No icon

மட்டாகால்பா  ஆயர் ரொலாந்தோ அல்வாரெஸ்

கைதுசெய்யப்பட்டுள்ள ஆயர் அல்வாரெஸ் மனஉறுதியுடன் இருக்கிறார்

மத்திய அமெரிக்க நாடான நிக்கராகுவாவில் ஏறத்தாழ இரு வாரங்களாக வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த, அந்நாட்டின் 55 வயது நிரம்பிய மட்டாகால்பா  ஆயர் ரொலாந்தோ அல்வாரெஸ் அவர்களை, ஆகஸ்ட் 19,  வெள்ளி அதிகாலையில், அந்நாட்டு அரசுத்தலைவர் டானியேல் ஒர்த்தேகாவின் சர்வாதிகார அரசு கைதுசெய்துள்ளது என்று செய்திகள் கூறுகின்றன.

வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த ஆயர் அல்வாரெஸ் அவர்களின் அறைக்குள்  வெள்ளி அதிகாலை 3 மணிக்கு நுழைந்த காவல்துறை, அவரை அத்துமீறிக் கைதுசெய்து வாகனத்தில் ஏற்றிச் சென்றதாக, அதனை நேரிடையாகப் பார்த்தவர்கள் கூறியுள்ளனர். இவர் நாடுகடத்தப்படலாம் அல்லது சிறையில் வைக்கப்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும், ஆயரோடு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த மேலும் எட்டுப் பேர் மற்றொரு காவல்துறை வாகனத்தில் எடுத்துச்செல்லப்பட்டனர் எனவும், ஆயர் அல்வாரெஸ் அவர்களின் பெற்றோரின் வீட்டை காவல்துறை பரிசோதனை செய்துள்ளது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்

இந்நிலையில், கைதுசெய்யப்பட்ட ஆயர் அல்வாரெஸ் அவர்களை, அவர் கைதுசெய்யப்பட்ட சிலமணி நேரங்களுக்குப்பின் சந்தித்த அந்நாட்டின் மானாகுவா பேராயர் கர்தினால் லியோபோல்டோ பிரன்னஸ்  அவர்கள், ஆயரவர்களின் உடல்நிலை மோசமாக உள்ளது, ஆயினும் அவரது இதயமும் மனமும் உறுதியாக உள்ளன என்று  வெள்ளி பிற்பகலில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

இம்மாதம் 4ம் தேதியிலிருந்து, மட்டாகால்பா  ஆயர் இல்லத்தில், ஆயர் அல்வாரெஸ் உட்பட, பல அருள்பணியாளர்கள், அருள்பணித்துவ பயிற்சி மாணவர்கள் மற்றும் பொதுநிலையினர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்தனர். இவர்களுக்கு உணவும் மருந்துகளும் தடைசெய்யப்பட்டிருந்தன என்று செய்திகள் கூறுகின்றன.

ஆயர் அல்வாரெஸ் அவர்கள்நிக்கராகுவா அரசுத்தலைவர் டானியேல் ஒர்த்தேகாவின் சர்வாதிகார அரசின் அநீதியான நடவடிக்கைகளுக்கு எதிராகப் பொதுப்படையாகப் பேசி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது. (CNA))

Comment