிறப்புகளைப் புரிய வைக்க முடியவில்லை என்று புலம்பியுள்ளார். தம் இல்லத்திலிருந்து 38 கிலோமீட்டர் சுற்றுவட்டாரத்தில் ஓராண்டு காலமாய் வெயிலிலும் மழையிலும் பனியிலும் குளிரிலும் பசியிலும் புகையிலும் உரிய மருத்துவ வசதிகளின்றி, கழிப்பிட வசதியின்றி போராடிவரும் ஆயிரக் கணக்கான விவசாயிகளைச் சந்தித்து, அவர்கள் தம் கோரிக்கைகள் என்ன? என்ற கேட்காமல், பல ஆயிரம் கிலோமீட்டர் தொலைவில் உள்ள நியூயார்க்கின் .நா சபையில் உரையாற்றி தம் ஆளுமையை நிருபித்தவர், மீண்டும் ஒருமுறை இச்சட்டத்தின் நலன்களை விளக்கி, முதலைக்கண்ணீர் வடித்து நீட்டி முழங்கியுள்ளார்.

நடைபெற்று முடிந்த இடைத்தேர்தல்களில் பாஜகவின் தோல்வி முகம், விவசாயிகளின் வீர ஆவேசமிக்க போராட்டம், எழுச்சி, உத்தரபிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற உள்ள ஐந்து சட்டப்பேரவைத் தேர்தல், மாநிலங்களவையில் பாஜகவின் பலமின்மை, அயோத்தி கோவிலைத் தொடர்ந்து கட்டுவதற்கு .பியில் பாஜக மீண்டும் வென்றே ஆக வேண்டும் என்ற வெறி.. அனைத்தும் 56 இஞ்ச் மார்பளவுக் கொண்டவரை அசைத்துப் பார்த்துள்ளது.

விவசாயிகளோ, ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்னும் போராட்டக் களத்தை விட்டு புறமுதுகு காட்டி ஓடாமல், நிமிர்ந்து நின்று, போராடிக்கொண்டேயிருக்கின்றனர்.

இவை அனைத்திலும் உச்சபட்ச கொடுமை என்னவெனில், பாராளுமன்றத்தில் ஏறக்குறைய 14 மாதங்களுக்குப் பிறகு, நடைபெற்றுக்கொண்டிருக்கிற குளிர்கால கூட்டத்தொடரில், எவ்வித விவாதமும் இன்றி, ஏன் திரும்பப் பெறுகிறோம் என்பதை விளக்காமல், தங்கள் தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் குரல் வாக்கெடுப்பு மூலம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறும் மசோதாவை நிறைவேற்றியுள்ளனர். எதிர்கட்சிகள் எவ்வளவோ போராடியும் அவைத் தலைவர்கள் விவாதிப்பதற்கு அனுமதியே தரவில்லை. விவசாயிகள் மீதான தண்ணீர் பீரங்கித் தாக்குதல், கண்ணீர்ப் புகை, தடியடி, கைது, லக்கிம்பூர்கேரியில் காரை ஏற்றிக் கொன்றது, 700க்கும் மேற்பட்ட விவசாயிகளை இழந்தது, அவர்களுக்கான இழப்பீடு... என எதையும் பேசவே அனுமதிக்கவேயில்லை.

விவசாயிகளின் ஆறு அம்ச கோரிக்கைகளில் முதன்மையானதும் இன்றியமையாததுமான எம். எஸ். சுவாமிநாதன் குழு பரிந்துரையின் படி 50 சதவீத கூடுதல் விலையை உள்ளடக்கி குறைந்தபட்ச ஆதார விலை, மின் மசோதாவைத் திரும்பப் பெறுவது, கொல்லப்பட்ட 700 விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவது.. என்று எதையும் ஆளும் பாஜக அரசு கேட்கவும் இல்லை; பரிசீலிக்கவும் இல்லை. மாநிலங்களவை சபாநாயகர் வெங்கய்யா நாயுடு, அவை மாண்பைக் கெடுத்துவிட்டதாக எதிர்கட்சி எம்.பி.க்கள் பன்னிருவரை இடைநீக்கம் செய்கிறார்; மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, விவாதம் செய்ய வேண்டும் என்ற எதிர்கட்சிகளின் கோரிக்கைக்கு செவிகொடுக்காமல் இருக்கையை விட்டே ஓடி ஒளிந்துவிட்டார்.

விவாதம் செய்வது, மக்களின் குரலை எதிரொலிப்பது என்பது நாடாளுமன்ற ஜனநாயகத்தின் அடிப்படை. மசோதாக்களை விவாதிக்காமலே கண்ணை மூடிக்கொண்டு, காதுகளைப் பொத்திக்கொண்டு, குரல் வாக்கெடுப்பு என்று நொடிப் பொழுதில் நிறைவேற்றும் பாஜகவின் அணுகுமுறை இந்திய ஜனநாயகத்தையும் பாராளுமன்ற ஜனநாயகத்தையும் நொடிக்கவே செய்யும். ஒரு நாளுக்கு இரண்டு மசோதா வீதம், வெறும் 43 நொடிகளில் ஒரு மசோதாவை நிறைவேற்றுவதும், விவாதமே இல்லாமல், மசோதாவைத் திரும்பப் பெறுவதும் எதேச்சதிகாரமின்றி, வேறென்ன? உச்சநீதிமன்ற நீதிபதியே, நாடாளுமன்றத்தில் மசோதாக்களும் சட்டங்களும் எம்.பி.க்களின் விவாதத்திற்கு உட்படுத்தாமல் நிறைவேறுவது கவலை தெரிவித்தும் அதைப் பற்றி கண்டு கொள்ளாமல் இருப்பது பாசிச மனப்பான்மையின்றி, வேறென்ன? பெகாசஸ் என்றாலும் பேசாதே! வேளாண் மசோதா திரும்பப்பெறுதல் என்றாலும் பேசாதே என்றால் அது என்ன ஜனநாயகம்?

கார்ப்பரேட்டுகளுக்கு சேவை செய்வதில் தரப்படும் முன்னுரிமை விவசாயிகளின் முக்கலுக்கும் எதிர்கட்சிகளின் முனகலுக்கும் தரப்பட வேண்டும்.

உர உற்பத்தி நிறுவனங்களுக்கு நேரடியா உரத்திற்கான மானியம் 133947 கோடி என்பதிலிருந்து 79530 கோடியாக, 40 சதவீதம் அளவிற்கு குறைத்த தாராள பிரபுதான், தொலைக்காட்சி உரையில் விவசாயத்துக்கான நிதி ஒதுக்கீட்டை ஐந்து மடங்கு அதிகரித்திருப்பதாக தொலைக்காட்சியில் மன்கீபாத் முறையில் ஒற்றைச் சாளர முறையில் கொக்கரிக்கிறார். கொஞ்சமாவது நியாயம் வேண்டாமா?

இந்து ராஷ்டிர இலக்கிற்கு உத்தரபிரதேசத்தில் மீண்டும் வெற்றிப் பெறுவதும், அயோத்தி ராமர் கோயிலைக் கட்டி கோலாகல கும்பாபிஷேகம் நடத்துவதும் தானே உங்கள் இலக்கு. ஒருவேளை வடக்கு உத்தர பிரதேசத்தில் விவசாயிகள் நிறைந்த தொகுதிகளில் வெற்றி பெறாமல்போய், மாநிலங்களவைக்கு போதுமான பிரதிநிதிகளை அனுப்பிஅதனை நிரல்படுத்தாமல் போனால், பாஜக அல்லாத எதிர்கட்சிகள் பலம் பெருகும் என்ற பயத்தில்தானே நாக்பூர் தலைமையின் வழிகாட்டுதல்படி இச்சட்டங்களைத் திரும்பப் பெற்றுக்கொண்டனர். பஞ்சாப்பில் எந்த ஊருக்குள்ளும் நுழையமுடியாதபடி பாஜகவை விவசாயிகள் செய்துள்ள காரணத்தால், பஞ்சாப் தேர்தலில் கௌரவமாக சில தொகுதிகளைக் கைப்பற்ற வேண்டும் என்று இலக்கினால்தான் இம்மூன்று வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டன.

தேர்தல் வெற்றிக்குப் பிறகு, சிறிது காலம் கழித்து மீண்டும் வேறு வடிவில் இந்த வேளாண் மசோதாக்களைக் கொண்டுவந்து, அதானிகளுக்கும் அம்பானிகளுக்கும் சேவை செய்யமாட்டார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இன்றைய நிலையில் இல்லை.

சாதி, மதம், இனம் என்று எந்த வேறுபாடுமின்றி, ஓரணியில் அணி திரண்டு, பாஜகவின் அனைத்து அஸ்திரங்களையும் தகர்த்தெறிந்த அதே விவசாயிகளின் தீர்க்கமான மன நிலை, இந்திய குடியுரிமைச் சட்டத்திருத்தம், 370 ஆம் பிரிவு நீக்கம், மதமாற்றம் தடைச்சட்டம் என்று இவர்கள் ஜனநாயகத்திற்கு எதிராகக் கொண்டுவரும் அனைத்து நிலைப்பாடுகளிலும் இந்தியர்களாகிய நாம் வெளிப்படுத்த வேண்டும். பாஜகவின் நாசிச-பாசிச - எதேச்சதிகார வேரை அனைவரும் ஒன்று திரண்டு, ஒட்ட அறுத்தெறியாவிட்டால், இந்தியாவிற்கு எதிர்காலம் என்பது இல்லாமலே போகும்.

பாஜகவின் வரலாற்றில் முதன் முறையாக, பிரதமர் மோடி முன்வைத்த காலை பின்வைத்துள்ளார். அப்படி பின் வைத்த பின்னங்கால், பிடரியில் அடிக்க இந்தத் தலைவர்கள் ஓடும் காலம் விரைவில் வர வேண்டும். விவசாயிகளின் தீர்க்கமான மனநிலை இந்தியர்கள் அனைவருக்கும் வர வேண்டும். இந்துத்துவா ஒருபோதும் வெற்றிபெற்றுவிடக்கூடாது. மதத்தை வைத்தும் சாதியை வைத்தும் நம்மைக் கூறுபோடும் பாஜகவிற்கு நாம் விலைபோகக் கூடாது. இதுதான் வெற்றிபெற்ற இந்தப் போராட்டம் சொல்லும் பாடம். ஜெய் கிஸான்! தீர்க்கமான இறுதிவரை போராடிய விவசாயிகள் வாழ்க!

Comment