No icon

அரசி இரண்டாம் எலிசபெத் மறைவு

திருத்தந்தை பிரான்சிஸ்  இரங்கல்

இயேசு கிறிஸ்து மீதுள்ள நம்பிக்கையின் உறுதியான சான்றாகவும், அவரது வாக்குறுதிகளின் மீது பற்றுறுதி கொண்டவராகவும் வாழ்ந்த பிரித்தானிய அரசி இரண்டாம் எலிசபெத் அவர்களது மறைவு ஆழ்ந்த கவலையை அளிக்கின்றது என்று திருத்தந்தை பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் 8 ஆம் தேதி வியாழக்கிழமை 96 வயதில் இறைபதம் சேர்ந்த பிரித்தானிய அரசி இரண்டாம் எலிசபெத் அவர்களின் மறைவு குறித்து, அவரது மகனான அரசர் மூன்றாம் சார்லஸ்க்கு அனுப்பியுள்ள இரங்கல் தந்தியில் இவ்வாறு திருத்தந்தை பிரான்சிஸ் குறிப்பிட்டுள்ளார்.

1952 ஆம் ஆண்டு பிப்ரவரி 6 ஆம் தேதியன்று அரசியாக முடிசூட்டப்பட்டு, இவ்வாண்டு ஜூன் 2 ஆம் தேதியன்று 70 ஆம் ஆண்டு பவள விழாவைக் கொண்டாடிய அரசி இரண்டாம் எலிசபெத் அவர்கள் நாட்டின் நலனுக்காக கறைபடாமல் பணியாற்றியவர் என்றும், கிறிஸ்து இயேசுவின்மீது கொண்டிருந்த நம்பிக்கையின் உறுதியான சான்றாக வாழ்ந்ததுடன், இறைவனின் வாக்குறுதிகளில் பற்றுறுதியும், பணியில் நேர்மையும் கொண்டவர் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் பாராட்டியுள்ளார்..

மேலும், அரசியின் மறைவு குறித்து வருந்துபவர்களுக்கு தன் ஆறுதலை வழங்குவதுடன், அவரின் ஆன்மா நிறையமைதியடையத் தான் செபிப்பதாகவும், அரசராக தன் பொறுப்புகளை ஆற்றும் மூன்றாம் சார்லஸ் அவர்களை இறைவன் நிறையருளால் உறுதிப்படுத்தவும், எல்லா விதமான ஆற்றலை அளிக்கவும் தான் செபிப்பதாகவும் திருத்தந்தை தன் இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.

பிரித்தானியா மற்றும், வட அயர்லாந்தின் அரசியாக, 70 ஆண்டுகள் மற்றும், 214 நாள்கள் பணியாற்றிய அரசி 2 ஆம் எலிசபெத் அவர்கள், ஒரு நாட்டை நீண்டகாலம் ஆட்சி செய்த ஒரு பெண் தலைவராகவும் உள்ளார். 1952 ஆம் ஆண்டு மன்னர் 6 ஆம் ஜார்ஜ் அவர்கள் உயிரிழந்த பின்னர், அப்போது 25 வயது நிரம்பியிருந்த அரசி இரண்டாம் எலிசபெத் அவர்கள் பதவிக்கு வந்தவர். இவர் தனது 96வது வயதில், ஸ்காட்லாந்தில் பால்மோரல் மாளிகையில் செப்டம்பர் 8 ஆம் தேதி வியாழனன்று இறைபதம் சேர்ந்தார்.

அரசி இரண்டாம் எலிசபெத் அவர்களின் மறைவையொட்டி, பிரித்தானியாவில், பத்து நாள்கள் துக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது என்று செய்திகள் கூறுகின்றன.

Comment