No icon

Asian Church News

இஸ்ரேல்-பாலஸ்தீனம் பிரச்சனைக்கு இரு நாடுகள் அமைப்பு ஒரே தீர்வு

பாலஸ்தீனாவைச் சேர்ந்த மேற்குக்கரையின் சில பகுதிகளை, இஸ்ரேல் நாட்டுடன் இணைத்துக்கொள்வதற்கு, இஸ்ரேலின் புதிய அரசு திட்டமிட்டுவரும்வேளை, இவ்விவகாரத்தில் திருப்பீடம் தலையிடுமாறு, பாலஸ்தீன அதிகாரி ஒருவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது குறித்து, மே 20 ஆம் தேதி புதனன்று அறிக்கை வெளியிட்ட, திருப்பீடத் தகவல் தொடர்பகம், பாலஸ்தீன விடுதலை அமைப்பின் பொதுச் செயலர், சாயப் எரேக்காட் (Saeb Erekat )அவர்கள், பன்னாட்டு உறவுகளின் திருப்பீடத் துறையின் செயலர், பேராயர் பால் ரிச்சர்டு காலகர் அவர்களை, தொலைப்பேசியில் அழைத்து, இஸ்ரேல் அரசின் தற்போதைய நடவடிக்கைகளை விளக்கினார் என்று கூறியது.

புனித பூமியில் அமைதி நிலவுவதற்கும், இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனாவிற்கும் இடையே நிலவும் பிரச்சனை முடிவுக்கு வரவும், இரு நாடுகள் அமைப்பே ஒரே தீர்வு என்ற தன் நிலைப்பாட்டை, திருப்பீடம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது என்று, அந்த அலுவலகம் கூறியது.

உலகளாவிய சட்டத்தை மதித்தல் மற்றும், .நா.வின் தீர்மானங்களுக்கு ஒத்திணங்குதல், ஆகிய இரண்டுமே, 1967ம் ஆண்டுக்குமுன் பன்னாட்டு சமுதாயம் அங்கீகரித்த எல்லைகளுக்குள், இரு நாடுகளின் மக்களும் அருகருகே அமைதியாக வாழ்வதற்கு இன்றியமையாதது என்று, திருப்பீடம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது என்று, திருப்பீட தகவல் தொடர்பு அலுவலகம் கூறியது

திருப்பீடம், புனித பூமியில் இடம்பெறும் நிகழ்வுகளை அக்கறையுடன் கவனித்து வருகின்றது என்று கூறிய திருப்பீட தகவல் தொடர்பகம், உலகளாவிய சமுதாயத்தின் உதவியுடன், இஸ்ரேலும், பாலஸ்தீனமும் மீண்டும் கலந்துரையாடலைத் தொடங்குவதற்கு வாய்ப்புக்களை விரைவில் கண்டுபிடிக்கும் என்றும், இதன் வழியாக, யூதர்கள், முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் அன்புக்குரிய புனித பூமியில், அமைதி ஆட்சி செய்யும் என்றும் திருப்பீடம் நம்புகின்றது என்று கூறியது.

மேலும், இஸ்ரேல் மற்றும், பாலஸ்தீனாவுக்கு இடையே அமைதி நிலவுதல் குறித்து, ஆஸ்லோ வில் இடம்பெற்ற ஒப்பந்தத்தில், பாலஸ்தீனம் சார்பில் தலைமை வகித்தவரான சாயப் எரேக்காட்  அவர்கள், மேற்குக்கரைப் பகுதியில், இஸ்ரேல், ஒருதலைச்சார்பாக, இறையாண்மையை அறிவிக்க முயற்சித்து வருகின்றது, இது, அமைதி நடவடிக்கையை மேலும் வலுவிழக்கச் செய்யும் என்று, திருப்பீடத்திடம் கவலை தெரிவித்தார்.

இதற்கிடையே, மே 17 ஆம் தேதி ஞாயிறன்று, நான்காவது முறையாக, இஸ்ரேலின் பிரதமராகப் பதவிப்பிரமாணம் செய்த பெஞ்சமின் நேதன்யாகு  அவர்கள், தனது தேர்தல் பிரச்சாரத்தில், மேற்குக்கரைப் பகுதியை இஸ்ரேலுடன் இணைப்பதற்கு உறுதி வழங்கினார் என்று செய்திகள் கூறுகின்றன.

Comment