No icon

குடந்தை ஞானி

மனித வாழ்வு, வழிபாட்டுத்தலங்கள் மதிக்கப்பட அழைப்பு

போரால் பாதிக்கப்பட்டுள்ள மியான்மரில் மனித வாழ்வு, வழிபாட்டுத்தலங்கள், மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகள் ஆகியவற்றின் புனிதம் மதிக்கப்படவேண்டும் என்று மியான்மார் கத்தோலிக்க ஆயர்கள் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மனித மாண்பும், வாழ்வதற்குள்ள உரிமையும் ஒருபோதும் புறக்கணிக்கப்படக்கூடாது என்றும், வழிபாட்டுத்தலங்கள், மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகள் ஆகியவற்றின் மதிப்பு உணரப்படவேண்டும் என்றும், மியான்மர் ஆயர் பேரவை (CBCM), ஜூன் 11 ஆம் தேதி, சனிக்கிழமையன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.

இக்கருத்துக்காக, நாட்டின் அனைத்து மறைமாவட்டங்களும் செபிக்கவும், அமைதிக்காகப் பணியாற்றவும் வேண்டும் என்றும், இம்மாதம் 7 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை மியான்மர் ஆயர்கள் நடத்திய பொது அவையின் இறுதியில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கத்தோலிக்க ஆயர்கள், நீதி, அமைதி, ஒப்புரவு ஆகியவற்றுக்காக உழைக்கும்வேளை, நாட்டிற்குள்ளேயே புலம்பெயர்ந்துள்ள மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் சென்றடைய வழியமைக்கப்படுமாறு, அவர்கள் அரசை கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதற்கிடையே மியான்மார் இராணுவம், அண்மை மாதங்களில் கத்தோலிக்க ஆலயங்கள் மற்றும் கத்தோலிக்கர்களின் நிறுவனங்களை குறிவைத்துக் தாக்கி வருகின்றது. காயா மற்றும் சின் மாநிலங்களிலுள்ள கத்தோலிக்க ஆலயங்கள் உட்பட பல கிறிஸ்தவ ஆலயங்கள் விமான வழித் தாக்குதல்கள் மற்றும் குண்டுவீச்சுக்களால் தாக்கப்பட்டுள்ளன.

ஆயிரக்கணக்கான மக்கள் இந்தியா போன்ற நாடுகளுக்குப் புலம்பெயர்ந்துள்ளனர். சென்தாரா மற்றும் சாங்யோலுள்ள வரலாற்று சிறப்புமிக்க கத்தோலிக்க கிராமங்களில், குறைந்தது 450 வீடுகளை இராணுவம் தீயிட்டு கொளுத்தியுள்ளது.

Comment