No icon

பிலிப்பைன்ஸ்

இராணுவச்சட்டம் நிறைவேற்றப்பட்டதன் 50ஆம் ஆண்டு நிறைவு

நாட்டின் கடந்தகால இருண்ட பகுதிகள், நிகழ்கால வாழ்வை ஒளிரச் செய்யும் நினைவுகள் என்ற கருத்தில் பிலிப்பைன்ஸ் நாட்டு கத்தோலிக்க பல்கலைக்கழகங்கள், பள்ளிகள், கல்வி நிறுவனங்கள் ஆகியவை இணைந்து, அந்நாட்டில் இராணுவச் சட்டம் கொண்டுவரப்பட்டதன் 50ஆம் ஆண்டு நிறைவை நினைவுகூர்ந்தன.

செப்டம்பர் 21,  புதனன்று மனிலாவின் தெலாசா பல்கலைக்கழகம் இராணுவச் சட்டத்தின் ஐம்பதாம் ஆண்டை நினைவுகூர்ந்த நிகழ்வில் இராணுவச் சட்டத்தால் பாதிக்கப்பட்டவர்கள் பங்கேற்றுப் பேசியபோது, இந்நாள் வரலாற்றின் மிகத் துன்பமான கருப்பு நாளாக இருந்தாலும், உண்மையின் ஒளி, சுடர்விட்டு எரிய வாய்ப்பளிக்கும் ஒரு நாளாக இருக்கின்றது என்று தெரிவித்துள்ளனர்.

இச்சட்டத்தினால் இக்கால மாணவர்கள் நேரடியாகப் பாதிக்கப்படவில்லை என்றாலும் இதனைக் குறித்து தவறாகப் புரிந்துகொள்ளும் நிலையைத் தவிர்க்க, பிலிப்பைன்ஸ் இயேசு சபை துறவிகள், தங்களது கல்வி நிறுவனங்கள் அனைத்திற்குமான புகைப்பட கண்காட்சி ஒன்றை, “இராணுவச் சட்டம், இனி ஒருபோதும் வேண்டாம்என்னும் தலைப்பில் நடத்தி, துன்பமான அனுபவங்களை மறக்கவேண்டாம், மாறாக, அவை கற்பிக்கும் பாடத்தைப் புரிந்துகொள்ளவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

1972ஆம் ஆண்டு செப்டம்பர் 21ம் தேதி அன்று, பெர்டினான்டோ மார்கோஸ் என்னும் பிலிப்பைன்சின் அப்போதைய தலைவரால் கொண்டுவரப்பட்ட இந்த இராணுவச் சட்டத்தால், 70,000 பேர் கைதுசெய்யப்பட்டனர், 34,000 பேர் சித்ரவதைக்கு உள்ளாகினர், மற்றும், 3,240 பேர் உயிரிழந்தனர் என, ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் என்னும் பன்னாட்டு மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

1986ஆம் ஆண்டு ஏற்பட்ட "மக்கள் சக்தி" மற்றும் "செபமாலை புரட்சி: என்னும் அமைதிப் போராட்டத்தால், பெர்டினான்டோ மார்கோஸ் பதவி விலகினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Comment