No icon

இளம் துறவிக்கு திருத்தந்தையின் சிறப்பு அனுமதியுடன் அருள்பொழிவு - 02.05.2021

இளம் துறவிக்கு திருத்தந்தையின் சிறப்பு அனுமதியுடன் அருள்பொழிவு

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த இளம் துறவி, லிவீனியுஸ் எசோம்ச்சிந்நாமணி  அவர்களுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய ஒரு சிறப்பு அனுமதியை அடுத்து, அவர் ஏப்ரல் 1ஆம் தேதி, அருள்பணியாளராக திருப்பொழிவு செய்யப்பட்டார்.
இறைவனின் அன்னை துறவு சபையைச் சேர்ந்த லிவீனியுஸ் அவர்கள், இரத்தப் புற்றுநோயினால் துன்புறுவதால், தான் அருள்பணித்துவத் திருப்பொழிவை முன்னதாகப் பெறுவதற்கு திருத்தந்தையிடம் விடுத்த விண்ணப்பத்தை ஏற்று, திருத்தந்தை அவருக்கு அனுமதி வழங்கினார்.
லிவீனியுஸ் அவர்கள், உரோம் நகரில் மருத்துவ சிகிச்சை பெற்றுவரும் காசிலினோ  மருத்துவமனையில், ஏப்ரல் 1 ஆம் தேதி, உரோம் மறைமாவட்டத்தின் துணை ஆயர் தானியேலே லிபனோரி அவர்களால், அருள்பணியாளராக திருநிலைப்படுத்தப்பட்டார் என்று, இறைவனின் அன்னை துறவு சபையினர் அறிவித்துள்ளனர்.
நைஜீரியா நாட்டில் பிறந்த லிவீனியுஸ் அவர்கள், தன் 20வது வயதில் இறைவனின் அன்னை துறவு சபையில் இணைந்து, முதல் அர்ப்பணத்தை வழங்கிய ஒரு சில மாதங்களில், அவருக்கு இரத்தப் புற்றுநோய் உள்ளதென கண்டுபிடிக்கப்பட்டது.
பல்வேறு மருத்துவ உதவிகளுடன் பயின்று வந்த லிவீனியுஸ் அவர்கள், இன்னும் சிறந்த மருத்துவ உதவிகள் பெறுவதற்கு, உரோம் நகருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன் அனுப்பப்பட்டார்.
உரோம் நகரில், ‘ஆஞ்செலிக்கும்’ என்று அறியப்படும், புனித தாமஸ் அக்குவினாஸ் பாப்பிறை பல்கலைக் கழகத்தில் தன் இறையியல் கல்வியைத் தொடர்ந்த லிவீனியுஸ் அவர்கள், அண்மையில் உடல் நலம் மிகவும் நலிந்து, தொடர் சிகிச்சைக்காக, காசிலினோ மருத்துவமனையில், அனுமதிக்கப் பட்டார்.
இவ்விளம் துறவியின் வேண்டுகோளுக்கிணங்க, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், லிவீனியுஸ் அவர்கள் தன் திருப்பொழிவை முன்னதாகப் பெறுவதற்கு அனுமதி வழங்கினார்.
ஏப்ரல் 1 ஆம் தேதி, லிவீனியுஸ் அவர்களுக்கு திருப்பொழிவு செய்த ஆயர் லிபனோரி அவர்கள், இறைவன் உங்களுக்கு வழங்கியுள்ள இந்தக் கொடையின் வழியே, நீங்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளை இன்னும் உறுதியுடன் சந்திக்க, அவர் சக்தி வழங்குகிறார் என்று, தன் மறையுரையில் கூறினார்.
தற்போது, அருள்பணி லிவீனியுஸ் அவர்கள், காசிலினோ மருத்துவமனையில் தன்னைச் சந்திக்க வரும் அனைவருக்கும் ஆசீர் அளிப்பதன் வழியே, தன் அருள்பணித்துவ பணிகளை ஆற்றிவருகிறார் என்று இறைவனின் அன்னை துறவு சபை வெளியிட்ட குறிப்பு கூறுகிறது.
இதேவண்ணம், புனித லூயிஜி ஓரியோனே அவர்களால் உருவாக்கப்பட்ட துறவு சபையில், அருள்பணியாளர் பயிற்சியில் இருந்த, போலந்து நாட்டவரான, இளையவர் மிஹாவ் வோஸ் (ஆiஉhயł Łடிள) அவர்கள், புற்றுநோயால் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்ததால், தியாக்கோன் மற்றும் அருள்பணியாளர் என்ற இரு நிலைகளையும், அவருக்கு ஒரே வேளையில் வழங்குவதற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சிறப்பான அனுமதி வழங்கினார்.
இதையடுத்து, 2019 ஆம் ஆண்டு, மே 24 ஆம் தேதி, வர்ஷா பிராக்கா மறைமாவட்டத்தின் ஆயர், மரேக் சோலர்ஸ்க் அவர்கள், இளையவர் மிஹாவ் அவர்களை, தியாக்கோனாகவும், அருள்பணியாளராகவும் திருப்பொழிவு செய்தார் என்பதும், அருள்பணியாளர்  மிஹாவ் அவர்கள் ஜூன் 17 ஆம் தேதி இறையடி சேர்ந்தார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

Comment