No icon

மியான்மர் இராணுவத்திற்கு முன்பு துணிந்து பணியாற்றும் துறவியர்

மியான்மரில் இராணுவம் அண்மையில் ஆட்சியைக் கைப்பற்றி நாடு முழுவதும் தங்கள் எதிர்ப்பாளர்களை ஆயுதங்களைக் கொண்டு ஒடுக்கி வருகிறது என்பது உலகறிந்தது. அங்கு சிறுபான்மையினராக உள்ள கத்தோலிக்கர்களும் கத்தோலிக்கத் துறவிகளும் இராணுவத்தைக் கண்டு அஞ்சாமல் அமைதிப் பணியை துணிந்து மேற்கொள்கின்றனர்.

மார்ச் 9 ஆம் தேதி லொய்க்கா மறைமாவட்ட அப்போஸ்தலிக்க நிர்வாகியான அருள்பணியாளர் செல்சோ பா ஸ்வே எதிர்ப்பாளர்கள் மீது அடக்கு முறையை ஏவுவதற்கு தயாராக இருந்து நூற்றுக்கணக்கான இராணுவ வீரர்கள் முன்பு எவ்வித அச்சமுமின்றி முன்னே சென்று, ‘காவல்துறையினரே, தயவு செய்து மக்களுக்குத் தீங்கிழைக்க வேண்டாம்என்று கேட்டுக்கொண்டார். இராணுவத்தினர், அவருடைய வேண்டுகோளைப் புறந்தள்ளிவிட்டு, மக்கள்மீது இரப்பர் குண்டுகளைக் கொண்டும் கண்ணீர் புகை குண்டுகளைக் கொண்டும் தாக்குதல் நடத்தி கலைத்தனர். ஆயுதங்களைக் கண்டு அஞ்சாமல், இராணுவ வீரர்களுக்கு முன்புச் சென்று எதிர்ப்புத் தெரிவித்த இக்குருவின் துணிச்சலை மியான்மர் மக்கள் பாராட்டுகின்றனர்.

பிப்ரவரி 28 ஆம் தேதி, கச்சின் மாகாணத்தின் மிய்ட்கின்யா நகரில், புனித பிரான்சிஸ் சேவியர் சபையைச் சேர்ந்த 45 வயது அருள்சகோதரி ஆன் ரோசா நு தவாங், ஆயுதமேந்திய இராணுவ வீரர்களுக்கு முன்புச் சென்று, மண்டியிட்டு, ‘நீங்கள் விரும்பினால் என்னைச் சுட்டுத்தள்ளுங்கள். ஆயுதம் ஏதுமின்றி அமைதியான முறையில் தங்கள் எதிர்ப்பைக் காட்டும் எதிர்ப்பாளர்களை விட்டுவிடுங்கள்என்று கேட்டுக்கொண்டார். போராட்டக்காரர்கள் போராடும் இடத்திற்கு அருகில் உள்ள கிளினிக் ஒன்றில் பணியாற்றும் இவர், அங்குள்ள மக்களோடும் அருள்பணியாளர்களோடும் அறவழிப் போராட்டத்தில் பங்கேற்று தம் எதிர்ப்பைத் தெரிவித்தார். ‘நான் ஒரு கத்தோலிக்க அருள்சகோதரிதான். இருப்பினும் நானும் மியான்மரின் குடிமகள்தான். மியான்மர் மக்களுக்கு உள்ள அதே உணர்வை நானும் கொண்டிருக்கிறேன். இம்மக்களுக்கு எந்த வகையில் உதவு முடியும் என்று நான் எப்போதும் சிந்திக்கிறேன்என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். அருள்சகோதரியின் துணிச்சல் உலக அளவில் பாராட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

Comment